அங்கஜன் இராமநாதன்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார்.[2][3] இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும்,[4] யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல்[1] சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.[5] சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.[6][7]
அங்கஜன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு புனித தோமையர் ஆரம்பப் பாடசாலை, கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும், பின்னர் சிங்கப்பூரிலும் படித்தார்.[8][9] இவர் ஆத்திரேலியாவில் கணினிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.[8][9]
அங்கஜன் பிரசாந்தினி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது.[9]
Remove ads
அரசியலில்
இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[10] தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர்.[11] இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை.[12] 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[13]
இராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[14][15]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.[16][17] 2018 சூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[21][22][23] 2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.
அங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[24][25][26] இவர் தனது தேர்தல் பரப்புரைகளுக்கு முகநூல் விளம்பரங்களுக்காக US$15,000 (ரூ.2.7 மில்லியன்) செலவழித்ததாகவும், இவரது மாமனார் எஸ். வின்சேந்திரராஜனின் கெப்பிட்டல் எஃப்.எம் வானொலி ஊடாகப் பெரும் பரப்புரைகளிலும் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டது.[27][28][29][30][31]
தேர்தல் வெற்றியின் பின்னர் அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[32][33] அங்கஜன் இப்பதவியைக் கையேற்ற முதலாவது நாள் "மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தனது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனது பிரதிநிதியாகவும், மாவட்ட அபிவிருத்திப் பேரவையின் அதிகாரியாகத் தனது தந்தையை நியமித்தார்.[34][35] 2020 ஆகத்து 20 இல் புதிய நாடாளுமன்றம் கூடியபோது அங்கஜன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[36][37]
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கஜன் சனநாயகத் தேசியக் கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[38]
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads