இந்தியக் கழுகு ஆந்தை
ஒரு வகை ஆந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் கழுகு ஆந்தை, பாறைக் கழுகு ஆந்தை, வங்கக் கழுகு ஆந்தை, கொம்பன் ஆந்தை, குடிஞை (ஆங்கிலப் பெயர்: Indian eagle-owl அல்லது rock eagle-owl அல்லது Bengal eagle-owl, உயிரியல் பெயர்: Bubo bengalensis) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பெரிய கொம்பு ஆந்தை ஆகும். இது இதற்கு முன்னர் ஐரோவாசியக் கழுகு ஆந்தையின் துணையினமாகக் கருதப்பட்டது. இது குன்று மற்றும் பாறை நிறைந்த காடுகளில் காணப்படுகிறது. இது பொதுவாக இணை ஆந்தைகளாகக் காணப்படும். அதிகாலையிலும், அந்திமாலையிலும் இதன் சத்தத்தைக் கேட்க முடியும். இது பெரிய உருவம் கொண்டது. இதன் தலை மேல் கொம்பு போன்ற இறகுகள் காணப்படும். இதன் உடல் முழுவதும் பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களாகக் காணப்படும். கழுத்துப் பகுதி வெண்மையாக கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.
Remove ads
விளக்கம்

இந்த இனம் பெரும்பாலும் யூரேசிய ஐரோவாசியக் கழுகு ஆந்தையின் கிளையினமாகக் கருதப்படுகிறது. தோற்றத்தில் அதனுடன் மிகவும் ஒத்திருக்கிறது. பழுப்பு நிறமான பெரிய பருமனான இப்பறவை சுமார் 56 செ மீ. நீளம் இருக்கும். அலகு கொம்பு நிறமாக இருக்கும். விழிப்படலம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கால்கள் தூவிகள் கொண்டதாக வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் உடல் முழுவதும் கறுப்பும், வெளிர் மஞ்சளும், ஆழ்ந்த பழுப்பான கோடுகளும் புள்ளிகளும் உடல் முழுவதும் காணப்படும். தலையில் இரண்டு கொம்புகள் கறுப்பு நிறத்தில் உயர்ந்து நிற்கும். கண்கள் வட்ட வடிவத்தில் பெரியதாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இதன் உருவமும் கொம்புகளும் மரத்தில் அமர்ந்திருக்கும்போது பூனை போன்ற தோற்றத்தைத் தரும்.
Remove ads
பரவல்
இவை புதர்க்காடுகள் மற்றும் அடர்த்தி குறைந்த காடுகள் நடுத்தர காடுகள் வரைக் காணப்படுகின்றன. குறிப்பாக இமயமலைக்கு தெற்கே இந்திய துணைக்கண்டத்தின் பிரதான நிலப்பகுதியிலும், 1,500 மீ (4,900 அடி) உயரத்திற்கும் குறைந்த பகுதியில் பாறைக் குன்றுகள் நிறைந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவை பசுமைமாறா காடுகளையோ, நீர்வளமே இல்லாத வறள் காடுகளையோ விரும்புவதில்லை. புதர்கள் நிறைந்த பாறைகளோடு கூடிய மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் செங்குத்தான கரைகள் இவற்றிற்கு மிகவும் பிடித்தமான பகுதிகள் ஆகும். இது பகல் நேரங்களில் புதர் அல்லது பாறை இடுக்குகளிலோ அல்லது கிராமங்களுக்கு அருகிலுள்ள பெரிய மாமரம் அல்லது அதுபோன்ற அடர்த்தியான இலைகள் கொண்ட மரத்தில் மறைவாக அமர்ந்து பொழுதைக் கழிக்கும்.
Remove ads
நடத்தையும் சூழலியலும்
ஆழ்ந்த தொனியில் ப்பூஉ-பூஓ என விட்டு விட்டு அலறும். ஆண்பறவைகள் இனப்பெருக்க காலத்தில் அந்திவேளையில் நீண்ட அழைப்பை வெளிப்பகுத்துகின்றன. உச்சகட்ட அழைப்பு தீவிரம் பிப்ரவரியில் கவனிக்கப்பட்டுள்ளது.[4] கூட்டை நெருங்கினால் அலகை ஒன்றோடு ஒன்று தட்டி ஓசை எழுப்புவதோடு கூட தங்கள் தூவிகளை புசுசுவென உப்ப இறக்கையையும் சற்று விரித்து தன் உடல் அளவை விட மேலும் பெரிதாக தன்னைக் காட்டி 'உஷ்' என ஒலி எழுப்பும்.
இவற்றின் உணவில் முதன்மையாக கொறித்துண்ணிகள் உள்ளன. குளிர்காலத்தில் இவை பறவைகளை உணவாக கொள்கின்றன. குறிப்பாக கௌதாரி, புறா,[5] பனங்காடை,[6] வைரி, கரும்பருந்து, காகம், புள்ளி ஆந்தை போன்ற பறவைகளை வேட்டையுடுகின்றன. சிலசமயங்களில் மயில் அளவுள்ள பறவைகளும் தாக்கப்படுகின்றன.[7] புதுச்சேரியில் நடத்தபட்ட ஒரு ஆய்வில் மறிமான் எலி, இந்திய புதர் எலி, இந்தியச் சிறிய வயல் எலி போன்ற கொறித்துண்ணிகள் இரையானது தெரியவந்தது. பழ வௌவால்களும் இதற்கு இரையாகியுள்ளன.[8]
கொறித்துண்ணிகளை உணவாக கொள்ளும் போது, இது இரையை முழுவதுமாக விழுங்குவதற்குபதில் கிழித்து உண்ணும்.[9] பிடித்து வளர்க்கப்படுபவை ஒரு நாளைக்கு சுமார் 61 கிராம் இரையை உண்கின்றன.[10]
இவை நவம்பர் முதல் மே வரை மழைக்காலம் முடியும் தருவாயில் முட்டையிடுகின்றன. இவை கூடுகள் ஏதும் கட்டுவதில்லை. பாறைகள் மீதும், மண்மேடுகளிலும், தரையில் புதர் ஓரங்களிலும் அகன்ற குழிகளில் மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடுகின்றன.[5][6] எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை கண்டு அறியலாம். சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 6 மாத காலத்திற்கு பெற்றோரை நம்பியே வாழ்கின்றன.[11] முட்டையானது பாலாடை வெண்மையில், அகலமான நீள்வட்ட உருண்டையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கூடு உள்ள தளத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன.[12] முட்டைகள் சுமார் 33 நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பெற்றோரைச் சார்ந்திருக்கும்.[13] கூகையைப் போலச் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது.[14] இனப்பெருக்க காலத்தில் கொம்பன் ஆந்தைகள் மிகவும் மூர்க்கமாக முட்டை இட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும். ஓர் ஆந்தை அடைகாக்கும் வேளையில் மற்றொரு ஆந்தை அருகில் உள்ள மரத்திலோ அல்லது பாறையிலோ அமர்ந்து காவல் இருக்கும். வைரி போன்ற பறவைகளோ அல்லது மனிதர்களோ முட்டைகள் உள்ள பகுதியை அணுகும்போது தற்காப்பிற்காகத் தாக்க முற்படும்.
Remove ads
உசாத்துணை
பிற ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads