மயில்
கோழி இனத்தைச் சேர்ந்த ஒரு வகைப் பறவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயில் என்பது ஒரு பறவை இனமாகும். இஃது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1] இந்தப் பேரினத்தில் மூன்று மயில் இனங்கள் உள்ளன. தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் மற்றும் பச்சை மயில் மற்றும் ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயில் ஆகியனவாகும்.[2][3][4]
மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளைக் கொண்டிருக்கின்றன. பெண் மயில்களைக் கவர முற்படும்போது இந்தத் தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போலக் காட்டுகின்றன. மயிலின் விரிவான தொகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 19 -ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இஃது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் மந்தமான நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகப் பயன்படுகின்றன..
இந்தப் பறவை இந்து மற்றும் கிரேக்க புராணங்களில் பரவலாகக் காணப்படுகின்றது.[5] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[6].
Remove ads
மயிலின் வகைகள்
இந்திய மயில்

இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.[7][8] பெண் மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மற்றும் மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.[9]
பச்சை மயில்

பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் - பாவோ muticus) கிழக்கு மியன்மார் முதல் சாவா தீவு வரையுள்ள தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. சாவாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது சாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பச்சை மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.[10]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.[11]

காங்கோ மயில்
காங்கோ மயில் (அப்ரோபேவோ - Afropavo காங்கேன்சிசு) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை இந்திய மற்றும் பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.[12]
Remove ads
சொற்பிறப்பியல்
ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[13] ஆண்பாற் பெயர் Peacock (பீகாக்) ஆகும்.[14] தமிழ் வார்த்தையான தோகை, அரபிய மொழியில் தாவுசு ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்தில் பவு ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பாவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பாவ் எனவும், பின்னர் "பீகாக்" எனவும் மருவியது.
பண்பாடு

பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963-இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது.ref name=hbk>Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. Vol. 2 (2nd ed.). Oxford University Press. pp. 123–126. ISBN 0-19-562063-1.</ref> இந்தியாவில் கோவில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்திரிக்கப்படுகிறது.[15][16][17][18] பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்திரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்திரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனைத் தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.[16][19]
பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தைக் குறிக்கிறது.[20] மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன மற்றும் பல நவீன கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.[21][22] கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது.[23][24][25] பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்பபடுத்தப்படுகின்றன.
இந்தப் பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன.[26] பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியைப் பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.[27]
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads