இலங்கையின் மாகாண சபைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையில் மாகாண சபைகள் (Provincial Councils) என்பது இலங்கை மாகாணங்களுக்கான சட்டவாக்க அவை ஆகும்.[1] இலங்கை அரசியலமைப்பின் படி, மாகாண சபை ஆனது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. மாகாண சபைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Remove ads
வரலாறு
1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
நோக்கம்
மாகாண சபைகள் அமைக்கப்பதற்கான நோக்கம் என்னவென இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
- இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும் ஒற்றை ஆட்சியையும் பாதுகாப்பதற்காகவும்,
- இலங்கையில் பல்லின மக்கள் சிங்களவர், தமிழர், முசுலிம்கள், பரங்கியர் வாழும் நாடாதலாலும், பல மொழி பேசும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதாலும்,
- பல்லின மக்கள் வாழ்வதால் அவ்வவ் இனத்திற்கு வெவ்வேறான மொழி, கலாசாரம், என்பன உண்டு என்பதை அங்கீகரிப்பதாலும்,
- தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வசிப்பதுடன், வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் அவ்வடக்கு கிழக்கு அவர்களது பூர்வீக பூமி என ஏற்றுக் கொள்வதாலும்,
- இலங்கை சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சி என்பதாலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாலும்,
மாகாண சபைகள் அமைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.[3]
இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[4] 1988 செட்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.[5]
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிப்பு
வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீட்டிக்கப்பட்டு வந்தது.[6] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[5] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் செயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அட்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[5] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
Remove ads
மாகாண சபை உறுப்பினர்கள்
அரசியலமைப்பின் 1988 ஆம் ஆண்டு 2ஆம் இலக்க 3(3) உட்பிரிவு சட்டத்தின் படி, ஒவ்வொரு மாகாண சபைக்கும் அந்தந்த மாகாணத்தின் மக்கள் தொகை, நிருவாகப் பிரிவு, வேறும் காரணங்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் உறுப்பினர் தொகையைத் தீர்மானிப்பார். இச்சட்டமூலத்தின் 13ஆம் பிரிவின் படி, மாகாண சபைக்கு போட்டியிட விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்று அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் சார்பில் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடுபவர் மாகாணத்திற்குள் உள்ள நிருவாக மாவட்டம் ஒன்றுக்கே போட்டியிடலாம். முழு மாகாணத்திற்கும் போட்டியிட முடியாது.
Remove ads
இலங்கையின் மாகாண சபைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads