கிரேக்க வரலாறு

கிரேக்கத்தின் வரலாறு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிரேக்க வரலாறு (History of Greece) என்பதுகிரேக்கத்தின் நவீன தேசிய-அரசின் எல்லை மற்றும் கிரேக்க மக்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த மற்றும் வரலாற்று ரீதியாக ஆட்சி செய்த பகுதிகளின் வரலாற்றை உள்ளடக்கியது. கிரேக்கர்களின் வாழ்விடங்கள், ஆட்சியின் நோக்கம் போன்றவை காலந்தோறும் மாறுபட்டுள்ளன. பொதுவாக, கிரேக்கத்தின் வரலாறு பின்வரும் காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • பழங்கற்கால கிரேக்கம், என்பது சு. 3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கி.மு 20000 வரையிலான காலகட்டம் ஆகும். அப்போது நவீன கிரேக்கப் பகுதியில் குறிப்பிடத்தக்க புவிப்புறவியல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. அவை விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்கும், பிராந்தியத்தில் மனிதர் உயிர்வாழ்வதற்கு ஏற்ற மற்றங்களை உருவாக்கின.
  • இடைக் கற்கால கிரேக்கம், என்பது கிமு 13000 இல் தொடங்கி கிமு 7000 இல் முடிவடைகிறது, இது பழமையான மனித "முன்னோர்-சமூகங்களின்" நீண்ட மற்றும் மெதுவான வளர்ச்சி காலமாகும்.
  • புதிய கற்கால கிரேக்கம், சுமார் கி.மு 7000 இல் வேளாண் சமுதாயம் உருவாகுதல் தொடங்கி சு. கி.மு 3200 இல் கிரேக்கத்தின் துவக்ககால வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. ஏனெனில் இது இப்பகுதியில் துவக்ககால வெண்கல கால நாகரிகங்களுக்கு அடித்தளமாக இருந்தது. புதிய கற்கால கிரேக்கத்தில் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வளர்ந்தன.
  • வெண்கல கால கிரேக்கம் ( சு. 3200 – சு. கிமு 1100 ) கிரேக்கத்தின் முதன்மை நிலப்பகுதியின் துவக்ககால ஹெலடிக் காலத்தின் போது உலோக அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு மாற்றத்துடன் தொடங்கியது சு. 3200 – சு. கிமு 2000 ). இதற்கிடையில், சைக்ளாடிக் பண்பாடி சைக்கிளடேசில் ( சு. 3200 – சு. கிமு 1050 ) மற்றும் கிரீட்டைச் சுற்றியுள்ள மினோவன் நாகரிகம் ( சு. 3500 – சி. கிமு 1100 ) செழித்தது. வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் மைசீனிய கிரேக்க அரண்மனை பண்பாட்டின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியுடன் வெண்கல காலம் முடிந்தது ( c. 1750 – சி. 1050 BC ).
  • பண்டைக் கிரேக்கம் என்பது பொதுவாக கிரேக்க பழங்காலத்தை உள்ளடக்கியது, அதே போல் பிராந்தியத்தியத்தின் பிற்காலத்துக்கு முந்தைய வரலாற்றுக் காலத்தையும் ( வெண்கல காலத்துக்கு பிற்பட்ட காலம்) உள்ளடக்கியது. இது சு. 1200 கி.மு – சு. கிபி 600 மற்றும் பின்வரும் காலகட்டங்களாகப் பிரிக்கலாம்:
    • கிரேக்க இருண்ட காலம் (அல்லது இரும்பு காலம், ஓமர் காலம்), கி.மு.1100–800
    • தொன்மையான காலம், கிமு 800–490
    • பாரம்பரிய காலம், 490-323 கி.மு
    • எலனியக் காலம், கிமு 323-146
    • உரோமன் கிரேக்கம், கிமு 146 முதல் கிபி 324 வரையிலான கிரேக்கத்தை உரோமன் கைப்பற்றிய காலத்தைக் கொண்டது.
  • பைசந்திய கிரேக்கம் பைசாந்தியப் பேரரசின் கீழ் கிரேக்கம் இருந்த காலத்தைக் கொண்டது. இது கி.பி 324 இல் பைசாந்தியத்தின் தலைநகராக கான்ஸ்டண்டினோபில் நிறுவப்பட்டது முதல் 1453 இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி வரை நீடித்தது.
  • ஃபிராங்கிஷ்/லத்தீன் கிரேக்கம் நான்காவது சிலுவைப் போரில் இருந்து கி.பி. 1204 முதல் வெனிஸ் குடியரசு துண்டிக்கப்பட்ட 1797 ஆண்டு வரை நீடித்தது.
  • உதுமானிய கிரேக்கம் என்பது 1453 முதல் 1821 கிரேக்கப் புரட்சி வரை கிரேக்கத்தை உதுமானியர்கள் ஆக்கிரமித்த காலத்தைக் கொண்டது.
  • நவீன கிரேக்கம் என்பது 1821 முதல் தற்போது வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

கிராக்கப் பண்பாடு அதன் புவியியலிலும், பண்பாட்டிலும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எகிப்திலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஃசு மலைகள் வரை பரவியிருந்தது. அப்போதிருந்து, கிரேக்க சிறுபான்மையினர் முன்னாள் கிரேக்க பிரதேசங்களில் (எ.கா. துருக்கி, அல்பேனியா, இத்தாலி, லிபியா, லெவண்ட், ஆர்மீனியா, சியார்சியா ) தொடர்ந்து வசித்து வருகின்றனர். மேலும் கிரேக்க குடியேறிகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் (எ.கா. வட அமெரிக்கா, ஆத்திரேலியா, வடக்கு ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா ) இணைந்துள்ளனர். தற்போது, பெரும்பாலான கிரேக்கர்கள் நவீன கிரேக்கம் (1821 இல் விடுதலை) மற்றும் சைப்பிரசு ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.

Remove ads

வரலாற்றுக்கு முந்தைய கிரேக்கம்

கற்காலத்திற்கு முந்தைய காலம்

ஆரம்பகால மனிதர்களில் ஒருவர் ( Ouranopithecus macedoniensis, 9.6–8.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), [1] மற்றும் அனைத்து மனிதர்களின் மிகப் பழமையான நேரடி மூதாதையரின் ( Greecopithecus, 7.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) புதைபடிவங்கள் கிரேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [2] கூடுதலாக, கிரீட் தீவில் 5.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் கண்டறியப்பட்டன. [3] இது தற்போதைய கருதுகோள்களுக்கு மாறாக ஆப்பிரிக்காவிற்கு வெளியே மனிதப் பரிணாமம் என்பது குறித்த கருத்தை பரிந்துரைப்பதாக உள்ளது. [4]

பழங்கற்காலம் ( சு. 3.3M BC – 13000 BC)

பழைய கற்காலம் பொதுவாக கிரேக்கத்தில் அறியப்படுகிறது. ஏனெனில் ஆய்வில் பாரம்பரியமாக வரலாற்றுக்கு முந்தைய காலப் பகுதிகள் (புதிய கற்காலம், வெண்கல காலம்) மற்றும் பாரம்பரிய காலங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆயினும்கூட, அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் பதிவுகள் புதிய பொருட்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் பிராந்திய ஆய்வுகளில் அல்லது அகழ்வாய்வுகள் மூலமாகவும் சேகரிக்கப்பட்டுள்ளன. புதிய குகைகள் மற்றும் பாறைகளுக்கு அடியிலான தங்குமிடங்கள், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் முக்கியமான திறந்தவெளி தளங்கள் இப்போது அகழப்படுகின்றன. [5] இன்றைய கிரேக்கத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆரம்ப தடயங்கள் மாசிடோனியாவின் சல்கிடிகியில் உள்ள பெட்ராலோனா குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை. [6] 210,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ளதான மனித உடலமைப்பு ரீதியில் நவீன மனிதர்களின் பழமையான எச்சங்கள் தென் கிரேக்கத்தில் உள்ள மனியில் உள்ள அபிடிமா குகையில் காணப்படுகிறது. [7] [8] [9] தற்போது அறியப்பட்ட மானுடவியல் மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் கிரேக்க பகுதியில் காணப்படும் பழங்கற்காலத்திய கீழ் (350,000–100,000 BP), நடுத்தர (100,000–35,000 BP), மேல் பழங்கால (35,000–11,000 BP) என பிரிக்கத்தக்கதாக உள்ளன. [10] இன்றுவரை, கீழ் மழங்கற்காலத்திய சில தளங்கள் உள்ளன, அதேசமயம் நடுத்தர மற்றும் மேல் பழங்காலப் பகுதிகள் அதிகமாக உள்ளன. இது கிரேக்கப் பகுதியில் ஏற்பட்ட தீவிரமான புவி ஓட்டுச் செயல்பாடு மற்றும் ஏஜியன் கடலின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக சில புவியியல் பகுதிகளிலிருந்த வசிப்பிடங்களின் அனைத்து தடயங்களையும் அழித்தது. [5]

கிரேக்கத்தில் இருந்து கற்கால கண்டுபிடிப்புகள் முதன்முதலில் 1867 இல் கண்டறியப்பட்டன. ஆனால் தளங்கள் பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட முதல் ஆய்வு பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1927 மற்றும் 1931 க்கு இடையில் நடத்தபட்டன. அந்த ஆய்வுகளை ஆஸ்திரிய தொல்லியல் ஆய்வாளர் அடல்பர்ட் மார்கோவிட்ஸால் நடத்தினார். செருமானிய தொல்லியல் ஆய்வாளர் ருடால்ஃப் ஸ்டாம்ப்ஃபஸ் என்பவரால் 1942 ஆம் ஆண்டு போயோட்டியாவில் உள்ள சீடி குகையில் ஒரு பழங்காலத் தளத்தின் முதல் அகழ்வாய்வு நடத்தபட்டது. எவ்வாறாயினும், 1960 களில் எபிரஸ், மாசிடோனியா, தெசலி, பெலொப்பொனேசியா ஆகிய இடங்களில் பிரிட்டன், அமெரிக்க, ஜெர்மன் ஆராய்ச்சி குழுக்களால் ஆய்வு நடத்தப்பட்டது. [10]

இடைக்கற்காலம் (கிமு 13000–7000)

கிரேக்கத்தில் இடைக் கற்காலம் என்பது மேல் கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையில் இருந்த காலமாகும். கிரேக்கத்தில் உள்ள இடைக்கற்காலத் தளங்கள் குறைவாகவே உள்ளன. அதில் பெரும்பாலானவை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளன. பிரான்ச்தி குகை, மானியில் உள்ள கலாமாகியா குகை [11] ( பெலோபொன்னீஸ் ), எபிரஸில் உள்ள அஸ்ப்ரோச்சலிகோ குகை (1960 இல் முதல் அகழ்வாய்வு நடந்தது), [12] தியோபெட்ரா குகை ஆகியவை கிரேக்கம் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மிக முக்கியமான இடைக் கற்கால தளங்கள் ஆகும். மேலும் பழைய கற்காலம் மற்றும் இடைக்கற்கால காலகட்டம் முழுவதும் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக மக்கள் வசித்து வந்துள்ளனர். [13]

புதிய கற்காலம் முதல் வெண்கலக் காலம் வரை (கிமு 7000–1100)

Thumb
மொழியியலாளர் விளாடிமிர் I. ஜார்ஜீவ் கருத்துப்படி ஆதி-கிரேக்க மொழியியல் பகுதி. [14]

புதுக்கற்காலப் புரட்சி கி.மு. 7000-6500 இல் தொடங்கி ஐரோப்பாவை அடைந்தது. அண்மைக் கிழக்குலிருந்து வந்த விவசாயிகள் ஏஜியன் கடல் வழியாக தீவுப் பயணங்களினால் அனத்தோலியாவிலிருந்து கிரேக்க தீபகற்பத்திற்குள் நுழைந்தனர். கி.மு 8500-9000 காலக்கட்டத்தின் ஐரோப்பாவில் வளர்ந்த விவசாயப் பொருளாதாரங்களைக் கொண்ட ஆரம்பகால கற்கால தளங்கள் கிரேக்கத்தில் கண்டறியப்பட்டுள்ளன. [15] முதல் கிரேக்க மொழி பேசும் பழங்குடியினர், மைசீனியன் மொழியின் முன்னோடியாகப் பேசியவர்கள், புதிய கற்காலம் அல்லது ஆரம்பகால வெண்கலக் காலத்தில் ( சு கி.மு. 3200) கிரேக்க நிலப்பகுதிக்கு வந்தனர். [16] [17]

சைக்ளாடிக் மற்றும் மினோவான் நாகரிகம்

சைக்லேடிக் பண்பாடு என்பது சைக்லேட்சின் குறிப்பிடத்தக்க பிற்பகுதியில் கற்கால மற்றும் ஆரம்ப வெண்கல கால பொருள்சார் பண்பாடு ஆகும். இந்தத் தீவுகளானது தூய வெண் பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்ட தட்டையான பெண் சிலைகளுக்கு மிகவும் பிரபலமானவையாகும்.

கிரீட்டின் நடு வெண்கலக் கால நாகரிகமான மினோவன் நாகரிகம் சு. 3000 - சி. கிமு 1400 வரை நீடித்தது.[18] மினோவான்களைப் பற்றி அவர்களின் எழுத்தமைதி போன்ற குறிப்பிடத்தக்க சிறிய அளவிலான தகவல்கள் மட்டுமே அறியவருகின்றன. இது புரிந்துகொள்ளப்படாத லீனியர் ஏ எழுத்துகள் மற்றும் கிரெட்டான் படுகைத் தளக்குறியீடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.[18] மினோவான்ஸ் என்ற பெயர் கூட கிரீட்டின் தொன்மவியல் அரசரான மினோசிடமிருந்து உருவாக்கபட்ட ஒரு நவீன பெயர்ச்சொல்லாகும். அவர்கள் முதன்மையாக மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் பரவலாக வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகர்களாக இருந்தனர்.[18]

தீராவில் எரிமலை வெடிப்பு (சு. 1628-1627 கி.மு) நிலநடுக்கம் (சு. 1600 கி.மு) போன்ற பல இயற்கை பேரழிவுகளால் மினோவான் நாகரிகம் பாதிக்கப்பட்டது.[18] கிமு 1425 இல், நொசோசைத் தவிர அனைத்து மினோவான் அரண்மனைகளும் தீயால் அழிந்தன. இது மினோவான்களின் கலாச்சாரத்தால் செல்வாக்குப் பெற்ற மைசீனியன் கிரேக்கர்கள் கிரீட்டிற்கு பரவ காரணதாயிற்று.[18] கிரீட்டில் உள்ள மைசீனியன் நாகரிகத்திற்கு முந்தைய மினோவான் நாகரிகத்தின் எச்சங்கள் முதன்முதலில் நவீன காலத்தில் சர் ஆர்தர் எவன்சால் 1900 இல் கண்டுபிடிக்கப்பட்டன, அவர் நாசோஸில் உள்ள தளத்தை வாங்கி அகழ்வாய்வு செய்யத் தொடங்கினார்.[19]

மைசீனியனுக்கு முந்தைய ஹெலடிக் காலம்

புதிய கற்காலம், கடைசி கற்காலம் ஆகியவற்றின் முடிவைத் தொடர்ந்து, ஆரம்ப மற்றும் மத்திய ஹெலாடிக் காலங்கள் கிரேக்க நிலப்பரப்பில் தோன்றின. இறுதி கற்கால காலத்திலிருந்து மெதுவான மாற்றம் யூட்ரெசிஸ் கலாச்சாரத்துடன் (c. 3200 - சி. கிமு 2650) நடந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில், வேளாண் சமூகங்கள் கல் கருவிகளிலிருந்து உலோகக் கருவிகளுக்கு மாறின. இத்தகைய பொருள்முதல்வாத முன்னேற்றங்களைத் தொடர்ந்து, அதிக சக்திவாய்ந்த நுண்-நாடுகள் மற்றும் எதிர்கால மைசீனியன் நாகரிகத்தின் அடித்தளம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப வெண்கலக் கால குடியேற்றங்கள் மூன்றாம் ஹெலடிக்கின் போது மேலும் வளர்ச்சியைக் கண்டன, இதற்கு திரின்ஸ் கலாச்சாரம் (சு. 2200 - சு. கிமு 2000) எடுத்துக்காட்டாகும். மேலும் மைசீனிய காலத்திற்கு முந்தைய மத்திய ஹெலடிக் காலம் குறித்து கீழே விவாதிக்கப்பட்டுள்ளது.

மைசீனிய நாகரிகம்

Thumb
மைசீனியன் கிரேக்கம், சு. கிமு 1400-1100.

மைசீனிய நாகரிகமானது கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்பில் ஆரம்ப மற்றும் மத்திய ஹெலடிக் காலங்களின் சமூகம் மற்றும் பண்பாட்டிலிருந்து தோன்றி உருவானது.[20] இது சு. கிமு 1600 இல் மினோவான் கிரீட்டின் தாக்கத்தினால் ஹெலடிக் பண்பாடாக மாற்றப்பட்டது. அது மைசீனிய அரண்மனைகளின் இடிந்து விழும் வரை (சு. கிமு 1100) நீடித்தது. மைசீனியன் கிரேக்கம் என்பது தொல் கிரேக்கத்தின் பிற்பகுதியில் ஹெலடிக் வெண்கல கால நாகரிகமாகும், மேலும் இது ஓமரின் காவியங்கள் மற்றும் பெரும்பாலான கிரேக்க தொன்மங்கள் மற்றும் சமயங்களின் வரலாற்று அமைப்பை உருவாக்கியது. மைசீனியன் காலம் என்ற பெயரானது தெற்கு கிரேக்கத்தின் பெலொப்பொனேசியாவில் உள்ள வடகிழக்கு ஆர்கோலிடில் உள்ள தொல்லியல் தளமான மைசீனிலிருந்து வந்தது. ஏதென்ஸ், பைலோஸ், தீப்ஸ், டைரின்ஸ் ஆகிய இடங்களும் முக்கியமான மைசீனியன் தளங்களைக் கொண்டுள்ளன.

மைசீனிய நாகரிகம் ஒரு போர்வீர சிற்றரசால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. சுமார் கி.மு 1400 இல், மைசீனியர்கள் மினோவான் நாகரிகத்தின் மையமான கிரீட் வரை தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினர். மேலும் கிரேக்க மொழியின் ஆரம்ப வடிவத்தை எழுதுவதற்கு மினோவான் எழுத்தின் லீனியர் ஏ வடிவத்தை ஏற்றுக்கொண்டார். மைசீனியன் கால எழுத்துமுறை லீனியர் பி என அழைக்கப்படுகிறது, இது மைக்கேல் வென்ட்ரிஸ் என்பவரால் 1952 இல் படித்து புரிந்துகொள்ளப்பட்டது. மைசீனியர்கள் தங்கள் பிரபுக்களை தேனீக் கல்லறைகள் என்னும் கல்லறைகளில் புதைத்தனர். அவை உயரமான கூரையுடன் கூடிய தாகவும், கல்லால் வரிசையாக நேராக நுழையும் பாதையைக் கொண்டதாகவும் இருந்தன. அவர்கள் பெரும்பாலும் கத்திகள் அல்லது வேறு சில வகையான இராணுவ உபகரணங்களை இறந்தவருடன் சேர்த்து புதைத்தனர். பிரபுக்களை பெரும்பாலும் தங்க முகமூடிகள், தலைப்பாகைகள், கவசங்கள், ரத்தின ஆயுதங்களுடன் புதைத்தனர். மைசீனியர்கள் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டனர், மேலும் சில பிரபுக்கள் மம்மி ஆக்கபட்டு புதைக்கபட்டனர்.

கிமு 1100-1050 ஒட்டிய காலத்தில், மைசீனியன் நாகரிகம் சரிந்தது. பல நகரங்கள் சூறையாடப்பட்டன. இக்காலகட்டத்தை வரலாற்றாசிரியர்கள் "இருண்ட காலம்" என்று கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில், கிரேக்கத்தின் மக்கள் தொகையும், எழுத்தறிவும் சரிவை சந்தித்தன. கிரேக்க மக்களின் மற்றொரு அலையான டோரியர்களின் படையெடுப்பின் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக கிரேக்கர்கள் பாரம்பரியமாக கூறுகின்றனர். இருப்பினும் இந்த பார்வைக்கு போதுமான தொல்லலியல் சான்றுகள் இல்லை.

Remove ads

பண்டைய கிரேக்கம் (கிமு 1100-146)

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads