கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்map
Remove ads

கும்பேசுவரர் கோயில் (Kumbakonam Adi Kumbeswarar Temple) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 சதுர அடி (2,803.9 சதுர மீட்டர்) பரப்பளவுடையது.[1] மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது.[2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.[3]

விரைவான உண்மைகள் ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

தல வரலாறு

பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.[4][5][6][7]

Remove ads

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.[8]

Remove ads

பாடியோர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இத்தலத்தைப் பற்றி திருக்குடந்தைப்புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.

அப்பர் பாடல்

காளமேகப் புலவர் பாடல்

இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.

திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா
மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம் . (45)

இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் - திருக்குடந்தை ஆதி கும்பேசர் செந்தாமரைக்குளம் கங்கை மகம் காவிரிக்கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் காரோணமங்கை நாயகியார் சாரங்கபாணி தலம் . (காரோணம் = மந்திர மேடை, மந்திர பீடம்,)

பேறு பெற்றோர்

இந்திரன் முதலான திக்கு பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்தைப் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.[9]

கோயில் தேரோட்டம்

இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளி இரு நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 1988க்குப் பிறகு இந்த ஐந்து தேர்களும் சேதமடைந்து ஓடாமல் இருந்தன. கடந்த 2002 முதல் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.[10] நான்கு மகாமகங்களுக்குப் பிறகு கும்பேஸ்வரர் கோயிலில் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது.[11][12]

பௌத்தம் தொடர்பான கல்வெட்டு

இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்திய (விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட) கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்:

கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில், திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததை அறியமுடிகிறது. பொ.ஊ. 1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது.[13]

Remove ads

கோவிந்த தீட்சிதர்

கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலின் புதிய சன்னதிகள், ராஜகோபுரம், கோவிந்த தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும்.[14]

குடமுழுக்கு

இக்கோயிலில் விரோதி வருடம் வைகாசி மாதம் 22ஆம் நாள், சூன் 5, 2009 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா தற்போது நடைபெறுகிறது. இதற்கான வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[15] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[16]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

புகைப்படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads