சவ்வாது மலை

தமிழ்நாட்டில் உள்ள மலை From Wikipedia, the free encyclopedia

சவ்வாது மலைmap
Remove ads

நவிர மலை அல்லது ஜவ்வாது மலை (ஆங்கிலம்: Javadi Hills) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 262 ச.கி.மீ பரப்பில் 250 கி. மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதிகளில் சுமார் இரண்டு இலக்கம் மக்கள் வசிக்கின்றனர். இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலைத்தொடரில் உள்ள பீமன் அருவியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.[1]

Thumb
போளூரிலிருந்து ஜவ்வாது மலையின் காட்சி
Remove ads

வரலாறு

சங்க இலக்கியமான பத்துப்பாட்டின் பத்தாவது பாட்டான மலைபடுகடாம் பாடலில் குறிப்பிடப்படும் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் இம்மலையை ஆண்டதாக குறிப்பிடப்படுகிறது. மலைபடுகடாம் இம்மலையை விவரிக்கையில் மழூ வளமும், மூங்கில் செழித்தது நவிர மலை என்று கூறுகிறது. இங்கு காருயுண்டிக் கடவுள் (சிவன்) உறைகிறார் என்றும் குறிப்பிடுகிறது.[2]

இந்த மலையில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 12 இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுகளில் நவிர மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் பல்லவர், சோழர், விசயநகரக் காலத்தவையாக கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவை ஆகும். ஆக சங்க காலம் முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை இந்த மலை நவிர மலை என்றே அழைக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு முசுலீம்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இது சவ்வாது மலை என்ற பெயரைப் பெற்றது. எனவே மீண்டும் இம்மலையின் பெயரை பழையபடி நவிர மலை என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது.[2]

Remove ads

மலையின் இயற்கைவளம்

இம்மலை இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், அருவிகள் என காண்போரை மெய்மறக்க வைத்துவருகிறது. இம்மலையின் மேல் பீமன் அருவியும், மலையின் வடபகுதியில் அமிர்தி அருவியும், மேற்குப் பகுதியில் ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை அருவியும் சிறு சுற்றுலா இடங்களாக விளங்கிவருகின்றன.[3]

ஆறுகள்

இம்மலையிலிருந்து செய்யாறு, நாகநதி, கமண்டல நதி மிருகண்டாநதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகத் தோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவற்றையும் சுற்றுலா இடமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், உள்ளது.

ஜவ்வாது மலைத்தொடர் கிழக்கு மேற்காக உள்ளது . மேலும் வடபகுதி தென்பகுதி என இரண்டாக உள்ளது. போளூர் வட்டம், தென்மாதிமங்கலம் அருகே உள்ள பர்வத மலை சிவன் கோயிலும் படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் ஆலயமும் இம்மலைத்தொடரில் அமைந்த சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். போளூர், செங்கம், சமுனாமரத்தூர், கலசப்பாக்கம், வேலூர், திருப்பத்தூர் வட்டங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன. இம்மலைவாழ் மக்களில் பெரும்பகுதியினர் மலையாளி என்ற பழங்குடி இனத்தவராவார்கள். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மையாகும், இங்கு பழ வகைகள், சாமை, வரகு, தேன், கடுக்காய்,தினை போன்றவை முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்களாகும். இம்மலையில் மிகச்சிறப்பு வாய்ந்தது சந்தன மரங்களாகும். தற்போது பெரும்பாலான சந்தன மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வனத்துறையின் பாதுகாப்பில் சில மரங்களே காணப்படுகின்றன.

ஜவ்வாது மலையின் இரண்டு பகுதிகள்

  1. ஜவ்வாது மலை
  2. ஏலகிரி மலை

ஏலகிரி மலை

சுற்றுலாத்தலம்

ஏலகிரி மலை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏரி படகு சவாரி, பாரா கிளைடிங் என மனதை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

விழாக்கள்

இம்மலையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடைவிழா சூன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும். இவ்விழாவின் போது இம்மலைவாழ் மக்களின் படைப்புகள், காட்டுப்பொருட்கள், மலர்கள், காய் கனிகள் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் என விழா சிறப்புற நடைபெறும். இம்மலைக்கு செல்ல திருப்பத்துரில் இருந்தும், வேலூரில் இருந்தும் பேருந்து இயக்கப்படுகிறது. யானைகள் மற்றும் வன விலங்குகள் இடர் இருப்பதால் இரவுப் பயணம் தவிர்க்கப்படுகிறது.இம்மலையில் முயல்,மான்,காட்டெருமை,காட்டுப்பன்றி,குரங்கு,மலைப்பாம்பு,நரி ஆகியன உள்ளன.

Remove ads

ஜவ்வாது மலை

இயற்பியல் மையம்

இம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையம் இந்திய வானியற்பியல் மையத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்திலிருந்து வானைக் காண சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் சவ்வாது மலை

பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூலில் நன்னன் சேய் நன்னன் என்னும் குறுநில மன்னன் செங்கண்மாவைத் தலைநகரமாகக் கொண்டு, சேயாற்றங்கரையில் அரசாண்டான் என்றும், அவனுடைய மலையின் பெயர் நவிரமலை என்றும் கூறுகிறது. சவ்வாது மலையில் கிடைக்கக்கூடிய நடுகற்களில் காணப்படும் கல்வெட்டுகளில் "நவிரமலை" குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது கிடைத்த இந்த நடுகற்களில் அடிப்படையில் சங்ககாலத்தில் நன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் என்ற நோக்கில் தற்போது மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads