தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழகத் திரைப்படத்துறை திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளது. திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரவும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் நீடிக்கவும் தமிழ்த் திரைப்படங்கள் பெரிதும் உதவியுள்ளன. கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா என திரைப்படத் துறையுடன் தொடர்புடைய நான்கு பேர் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளனர்.

ஆரம்ப காலம்

1930களின் நடுவிலிருந்து பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி வந்தனர். 1937 சட்டமன்றத் தேர்தலில் புகழ்பெற்ற நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாள் இந்திய தேசிய காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதன் பின்பு காங்கிரசு திரைப்படக் கலைஞர்களை அரசியல் நோக்கங்களுக்காக கூடுதலாகப் பயன்படுத்தவில்லை. காங்கிரசு மட்டுமல்லாமல் அதன் அரசியல் போட்டியாளர்களான நீதிக்கட்சியும் பின்னர் ஈ. வெ. ராமசாமியின் திராவிடர் கழகமும் (தி. க) பெரும்பாலும் திரைப்படத் துறையைப் பயன்படுத்தவில்லை. இந்த நிலைக்கு சில விதிவிலக்குகளும் இருந்தன - எம். ஆர். இராதா தனது நாடகங்களின் வாயிலாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பி வந்தார். 1940களில் தி. க வில் கா. ந. அண்ணாதுரையின் செல்வாக்கு கூடத் தொடங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

Remove ads

திமுகவும் திரைத்துறையும்

Thumb
வேலைக்காரி (1949) - அண்ணாதுரையின் திரையுலக அறிமுகம்

அண்ணாதுரை 1949இல் தி. க வை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (தி. மு. க.) தொடங்கினார். அந்த ஆண்டு முதல் அவரது பல மேடை நாடகங்களைத் திரைப்படங்களாக எடுத்தனர். ஓர் இரவு (1951), வேலைக்காரி (1949), நல்ல தம்பி (1949) போன்ற திரைப்படங்களின் வெற்றி தி. மு. க. தலைவர்களுக்கு திரைப்படத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. கே. ஆர். ராமசாமி, என். எஸ். கிருஷ்ணன் போன்ற கலைஞர்கள் தங்களது திரைப்படங்களின் மூலம் திமுகவின் கொள்கைகளை மக்களிடம் பரப்பி வந்தனர். 1952ல் வெளியான பராசக்தி திரைப்படத்தின் பெருவெற்றி தி. மு. க. வுக்கு மக்களிடையே நல்ல ஆதரவைத் தேடித் தந்தது. இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசனும் வசனகர்த்தா மு. கருணாநிதியும் தி. மு. க. வில் பெயர் பெற்று வளரத் தொடங்கினர். 1950களின் தொடக்கத்தில் எம். ஜி. இராமச்சந்திரன் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தி. மு. க. வின் ஆதரவாளர்கள் உருவாக்கிய திரைப்படங்களில் அதன் கொள்கைகளான திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவற்றை மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள். தி. மு. க. வின் கருப்பு-சிவப்பு கொடியையும் உதயசூரியன் சின்னத்தையும் ஆங்காங்கே காட்டினார்கள். 1950களில் வெளியான தி. மு. க. ஆதரவுப் படங்கள் இதனால் தணிக்கை விதிகளுக்கு ஆளாயின. தணிக்கை வாரியத்தின் கத்திரிப்புகளிலிருந்து தப்பிக்க அரசியல் தொடர்பான செய்திகளை மறைமுகமாகக் காட்டத்தொடங்கினார்கள். 1957இல் சிவாஜி கணேசன் தி. மு. க. வை விட்டு வெளியேறிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்ஜியார்) தி. மு. க ஆதரவு நடிகர்களுள் முதன்மையானவரானார். 1958இல் அவர் நடித்து வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படம் தி. மு. க. வின் கொள்கைகளை வெளிப்படையாக எடுத்துரைத்தது. 1957 தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களானதன் மூலம் அண்ணாதுரையும் கருணாநிதியும் சட்டமன்றத்தில் முதலில் நுழைந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்த திரைப்படத்துறையினரானார்கள். 1962 தேர்தலில் எஸ். எஸ். ராஜேந்திரனும், 1967 தேர்தலில் எம்ஜியாரும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாயினர். இவ்விரு தேர்தல்களிலும் பிரச்சாரத்துக்குத் திரைப்படங்களையும் திரைப்படப் பாடல்களையும் பெரிதும் பயன்படுத்தினார்கள். 1967 தேர்தலில் தி. மு. க. வெற்றி பெற்று அண்ணாதுரை தமிழகத்தின் முதல்வரானார்.

Remove ads

அதிமுகவும் திரைத்துறையும்

1969ல் அண்ணாதுரையின் மரணத்திற்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வரானார். 1972இல் எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக பிளவுபட்டது. எம்ஜியார் கட்சியிலிருந்து வெளியேறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார். (கருணாநிதியும் தற்காலம் வரை பல திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதி வருகிறார்). இக்காலகட்டத்தில் வெளியான அவரது உரிமைக்குரல் (1974), இதயக்கனி (1975), நேற்று இன்று நாளை (1974) போன்ற படங்களில் அவரது அரசியல் கருத்துகளை மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் சொல்லியிருந்தார். 1977 தேர்தலில் அ. தி. மு. க வெற்றி பெற்று எம்ஜியார் தமிழக முதல்வரானார். அடுத்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்று பன்னிரெண்டாண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார்.

1984 தேர்தலின் போது எம்ஜியார் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் தேர்தல் பரப்புரைக்கு வர இயலவில்லை. அவர் மருத்துவமனை அறையில் படுத்திருக்கும் காட்சியை நிகழ்படம் எடுத்து தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன் காட்டச்செய்து பரப்புரை செய்தது அ. தி. மு. க. இக்காலகட்டத்தில் 1960களிலும் 70களிலும் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெ. ஜெயலலிதாவின் செல்வாக்கு அ. தி. மு. க. வில் கூடத் தொடங்கியது; அவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1987ல் எம்ஜியார் இறந்த பின் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. எம்ஜியாரின் மனைவியும் முன்னாள் திரைப்பட நடிகையுமான வி. என். ஜானகி இராமச்சந்திரன் 30 நாட்கள் முதல்வராக இருந்தார். அவரது தலைமையில் ஒரு குழுவும் ஜெயலலிதா தலைமையில் ஒரு குழுவும் தனியே 1989 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றன. தேர்தல் முடிந்த பின் இரு குழுக்களும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தன. 1991 தேர்தலில் அ. தி. மு. க வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழக முதல்வரானார். 2001, 2011 ,2016 தேர்தல்களிலும் வென்று மீண்டும் முதல்வரானார். 2006 சட்டமன்றத் தேர்தலில் பரப்புரைக்காக சிம்ரன், விஜயகுமார், முரளி, செந்தில், விந்தியா, பாண்டியன் போன்ற நடிகர்களை அ. தி. மு. க. பயன்படுத்தியது.

பிற கட்சிகள்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வெற்றியால் கவரப்பட்டு வேறு சில நடிகர்களும் புதிய கட்சிகளைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு டி. ராஜேந்தர், பாக்யராஜ் போன்றவர்கள் தனியே கட்சி தொடங்கி தோல்வி கண்டனர். 1996 தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தி. மு. க.-த. மா. க. கூட்டணியை வெளிப்படையாக ஆதரித்தார்; ஆனால் எக்கட்சியிலும் அவர் சேரவில்லை. மேலும் சில நடிகர்கள் அ. தி. மு. க. விலும் தி. மு. க. விலும் நேரடியாக இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். (எ. கா: நெப்போலியன், சவுந்தரராசன், எஸ். எஸ். சந்திரன், சரத்குமார், ஜே. கே. ரித்தீஷ், வாகை சந்திரசேகர், ராதா ரவி போன்றோர்). தற்போது நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே. மு. தி. க) என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வெற்றிபெற்ற விஜயகாந்தின் தே. மு. தி. க. எதிர்க்கட்சி எனும் தகுதியைப் பெற்றது.

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads