மலேசிய இசுலாமிய கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய இசுலாமிய கட்சி (ஆங்கிலம்: Malaysian Islamic Party; மலாய்: Parti Islam Se-Malaysia; சீனம்: 马来西亚伊斯兰党; (சாவி: ڤرتي اسلام س-مليسيا) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பொதுவாக, இதனைப் பாஸ் கட்சி என்று அழைப்பார்கள். இந்தக் கட்சி இசுலாமிய சமயம் சார்ந்த கட்சியாகும். தற்போது இந்தக் கட்சியின் தலைவராக டத்தோ ஸ்ரீ அடி அவாங் இருக்கிறார்.
இசுலாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்தக் கட்சியின் தலையாயக் கோட்பாடு ஆகும். கருத்தியல் ரீதியாக இந்தக் கட்சி இசுலாமிய அடிப்படைவாதத்தில் கவனம் செலுத்துகிறது.[2] இந்தக் கட்சியின் தேர்தல் தளம் பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் கிராமப்புறங்கள்; கிழக்குக் கடற்கரைகள் மற்றும் கிளாந்தான், திராங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலங்களில் மையமாக உள்ளது.
2022 பொதுத் தேர்தல் மற்றும் 2023-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில், பேராக் மற்றும் பகாங் மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் இந்தக் கட்சி குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது. இந்த ஆதரவு "பச்சை அலை" ஆதரவு என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
பொது
2020-2022 மலேசிய அரசியல் நெருக்கடியின் விளைவாக ஆட்சிக்கு வந்த அன்றைய ஆளும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. அந்தக் கட்டத்தில் கிளாந்தான், திராங்கானு, கெடா, பெர்லிஸ் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இந்தக் கட்சி தனியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ ஆட்சி செய்தது. அத்துடன், 2008 - 2018-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கங்களில் ஒரு கூட்டணி பங்காளிக் கட்சியாகவும் இருந்தது.
பாரிசான் நேசனல் கூட்டணி அரசாங்க ஆளுமைக் கட்சியாக இருந்த போது அதை எதிர்த்த ஆற்றல் மிக்க கட்சியாக இந்த மலேசிய இசுலாமிய கட்சி விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் இருக்கும் பழைமைவாத மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு ஆகியவற்றின் வலுவான ஆதரவுகளை இந்தக் கட்சி தற்போது பெற்றுள்ளது.
2022 மலேசியப் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி, மலேசிய மக்களவையின் 222 இடங்களில் 43 இடங்களைப் பெற்றது. அந்தக் கட்டத்தில் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.
மக்களின் ஆதரவு
மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசிய மக்களின் பேரதரவைப் பெற்று விளங்கிய பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அரசியல் கட்சியும் இதுவே ஆகும்.
2008-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்குப் பின், பி.கே.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாக்காத்தான் ராக்யாட் எனும் ஓர் அரசியல் எதிர் அணியை உருவாக்கியது. இப்போது மலேசியாவின் கிளாந்தான், திராங்கானு, சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களை பாக்காத்தான் ராக்யாட் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.
Remove ads
மாற்று முன்னணி
புதிதாகத் தோன்றிய இந்த மக்கள் நீதிக் கட்சி, ஏற்கனவே செயல்பட்டு வந்த சனநாயக செயல் கட்சி, ஆகியவற்றுடனும் இணைந்து மாற்று முன்னணி (மலாய்: Barisan Alternatif) எனும் ஓர் எதிர் அரசியல் அணியை, மலேசிய இசுலாமிய கட்சி உருவாக்கியது. 1999 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் மலேசிய இசுலாமிய கட்சி திரங்கானு மாநிலத்தை, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியிடம் இருந்து கைபற்றியது.[3]
அண்மைய நிகழ்வுகள்
கடந்த காலங்களில், மலேசிய இசுலாமிய கட்சி மலாய்க்காரர்களையும், முசுலீம் ஆதரவாளர்களையும் இலக்குகளாக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால், அண்மைய காலங்களில், குறிப்பாக 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அதன் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உறுத்தல்கள் இல்லாத மிதமான போக்கை முசுலீம் அல்லாதவர்களிடம் காட்டி வருகிறது.
மலேசியாவை ஓர் இசுலாமிய நாடாக மாற்றுவதையே ஓர் இலட்சியமாகக் கொண்டிருந்த மலேசிய இசுலாமிய கட்சி, அண்மைய காலங்களில் அதைப் பற்றி பேசுவதையும் குறைத்துக் கொண்டது.[4] 2008 பொதுத் தேர்தலில் முசுலீம் அல்லாத ஒருவரையும் மலேசிய இசுலாமிய கட்சியின் சார்பில் போட்டியிட வைத்தது.
நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்
நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (10 சனவரி 1931-12 2015 பிப்பரவரி) ஒரு முன்னாள் மலேசிய அரசியல்வாதி, முசுலீம் ஆண்மிக அறிஞர், மலேசிய கிளாந்தான் மாநில முதல்வர் மற்றும் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஆவார். "தோக் குரு" நிக் அசீஸ் என்பது அவரின் பிரபலமான புனைபெயர் ஆகும்.
இவர் தமிழ், அரபு, உருது மொழியில் சரளமாக உரையாட வல்லவர். இவர் மலேசியத் தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலமான அரசியல்வாதி ஆவார். நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அவர்கள் 12 பிப்பரவரி 2015 இரவு 9:40 மணிக்கு புலாவ் மலாக்காவில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார்.[5]
குமதா இராமன்
குமுதா ராமன் எனும் ஒரு தமிழ்ப் பெண்ணைத் தன் கட்சியின் சார்பில் போட்டியிட வைத்து சாதனை படைத்தது. குமதா ராமன் ஒரு வழக்குரைஞர் ஆவார். ஜொகூர் மாநிலத்தில் உள்ள உலு திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads