நீலமலை
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மலைத்தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகிரி மலை (Nilgiri Mountains) என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மலைத்தொடராகும். இம்மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் நீலகிரி என பெயர் பெற்றது. இது மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலை வாழிடம் ஆகும். இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.

நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தையும் ஊட்டியையும் நீலகிரி மலை இரயில் பாதை இணைக்கிறது.
Remove ads
சொற்பிறப்பியல்
நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர் குறைந்தது பொ.ச. 1117 முதல் பயன்பாட்டில் உள்ளது.[2][3] நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்.
Remove ads
அமைவிடம்
நீலகிரி மலைகள் கர்நாடக பீடபூமியிலிருந்து வடக்கே மாயாறு நதியால் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
நீலகிரி மலைகள் மூன்று தேசிய பூங்காக்களை எல்லைகளாக கொண்டுள்ளது. 321 கி.மீ.² பரப்பளவில் கேரளம், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சந்திக்கும் எல்லையின் வடக்கு பகுதியில் முதுமலை தேசியப் பூங்கா அமைந்துள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா 78.5 கி.மீ.² பரப்பளவில் கேரளத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதில் சோலைக்காடுகள், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்கள் உள்ளன. அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா தெற்கே அந்த இரண்டு பூங்காக்களுடன் ஒட்டி அமைந்துள்ளது. இது 89.52 கி.மீ.² பரப்பளவைக் கொண்டுள்ளது.
Remove ads
பாதுகாப்பு
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO' அறிவித்துள்ளது[5] நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும்.

வரலாறு
நீலகிரி மலைகளின் உயரமான பகுதிகளில் தொல்பழங்காலங்களிலிருந்து மக்கள் வசித்து வருகின்றனர். இது அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான தொல்பொருட்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்திலிருந்து கண்டறியப்பட்ட முக்கியமான தொகுப்பை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். இவை காலனித்துவ அதிகாரிகளான ஜேம்ஸ் வில்கின்சன் ப்ரீக்ஸ், மேஜர் எம். ஜே. வால்ஹவுஸ் மற்றும் சர் வால்டர் எலியட் ஆகியோரின் சேகரிப்புகள் ஆகும்.[6]
இந்த பிராந்தியத்தை குறிப்பிடும் நீல என்ற சொல்லின் பதிவானது கி.பி 1117 இல் காணப்படுகிறது. விட்டுணுவர்தனனின் ஒரு தளபதியின் பதிவில், போசள மன்னரின் எதிரிகளைப் பற்றி குறிப்பிடுகையில், "தோடர்களைப் பயமுறுத்தியதாகவும், கொங்கர்களை நிலத்தடிக்கு விரட்டியடித்ததாகவும், பொலுவாக்களைக் கொன்றதாகவும், மாலேயர்களைக் கொன்றதாகவும், பயந்துபோன எதிரிகளின் தலைவரான கலா நிர்பாலா, பின்னர் நீல மலையின் சிகரத்தை (மறைமுகமாக தொட்டபெட்டா அல்லது கிழக்கு நீலகிரிகளில் உள்ள பெரங்கநாட்டின் ரங்கசாமி சிகரம்) செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்கு வழங்கினார். " என்கிறது.[7]
பொ.ச. 10 ஆம் நூற்றாண்டைய கன்னட கல்வெட்டுடன் கூடிய ஒரு நடுகலானது நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்டது.[8] பொ.ச. 14 ஆம் நூற்றாண்டின் போசள மன்னர் மூன்றாம் வீர வல்லாளன் (அல்லது அவரது பிரதிநிதியான மாதவ தண்டநாயக்கனின் மகன்) இன் கன்னட கல்வெட்டு, மோயரின் சந்திப்புக்கு அருகிலுள்ள நீலகிரி சதாரண கோட்டையில் (இன்றைய தானாயக்கன் கோட்டை) சிவன் (அல்லது விஷ்ணு) கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோயில் பவானிசாகர் அணையில் மூழ்கியுள்ளது.[8][9]
1814 ஆம் ஆண்டில், பெரிய முக்கோணவியல் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, கீஸ் என்ற துணை உதவியாளரும், மக்மஹோன் என்ற ஒரு பயிற்சியாளரும் டாநாயன்கோட்டை கணவாய்வழியாக மலைகளில் ஏறி, தொலைதூர பகுதிகளுக்கள்வரை சென்று, ஆய்வு செய்து, தங்களின் கண்டுபிடிப்புகளின் அறிக்கைகளில் அனுப்பினர்.
விஷ் மற்றும் கிண்டர்ஸ்லி, இரண்டு இளம் மதராசு குடிமக்கள், மலைகளில் தஞ்சம் புகுந்த சில குற்றவாளிகளைத் தேடி, உள்பகுதிகளை கவனித்தனர். மலையில் இனமான காலநிலையும், நிலப்பரப்பு உள்ளதை அவர்கள் விரைவில் கண்டு உணர்ந்தனர்.[10]

1820 களின் முற்பகுதியில், நீலகிரிமலைகள் பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் வேகமாக மேம்படுத்தபட்டன. ஏனென்றால் பெரும்பாலான நிலங்கள் ஏற்கனவே பிரித்தானிய குடிமக்களுக்கு சொந்தமாக இருந்தன. காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இது ஒரு பிரபலமான கோடைக் கால மற்றும் வார இறுதி பயணம் மேற்கொள்ளும் இடமாக ஆனது. 1827 ஆம் ஆண்டில், ஊட்டி அதிகாரப்பூர்வ சுகாதார நிலையமாகவும், சென்னை மாகாணத்தின் கோடைகால தலைநகராகவும் ஆனது. பல வலைவுகள் கொண்ட மலை சாலைகள் போடப்பட்டன. 1899 ஆம் ஆண்டில், நீலகிரி மலை தொடருந்து பணிகள் மதராசு அரசாங்கத்தின் மூலதனத்தால் முடிக்கப்பட்டது.[11][12]
19 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மென்ட் சீன குற்றவாளிகளை இந்திய சிறையில் அடைக்க அனுப்பபட்டனர். விடுதலையான சீன ஆடவர் நாடுவட்டத்திற்கு அருகிலுள்ள நீலகிரி மலைகளில் குடியேறி, தமிழ் பறையர் பெண்களை மணந்தனர், அவர்களுக்கு சீன-தமிழ் குழந்தைகளை பிறந்தனர். அவை எட்கர் தர்ஸ்டனால் ஆவணப்படுத்தப்பட்டன.[13]
Remove ads
அமைப்பு
நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது. இதன் உயரம் எல்லாப் பகுதிகளிலும் ஏறக்குறைய ஒரே அளவுடையதாக உள்ளது. நீலகிரி மலை 35 கல் நீளமும் 20 கல் அகலமும் சராசரி 6500 அடி உயரமுமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சேரும் இடத்தில் இது அமைந்துள்ளது. இம்மலையில் ஒரு சதுரமைல் கூடச் சமநிலத்தைக் காண முடியாது. எங்கு பார்த்தாலும் மேடும் பள்ளங்களுமே தென்படும். இது சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்துள்ளது. இம்மலையின் மேற்குச் சரிவிலும், அவுட்டர்லானி பள்ளத்தாக்கிற்கு (Ouchterlony valley) மேலும், தென்சரிவிலும், சுவர்களைப் போன்ற, நூற்றுக் கணக்கான அடிகள் உயரமுள்ள பாறைகள் நிறைந்துள்ளன. மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன. மற்ற இடங்களில் உள்ள சரிவுகளிலெல்லாம், அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளன.
நீலகிரி மலையானது நடுவில் தென்வடலாகச் செல்லும் உயர்ந்த ஒரு தொடரால் கிழக்குப் பகுதியாகவும் மேற்குப் பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. அத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். தொட்டபெட்டா என்றால் 'பெருமலை' என்று பொருள். இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது.
Remove ads
நீலகிரியின் சிகரங்கள்


நீலகிரியின் மிக உயரமான இடமாக தொட்டபெட்டா சிகரம் (2,637 மீட்டர் (8,652 அடி)) உள்ளது.[14] இது உதகமண்டலத்தின் தென்கிழக்கில் 4 கி.மீ.,11°24′10″N 76°44′14″E உள்ளது.
தொட்டபெட்டா மலையின் மேற்கிலும், உதகமண்டலத்திற்கு அருகிலும் உள்ள சிகரங்கள் பின்வருமாறு:
- கொல்லாரிபேட்டா: உயரம்: 2,630 மீட்டர்கள் (8,629 அடி),
- மர்குனி (2594)m)
- எகுபா: 2,375 மீட்டர்கள் (7,792 அடி),
- கட்டக்காடு: 2,418 மீட்டர்கள் (7,933 அடி) and
- குல்குடி: 2,439 மீட்டர்கள் (8,002 அடி).
பனிவீழ் சிகரம் (உயரம்: (2,530 மீட்டர்கள் (8,301 அடி)) 11°26′N 76°46′E கிளப் சிகரம் (2,448 மீட்டர்கள் (8,031 அடி)), எல்க் சிகரம் (2,466 மீட்டர்கள் (8,091 அடி)) 11°23′55″N 76°42′39″E
தேவசோலை சிகரம் (உயரம்: 2,261 மீட்டர்கள் (7,418 அடி)), இதில் உள்ள நீலப் பசை மரங்களுக்காக அறியப்படுகிறது. இது தொட்டபெட்டாவுக்கு தெற்கில் உள்ளது.
குலக்கம்பை சிகரம் (1,707 மீட்டர்கள் (5,600 அடி)) இது தேவசோலை சிகரத்துக்கு கிழக்கில் உள்ளது.
முத்துநாடு பெட்டா (height: 2,323 மீட்டர்கள் (7,621 அடி)) 11°27′N 76°43′E இது உதகமண்டலத்திற்கு மேற்கே 5 கி.மீ, வடமேற்கில் உள்ளது. தாமிர பெட்டா (உயரம்: 2,120 மீட்டர்கள் (6,955 அடி)) 11°22′N 76°48′E என்பது உதகமண்டலத்தல் இருந்து தென்கிழக்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளியங்கிரி (2,120 மீட்டர்கள் (6,955 அடி)) என்பது 16 கி.மீ மேற்கே-வடமேற்கே உள்ளது.[15]
Remove ads
அருவிகள்
நீலகிரி மலைகளின் மிக உயரமான அருவி, கோலகாம்பாய் மலையின் வடக்கே உள்ள கோலகாம்பாய் அருவி ஆகும். இது 400 அடி (120 மீ) துண்டுபடாத வீழ்ச்சியைக் கொண்டுள்ளது. இதன் அருகில் 150 அடி (46 மீ) ஹலாஷனா அருவி உள்ளது.
இரண்டாவது மிக உயர்ந்த அருவியானது கோத்தகிரிக்கு அருகிலுள்ள கேத்தரின் அருவி ஆகும் இது 250 அடி (76 மீ) உயர அருவியாகும். இது நீலகிரி மலைகளில் காப்பி தோட்டங்களை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படும் எம்.டி. காக்பர்னின் மனைவியின் பெயரால் அழைக்கபடுகிறது. மேல் மற்றும் கீழ் பைக்காரா அருவி முறையே 180 அடி (55 மீ), மற்றும் 200 அடி (61 மீ) அருவிகளைக் கொண்டுள்ளது. 170 அடி (52 மீ) உயர கல்லட்டி அருவி செகூர் சிகரத்தில் உள்ளது. அருவங்காடு அருகே உள்ள கார்தேரி அருவி ஆகும். இங்குதான் முதல் மின்நிலையம் இருந்தது. இதிலிருந்து அசல் கோர்டைட் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. குன்னூர் அருகே உள்ள லாஸ் அருவி சுவாரஸ்யமானது. குன்னூர் காட் சாலையின் கட்டிடத்தை மேற்பார்வையிட்ட பொறியாளர் மேஜர் ஜி. சி. லாவுடனான தொடர்பு காரணமாக இவரின் பெயராலேயே இது அழைக்கபடுகிறது.[16]
Remove ads
தாவரங்களும், விலங்கினங்களும்
நீலகிரிகளின் சோலைகளில் 2,700க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், 160 வகையான பன்னம் மற்றும் பரணி தாவரத்தைச் சேர்ந்தவை. நீலகிரி சோலைகளில் எண்ணற்ற வகையான பூக்காத தாவரங்கள், பாசிகள், பூஞ்சை, ஆல்கா மற்றும் நில ஒட்டுயிரிகள் உள்ளன. வேறு எந்த மலை வாழிடத்திலும் இவ்வளவு கவர்ச்சிகரமான இனங்கள் இல்லை.[17] இந்த மலைப்பகுதியில் வங்காளப் புலி, இந்திய யானை, இந்தியச் சிறுத்தை, புள்ளிமான், இந்தியக் காட்டெருது , கடமான், செந்நாய் , பொன்னிறக் குள்ளநரி, கட்டுப்பன்றி, நீலகிரி வரையாடு, இந்திய புள்ளிச் சருகுமான், புல்வாய், ஆசிய மரநாய், வரிப்பட்டைக் கழுதைப்புலி , தேன் கரடி, நாற்கொம்பு மான் , கரும்வெருகு, முள்ளம்பன்றி, இந்திய மலை அணில், தேன் வளைக்கரடி, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, இந்திய எறும்புண்ணி, வங்காள நரி, ஆற்று நீர்நாய், வண்ண வௌவால் போன்ற விலங்குகளும், இந்திய மலைப் பாம்பு, இராச நாகம், கட்டுவிரியன், இந்திய நாகம், மலபார் குழி விரியன், நீலகிரி கீல்பேக், ஓணான், எரிக்ஸ் விட்டேக்கரி, சதுப்புநில முதலை போன்ற ஊர்வன இனங்களும், சோலைமந்தி, நீலகிரி மந்தி, சாம்பல் மந்தி, குல்லாய் குரங்கு போன்ற முதனிகளும்,. இந்திய மயில், நீலகிரி சிரிப்பான், நீலகிரி ஈப்பிடிப்பான், வெள்ளைக் கானாங்கோழி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, நீலப் பைங்கிளி, மலை இருவாட்சி, கருப்பு புறா, கருங்கழுத்துப் பாறு, கருந்தலை மாங்குயில், சாம்பல் தலை புல்புல்l, மலபார் சாம்பல் இருவாச்சி போன்ற பறவைகளும், கேழல்மூக்கன், அமைதிப் பள்ளத்தாக்கு தூரிகை தவளை, மலபார் சறுக்குத் தவளை, பெடோமிக்சலஸ் போன்ற நீர்நில வாழிகளும், இன்னும் அறியப்படாத பல விலங்கினங்களும் காணப்படுகின்றன.
இந்த மலைப்பகுதியில் வெப்பமண்டல மழைக்காடுகள். மான்ட்டேன் காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரமான காடுகளும் பெரும்பகுதி காணப்படுகின்றன. விரிந்த தேயிலைத் தோட்டங்கள், எளிதான மோட்டார்-வாகன போக்குவரத்து வசதி, வணிகரீதியாக நடவு செய்யபட்டுள்ள பூர்வீகம் அல்லாத தைல மரங்கள் மற்றும் வாட்டல் (அகாசியா டீல்பேட்டா, அகாசியா மெர்ன்சி) தோட்டங்கள் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றால் இந்த வன வாழ்விடங்களில் பெரும்பாலான இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.[18] இப்பகுதியில் பல பெரிய, சிறிய நீர் மின் ஆற்றல் நிலையங்கள் உள்ளன.[19] ஸ்காட்ச் விளக்குமாறு தாவரமானது சுற்றுச்சூழல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது.[20]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads