பாலி இராச்சியம்
பாலி தீவின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஓர் இந்து-பௌத்த இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலி இராச்சியம் (ஆங்கிலம்: Bali Kingdom; இந்தோனேசியம்: Kerajaan Bali; பாலினியம்: ᭚ᬓᭂᬭᬚ᭡ᬦ᭄ᬩᬮᬶ) என்பது ஒரு காலக் கட்டத்தில் இந்தோனேசியா, சிறு சுண்டாத் தீவுகள், பாலி தீவின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஓர் இந்து-பௌத்த இராச்சியம் ஆகும். இந்த இராச்சியம், 10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில், பூர்வீக பாலினிய அரசாட்சி முறைமையைச் சார்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
பாலி இராச்சியத்தின் வரலாறு என்பது மாதரம் இராச்சியம் (Mataram Kingdom) (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) தொடங்கி மஜபாகித் பேரரசு (Majapahit Empire) (13-நூற்றாண்டு – 15-ஆம் நூற்றாண்டு) ஆகிய இரு இராச்சியங்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அத்துடன் பாலி தீவின் பண்பாடு, மொழி, பாரம்பரியக் கலைகள் மற்றும் கட்டிடக்கலை போன்றவையும் ஜாவாவின் தாக்கத்தைக் கொண்டுள்ளன.
Remove ads
பொது
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மயாபாகித்து பேரரசு வீழ்ச்சி அடைந்தது. ஜாவானிய இந்துமதத் தாக்கங்களும் வலுவடைந்தன. மயாபாகித்து பேரரசு எனும் இந்து அரசு, டெமாக் சுல்தானகத்திடம் (Demak Sultanate) வீழ்ந்த பிறகு, மஜபாகித் பேரரசின் அரசவைக் குடும்ப உறுப்பினர்கள், அரசவைப் பிரபுக்கள், அரசவைப் பாதிரியார்கள் மற்றும் கைவினைஞர்கள் பலர், பாலி தீவில் தஞ்சம் அடைந்தனர்.
இதன் விளைவாக பாலி தீவு, இந்தோ-ஜாவானிய பண்பாடு மற்றும் இந்தோ-ஜாவானிய நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாகவும் மாறியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பாலி இராச்சியம், அதன் செல்வாக்கை அண்டைத் தீவுகளில் விரிவுபடுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கெல்கெல் இராச்சியம் (Gelgel Kingdom) எனும் ஒரு புது குடியேற்றவிய இராச்சியத்தை உருவாக்கியது. இதன் பின்னர் பாலி இராச்சியத்தின் நீட்சியாக காராங்காசம் இராச்சியம் (Karangasem Kingdom); குலுங்கோங் இராச்சியம் (Klungkung kingdom) போன்ற துணை இராச்சியங்களும் உருவாகின.
Remove ads
வரலாறு
19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, இடச்சு கிழக்கிந்திய அரசு, பாலியில் தன்னுடைய ஆட்சி அதிகார ஈடுபாடுகளைக் காட்டத் தொடங்கியது. பாலினிய சிறு இராச்சியங்களுக்கு (Balinese Minor Kingdoms) எதிராக ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுப்பைத் தொடங்கியது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இடச்சுக்காரர்களின் பாலி மீதான படையெடுப்பு ஒரு முடிவிற்கு வநதது.
இந்தச் சிறு இராச்சியங்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது எதிர்வினை இல்லாத சரணடைதல் மூலமாகவோ இடச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அதே வேளையில் பூபுத்தான் (Puputan) போன்ற சில துர்நிகழ்வுகளும் நடந்து உள்ளன.[2]
இந்த வகையான துர்நிகழ்வுகளில் இருந்தும், பாலினிய அரசக் குடும்பங்கள் தப்பிப் பிழைத்தன. இருப்பினும் இந்த நிகழ்வுகள் பூர்வீக பாலினிய இறையாண்மை இராச்சியங்களின் ஆயிரமாண்டு ஆட்சிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன. பின்னர் பாலினிய உள்ளூர் அரசாங்கம், இடச்சு குடியேற்றவிய் நிர்வாகமாக மாறியது. பின்னர் பாலி நிர்வாக அமைப்பு, இந்தோனேசியா குடியரசின் அரசாங்க ஆளுமைக்குள் வந்தது.[3]
Remove ads
பாலி


கீதாஞ்சலி பாடிய இரவீந்திரநாத் தாகூர், பாலியைப் பற்றி அவரின் கருத்துகளை வெளியிட்டு உள்ளார்.[4]
பச்சைப் பசேல் வயல் காடுகள். பரந்த பரவெளி காட்டில் பசுமையின் சுமைகள். பார்ப்பவர்களை எல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும் பாமர மக்கள் செல்வங்கள். பார்த்த பின்னும் பார்க்கச் சொல்லும் பச்சை பாலித் தீவின் பெண்மைச் செல்வங்கள்.
அவர்களின் நடையழகில் ஓராயிரம் ஒய்யாரங்கள். ஒடிந்து விழும் ஒவ்வோர் இடையிலும் ஓராயிரம் கவிதைகள். ஆடை ஆபரணங்களில் ஓராயிரம் வண்ணக் கலவைகள்.
அதில் ஓராயிரம் வானவில் ஜாலங்கள். அத்தனையும் சொர்க்க வாசலின் சொப்பனச் சீதனங்கள். பாலித் தீவில் பெண்மையின் மென்மைகள் மாயஜாலங்கள் காட்டுகின்றன
அழகிய பாலி தீவு
உலகின் அழகிய தீவுகளில் தனித்துவம் பெற்றது பாலித் தீவு. உலகின் மிகப்பெரிய இசுலாமிய நாடு இந்தோனேசியா. சுண்டா (Sunda) தீவுகளுக்கு மேற்கிலும் ஜாவா லொம்போக் (Lombok) தீவுகளுக்கு இடையிலும் அமைந்து உள்ளது. இந்தோனேசியாவில் 38 மாநிலங்கள் உள்ளன. அதில் பாலி தீவு ஒரு மாநிலம்.
பாலி தீவில் 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள்; ஏறக்குறைய 42 இலட்சம் பேர். ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் மேற்கொள்கிறார்கள். அதனை நியேப்பி அமைதி நாள் (Nyepi Day) என அழைக்கிறார்கள்.[5] அந்த நாளில் பாலித் தீவு முழுமைக்கும் விடுமுறை. வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
சுற்றுலா இடங்கள்
பாலி தீவில் இந்து மக்களின் நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உன்னதமான நிலையில் உள்ளன. அவர்கள் அவற்றை இன்று வரையிலும் பாதுகாத்து வருகின்றனர். பாலியின் பெரும்பாலான இடங்களில் இந்து கோயில்கள், சிற்பங்கள், கலைப்பொருட்களைக் காண முடியும்.[6]
சுற்றுலா இடங்களைப் பார்ப்பதற்கும் கலைப் பொருட்களை வாங்குவதற்கும் சுற்றுலாப் பயணிகள் இலட்சக் கணக்கில் வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகப் பாலி தீவு விளங்குகின்றது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்

பாலியில் பழங்காலக் காலத்தில் இருந்தே (கிமு 1 மில்லியன் முதல் கிமு 200,000 வரை) மனிதர்கள் வசித்து வருகின்றனர். பாலியில் உள்ள செம்பிரான் (Sembiran) மற்றும் துருன்யான் (Trunyan) கிராமங்களில் கைக் கோடரிகள் போன்ற பண்டைய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. [2][3] அதைத் தொடர்ந்து இடைக் கற்காலம் (கிமு 200,000–3,000) வந்தது.[7][8]
இருப்பினும், தற்போதைய பாலினிய மக்களின் மூதாதையர் புதிய கற்காலக் காலத்தில் (Neolithic Period), கிமு 3,000 முதல் 600-ஆம் ஆண்டுகள் வரையிலான காலப் பகுதியில் பாலி தீவை அடைந்தனர். அவர்கள் பயன்படுத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம்; மற்றும் ஆஸ்திரோனீசிய மொழிகளின் பயன்பாடு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெண்கலக் காலம் கிமு 600 முதல் கிபி 800 வரை வந்தது.
Remove ads
தொடக்க கால இராச்சியங்கள்

பாலியில் வரலாற்றுக் காலம் 8-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இது புத்த வாக்கு பொறிக்கப்பட்ட களிமண் பலகைகள் (Buddhist Votive Clay Tablets) கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அறியப்படுகிறது. தாது கோபுரம் எனும் பெரிய கோபுரத்தில் உள்ள சிறிய களிமண் சிலைகளில் காணப்படும் அந்த புத்த வாக்குகள், பாலியில் அறியப்பட்ட முதல் கல்வெட்டாகும்.[7]
மேலும், அந்தக் களிமண் சிலைகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டு மாதரம் இராச்சியத்தைச் சேர்ந்தவை.[7] இத்தகைய சிலைகள் கியான்யார் (Gianyar) குறுமாநிலத்திலும், பெஜேங், தாத்தியாப்பி மற்றும் பிலாபாலு கிராமங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7]
போரோபுதூர் மற்றும் பிற புத்த கோயில்களில் காணப்படும் மத்திய ஜாவானிய பௌத்த கலைப் பாணி; பாலியின் மணி வடிவக் கோபுரச் சிலைகளிலும் கலை ஒற்றுமையைக் கொண்டுள்ளன. ஆகவே, இது பாலியின் தொடக்ககால வரலாற்றில் சைலேந்திரா (Sailendra) அரச மரபு தொடர்புகளைக் குறிக்கின்றது.
Remove ads
செரி கேசரி வருமதேவன்
செரி கேசரி வருமதேவன் (Sri Kesari Warmadewa) என்பவர் தான் பாலியில் ஓர் இந்திய அரச மரபு பேரரசை உருவாக்கியவர். இவர் தான் இந்தோனேசியாவில் வருமதேவா அரச மரபையும் தோற்றுவித்தவர்.
இந்தோனேசியா பாலித் தீவில் சானூர் (Sanur) எனும் கடற்கரை நகரத்தில், 1932-ஆம் ஆண்டு ஒரு கல்தூணைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் பெலாஞ்சோங் கல்தூண் (Belanjong pillar). சமசுகிருத மொழியிலும் பழைய பாலி மொழியிலும் எழுதப்பட்டது.
பெலாஞ்சோங் கல் தூண்



பழைய பாலித் தீவு மொழி பல்லவ கிரந்த எழுத்து வடிவங்களைக் கொண்டது. பெலாஞ்சோங் கல் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914-ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்டவை.
செரி கேசரி வருமதேவன் தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இப்போது அந்தத் தூண் பெலாஞ்சோங் ஆலயத்தில் (Blanjong Temple) பாதுகாக்கப்பட்டு வருகிறது. சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றார்கள்.
கி.பி. 920-ஆம் ஆண்டுகளில் மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சய வம்சாவளியினருக்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது.
சைலேந்திரா பேரரசு
வருமதேவா பேரரசையும் சஞ்சய பேரரசையும் பற்பல அரச மரபினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாலியில் வருமதேவா பேரரசை உருவாக்கியவர் செரி கேசரி வருமதேவன். கல் தூண் குறிப்புகளின் படி செரி கேசரி வருமதேவா என்பவர் பௌத்த மதத்தைச் சார்ந்த சைலேந்திர அரச மரபைச் சேர்ந்த மன்னர்.[9][10]
சைலேந்திர வம்சம் என்பது மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஓர் அரச மரபு ஆகும். செரி கேசரி வருமதேவா பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலி தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மலுக்கு தீவுகளையும் கைப்பற்றினார்.[11]
இந்து பௌத்த கலப்புத் திருமணங்கள்
இந்து மத அரசக் குடும்பங்களுக்கும்; பௌத்த மத அரசக் குடும்பங்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெற்று உள்ளன. அதனால் யார் எங்கே எந்த இடத்தில் ஆட்சி செய்கிறாரோ; அந்த இடத்தில் எந்த மதம் முதன்மை மதமோ இருக்கிறதோ; அந்த மதத்தையே பின்பற்றி, மதப் பிரச்சினைகளைத் தவிர்த்து இருக்கிறார்கள்.
பெலாஞ்சோங் கல் தூண் தான் இப்போதைக்குப் பாலி தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.[12]
பாலியின் அரசர்கள்
கீர்த்தாநகரன்
1284-ஆம் ஆண்டு ஜாவாவில் இருந்த சிங்காசாரி பேரரசின் கீர்த்தநகரன் (Kertanegara) எனும் அரசர் பாலியின் மீது படை எடுத்தார். செரி கேசரி வர்மதேவா அரச மரபு அரசிற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார். பின்னர் சிறிது காலம் கழித்து கயா மடா மன்னரும் மஜபாகித் பேரரசினால் தோற்கடிக்கப் பட்டார்.[13][14]
14-ஆம் நூற்றாண்டில் சுமத்திரா, ஜாவாவில் மஜபாகித் பேரரசு தன்னிகர் இல்லாத அரசாக விளங்கியது. கடைசியில் பாலி இராச்சியமும் மஜபாகித்தின் கரங்களில் வீழ்ந்தது. கயா மடா (கஜ மதன்) (Gajah Mada) எனும் மஜபாகித் அரசர் பாலியின் மீது படையெடுத்துச் சென்று கீர்த்தாநகரனின் சிங்காசாரி அரசை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்.[15] கஜ மதன் எனும் பெயரை இப்போது கஜா மாடா என்று அழைக்கிறார்கள்.[16][17]
பாலியில் சாம்பராங்கான் எனும் இடத்தில் மஜபாகித்தின் தலைநகரம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மஜபாகித் பேரரசு பாலியை ஆட்சி செய்தது. அதாவது, 17-ஆம் நூற்றாண்டு வரை மஜபாகித் அரசர்கள் பாலியை ஆட்சி செய்தார்கள்.[18][19]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads