மானாமதுரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். மானாமதுரை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இது மாவட்டத் தலைநகரான சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.7°N 78.48°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரின் நடுவில் வைகை ஆறு பாய்கிறது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ தாஸ் மீனா அவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.[6][7]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 52,131 வீடுகளும், 2,07,223 மக்கள்தொகையும் கொண்டது. அதில் ஆண்கள் (1,04,428) 50.39 சதவிகிதமும் பெண்கள் (1,02,795) 49.61 சதவிகிதமும் உள்ளனர். மேலும் 12 வயதுக்குட்பட்டோர் 22,403 பேர். கல்வியறிவு 69.99 சதவிகிதமாக உள்ளது.[8]
ஆட்சி
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரைக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மானாமதுரை நகராட்சியாக ஆனபோது அருகில் உள்ள பேரூராட்சிகளான திருப்புவனம், திருப்பாசேத்தி, இளையான்குடி ஆகியவை மானாமதுரையோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் காரைகுடியை அடுத்து மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக மானாமதுரை உருவெடுத்தது.[9]
பெயர் காரணம்
இராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி செல்லும் பொழுது வானரங்களின் உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "வானரவீரன்மதுரை" என்று பெயர் வந்தது. அதுவே ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.[10]
Remove ads
கைவினை சிறப்புகள்
இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[11][12][13] மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[14]
Remove ads
புவிசார் குறியீடு

மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது.[15][16][17]
போக்குவரத்து
பேருந்து
மானாமதுரையில் மேல் கரையில் இயங்கிவந்த பேருந்து நிலையத்தால் ஊருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரிசெய்ய 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு வருடாந்திர பட்ஜெட்டில் மானாமதுரைக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுகப்பட்டதை தொடர்ந்து புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2002ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா கண்டது. இந்நிலையம் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிசெல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். இந்நிலையத்தில் கழிப்பறைகள், உணவகங்கள், எரிபொருள் நிறப்பகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து உள்ளது. இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், தூத்துக்குடி, பரமக்குடி, சாயல்குடி, இளையான்குடி போன்ற ஊர்களுக்கு பேருந்து சேவை உள்ளது.
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
ரயில்
மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று. இது நகரின் தெற்கு பகுதியில், மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் தென்மேற்கில் விருதுநகர் சந்திப்பையும் வடமேற்கில் மதுரை சந்திப்பையும் தென்கிழக்கில் ராமேசுவரம் ரயில் முனையத்தையும் வடகிழக்கில் காரைக்குடி சந்திப்பையும் இணைக்கிறது. இந்நிலையம் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கட்டப்பட்ட முதல் 20 சந்திப்புகளில் ஒன்று. பின்பு 2001ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிவுபெற்றது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளது. ஆனால் முதல் மூன்று நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
வானூர்தி
மானாமதுரைக்கு என்று தனி வானூர்தி நிலையம் கிடையாது. அருகில் உள்ள விமான நிலையங்கள்:
- மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் (57 கி.மி.)
- திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் (143 கி.மி)
- தூத்துக்குடி உள்நாட்டு வானூர்தி நிலையம் (160 கி.மி).
Remove ads
மருத்துவமனைகள்
- தமிழ்நாடு லெப்ரசி மிஷன் தொழுநோய் சிறப்பு மருத்துவமனை, தயாபுரம்
- அரசு மருத்துவமனை, மானாமதுரை
- அரவிந்த் கண் மருத்துவமனை, மானாமதுரை கிளை
- நிருபராஜன் உயிர்காப்பு மருத்துவமனை, புறவழிச்சாலை, மானாமதுரை.
- செல்வா மருத்துவமனை, மானாமதுரை
- ஜெயபால் மருத்துவமனை, மானாமதுரை.
- உண்ணாமலை குழந்தைகள் நல மருத்துவமனை
- வீரா காது மூக்கு தொண்டை சிகிச்சை மையம், மானாமதுரை
- லக்ஷ்மி கன் பரிசோதனை மையம்
- கண்ணன் மருத்துவமனை
போன்ற சில மருத்துவமனைகள் உள்ளன. அவசர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை இராசாசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மக்கள் செல்கின்றனர்.
கல்வி நிறுவனங்கள்
- ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி
- அமிர்தா செவிலியர் கல்லூரி
- மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- சி. எஸ். ஐ செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளி
- ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி
- குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி
- குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,மானாமதுரை
- புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
- புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- பண்ணை மாரிவெனி குளோபல் பள்ளி
- வெங்கடேசா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
Remove ads
பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்

- சோமநாதசுவாமி கோயில்
- வீர அழகர் கோயில்
- பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
- தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில்

தாயமங்கலம் என்பது சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் மதுரையிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் , மானாமதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் என்ற சொல்லுக்கு தமிழில் 'தாய்' என்று பொருள்படுவதால் இந்த ஊர் தாயமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாதம் பங்குனித்திங்கள் 15ம் தேதி முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாள் திருவிழாவில் தேரோட்டம்மும் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைப்பு விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும். இக்கோயிலில் பல பூச்சு வேலைகள் மற்றும் பிரதான கோபுரம் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 22 ஆகஸ்ட் 2024 அன்று மகா கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது.
திரு இருதய ஆண்டவர் ஆலயம்

மானாமதுரையின் புறநகர்ப் பகுதியில் முத்தனேந்தல் அருகில் இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் புனித இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இது கோதிக்(Gothic) என்று சொல்லப்படும் பிரெஞ்சு கட்டிடக்கலைபாணியில் 1886 இல் கட்டப்பட்டது. இது பிரான்சில் உள்ள பழம்பெரும் ரெய்ம்ஸ் திருத்தலத்தின் உண்மையான பிரதி ஆகும்.
- பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads