வேதாத்திரி மகரிசி
உலக அமைதிக்கு வித்திட்டவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi). உலக அமைதிக்காக அருந்தொண்டாற்றிய ஒப்பற்ற சித்தனையாளர். மனவளக்கலை பயிற்சி வழியாக எளிய மக்கள் மேன்மைக்கு பாடுபட்டவர். மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனம், உடலை பக்குவப்படுத்தும் விதமாக மனவளக்கலையை உருவாக்கியுள்ளார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தத்துவங்களை உருவாக்கி பயன்பெறும் வகையில் சமுதாயப் பணி அற்றியவர்.[1][2] அறிவின் சிறப்பை உணர்ந்து இனம், மத அடையாளங்கள் கடந்து வாழ்வதே இன்பமயமானது என்ற கருத்துடன் செயல்பட்டவர். சமுதாயத்தில் தனி மனித மாண்பை உயர்த்துவதற்கு எளிய நடைமுறையுள்ள வாழ்க்கை தத்துவத்தை உருவாக்கியதால் அருட்தந்தை, பாமர மக்களின் தத்துவ ஞானி என்ற அடைமொழிகளுடன் புகழ் பெற்றுள்ளார்.
Remove ads
வாழ்க்கை நிகழ்வுகள்
வேதாத்திரி மகரிஷி சென்னை அருகில் கூடுவாஞ்சேரி கிராமத்தில்[3] நெசவுத் தொழில் செய்த வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக, ஆகஸ்ட் 14, 1911ல் பிறந்தார். அதிகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சொந்த ஊரில் 3ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு குடும்பத்துக்கு உதவினார். கல்வி மீதான ஆர்வத்தால் இரவு பாடசாலையில் சேர்ந்து தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களை கற்றார்.
சென்னை தபால் துறையில் 18ம் வயதில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த பணியுடன் பகுதி நேரமாக நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். ஏழை சிறுவர்களுக்கு தனி முயற்சயின் வழியாக கல்விப் பயிற்சியும் அளித்து வந்தார்.
சென்னையில் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவிடம் சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றார். தியானம், யோகா கலைகளில் ஈடுபாடு கொண்டு முறைப்படி கற்றார். வாழ்க்கையில் முழுமையை அறியும் ஆர்வத்தால் உந்தப்பட்டு தேடல்களில் ஈடுபட்டார். சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சுயமுயற்சியால் நெசவுத் தொழிற்கூடம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக நடந்தி வந்தார். அரசின் தொழிற்கொள்கை குளறுபடி மற்றும் இரண்டாம் உலகப் போர் நெருக்கடிகளால் அந்த தொழிலில் பெரும் பாதிப்பு எற்பட்டது. தன்னிடம் பணிபுரிந்த தொழிலார்களின் துயர் துடைக்க ஈட்டிய அனைத்தையும் செலவிட்டார். மனதைத் தளரவிடாது கடுமையாக உழைத்து படிப்படியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். இரண்டாம் உலகப் போரில் முதலுதவி உதவியாளராகவும் பணிபுரிந்தார்.
மனித வாழ்வில் துன்பம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை முன் வைத்து சிந்தித்தார். தகுந்த காரணங்களை அறிந்து தெளிய முயற்சி மேற்கொண்டார். தமிழத்தில் சித்தர் மரபில் அமைந்த தத்துவங்கள் மீது நாட்டம் கொண்டார். இந்த நிலையில் டிசம்பர் 25, 1944ல் பரஞ்சோதி என்பவரை சந்தித்தார். அவரை குருவாக ஏற்று குண்டலினி யோகக்கலையை பயின்றார். தியானத்திலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
தமிழக தத்துவ மரபில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அருட்பிரகாச வள்ளலார் மீதான ஈர்ப்பால் அவரது படைப்புகளை கற்று அனுபவங்களை பெற்றார். உலகம் அமைதியுடன் திகழவும், மக்கள் மேன்மையுடன் வாழவும் வழிகாட்டும் சிந்தனைகளை மையக் கருத்தாக்கி கவிதைகள் புனைந்தார். இயற்கையை மையப்படுத்தி அவர் எழுதிய, ‘மலரே மலரே நீ யார்...’ எனற பாடல் பெரும் புகழ் பெற்றுள்ளது. மனித வாழ்க்கையுடன் இயற்கைக்கு உள்ள உறவை கேள்வி – பதில் வடிவில் அந்த பாடல் தெளிவு படுத்துகிறது.
இயக்கவியல் தத்துவ அடிப்படையில் மனித உடல் மற்றும் மனம் நலத்தை மேம்படுத்தும் வகையில் எளிய மனவளக்கலை நெறிய உருவாக்கியுள்ளார் வேதாத்திரி. உலக அமைதிக்காக, 'உலக சமாதானம்' World peace என்பதை அடிப்படையாக வைத்து 200 கவிதைகள் புனைந்தார். அவற்றை தொகுப்பாக்கி 1957ல் புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரப்புவதற்கு உரிய முயற்சிகள் எடுத்தார். இவரது கருத்தியல் சார்ந்து பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Remove ads
மனவளக்கலை
வேதாத்திரி மகரிஷி தமிழகத்தில் இனம், மதம் கடந்து அறிவு வாழி சார்ந்த வாழ்வை உருவாக்குவதில் முதல் நிலையில் சிந்தித்தவர். திருவள்ளுவர், வள்ளலார் கருத்து வழி நின்று தவம் போன்ற சுய பரிசோதனை முறைகளில் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிதலே முழுமையான விடுதலைக்கு வழி என்ற பார்வையுடன் செயல்பட்டார். அகத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் சுயபரிசோதனை முறைக்கு தெளிவான இலக்கணம் வகுத்தார். அதை செயல்படுத்துவதற்கு தக்க படிநிலைகளுடன் தெளிவான பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளார். இவற்றை கற்பிக்கும் வகையில் மனவளக்கலை மன்றங்களை ஏற்படுத்தினார். இவற்றை பரப்பும் நோக்கத்தை முன் வைத்து, 1958ல் உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கினார். இதன் வழியாக எளியமுறை உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட நாடுகளில் கிளைகள் உள்ளன.
Remove ads
ஞானமும் வாழ்வும்
உலக அமைதி, ஞானி நெறி போன்ற சிந்தனையை வளர்க்கும் விதமாக, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த வாழ்க்கை தத்துவத்தை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார் வேதாத்திரி மகரிஷி. உயிரினங்கள் தோற்றத்தில் பரிணாம கொள்கையை வலியுறுத்தும் கருத்துகளை முன் வைத்து பிரசாரம் செய்துவந்தார் வேதாத்திரி மகரிஷி. எளிய கதை, கவிதைகள், மேடை உரை, போதனைகள் வழியாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இயற்கையின் ரகசியங்களையும், மதிப்பையும் அறிந்து அறிவில் தெளிந்து வாழும் வாழ்க்கையே இன்பமானது என்பதை வலியுறுத்திவந்தார். உலக சமாதானம் என்ற நூலை 1957ல் வெளியிட்டார் வேதாத்திரி. பல நாடுகளிலும் பயணம் செய்து வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகளை சொற்பொழிவாக நிகழ்த்தினார். உலகம் அமைதிக்கான கருத்துகளை எடுத்துரைத்தார். வாழ்வை சீரமைக்கும் ஞானத்தை பெற அகத்தாய்வு என்ற சுயபரிசோதனையில் எண்ணம் ஆராய்தல், ஆசையை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுதல், பெண்ணின் பெருமை தலைப்புகளில் செயல்படுத்தியுள்ளார்.
அறிவு திருக்கோவில்
தமிழ்நாடு மாநிலம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை அருகே 1984ல் அறிவுத்திருக்கோவிலை உருவாக்கினார் வேதாத்திரி. இங்கு தான் அவரது வாழ்க்கை நிறைவடைந்தது. அவரது புகழை நிலைக்க செய்யும் மணிமண்டபம் ஒன்று இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் அவர் பயன்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. மனவளக்கலை பயிற்சி பெற உண்டு உறைவிடத்துடன் கூடிய மையங்களும் இங்கு அமைந்துள்ளன. அவை ஓம்கார மண்டபம், ஆனந்த திருநிலையம், அன்புத்திருநிலையம் என்ற பெயர்களில் அமைந்துள்ளன.
Remove ads
அறிவரங்கம்
அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் அறிவரங்கம் என்ற பெயரில் 2465 சதுர மீட்டர் பரப்புள்ள பிரமாண்டமான வாசகசாலையும் இயங்கி வருகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி எழுதிய புத்தகங்களுடன், மனவளக்கலை தொடர்பான ஆய்வு நுால்களும் ஏராளமாக உள்ளன. மரங்கள் அடர்ந்த சூழலில் இது அமைந்துள்ளதால் வசதியாக அமர்ந்து வாசிக்க ஏற்றதாக உள்ளது. இது உலக சமுதாய சேவா சங்கம் அமைப்பால் (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.
அறிவரங்கத்துடன் வேதாத்திரிய கல்வி நிறுவனமும் இயங்குகிறது. இனிய வாழ்வுக்கான யோகக்கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. குண்டலினி யோகம், எளியமுறை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சியும் தரப்படுகின்றன. வேதாத்தரி எழுதிய புத்தகங்கள் விற்பனை கூடமும் அமைந்துள்ளது. அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள பகுதி அருட்பெருஞ்ஜோதி நகர் என அழைக்கப்படுகிறது.
Remove ads
நிறை வாழ்வு
உயரினங்களிடம் அன்பு, கருணையுடன் நிறைவாக வாழ்ந்து வழிகாட்டிய வேதாத்திரி மகரிஷி மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமை அன்று, 95ம் வயதில் உலக வாழ்வை அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் நிறைவு செய்தார். அவரது நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உரிய காலமுறைப்படி தியானம் என்ற தவ நிகழ்வுகள் அது சார்ந்த பயிற்சிகள் நடந்து வருகின்றன.
படைப்புகள்
மனித வாழ்வில் அமைதியும் சிந்தனையில் தெளிவும் ஏற்படுத்துவதற்காக வேதாத்திரி மகரிஷி எளிய பாடல்களையும், மேன்மையான உரைகளையும், எளிய பயிற்சி முறைகளையும் இனிய பொன்மொழிகளையும் வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்று, ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என்ற பொன்மொழி. எப்பகுதியிலும் பேதங்களை அகற்றும் விதமாக அன்றாட நிகழ்வுகளில் இது ஜொலித்துக்கொண்டிருக்கிறது. வேதாத்திரி வடிவமைத்து நிறுவிய, அன்பொளி என்ற மாத இதழ் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளிவருகிறது. இதை ஈரோடு மனவளக்கலை மன்றம் பொறுப்பேற்று வெளியிட்டு வருகிறது.
வேதாத்திரி மகரிஷி மொத்தம் 80 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில், 47 புத்தகங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில், 23 புத்தகங்கள் உள்ளன. அணு விசம் என்ற தலைப்பில் 1957ல் எழுதிய நாடக நுால் உலக அமைதியை முதன்மை கருத்தாக கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய அணு குண்டு வீச்சை முன் வைத்து எழுதப்பட்டது. அணு ஆற்றலை அழிவுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமான கருத்துகளை உடையது. இந்த புத்தகம் உலக தலைவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களின் எண்ணப்போக்கிலே உண்மையை வெளிப்படுத்தி, அணு ஆயுதங்களின் தீமையை விளக்குவதாக அமைந்துள்ளது. அந்த நாடகத்தில் உள்ள கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்தும் விதமாக அமைந்துள்ளது.
அருட்தந்தையின் பதில்கள் பாகம் 1, வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம், வாழ்வியல் விழுமியங்கள், பிரம்மஞான சாரம், நான் யார் ?, ஞானக்களஞ்சியம், இறைநிலை அறிவு, இறைநிலையின் தன்மாற்றச் சரித்திரம், இறையுணர்வும் அறநெறியும், இன்பமாக வாழ, உண்மை நிலை விளக்கம், உலக சமாதானம், உலக சமுதாய வாழ்க்கை நெறி, எளிய முறை உடற்பயிற்சி, எனது வாழ்க்கை விளக்கம், கடவுளும் கருமையமும், காந்த தத்துவம், காயகல்ப பயிற்சி, குடும்ப அமைதி, சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள், செயல்விளைவு தத்துவம் உட்பட தலைப்புகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. கவிதை நடையில் எழுதிய ஞானமும் வாழ்வும் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்... கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்காணும் இன்ப துன்பமவன்... அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது? அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன் அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி...’ என்ற பாடல் அறிவே கடவுள் என்ற தத்துவத்தை முன்வைக்கிறது. இது மனவளக்கலை நிகழ்வுகளில் இறைவணக்கமாக பாடப்படுகிறது.
வேதாத்திரியின் படைப்புகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து இல.ஜெயந்தி என்பவர் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த ஆய்வை, [4] வேதாத்தரி மகரிஷியின் படைப்புகள் என்ற தலைப்பில் புத்தா பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
