கண்ணகி (1942 திரைப்படம்)

1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கண்ணகி (1942 திரைப்படம்)
Remove ads

கண்ணகி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்க் காப்பியத் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எம். சோமசுந்தரம், ஆர். எஸ். மணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றாலும் அக்காலகட்ட பார்வையாளர்களின் சமய நம்பிக்கையால் படத்தின் திரைக்கதையில் புராண இடைச்செருகல்கள் செய்யப்பட்டன.[3]

விரைவான உண்மைகள் கண்ணகி, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

கைலாசத்தில் சிவன் (எஸ். வி. சகஸ்ரநாமம்) ஆனந்த தாண்டவமாடுகிறார். பார்வதி, சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற கேள்வியை எழுப்புகிறாள். சிவன் இரண்டும் பெரிது என்கிறார். சக்தி தான் பெரிதென்று பார்வதி வாதாடுகிறாள். அவளை மதுரையில் பூசை செய்யப்படாத துர்க்கை கோவிலில் உள்ள சிலையில் வசிக்க சிவன் சாபமிடுகிறார்.[4]

மதுரையில் எண்ணெய் விற்பதற்காகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஏழை வாணியன், அன்று எண்ணெய் அவ்வளவும் விற்றுவிட்டால் நெய்விளக்கு ஏற்றுவதாக அந்த துர்க்கை கோவிலில் பிரார்த்தித்துவிட்டுப் போகிறான். எண்ணெய் அவ்வளவும் விற்றுவிட்டதால் வேண்டிக் கொண்டபடி நெய்விளக்கும் ஏற்றுகிறான். துர்க்கை கோவிலில் யாரோ வாணியன் விளக்கேற்றிய செய்தி அரசனுக்கு எட்டுகிறது. தங்கள் மூதாதையர் சட்டத்தை மீறி துர்க்கைக்கு விளக்கு வைத்தவனை உடனே சிரச்சேதம் செய்கிறான்.[4]

இதனால் கோபமடைந்த துர்க்கை பாண்டியனைப் பழிவாங்க சபதம் செய்கிறாள். வாணியனின் வெட்டுண்ட தலையை ஒரு பழமாக்கி ஜடாசுரன் என்ற பூதத்தின் மூலம் மாச்சோட்டான் செட்டி (கே. என். குளத்துமணி) கையில் அதைச் சேர்ப்பிக்கிறாள். அதை, அவன் மனைவியிடம் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஜடாசுரன் சொல்லிக் கொடுக்கிறான். துர்க்கை ஒரு ஜோதி வடிவமாகப் பாண்டிய அரசியின் கருவில் நுழைகிறாள்.[4]

காவிரிப்பூம் பட்டினத்தில் மாச்சோட்டானுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அதே வேளை பாண்டிய அரசி ஒரு பெண் மகவைப் பெறுகிறாள். பாண்டிய சமத்தான யோசியர் இப்பெண்ணால் பாண்டிய வம்சமே அழிந்துவிடுமென்று அறிவிக்கிறார். அரசன் பயந்து குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து வைகையில் விட்டு விடச் செய்கிறான். படகில் தங்கள் நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாச்சோட்டானும் மாணாக்கனும் (கே. பி. ஜெயராமன்) மிதந்து வரும் பெட்டியைக் கண்டு எடுக்கிறார்கள். பெட்டிக்குள்ளிருந்த குழந்தையை மாணாக்கன் எடுத்துக்கொண்டு அதற்குக் கண்ணகி (குமாரி ரத்தினம்) என்று பெயரிடுகிறான். இருவரும் தங்கள் குழந்தைகளை கணவனும் மனைவியுமாக்கத் தீர்மானிக்கிறார்கள். கண்ணகியை (ப. கண்ணாம்பா) பன்னிரெண்டாவது வயதில் மாச்சோட்டான் மகன் கோவலன் (பி. யு. சின்னப்பா) மணக்கிறான். சாந்தி முகூர்த்த நாளும் நிச்சயிக்கப்படுகிறது.[4]

சாந்தி முகூர்த்த நாள் கொண்டாட்டங்களில் மாதவி (எம். எஸ். சரோஜா) என்ற தாசி நாட்டியமாட வருகிறாள். மாதவி பிறக்கும்போதே அவளுடன் பிறந்த மாலையொன்றிருக்கிறது. அவள் எந்த சபையில் நடனமாடினாலும், முடிவில் அந்த மாலையை வீசுவாள். அது யார் கழுத்தில் விழுகிறதோ அவன் தான் தன் கணவனாவான் என்று அவள் சபதம் செய்திருக்கிறாள். அவள் வீசிய அந்த மாலை கோவலன் கழுத்திலேயே போய் விழுகிறது. மாதவி கோவலனிடம் தன்னையும் மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறாள். கோவலன் மறுக்கிறான். வழக்கு சோழ மன்னனிடம் போகிறது. மாதவியின் மாலையைப்பற்றிய விவரமெல்லாம் முன்பேயறிந்த மன்னன், கோவலன் மாதவியுடன் போகவேண்டியதுதான் என்று தீர்ப்பளிக்கிறான். காலச் சக்கரம் சுழலுகிறது. கோவலன் மாதவிக்காக குடும்பச் செல்வத்தை வரவழைத்து வரவழைத்து வாரியிறைக்கிறான். கோவலன் கேட்டனுப்பும் போதெல்லாம் செல்வத்தை அள்ளியனுப்புகிறாள் கண்ணகி. கடைசியில் தான் அணிந்திருந்த நகைகளையும் புடவைகளையும்கூடக் கொடுத்தனுப்புகிறாள். குடும்பம் வறுமையில் மூழ்குகிறது.[4]

காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழாக் கொண்டாட்டம் நடக்கிறது. கோவலன் உற்சாகத்தோடு பெண்மையைப் புகழ்ந்து பாடுகிறான். அவன் வேறு யாரோ பெண்மேல் ஆசை கொண்டதாகத் தப்பர்த்தம் செய்து கொண்டு மாதவி தானும் ஒரு கற்பனை ஆணைப் பற்றிப் பாடுகிறாள். அவள் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கோவலன் எண்ணி விடுகிறான். கோபத்தில் அவளைக் கண்டபடி ஏசிவிட்டு, வீட்டைவிட்டே வெளியேறுகிறான்.[4]

கோவலன் கண்ணகியின் வீடு திரும்புகிறான். தரித்திரக் கோலத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற கண்ணகி அவனை வரவேற்கிறாள். கோவலன் அந்தக் கோலத்தில் தன் குலத்தவரிடையே வாழ விரும்பவில்லை. அதனால் இருவரும் இரவோடிரவாக மதுரைக்குப் புறப்படுகிறார்கள். கௌந்தியடிகள் (யூ. ஆர். ஜீவரத்தினம்) என்ற பௌத்த சன்யாசினியின் வழித்துணையும் அவர்களுக்குக் கிடைக்கிறது.[4]

பாண்டிய அரசியின் (எம். எம். ராதாபாய்) சிலம்புகளில் ஒன்று பழுதடைகிறது. அதைச் சரிப்படுத்துவதற்காக வஞ்சிப்பத்தன் (எம். ஆர். சுவாமிநாதன்) என்ற பொற்கொல்லனிடம் கொடுக்கிறார்கள். வஞ்சிப்பத்தன் மகள் பார்வதி (டி. ஏ. மதுரம்) என்பவள் பைத்தியத்தைத் தெளியவைக்க வந்த இஞ்சிப்பத்தன் (என். எஸ். கிருஷ்ணன்) சிலம்பைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறான். பாண்டியன் (டி. பாலசுப்பிரமணியம்) பத்து நாட்களுக்குள் சிலம்பைக் கொண்டுவந்து சேர்க்காவிட்டால், அவனைச் சிரச்சேதம் செய்து விடுவதாக வஞ்சிப்பத்தனை மிரட்டுகிறான்.[4]

கௌந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் மதுரையை யடுத்த ஒரு இடைச்சேரிக்கு அழைத்துச் சென்று, அங்கே மாதரி (எஸ். யோகாம்பாள்) என்ற இடைச்சியிடம் அவர்களை சேர்த்துவிட்டுத் தன் வழி போகிறார். கோவலன் கண்ணகியின் கால்சிலம்பு ஒன்றை வாங்கிக்கொண்டு, அதை விற்று வர்த்தகத்திற்கு முதல் தேடும் பொருட்டு மதுரை நகருக்குள் போகிறான். அங்கே வஞ்சிப்பத்தனைச் சந்தித்து அவனிடம் சிலம்பைக் காட்டி அதை விற்றுத் தரும்படி கேட்கிறான். வஞ்சிப்பத்தன் அரசனிடம் சிலம்பைத் திருடிய கள்வனென்று கோவலனைக் காட்டிக் கொடுத்து விடுகிறான். கோவலன் கொண்டுவந்த சிலம்பு காணாமற்போன சிலம்பைப் போலவேயிருக்கிறது. அரசன் கோவலனைக் கள்வனென்று தீர்மானித்து அவனைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறான்.[4]

கோவலனின் துர்மரணச் செய்தி எட்டுகிறது. கண்ணகி அவன் வெட்டுண்ட இடத்திற்கு ஓடுகிறாள். பழிக்குப் பழி வாங்க அங்கிருந்து பாண்டியன் சபைக்குப் புறப்படுகிறாள். சபையில் கோவலன் கொண்டுவந்த சிலம்பு இராணியுடையதல்ல என்பதை நிரூபிக்கிறாள். பதிவிரதையின் கோபாவேசத்தைக் கண்டு நடுங்கிய பாண்டியன் தன் அநியாயத் தீர்ப்பை யெண்ணி, மனமுடைந்து உயிரற்றுச் சாய்கிறான். கண்ணகியின் கோபம் ஆறவில்லை. மதுரையைத் தீக்கிரையாகும்படி சபிக்கிறாள்.[4]

மதுரை நகரம் பற்றியெறிகிறது. கண்ணகி வெறி கொண்டவளாக அதைக் கண்டு சிரித்துத் திரிந்து வருகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் கோபம் அடங்குகிறது. பச்சாத்தாபம் மேலிடுகிறது. ஐயோ! என்ன செய்துவிட்டேன்.... நகரை யெரிக்க நான் யார்? என்று வருந்துகிறாள். "நீதான் சக்தி" என்ற குரல் கேட்கிறது. சிவன் அவள் முன் தோன்றி அவளுடைய உண்மையை நினைவூட்டுகிறார். கண்ணகியின் உடலிலிருந்து பார்வதி தேவி சக்தி வடிவமாக வெளியேறி சிவனை வணங்குகிறாள் .... கண்ணகியின் உடல் ஒரு சிலையாக மாறுகிறது. உலகம் போற்றும் பத்தினித் தெய்வமாக விளங்கும்படி சிவன் சிலைக்கு வரமளிக்கிறார்.[4]

Remove ads

பாத்திரங்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...
Remove ads

பாடல்கள்

கண்ணகி திரைப்படத்தின் பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியவர்கள் கே. வி. நாயுடு குழுவினர்.[4] டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் நடனமாடியிருந்தனர். டி. ஆர். ரகுநாத் நடனக் காட்சியை அமைத்திருந்தார். டி. ஆர். ரகுநாத் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[5]

"வளர்கோட்டு இளம் பிறையும்" என்ற பாடலில் மாசிலா ஆன் கன்று வயது வந்து பசுவாகி .. என ஒரு வரி உள்ளது. ஆன் என்பது பசு. ஆன் கன்று என்றால் பசுங்கன்று. சில பாட்டுப் புத்தகங்களில் ஆன் என்பதற்குப் பதிலாக ஆண் என்று அச்சிட்டுள்ளார்கள். அச்சில் உள்ள பொருட்குற்றத்தை எடுத்துக்காட்டவே இந்த விளக்கம்.

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடியவர் ...

வெளியீடு

இந்தப் படம் 110 நகரங்களில் ஓடியது, ஒரு கோடிக்கும் அதிகமானோர் படத்தைப் பார்த்தனர். சிலப்பதிகார மூலத்தில் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு புராணக் கற்பனைகளை இடைச்செருகல்களைச் செய்தது தமிழ்ப் பலவர்களையும், அறிஞர்களையும் கோபம் கொள்ளச் செய்தது.[6] கா. ந. அண்ணாதுரை "திராவிட நாடு" இதழில் கண்ணகி படத்தில் கற்பனை என்ற பெயரில் பகுத்தறிவுக்குப் புறம்பாக காட்சியாக்கியது குறித்து இஞ்சிபத்தனே மேல் என்ற தலைப்பில் படத்துக்கு கடும் விமர்சனம் எழுதினார்.[7][8] இந்தப் படம் "கண்ணம்பாவின் அற்புதமான நடிப்புக்காகவும், திரைப்படத்தில் உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டுக்காகவும், சின்னப்பாவின் ஈர்க்கக்கூடிய நடிப்புக்காகவும், சரோஜாவின் நடனக் காட்சிகள் மற்றும் மெல்லிசைக்காகவும் நினைவுகூரப்படுகிறது." என்று ராண்டர் கை எழுதினார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads