ஜுராசிக் பார்க் III

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜுராசிக் பார்க் III (Jurassic Park III) என்பது ஜுராசிக் பார்க் தொடரில் மூன்றாவதாக 2001-இல் வந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். இத்தொடரில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்-கின் இயக்கத்தையோ, மைக்கேல் கிரைட்டன் புதினத்தையோ சாராத முதல் படம் இதுவே (எனினும் இதன் காட்சிகள் பலவும் ஜுராசிக் பார்க் மற்றும் த லொஸ்ட் வேர்ல்ட் ஆகிய இரு புதினங்களிலிருந்து எடுத்தாளப்பட்டன).

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...

முந்தைய படத்தைப்போல ஈஸ்லா சோர்னா தீவிலேயே இதன் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு தொலைந்துபோன தங்கள் மகனை மீட்பதற்காக ஒரு இணையர், தொல்லுயிர் ஆய்வாளரான ஆலன் கிரான்ட்டை ஏமாற்றி அழைத்துச்செல்கின்றனர்.

ஆகஸ்ட் 30, 2000 அன்று ஹவாயிலும் பின் கலிபோர்னியாவிலும் தொடங்கிய படப்பிடிப்பு ஐந்து மாதங்கள் நீண்டது.

முதலிரு படங்களைப் போல், இன்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின்  CGI தொன்மாக்களும் ஸ்டான் வின்ஸ்டன் உருவாக்கிய அசைவூட்ட தொன்மாக்களும் இதில் பயன்பட்டன.[3][4] அப் படங்களில் தோன்றிய டி-ரெக்ஸுக்கு மாற்றாக இதில் ஸ்பைனோசாரஸ் முதன்மை எதிரியாகத் தோன்றுகிறது .

ஜூலை 18, 2001 அன்று அமெரிக்காவில் ஜுராசிக் பார்க் III வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் இப் படம், உலகளவில் $ 36.88 கோடி வருவாய் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்தது. எனினும் இத்தொடரிலேயே குறைந்த வருவாய் பெற்ற படமாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜுராசிக் வேர்ல்ட் என்ற திரைப்படம், ஜூன் 12, 2015 அன்று வெளியானது.

Remove ads

கதைச் சுருக்கம்

பென் ஹில்டெப்ரன்ட் என்பவரும் எரிக் கர்பி என்ற சிறுவனும் ஈஸ்லா சோர்னா தீவைச் சுற்றி பாராசைலிங் (parasailing) செல்கின்றனர். திடீரென அவர்களின் படகுக் குழுவை ஒரு மர்ம விலங்கு கொல்கிறது. இதனால் இருவரும் தங்களைப் படகோடு இணைத்த கயிறைத் துண்டித்துவிட்டு அத்தீவில் இறங்குகின்றனர்.

இரு மாதங்களுக்குப்பின் தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட், வெலாசிராப்டர்களின் அறிவுக்கூர்மை குறித்த புதிய செய்திகளைக் கண்டறிகிறார். எனினும் ஆய்வைத் தொடர நிதி இல்லாமையால் இன்னலுறுகிறார். தன் நெடுநாள் சகாவான எல்லி சாட்லரைச் சந்திக்கையில், தான் அகழ்ந்த ராப்டர் புதைபடிமம் ஒன்றின் குரல்வளையைப் பற்றிப் பேசுகிறார். இதையும், ஜுராசிக் பார்க்கில் நிகழ்ந்தவற்றையும் இணைத்துப் பார்க்கையில், பழங்கால ராப்டர்களின் பெருவளர்ச்சிபெற்ற நடத்தை அவருக்குப் புலப்படுகிறது. ஒருவேளை இவை அற்றுப்போகாமல் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்திருந்தால் மனித இனத்துக்கு மாறாக இவற்றின் வழித்தோன்றல்களே உலகை ஆண்டிருக்கும் எனக் கருதுகிறார். அகழ்வுக்களம் திரும்பியபின் தன் உதவியாளர் பில்லி மீளுருவாக்கிய முப்பரிமாண ராப்டர் குரல்வளையைக் காண்கிறார்.

பின்னர், பணக்காரர்களாகத் தெரியும் பால் மற்றும் அமேண்டா கர்பி இணையர், ஈஸ்லா சோர்னாவுக்குத் தங்களை ஒரு வான்வழிச் சுற்றுலா அழைத்துச் சென்றால் கிரான்ட்டின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்வதாகக் கூறுகின்றனர். தயக்கத்தோடு இதற்கு ஒப்புக்கொள்ளும் கிரான்ட், பில்லியையும் அழைத்துக்கொண்டு அவர்களோடு பயணிக்கிறார். இக்குழுவில் கர்பி இணையர் அமர்த்திய மூன்று கூலிப்படையினரும் உள்ளனர்.

ஈஸ்லா சோர்னாவின் வான்பகுதியை அடைந்தபின், அக் குழுவினரின் உண்மையான நோக்கம் தரையிறங்குவதே என்றறியும் கிரான்ட் அதனை எதிர்க்கிறார். அவரை கூலிப்படையைச் சேர்ந்த கூப்பர் மயக்கமடையச் செய்கிறார். வானூர்தி தரையிறங்கியபின் கிரான்ட் எழுகிறார். அப்போது அமேண்டா ஒலிப்பெருக்கி கொண்டு எரிக்-ஐத் தேடுகிறார். இதனால் கவரப்படும் ஸ்பைனோசாரஸ் என்ற தொன்மாவிடமிருந்து தப்ப அனைவரும் வானூர்தியிலேறிக் கிளம்புகின்றனர். தனித்துவிடப்படும் கூப்பர், ஓடுபாதையில் நின்று வானூர்தியை நிறுத்த முயல்கையில் அத் தொன்மாவுக்கு இரையாகிறார். அதனோடு மோதும் வானூர்தியும் கட்டுப்பாட்டை இழந்து தீவின் காட்டுப்பகுதியில் விழுகிறது. அங்கும் அத் தொன்மா வந்து வானூர்தியை மேலும் தாக்கி கூலிப்படை வானோடி நாஷ்-ஷை உண்கிறது.

இதில் தப்பும் பிறர், காட்டுக்குள் ஓடுகையில் ஒரு டி.ரெக்ஸ் எதிர்ப்படுகிறது. இதுவும் ஸ்பைனோசாரஸும் மோதிக்கொள்கின்றன. இறுதியில் டி.ரெக்ஸ் உயிரிழக்கிறது. கிரான்ட் குழுவினர் அங்கிருந்து தப்புகின்றனர்.

இதன்பின்பு கர்பி இணையரை விசாரிக்கும் கிரான்ட், உண்மையில் அவர்கள் மணவிலக்கு பெற்ற நடுத்தரக் குடும்பத்தினர் எனவும், அத்தீவில் காணாமற்போன எரிக், பென் ஆகியோரைத் தேடவந்துள்ளதையும் அறிகிறார். அரசு அவர்களுக்கு உதவ மறுத்தமையால் தன்னை (அவரின் ஜுராசிக் பார்க் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு) அணுகியதையும் அறிகிறார். எனினும் நான் சென்றது ஈஸ்லா சோர்னாவுக்கில்லை, ஈஸ்லா நுப்லாருக்கு. எனவே உங்களைப்போல் எனக்கும் இவ்விடம் தெரியாது. என்கிறார்.

பின்பு இவர்கள், பென்-னின் உடலையும் அதனுடன் இணைக்கப்பட்ட பாராசைலையும் கண்டெடுக்கின்றனர். மேலும் செல்கையில் வெலாசிராப்டர் கூடுகள் தென்படுகின்றன. கைவிடப்பட்ட இன்ஜென் நிறுவன வளாகம் ஒன்றும் தென்படுகிறது. அங்கு அவர்களைத் தாக்க முயலும் ஒரு ராப்டர் தன் கூட்டத்தையும் தொடர்புகொள்கிறது. அதனிடமிருந்து தப்பும் கிரான்ட் குழுவினர், காரெத்தொசாரஸ், பாராசாரோலோஃபஸ் ஆகிய தொன்மாக்கள் அடங்கிய ஒரு மந்தைக்குள் ஓடுகின்றனர். இதனால் ஏற்படும் நெரிசலில் கிரான்டும் யுடெஸ்கியும் குழுவிலிருந்து பிரிகின்றனர்.

பில்லியின் பையை கிரான்ட் மீட்கிறார். இச்சமயத்தில் யுடெஸ்கியைக் கடுமையாகத் தாக்கும் ராப்டர்கள், அவரைக்கொண்டு பிறருக்குப் பொறிவைக்கின்றன. யுடெஸ்கியை மீட்க முயலும் அமண்டா, மயிரிழையில் தப்புகிறார். தங்கள் திட்டம் தோல்வியுற்றதை உணரும் ராப்டர்கள், யுடெஸ்கியைக் கொன்றுவிட்டுச் செல்கின்றன.

பின்னர் இரு ராப்டர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதைக் கவனிக்கும் கிரான்ட், அவை எதையோ தேடுவதாக ஐயுறுகிறார். ராப்டர்களால் அவர் சூழப்படுகையில் அங்கு வரும் எரிக் அவரை மீட்கிறார். எரிக் தங்கியிருந்த பழைய சுமையுந்தில் இருவரும் அன்றைய இரவைக் கழிக்கின்றனர். மறுநாள், பால் கர்பியின் செயற்கைக்கோள் கைபேசியின் ஒலிப்பைக் கேட்டு பிறரோடு இணைகின்றனர். நாஷ் இறக்குமுன் அவரிடம் தன் கைபேசியை அளித்ததாக பால் விளக்குகிறார். அப்பொழுது அக்குழுவினரை மீண்டும் ஸ்பைனோசாரஸ் தாக்குகிறது. எனினும் அவர்கள் ஒரு ஆய்வகத்துக்குள் நுழைந்து தப்புகின்றனர்.

பில்லி, நிதித் தேவைக்காக இரு ராப்டர் முட்டைகளைக் களவாடியதே ராப்டர் தாக்குதலுக்குக் காரணம் என கிரான்ட் அறிகிறார். அவர்கள் உயிர்தப்புவதற்காக அவ்விரண்டையும் பாதுகாக்க முடிவுசெய்கிறார்.

பின்பு அவர்கள் எதிர்பாராமல் ஒரு பெரிய பறவைக்கூண்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அங்குள்ள டெரெனெடான் என்ற பழங்காலப் பறவைகள் அவர்களைத் தாக்கி எரிக்கைத் தூக்கிச்செல்கின்றன. பென்-னின் பாராசைலைக் கொண்டு அவரை மீட்கும் பில்லியை டெரெனெடான்கள் கடுமையாகத் தாக்குகின்றன. அவர் இறந்துவிட்டதாக எண்ணும் பிறர், பறவைக்கூண்டிலிருந்து தப்பி (அதன் கதவு திறந்துள்ளதை அறியாமல்) ஒரு படகிலேறி ஆற்றில் பயணிக்கின்றனர்.

அன்றிரவு கிரான்ட் குழுவினர், நாஷ் வைத்திருந்த கைபேசியை ஸ்பைனோசாரஸின் சாணத்திலிருந்து மீட்கின்றனர். அதைக்கொண்டு கிரான்ட், சாட்லரைத் தொடர்புகொள்ள முயல்கையில் ஸ்பைனோசாரஸ் அப் படகைத் தாக்குகிறது. கிரான்டும் கர்பியும் படகின் எரிபொருளைப் பற்றவைத்து அதை விரட்டுகின்றனர்.

மறுநாள் காலையில் அவர்கள் கடற்கரை நோக்கி செல்கையில் மீண்டும் ராப்டர் கூட்டம் சூழ்ந்துகொள்கிறது. ராப்டர் முட்டைகளை அவற்றிடம் ஒப்படைத்தபின் கிரான்ட், மாதிரிக் குரல்வளையைக் கொண்டு அவற்றைத் திசைதிருப்பி அனுப்பிவிடுகிறார்.

பின்னர் கடற்கரையை அடையும் கிரான்ட் குழுவினரை மீட்க எல்லி அனுப்பிய ஈரூடகப் படைப்பிரிவும் கடற்படையும் காத்துள்ளன. பில்லி, படுகாயமடைந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறார். தீவை விட்டு அவர்கள் சுழலிறகியில் வெளியேறுகையில், பறவைக்கூண்டிலிருந்த டெரெனெடான்கள் பறந்துசெல்வதைக் காண்கின்றனர். அவை கூடு கட்டப் புதிய இடங்களைத் தேடுகின்றன என கிரான்ட் கூறுவதுடன் படம் நிறைகிறது.

Remove ads

நடித்தவர்கள்

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்

எண் கதைமாந்தர் நடித்தவர் குறிப்பு
1 ஆலன் கிரான்ட் (Dr.Alan Grant) சாம் நெய்ல் (Sam Neill) தொல்லுயிர் ஆய்வாளர்; ஜுராசிக் பார்க் அழிந்தபோது உயிர்தப்பியவர்
2 பால் கர்பி (Paul Kirby) வில்லியம் ஹெச். மேசி (William H. Macy) ஓக்லகோமாவைச் சேர்ந்த வணிகர்
3 அமண்டா கர்பி (Amanda Kirby) டியா லியோனி (Téa Leoni) பால் கர்பியின் முன்னாள் மனைவி
4 பில்லி பிரென்னன் (Billy Brennan) அலெஸ்ஸாண்ட்ரோ நிவோலா (Alessandro Nivola) கிரான்டின் உதவியாளர்
5 எரிக் கர்பி (Eric Kirby) டிரெவர் மோர்கன் (Trevor Morgan) கர்பி இணையரின் மகன்
6 யுடெஸ்கி (Udesky) மைக்கேல் ஜெட்டர் (Michael Jeter) கூலிப்படை உறுப்பினர்
7 கூப்பர் (Cooper) ஜான் டீல் (John Diehl) கூலிப்படை உறுப்பினர்
8 எம்.பி. நாஷ் (M.B.Nash) புரூஸ் ஏ. யங் (Bruce A. Young) கூலிப்படை வானோடி
9 எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) லாரா டென் (Laura Dern) தொல் தாவர ஆய்வாளர்; ஜுராசிக் பார்க் அழிந்தபோது உயிர்தப்பியவர்
10 மார்க் டெக்ளர் (Mark Degler) டெய்லர் நிக்கல்ஸ் (Taylor Nichols) எல்லியின் கணவர்; அமெரிக்க வெளியுறவுத்

துறையில் பணியாற்றுபவர்

11 சார்லி டெக்ளர் (Charlie Degler) பிளேக் பிரையன் (Blake Bryan) எல்லி-மார்க் இணையரின் மகன்
12 பென் ஹில்டெப்ரன்ட் (Ben Hildebrand) மார்க் ஹேர்லிக் (Mark Harelik) அமண்டாவின் தோழன்
13 என்ரீகே கார்டோஸோ (Enrique Cardoso) ஜூலியோ ஆஸ்கர் மெச்சோஸோ (Julio Oscar Mechoso) கோஸ்ட்டா ரிக்காவைச் சேர்ந்த படகு உரிமையாளர்

திரையில் தோன்றிய உயிரினங்கள்

மேலும் பார்க்க: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

Thumb
மனிதனின் அளவோடு ஒப்பிடப்பட்டுள்ள ஸ்பைனோசாரஸ் (சிவப்பு), சுச்சோமைமஸ் (பச்சை), பேரியோனிக்ஸ் (மஞ்சள்) மற்றும் இரிட்டேட்டர் (நீலம்)

முந்தைய படங்களுடையவற்றை விட மிகவும் மேம்பட்ட அசைவூட்டத் தொன்மா மாதிரிகள் இப் படத்தில் இடம்பெற்றன.[5][6][7]. குளோசப் ஷாட்களில் அசைவூட்ட மாதிரிகளும் பிற காட்சிகளில் தொன்மாக்களின் தலை வரைபடங்களும் பயன்பட்டன.[5] டி.ரெக்ஸ், ஸ்பைனோசாரஸ், வெலாசிராப்டர் ஆகியவற்றின் அசைவுகளை பாவைக்கலைஞர்கள் இணைந்து உருவாக்கினர். [3][8]. யுடெஸ்கியின் மரணக்காட்சியில் வின்ஸ்டன் குழு உறுப்பினர் ஜான் ரோசென்கிரான்ட் ஒரு ராப்டர் ஆடைத்தொகுப்பை அணிந்திருந்தார்.[9][10] பல்வேறு அசைவூட்டத் தொன்மாக்களை உருவாக்க ஏறத்தாழ 13 மாதங்களாயின[11] வின்ஸ்டன் குழுவின் அசையா மாதிரிகளை ஸ்கேன் செய்து CGI உருவங்கள் வரையப்பட்டன.[9] ஆங்கிலோசாரஸ்,பிராக்கியோசாரஸ் முதலானவை முழுக்க CGI முறையில் உருவாயின[3] முந்தைய படங்களில் இடம்பெறாத புதிய தொன்மாக்களில் ஆங்கிலோசாரஸ், செரடோசாரஸ், காரெத்தொசாரஸ் ஆகியவை அடங்கும்.[11]

முந்தைய இரு படங்களைத் தொடர்ந்து இதிலும் தொல்லுயிர் ஆய்வாளர் ஜாக் ஹார்னர் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார்.[3] திரைப்படச் சுவரொட்டிகளில் டி.ரெக்ஸ் தக்கவைத்திருந்த இடத்தை இம்முறை ஸ்பைனோசாரஸும் டெரெனெடானும் எடுத்துக்கொண்டன. ஸ்பைனோசாரஸ் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் பேரியோனிக்ஸ் முதன்மை எதிரியாகப் பரிசீலிக்கப்பட்டது. துவக்கச் சுவரொட்டிகளும் இதைப் பிரதிபலித்தன.[9] [12] இப் படத்தில் ஸ்பைனோசாரஸே முதன்மை எதிரியாகும். [13] ஜான்ஸ்டன் கூறுகையில் பல தொன்மாக்களின் நிழலுருவங்கள் டி-ரெக்ஸை ஒத்துள்ளன. எனவே பார்வையாளர்கள் இதை (பார்த்தமட்டில்) வேறொன்றாக அடையாளம் காண நாங்கள் விழைந்தோம் என்றார்.[14] திரைக்கதையிலும் ஓரிடத்தில் பில்லி, ஸ்பைனோசாரஸை பேரியோனிக்ஸ் அல்லது சுச்சோமைமஸ் என அடையாளப்படுத்துகிறார். எனினும் கிரான்ட், அத் தொன்மாவின் அளவையும் அதன் முதுகிலுள்ள பாய்மரம் போன்ற அமைப்பையும் கருத்திற்கொண்டு அதைச் சரியாக அடையாளம் காணுகிறார்.[9]ஜாக் ஹார்னர், டி-ரெக்ஸை ஒரு தோட்டி விலங்காகவும் ஸ்பைனோசாரஸை உண்மையான இரைகௌவியாகவும் கருதினார்.[3]

வின்ஸ்டன் குழுவினர் முதலில் ஒரு ஸ்பைனோசாரஸ் வடிவமைப்பைச் செய்தனர். ஹார்னரின் கருத்தைப் பெற்றபின் முதலில் 1/16 அளவிலான தோராய மாதிரியும் பின் கூடுதல் விவரத்துடன் அளவிலான 1/5 பதிப்பும் உருவாயின. இறுதியாக 44 அடி நீளமும் 13 டன் எடையும் கொண்ட முழு வடிவம் உருவானது.[7]இவற்றுக்காக 10 மாதங்கள் செலவாயின. முழு வடிவம் முட்டிவரையே இருந்தது.[15] முழுவுடல் ஷாட்களுக்கு CGI பயன்பட்டது.[8] இம் மாதிரி 9-டன் எடையுடைய டி-ரெக்ஸினதை விட வலியதாக விளங்கியது. கலிபோர்னியாவின் வான் நுய்ஸ் பகுதியிலுள்ள வின்ஸ்டன் ஸ்டுடியோவில் இருந்து இம் மாதிரி வெளியேற ஒரு சுவரை அகற்ற வேண்டியிருந்தது. பின்னர் யுனிவர்சல் ஸ்டுடியோவின் நிலை 12 இல் அமைக்கப்பட்ட காட்டுக்கு சுமையுந்தில் கொண்டுசெல்லப்பட்டது.இதற்குப் போதிய இடமளிக்கும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பாளர் எட் வெர்ரொக்ஸ் படப்பிடிப்புக் களத்தை வடிவமைத்தார். ஒலிமேடையில், ஸ்பைனோசாரஸ் மாதிரியானது, முன்பின்னாக நகர இடமளிக்கும் ஒரு தண்டவாளத்தில் வைக்கப்பட்டது.[3][15] இதை முழுமையாக இயக்க நான்கு வின்ஸ்டன் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்பட்டனர்.[16]

ஸ்பைனோசாரஸ் - டி. ரெக்ஸ் மோதல், படத்திற்காக இறுதியாக எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றாகும். இதற்கென இரு அசைவூட்ட மாதிரிகளும் விரிவாகப் பயன்பட்டன.[15] முந்தைய படத்தின் டி-ரெக்ஸ் மாதிரி ஒன்று, மீள் வடிவமைப்புக்குப் பின் மீண்டும் பயன்பட்டது.[3][15] மிக வலிமையான ஸ்பைனோசாரஸ் மாதிரி , படப்பிடிப்பின் போது டி-ரெக்ஸின் தலையைத் துண்டித்தேவிட்டது[9][15] இக் காட்சி, ரே ஹாரிஹவுசன் உருவாக்கிய தொன்மாக்களைப் பயன்படுத்திய பழைய படங்களுக்கு ஒரு நவீன கலையஞ்சலி என்றார் ஜான்ஸ்டன்.[11]

தொல்லுயிரியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் தோன்றியமையால் பல தொன்மாக்களின் காண்பிப்பு முந்தைய படங்களிலிருந்து வேறுபடுகின்றது.வெலாசிராப்டர்களுக்கு இறகுகள் இருந்தமை தெரியவந்ததால், படத்தில் தோன்றிய ஆண் ராப்டர்களின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இறகு போன்ற கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டன. ஜாக் ஹார்னர் கூறுகையில் ராப்டர்களுக்கு இறகுகள் அல்லது இறகு போன்ற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே நாங்கள் அதை ராப்டரின் புதிய தோற்றத்தில் இணைத்துள்ளோம் என்றார்.[17]

இப் படத்தில் டெரெனெடான்களைச் சேர்க்கவேண்டும் என்று ஜான்ஸ்டனை ஸ்பில்பேர்க் வலியுறுத்தினார் (நிதிக் காரணங்களுக்காக முந்தைய படங்களில் இருந்து இவ்விலங்குகள் நீக்கப்பட்டன, இரண்டாம் படத்தில் இறுதியில் தோன்றுதல் தவிர்த்து).[18] அசைவூட்டம் மற்றும் பொம்மலாட்டத்தின் கலவையாக உருவான[3] டெரெனெடான்கள், உண்மையான விலங்கின் புனையப்பட்ட பதிப்பாகும். பெரும்பாலும் இவற்றுக்கு CGI பயன்படுத்தப்பட்டாலும் வின்ஸ்டன் குழுவினர் 40 அடி இறக்கையுடைய ஒரு மாதிரியை உருவாக்கினர். இவற்றின் பறத்தல் அசைவுக்காக ILM குழுவினர், பறக்கும் நிலையிலுள்ள பறவைகள் மற்றும் வெளவால்களின் காணொளிகளை ஆய்வு செய்தனர். மேலும் டெரெனெடான் வல்லுநர் ஒருவரையும் கலந்தாலோசித்தனர்.[7] கூட்டிலுள்ள இவற்றின் குட்டிகளைக் காட்ட ஐந்து பொம்மலாட்ட மாதிரிகளை வின்ஸ்டன் குழுவினர் செய்தனர்.[3]. இவற்றின் அழகையும் நேர்த்தியையும் காட்ட விரும்பிய ஜான்ஸ்டன், படத்தை முடிவுக்காட்சியில் இவற்றை வைத்தார்.[5]

இப் படத்தில் 400-க்கும் மேற்பட்ட எஃபெக்ட் ஷாட்கள் உள்ளன. இது முந்தைய இரு படங்களின் கூட்டுத்தொகையைவிட இரு மடங்காகும். இதில் தொன்மாக்கள் தொடர்பானவை பாதிக்கும் குறைவாகும். பெரும்பாலானவை ஸ்பைனோசாரஸ் - டி. ரெக்ஸ் மோதல் மற்றும் டெரெனெடான் கூண்டு காட்சிகளுக்காக எடுக்கப்பட்டவையாகும்.[7] பிற ஷாட்கள், தாவரங்கள் முதலானவற்றைக் காட்டுகின்றன. சில வினாடிகள் நீளமேயுடைய சில ஷாட்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.[19]

திரைப்படத்தில் தோன்றும் உயிரினங்கள் பின்வருமாறு:

எண் தொன்மா ஆங்கிலப் பெயர்
1 ஆங்கிலோசாரஸ் Ankylosaurus
2 பிராக்கியோசாரஸ் Brachiosaurus
3 செரடோசாரஸ் Ceratosaurus
4 காம்ப்ஸோக்னாதஸ் Compsognathus
5 காரெத்தொசாரஸ் Corythosaurus
6 பாராசாரோலோஃபஸ் Parasaurolophus
7 டெரெனெடான் Pteranodon
8 ஸ்பைனோசாரஸ் Spinosaurus
9 இசுடெகோசாரஸ் Stegosaurus
10 டிரைசெரடாப்ஸ் Triceratops
11 டைரனோசாரஸ் Tyrannosaurus
12 வெலாசிராப்டர் Velociraptor
Remove ads

தயாரிப்பு

துவக்க முன்னேற்றம்

ஸ்பில்பேர்க்-கின் ஜுராசிக் பார்க் படம் வெற்றியடைந்த பின் அதன் தொடர்ச்சியை இயக்க ஜோ ஜான்ஸ்டன் ஆர்வம் காட்டினார். எனினும் ஸ்பில்பேர்க், இத்தொடரில் மூன்றாவதாக ஒரு படம் தயாரிக்கப்படுமானால் அதை இயக்கும் வாய்ப்பை ஜான்ஸ்டனுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.[9][20][21]

முன் தயாரிப்பு

ஜூன் 29, 1998-இல் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மூன்றாவது படத்தை அறிவித்து 2000 நடுப்பகுதியில் வெளியிடுவதாகத் திட்டமிட்டது.[22] கிரைட்டன் ஸ்பில்பேர்க்குடன் இணைந்து கதையமைப்பையும் திரைக்கதையையும் எழுதுவதாக இருந்தது.[22] எனினும் கிரைட்டனுக்கு இதில் பங்கில்லை என ஜான்ஸ்டன் கூறினார்.[21] கிரெய்க் ரோசன்பெர்க் எழுதிய முதல் திரைக்கதை வரைவு, ஈஸ்லா சோர்னாவில் சிக்கிக்கொள்ளும் சில பதின்வயதினரை மையப்படுத்தியது.[21][5] அவ் வரைவில் நீர்வாழ் ஊர்வன விலங்கான குரோனோசாரஸ் இடம்பெற்றிருந்தது.[18][7] 1999-இல் ஜான்ஸ்டன் இயக்குநராக அறிவிக்கப்பட்டபின் இவ்வரைவு நிராகரிக்கப்பட்டது.[23][24]

பீட்டர் புக்மன் எழுதிய வரைவில்[25], டெரானெடான்கள் கோஸ்டா ரிக்காவில் மக்களைக் கொல்வதாகவும் அதே நேரத்தில் கிரான்ட், பிறருடன் ஈஸ்லா சோர்னாவுக்குச் செல்வதாகவும் கதை இருந்தது.[21][24]

படப்பிடிப்பு தொடங்க ஏறக்குறைய ஐந்து வாரங்கள் இருக்கையில்[20][21] , முந்தைய படங்களின் எழுத்தாளர் டேவிட் கோப் பரிந்துரைத்த ஒரு எளிய கதைக்கு ஆதரவாக ஜான்ஸ்டனும் ஸ்பில்பேர்க்கும் இரண்டாம் வரைவை நிராகரித்தனர்.[20][21][24] அதைத் திருத்தி எழுத அலெக்ஸாண்டர் பெய்னும் ஜிம் டெய்லரும் பணியமர்த்தப்பட்டனர்.[26][27] அவர்களின் வரைவில் புக்மன் கூடுதல் திருத்தங்களைச் செய்தார்.[20][27] ஜான் ஆகஸ்ட், அறிந்தேற்பு பெறாமல் பங்களித்தார்.[28]

படப்பிடிப்பு

தயாரிப்பின்போது இறுதிக் கதைவரைவு முழுமைபெறவில்லை.[21] படத்தைக் குறித்த உறுதியின்மையால் ஜான்ஸ்டன் இதிலிருந்து விலக அவ்வப்போது எண்ணினார்.[29]

இசை

வெளியீடு

வரவேற்பு

விருதுகளும் பரிந்துரைகளும்

சந்தைப்படுத்தலும் விற்பனையும்

கைபேசி விளம்பரம்

இவற்றையும் காண்க

  • ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்
  • ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads