பர்பரோசா நடவடிக்கை

இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் மீதான நாசி செருமானிய ஆக்கிரமிப்பு From Wikipedia, the free encyclopedia

பர்பரோசா நடவடிக்கை
Remove ads

பர்பரோசா நடவடிக்கை[g] (ஆங்கிலம்: Operation Barbarossa, German: Unternehmen Barbarossa) என்பது சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்பு ஆகும். 22 சூன் 1941 அன்று இரண்டாம் உலகப் போரின் போது இந்த நடவடிக்கை தொடங்கியது. நாட்சி ஜெர்மனி மற்றும் அதன் ஐரோப்பிய அச்சு நாட்டுக் கூட்டாளிகளில் பல நாடுகள் சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தன. ஒரு 2,900 கிலோமீட்டர் நீண்ட போர் முனைக்கு நெடுகில் மேற்கு சோவியத் ஒன்றியம் மீது 38 இலட்சத்துக்கும் மேற்பட்ட அச்சு நாட்டுத் துருப்புகள் படையெடுத்தன. ஆர்க்கேஞ்செல்ஸ்க் மற்றும் ஆசுதிரகானுக்கு இடைப்பட்ட ஒரு கோடு வரை உள்ள நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை முதன்மையான இலக்காகக் கொண்டு படையெடுத்தன. வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் மிக அதிக இழப்பை ஏற்படுத்திய இராணுவத் தாக்குதலாக இந்தத் தாக்குதல் உருவானது. இதில் சுமார் 1 கோடி வீரர்கள் பங்கெடுத்தனர்.[26] 5 திசம்பர் 1941 அன்று இந்நடவடிக்கை முடிவுக்கு வந்த போது 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட இழப்புகள் ஏற்பட்டிருந்தன.[27][28] இரண்டாம் உலகப் போரின் தீவிரமான நிலையை இது குறித்தது. இது கிழக்குப் போர்முனையைத் திறந்தது. வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் அதிக இறப்பை ஏற்படுத்திய நிலப் போர் அரங்கு இதுவாகும். சோவியத் ஒன்றியம் நேச நாடுகள் பக்கம் இதனால் கொண்டு வரப்பட்டது.

எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.

தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள்.

மேலதிகத் தகவல்கள் பர்பரோசா நடவடிக்கை, நாள் ...

இந்த நடவடிக்கைக்குக் குறியீட்டுப் பெயராக புனித உரோமைப் பேரரசரான பிரடெரிக் பர்பரோசாவின் ("சிவப்பு தாடி") பெயர் கொடுக்கப்பட்டது. பொதுவுடைமையை அழித்தல் மற்றும் பொதுத் திட்டம் ஒசுதுவின் கீழ் மேற்கு சோவியத் ஒன்றியத்தை வென்று அதில் செருமானிய மக்கள் தொகையைப் பெருக்கச் செய்தல் ஆகிய நாசி செருமனியின் சித்தாந்த இலக்குகளைச் செயல்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுத் திட்டம் ஒசுதுவானது சைபீரியாவுக்கு ஒட்டு மொத்தமாக பூர்வீக இசுலாவிய மக்களை நாடு கடத்துவதன் மூலம் அவர்களை ஒழிப்பதற்குத் திட்டமிட்டது. செருமானியமயமாக்கம், அடிமைப்படுத்துதல் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றையும் திட்டமிட்டது.[29][30] இப்படையெடுப்பின் பொருளியல் இலக்குகளானவை உக்குரைன் மற்றும் பைலோ உருசியா போன்ற நிலப்பரப்புகளில் இருந்த வேளாண் மற்றும் தாது வளங்கள், மற்றும் காக்கேசியாவில் இருந்து எண்ணெய் வயல்கள் ஆகியவையாகும். அச்சு நாடுகள் இறுதியாக கிழக்குப் போர் முனையில் 50 இலட்சம் சோவியத் செஞ்சேனைத் துருப்புகளைப் பிடித்தனர்.[31] வேண்டுமென்றே இறக்க வைப்பதற்காக பட்டினிக்கு உட்படுத்தியோ அல்லது வேறு வகையிலோ 33 இலட்சம் போர்க் கைதிகளையும், மேலும் குடிமக்களையும் கொன்றனர்.[32] செருமானிய துணை இராணுவ சிறப்புக் குழுக்கள் மற்றும் அவர்கள் பக்கம் கட்சி தாவியவர்களால்[h] நடத்தப்பட்ட ஒட்டு மொத்த துப்பாக்கிச் சுடுதல்கள் மற்றும் விஷவாயு நடவடிக்கைகளானவை பெரும் இன அழிப்பின் ஒரு பகுதியாக தசம இலட்சத்திற்கும் மேற்பட்ட சோவியத் யூதர்களைக் கொன்றன.[34] இப்படையெடுப்புக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நாசி செருமனியும், சோவியத் ஒன்றியமும் உத்தி ரீதியிலான நோக்கங்களுக்காக அரசியல் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருந்தன. சூலை 1940இல் பெச்சராபியா மற்றும் வடக்கு புகோவினா ஆகியவற்றை சோவியத் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து செருமானிய உயர் தலைமையானது சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பதற்கான ஒரு திட்டத்தைத் தீட்டத் தொடங்கியது. திசம்பர் மாதத்தில் இட்லர் இதற்கு ஒப்புதல் அளித்தார். 1941இன் தொடக்கத்தில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மிக விரைவில் நிகழ இருந்த ஒரு தாக்குதல் குறித்து உளவுத்துறைத் தகவல்களைப் பெற்ற போதும் செஞ்சேனையை ஒருங்கிணைக்க அவர் ஆணையிடவில்லை. இராணுவத்தை ஒருங்கிணைக்கத் தொடங்கினால் அது செருமனியைக் கோபப்படுத்தும் என்று அவர் அச்சம் கொண்டிருந்தார். இதன் விளைவாகப் படையெடுப்பு தொடங்கிய போது சோவியத் படைகளானவை பெரும்பாலும் ஆயத்தமற்ற நிலையில் பிடிக்கப்பட்டன. பல இராணுவப் பிரிவுகள் தவறான இடங்களில் நிறுத்தப்பட்டோ அல்லது குறைவான எண்ணிக்கையுடைய இராணுவ வீரர்களைக் கொண்டோ இருந்தன.

இப்படையெடுப்பானது ஒரு பெரும் தரை மற்றும் வான் தாக்குதலுடன் 22 சூன் 1941 அன்று தொடங்கியது. நாசிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பெரும் நிலப்பரப்பைப் பெறுவதில் இது முடிவடைந்தது. தெற்கு இராணுவக் குழுவின் முதன்மையான பிரிவானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்தில் இருந்து 22 சூன் அன்று படையெடுத்தது. உருமேனியாவிலிருந்து தாக்கிக் கொண்டிருந்த ஓர் ஒன்றிணைந்த செருமானிய மற்றும் உருமேனியப் படைகள் 2 சூலையில் இதனுடன் இணைந்தன. 19 செப்தெம்பர் அன்று கீவ் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 24 அக்டோபர் அன்று கார்க்கோவ் மற்றும் 20 நவம்பர் அன்று ரோஸ்தோவ் ஆகிய நகரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நேரம் வாக்கில் பெரும்பாலான கிரிமியாவானது கைப்பற்றப்பட்டிருந்தது. வடக்கு இராணுவக் குழுவானது பால்ட்டிக் நிலங்களை எளிதாக 8 செப்தெம்பர் 1941 அன்று வென்றது. பின்லாந்துப் படைகளுடன் சேர்ந்து ஒரு லெனின்கிராட் முற்றுகையைத் தொடங்கியது. இது 1944ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இந்த மூன்று குழுக்களிலும் மிக வலிமையான நடு இராணுவக் குழுவானது 1941ஆம் ஆண்டின் சூலை மாதத்தின் பிற்பகுதியில் ஸ்மோலென்ஸ்க் நகரத்தைக் கைப்பற்றியது. இதற்குப் பிறகு 2 அக்டோபர் அன்று மாசுகோ நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. இராணுவத்திற்குப் பொருட்கள் கொண்டு வரப்படும் போக்குவரத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தல், சகதியான நிலப்பரப்பால் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது, உருசியாவின் மிருகத்தனமான குளிர் காலத்திற்குப் போதிய ஆடைகளைக் கொண்டிராதது, மன உறுதியுடைய சோவியத் எதிர்ப்பைத் தாக்குப் பிடிப்பது ஆகிய பிரச்சினைகளை எதிர் கொண்டதால் நடு இராணுவக் குழுவின் தாக்குதலானது மாசுகோவின் புறநகர்ப் பகுதிகளில் 5 செப்தெம்பர் அன்று நிறுத்தப்பட்டது. இந்நேரத்தில் சோவியத்துகள் ஒரு பெரும் பதில் தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.

பர்பரோசா நடவடிக்கையின் தோல்வியானது நாசி செருமனியின் அதிர்ஷ்ட நிலையை எதிர் மறையாக்கியது.[35] செயல்பாட்டு ரீதியாக இது முக்கியமான வெற்றிகள், சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கியமான பொருளாதாரப் பகுதிகளில் சிலவற்றை ஆக்கிரமித்தது, தசம இலட்சக் கணக்கான போர்க் கைதிகளைப் பிடித்தது, செஞ்சேனையைக் கடுமையான இழப்புகளைச் சந்திக்கச் செய்தது ஆகியவற்றைச் செய்தது. போலந்துப் படையெடுப்பில் நடைபெற்றதைப் போலவே எதிர்ப்புக் காட்டியவர்கள் சீக்கிரமே வீழ்ச்சியடைவார்கள் என்று செருமானிய உயர் தலைமையானது எதிர்பார்த்திருந்தது. ஆனால், மாறாக செஞ்சேனையானது செருமானிய வேர்மாக்டின் மிக வலிமையான அடிகளைத் தாங்கிக் கொண்டது. செருமனி ஆயத்தமாகி இருக்காதிருந்த உராய்வுப் போர் முறையின் மூலம் செருமானிய இராணுவத்தை வீழ்த்தியது. பர்பரோசா நடவடிக்கையில் பெற்ற கடுமையான இழப்புகள் மற்றும் இராணுவப் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தொடர்ந்து ஒட்டு மொத்த போர் முனையின் நெடுகில் செருமானியப் படைகளால் தொடர்ந்து தாக்க இயலவில்லை. 1942இன் கேஸ் புளூ மற்றும் 1943இல் நகர்க் காப்பரண் நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் இறுதியாகத் தோல்வியடைந்தன.

Remove ads

பின்புலம்

பெயரிடல்

19ஆம் நூற்றாண்டிலிருந்து செருமானியத் தேசியவாதிகளால் பிரபலமான சிலுவைப் போர் மன்னனான பர்பரோசாவைப் புகழ்ந்ததன் ஒரு தொடர்ச்சியாக இது உண்மையில் இருந்த போதும் தங்களது அரசியல் அடையாளத்தின் பகுதியாக நாசிக் கட்சியால் பர்பரோசா என்ற கருத்துருவானது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு செருமானிய நடுக்காலக் கதையின் படியும், செருமானிய உரோமானியமயமாக்கப்பட்ட தேசியக் கருத்துக்களால் 19ஆம் நூற்றாண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டிருந்ததன் படியும், மூன்றாவது சிலுவைப் போருக்குத் தலைமை தாங்கிய நேரத்தில் ஆசியா மைனர் பகுதியில் நீரில் மூழ்கி இறந்த புனித உரோமைப் பேரரசர் பர்பரோசா உண்மையில் இறக்கவில்லை. அவர் தன்னுடைய நைட் வீரர்களுடன் செருமனியின் துரிஞ்சியாவிலுள்ள கிப்பவுசர் மலைகளில் உள்ள ஒரு குகையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். செருமனிக்கு அவர் தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் அவர் தூக்கத்தில் இருந்து எழுவார். நாட்டை அதன் முந்தைய புகழ் நிலைக்கு மீண்டும் உயர்த்தி வைப்பார்.[36] உண்மையில் சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்பானது ஓட்டோ நடவடிக்கை என்று பெயரிடப்பட்டு இருந்தது.[37] கிழக்கு ஐரோப்பாவில் புனித உரோமைப் பேரரசர் மகா ஓட்டோவின் நிலப்பரப்பு விரிவாக்கப் படையெடுப்புகளைக் குறிப்பதற்காக இவ்வாறான பெயர் கொடுக்கப்பட்டது. 1940 திசம்பரில் பெயரை பர்பரோசா நடவடிக்கை என்று இட்லர் மாற்றம் செய்தார்.[38] சூலை 1937இல் இட்லர் செருமானியப் பண்பாட்டுக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்திய மற்றும் தனது ஏகாதிபத்தியச் செயல்பாடுகள் வழியாக வெளிப்புற உலகத்துக்கும் அவற்றைக் கொண்டு சென்ற பேரரசர் என பர்பரோசாவை இட்லர் புகழ்ந்தார்.[39] இட்லரைப் பொறுத்த வரையில் நாசிக்களின் "1,000 ஆண்டு கால அரசைத்" தொடங்கி வைக்கும் சோவியத் ஒன்றியத்தை வெற்றி கொள்ளக் கூடிய தனது நம்பிக்கைக்குப் பர்பரோசா என்ற பெயரானது முக்கியத்துவம் கொடுப்பதாகக் கருதினார்.[39]

நாசி செருமனியின் இனவாதக் கொள்கைகள்

1925லேயே கூட தன்னுடைய அரசியல் கொள்கை மற்றும் சுயசரிதையான மெயின் கேம்பில் இட்லர் தெளிவற்ற முறையில் சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். எதிர் காலத்தில் வரும் தலைமுறைகளுக்காகச் செருமனி பிழைத்திருப்பதை உறுதி செய்வதற்காக லெபன்சிரவுமைத் ('வாழுமிடம்') தக்க வைக்கச் செருமானிய மக்களுக்குத் தேவை இருந்தது என்று குறிப்பிட்டார்.[40] 10 பெப்பிரவரி 1939 அன்று இட்லர் தன்னுடைய இராணுவத் தளபதிகளுக்கு அடுத்த போரானது "முழுமையாக வெல்தன்சவூங்கனுக்காக ['உலகப் பார்வை'] ஒரு போர்... முழுவதுமாக ஒரு மக்களின் போர், ஓர் இனவாதப் போர்" என்று கூறினார். 23 நவம்பர் அன்று இரண்டாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கி விட்டதற்குப் பிறகு "இனவாதப் போரானது வெடித்தது, யார் ஐரோப்பாவை ஆள்வது என இந்தப் போர் முடிவு செய்ய வேண்டும் மற்றும் அதனுடன் இந்த உலகத்தை யார் ஆள்வது என்று முடிவு செய்ய வேண்டும்" என இட்லர் அறிவித்தார்.[41] சோவியத் ஒன்றியமானது (மற்றும் அனைத்து கிழக்கு ஐரோப்பாவானது) ஆரியரல்லாத உண்டெர்மென்சனால் ('கீழ்நிலை மனிதர்கள்') நிரப்பப்பட்டு யூத-போல்செவிக் சதிகாரர்களால் ஆட்சி செய்யப்பட்டது என நாசி செருமனியின் இனவாதக் கொள்கையானது சித்தரித்தது.[42] "600 ஆண்டுகளுக்கு முன்னர்" (ஓசுதுசியேத்லங்) செய்ததைப் போலவே செருமனியின் விதியானது திராங் நச் ஓஸ்தென் ('கிழக்கு நோக்கித் திரும்புதல்') என்ற கொள்கையைப் பின்பற்றுவதே என இட்லர் தனது மெயின் கேம்பில் குறிப்பிட்டார்.[43] இதன் படி இது ஒரு பகுதி அளவுக்கு இரகசியமாக இருந்தாலும், நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட நாசிக் கொள்கையாக உருசிய மற்றும் இசுலாவிய மக்களில் பெரும்பாலானவர்களைக் கொன்றோ, இடமாற்றியோ அல்லது அடிமைப்படுத்தியோ யூரல் மலைகளுக்கு மேற்கே உள்ள நிலப்பகுதி முழுவதும் செருமானிய மக்களைக் கொண்டு நிரப்பும் செனரல்பிளான் ஓசுதுவின் (கிழக்குக்கான பொதுவான திட்டம்) கீழ் நிரப்புவது என்பதாகும்.[44] அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் "வேற்று கிரகத்தவர் போன்ற இம்மக்களை எவ்வாறு கையாள்வது" போன்ற தலைப்புகளின் கீழ் செருமானிய இதழ்களில் போலி அறிவியல் கட்டுரைகளில் தங்களது இனத்தின் மேன்மை நிலை குறித்த நாசிக்களின் நம்பிக்கையானது பரவியிருந்தது.[45]

Remove ads

செருமனியரின் இலக்குகள்

சோவியத் ஒன்றியம் பற்றி நாசிக்களின் கருத்து

1925 இலேயே, இட்லர் மைன் கம்ப் ("என் போர்") எனும் தன்னுடைய தன்வரலாற்றில், சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் குறிக்கோளை, செருமானியர்கள் "வாழும் இடம்" (இடாய்ட்சு மொழியில்: Lebensraum) அதிகரிப்பதற்கு கிழக்கு ஐரோப்பா, உருசியாவைக் கைப்பற்ற வேண்டும் என்று எழுதினார். நாசி இனக் கருத்துகள் படி, சோவியத் ஒன்றியம் "கீழ்மக்களாகிய" சிலாவியர்கள் "யூதக் கம்யூனிஸ்டுகளால்" ஆளப்படுகிறார்கள் [46][47]; அதை ஜெர்மானியர் பிடித்து தாம் `வாழும் இடத்தை` கைப்பற்ற முயல வேண்டும்[48]. செருமனி 600 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது போல, மறுபடியும் உருசியா மீது படையெடுத்து யூதர்கள் ஆளும் சோவியத் ஒன்றியத்தை ஒழிக்க வேண்டும். இட்லர் அகண்ட-சிலாவியர் என்ற இலட்சியத்தை ஒழித்துக் கட்டியவுடன் “உலகத்தின் உரிமையாளர் ஆகிவிடுவர்” என நினைத்தார். அதனால், நாசிக்களின் பகிரங்க கொள்கை உருசியர்களையும், மற்ற சிலாவியர்களையும் அடிமையாக்க வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், அப்படி செய்து அவ்விடங்களில் செருமானிய இனத்தவரை குடியேற்ற வேண்டும்[49].

1939-40 சோவியத்-செருமன் உறவுகள்

1939ல் போலந்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு சற்று முன் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது [50] . அது ஆக்கிரமிப்பின்மை உடன்பாடு என அழைக்கப் பட்டாலும், அதன் மறைமுக உட்கூறுகள் செருமனியும் சோவியத் உருசியாவும் கிழக்கு ஐரோப்பவை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது. அவ்வொப்பந்தம் உலகை அதிர்ச்சி அடைய செய்தது[51], ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று மிகுந்த காழ்ப்பு உணர்வு கொண்டிருந்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் படி சோவியத் ஒன்றியம் செருமனிக்கு எண்ணெய் முதலிய தொழில் துவக்கப் பொருள்களை தரும், அதற்கு ஈடாக செருமனி தொழில் உற்பத்திசெய்த பொருள்களையும், (படைத்) தளவாடங்களையும் தரும்[52] .

இப்படி ஒப்பந்தம் இருந்தாலும், இரு நாடுகளும் ஒன்றையொன்று ஐயத்துடனேயே அணுகின. இரு நாடுகளுக்கும் இடையே உரசல் அதிகமாயிற்று. அதை கட்டுப்படுத்த இரு நாடுகளும் ஜனவரி 1941ல், எல்லை, வணிக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டன[53][54].

செருமனி படையெடுப்பைத் திட்டமிடல்

பரவலாக அறியப்பட்டிருந்த ஸ்டாலினின்கொடுங்கோலாட்சி, நாசிக்கள் படையெடுப்பதற்கு ஒரு பொருத்தமான காரணமாக அமைந்தது; அதே சமயம் அச்சூழல் அவர்களின் வெற்றிக்கு ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது. 1930 களில் ஸ்டாலின் மில்லியன் கணக்கான மக்களை கொன்றான் அல்லது சிறையில் அடைத்தான்; அதில் பல திறமை வாய்ந்த செஞ்சேனை தளபதிகளும் இருந்ததால், செஞ்சேனை தக்க தலைமை இல்லாமல் வலுவிழந்து நின்றது. மற்ற கிழக்கு ஐரோப்பிய்ர்களிடம் (இசுலாவியர்களிடம்) செருமனி சோவியத் ஆட்சியின் கொடுமைகளை முன்னிறுத்தி பரப்புரை செய்தது. செஞ்சேனை தாக்குதல் நடத்த இருக்கின்றது என்றும், அதனை முன்கூட்டியே தடுக்க தாங்கள் படையெடுக்க வேண்டியுள்ளது என்றும் நாசி செருமனி பரப்புரை செய்தது.

1940 செருமனியில் துவக்கப் (கச்சாப்) பொருள் நெருக்கடியும் கிழக்கு ஐரோப்பிய உரசல்களும் ஏற்பட்டபோது, இட்லருக்கு சோவியத் மீது படையெடுப்பது சரியான வழி எனத் தோன்றியது.[55] இன்னும் அறுதியான திட்டம் தீட்டாவிட்டாலும், இட்லர் ஒரு செருமானிய படைத்தலைவருக்கு (செனரலுக்கு)ச் சொன்னார்: அந்த சூலை மாதத்தில் மேற்கு ஐரோப்பாவில் வெற்றிகள் தன் வாழ்க்கையின் மைய இலக்கை அடைய முடியும்: அதாவது கம்யூனிசத்தை அழிப்பது என்று. [56] இட்லரின் படைத்துறை தளபதிகள் உருசியாவைக் கைப்பற்றுவது செருமனிக்கு பெரிய பொருளாதார பாரங்களைக் கொடுக்குமே ஒழிய, நன்மை பயக்காது என்றனர்.

இட்லர், இந்த ஆக்கிரமிப்பு செருமனிக்கு பின்வரும் பயன்களைத் தருமென நம்பினார்:

  • சோவியத் ஒன்றியம் தோல்வி அடையச் செய்தபின், செருமானியப் படைகள் படைத்துறை சேவையில் இருந்து விடுவிக்கப் பட்டபின், தொழிற்சாலைகளுக்கு செல்வார்கள்.
  • யுக்ரெயின் வேளாண்மை விளைச்சல்களைக் கொடுக்கும்.
  • சோவியத் ஒன்றியம் மக்களை அடிமைகளாக பயன்படுத்தி, செருமனி வலுவாகும்.
  • சோவியத் ஒன்றியத்தின் தோல்வி நட்பு நாடுகளை வலுவிழுக்கச் செல்லும்.
  • சோவியத் ஒன்றியத்தின் பாகு எண்ணெய் நிலையங்கள் செருமனியின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது.

டிசம்பர் 5ம் தேதி, இட்லருக்கு சோவியத் ஒன்றியத்தின் மேல் படையெடுக்க திட்டம் கிடைத்தது, அவர் திட்டத்தை ஏற்றபின் மே 1941-ல் படையெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.[57]. டிசம்பர் 18, 1940 அன்று இட்லர், செருமானிய உயர் படைத்துறை மேலிடத்துக்கு விடுத்த போர் ஆணை நம்பர் 21 ல், இப்போது “பர்பரோசா நடவடிக்கை” என்றழைக்கப் பட்ட படைத்துறை நடவடிக்கைகளில் “செருமானிய படைத்துறை விரைவாக சோவியத் ஒன்ற்யத்தினை நசுக்கத் தயார் செய்ய வேண்டும்” என ஆணையிட்டார்[58]. அது ஃபிரெடரிக் பர்பரோசா என்ற 12ம் நூற்றாண்டு புனித உரோமப் பேரரசின், பேரரசர் பெயரைப் பயன்படுத்தியது. படையெடுப்பின் நாள் மே 15 , 1941 என நிச்சயம் செய்யப் பட்டது.[59] .

1940 இல், சில செருமானிய உயர் அதிகாரிகள் அதற்கு சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பு செருமனி மீது பெரும் பொருளாதார பாரத்தை தரக்கூடும் என மறுப்பு தெரிவித்தனர்[60]. மற்றொரு செருமனிய அதிகாரி “சோவியத் நாடு, பெரும் ஆட்சிநடத்தும் குளறுபடிகளில் சிக்கிக் கொண்டு இருப்பதால், அதால் ஒன்றும் செய்ய முடியாது,, ஆக்கிரமிப்பு செருமனிக்கு ஒரு வரவையும் கொடுக்காது, ஏன் உருசியாவை அதன் பயன்படாத கம்யூனிசத்தில் சிக்க வைக்கக் கூடாது” என வாதிட்டார். இட்லர் `பொருளாதார தடுப்புவாதிகளை இனிமேல் கேட்கப்போவதில்லை, அப்படிப்பட்ட பொருளாதார வாதங்களுக்கு தன் காதை மூடிக்கொண்டு, மன நிம்மதியை அடைவேன்` என்றார்[61]. அது, படையெடுப்பின் பொருளாதார விளைவுகளை ஆய்ந்து கொண்டிருந்த அதிகாரியிடம் சொல்லப் பட்டது, அந்த அதிகாரியின் வாதம் சோவியத் ஒன்றியத்தினை ஒரு சேதமின்றி கைப்பற்றினால் ஒழிய, செருமனிக்கு பெரிய பொருளாதார இழப்பே என இருந்தது. நாசிக்களில் சோவியத் ஒன்றியத்தினை மொத்தமாக அழிக்கும் கொள்கை அவர்கள் கருத்தான `வாழ்விடத்தை` `ஆரிய` செருமானியரின் நலனுக்காக கைப்பற்றுவதற்கு ஒத்து இருந்தது.

பர்பரோசா நடவடிக்கை, லெனிகிராட் மேல் வடக்கு திசையில் ஒரு அடியையும், மாசுக்கோவை கைப்பற்றுவதையும், பொருளாதாரக் கொள்கையான யுக்ரெயின் மற்றும் காகசஸ் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதையும் ஒன்று சேர்த்தது. இட்லர், தன் தளபதிகளுடன் எதைக் கைப்பற்றுவதில் முதன்மை கொடுக்க வேண்டும் என விவாதித்தார். இட்லர் மறுபடியும், மறுபடியும் `லெனின்கிராட் முதலில், பின்பு டோனெட்ஸ்க் பள்ளத்தாக்கு, மாஸ்கோ மூன்றாவது` என அறுதியிட்டு வந்தார்[62][63]. இட்லர் சோவியத் ஒன்றிய படையெடுப்பிற்கு பொறுமையை இழந்து கொண்டிருந்தார். முதலில் சோவியத் ஒன்றியத்தினை நசுக்கினால், பிரித்தன் அமைதிக்கு பிச்சை கேட்கும் என நம்பினார்.

இட்லர், மேற்கு ஐரோப்பாவில் செய்த அதி வேகமான வெற்றிகளினாலும், சோவியத் ஒன்றியத்தின் பின்லாந்து எதிரான போரில் மோசமாக போரிட்டதாலும், தன் திட்டத்தின் மீது அலவுக்கு மீறிய நம்பிக்கை வைகத் தொடங்கினார். சில மாதங்களில் போர் வெற்றியில் முடிந்து விடும் என நம்பி, பனிக்கால போருக்கு முன்யோசனையுடன் திட்டம் தீட்டவில்லை. அதனால் ஜெர்மனியின் படைகள் பனிக்கால போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை[64]

Remove ads

ஜெர்மனியின் ஆயத்தங்கள்

இந்த படையெடுப்பின் ஆயத்தமாக, ஹிட்லர் 3.5 மில்லியன் ஜெர்மன் துருப்புகளையும், 1 மில்லியன் இதற அச்சு ராணுவங்களையும் சோவியத் எல்லையில் குவித்து, சோவியத் நிலப்பரப்பின் மீது பல ஆகாய கண்காணிப்புகளை நடத்தி, கிழக்கில் ஆயுதங்களை குவித்தார். படையெடுப்பின் போது, ஸ்டாலினின் நம்பிக்கையான, ஹிட்லர் மோலோடாவ்-ரிப்பண்டிராப் ஒப்பந்தத்தின் 2 வருடங்கள் வரை சோவியத் யூனியனை தாக்கமாட்டான், என்பதால் சோவியத்துகள் மிகவும் வியப்பும், பீதியும் அடைந்தனர். மேலும், ஸ்டாலின் ஹிட்லர் முதலில் பிரித்தனுடன் போரை முடித்து விட்டு தான் சோவியத் பக்கம் திரும்புவான் எனவும் நம்பினார்.. ஹிட்லரின் ஆயத்தங்களை பற்றி எச்சரித்த பல உளவு அறிக்கைகளை, அது பிரித்தனின் , சோவியத்-ரஷ்ய யுத்தத்தை தூண்டிவிடும் சூழ்ச்சி என நம்பவில்லை. சோவியத்தின் உயர் ஒற்றனான் டாக்டர்.ரிசர்ட் சோர்க ஸ்டாலினுக்கு படையெடுப்பின் சரியான தேதியை கொடுத்தார்; பிரித்தானிய ராணுவ உளவு ULTRA எனும் உளவுமுறையால் அறிந்து , ஸ்டாலினுக்கு ஹிட்லர் படையெடுப்பை பல மாதங்கள் முன்பே எச்சரித்து இருந்தனர்[65].

ஜெர்மானியர்களும் ஏப்ரல் 1941 முதல் , தங்கள் உண்மையான ஆக்கிரமிப்பு நோக்கங்களை ஒளிக்க , தங்கள் ஆக்கிரமிப்பின் இலக்கு இங்கிலாந்துதான் என ஸ்டாலினை ஏமாற்ற,பல நடவடிக்கைகளை செய்தனர். இவற்றின் பெயர்கள் ஆபரேஷன் ஹைபிஷ், ஆபரேஷன் ஹார்பூன்.. இங்கிலாந்து மேல் படை எடுக்க எத்தனங்கள் போல் பல ராணுவ பயிற்சிகள் நடத்தப் பட்டன; அதற்கேற்றால் போல் போர்கப்பல், விமான ஓட்டங்கள் செய்யப்பட்டு ,சில பொய் ”தகவல்கள்”, சோவியத் உளவு கையில் சிக்க வைத்தன. ஜெர்மானிய ரானுவ தளபதிகள் நெப்போலியனின் தோல்வியில் முடிந்த 1812 ரஷ்ய படையெடுப்பையும் தீவிரமாக ஆராய்ந்தார்கள்.

ஹிட்லரும், ஜெனரல்களும் மூன்று தனி ராணுவ கூட்டங்கள் (Army Groups) குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கு ஒதுக்கும் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். ஜெர்மனியின் முன்னேற்றங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற ரஷ்யாவின் மீது தாக்குதலின் வழிகளில் இருந்தன. வடக்கு ராணுவ கூட்டம் (Army Group North )பால்டிய பகுதி வழியாக சென்று லெனின்கிரார்டையும், வடக்கு ரஷ்யாவையும் கைப்பற்றவும், மத்திய ராணுவ கூட்டம்(Army Group Center) ரஷ்ய நகரமான ஸ்மாலென்ஸ்க்கை கைப்பற்றி மாஸ்கோவிற்கு சென்று அதையும், பெலாருசையும் மத்திய-மேற்கு ரஷ்யாவை கைப்பற்றவும், தெற்கு ராணுவ கூட்டம் ( Army Group South) விவசாய பகுதியான உக்ரெயின் வழியாக படையெடுத்து, புல்வெளி தேசங்களான தெற்கு ரஷ்ய வழியாக வோல்காவையும் , எண்ணெய் வளம் மிகுந்த காகசஸ் பகுதிகளை கைப்பற்றவும் ஒதுக்கப் பட்டன.

ஹிட்லரும், ராணுவ தளபதிகளும் எது முக்கியமான இலக்கு என்பதில் வேறுகருத்து கொண்டிருந்தனர். அதிபதிகள் மாஸ்கோவின் மீது நேராக ராணுவம் செல்ல வேண்டும் என்றனர்; ஹிட்லரோ, முதலில் வளங்கள் மிகுந்த உக்ரெயினையும், பால்டிய நாடுகளையும் மாஸ்கோவின் முனால் கைப்பற்றுவது என வைத்தார். படையெடுப்பின் ஆரம்ப நாள் மே நடுவில் இருந்து சூன் முடிவிற்கு தள்ளி போடப் பட்டது

Remove ads

சோவியத்துகளின் ஆயத்தங்கள்

ஹிட்லர் சோவியத் யூனியனை நோஞ்சான் என நினைத்தாலும், சோவியத்துகள் 1930ல், தொழில் உற்பத்தியில் அதிகமாக முன்னேறி இருந்தனர். மெதுவாக தொழில்கள் ஆயுத உற்பத்தியை அதிகரித்தன. 1930 களில் நவீன ராணுவ சித்தாந்தத்தை வளர்த்து, 1936ல் போரட்கள செயல்விதிகளாக அமுலாக்கப் பட்டன.

மேலதிகத் தகவல்கள் 1 January 1939, 22 June 1941 ...

ஆனால் சோவியத் ராணுவத்திற்கு பல குறைபாடுகள் இருந்தன. ஒரு வாசிப்பு படி, மேற்கு சோவியத் யூனியனில் 2.5 சோவியத் துருப்புகள், அச்சு துருப்புகளான 4 மில்லியனோட ஒப்பிடுகலையில் குறைவு. சோவியத் படை அளவு 5 மில்லியன் ஆக இருந்தாலும், 2.6 மேற்கிலும், 1.8 ஜப்பானுக்கு எதிராக கிழக்கிலும், மற்றவரக்ள் மற்ற இடங்களிலும் , பயிற்யிலும் இருந்தனர்[67]. போர் நடக்கத் தொடங்கியவுடன், சோவியத்துகளின் துருப்பு ஒருங்குசேர்ப்பு அதிகரித்தது. 1941 படையெடுப்பின் தொடக்கத்தில், ஜெர்மனி சோவியத் படையை விட துருப்பு அளவில் சிறிது அதிகமாகவே இருந்தது.. சில முக்கிய தளவாடங்களில் சோவியத்தின் எண்ணிக்கை பலம் ஜெர்மனியை விட அதிகமாக இருந்தது. செஞ்சேனை 23, 106 டாங்கிகளை வைத்து, ஜெர்மனியை விட அதிக வலு கொண்டிருந்தது[68]. ஆனால் இவ்வாயுதங்களின் தயார் நிலைமையும், பராமரிப்பும் மோசமாக இருந்தன; ரவைகளும், ரேடியோக்களும் தட்டுப்பாடில் இருந்தன. பல ராணுவ யூனிட்டுக்ள் போதுமான அளவு டிரக்குகளும் , பார வண்டிகளும் வைத்திருக்க வில்லை[69].

1938 பிறகு, சோவியத்துகள் டாங்குகளை தரைப் படைக்கு ஆதரவாக பரப்பி வைத்திருந்தனர்; 1940ல் இருந்துதான் டாங்கிகளை ஒன்று சேர்த்து, டாங்கி டிவிஷன்களாக ஆக்கினர், 1941ல் அவ்வேலை முடிபடவில்லை. ஜெர்மானிய படை 5200 டாங்கிகளை வைத்திருந்தது, அதில் 3350 டாங்கிகள் படையெடுப்பிற்கு தயாரக இருந்தன. சோவியத் யூனியனின் மிக நவீனமான டாங்கிகள் T-34 மிக உயர்ந்த ரகமானாலும், போர் முதலில் பெரிய அளவு உற்பத்தி செய்யப் படவில்லை. அதே சமயம், டாங்கி தரம் உயர்ந்ததாக இருந்தும், ரேடியோ தொடர்பு ஆயுதங்களும், அப்படிப்பட்ட ஆயுதங்களை செம்மையாக பயன்படுத்துவதற்கு வேண்டிய பயிற்சியும் அவ்வளவு இல்லை.

சோவியத்துகளின் எண்ணிக்கை பலம், ஜெர்மானியரின் உயர்தர தயார்நிலையினாலும், பயிற்சிகளாலும் எதிர்க்கப்பட்டு, அதன் வீரியம் குறைந்தது. சோவியத் ராணுவ அதிகாரம் ஒவ்வொரு படியிலும் ஸ்டாலினின் பெரும் கழிப்பு (1936-1938) செயல்களால் மெலிக்கப் பட்டது. 90 ஜெனரல்கள் கைது செய்யப்பட்டதில், 6 பேர் தான் உயிர்தப்பினர், 180 டிவிஷனல் கமாண்டர்கள் கைது செய்யப் பட்டதில் 36 பேர்தான் உயிர் தப்பினர்; 57 ராணுவ கமாண்டர்களில் 7 பேர் தான் உயிர்தப்பினர். மொத்தமக 30,000 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது பெரும்பாலும் அனுபவம் இல்லாத இளய ஆபீசர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தது. 1941ல், 75% ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவியில் 1 வருடத்திற்கு குறைவாக இருந்தனர். சராசையாக சோவியத் கமாண்டர் ஜெர்மானிய கமாண்டரை விட 12 வயது குறைந்தவராக இருந்தார். அதனால், அவர் அரசியல் நிலைகளுக்கு அஞ்சி, பயிற்சி இலாதவராய், சுய முனைப்பு இல்லாதவராக இருந்தார்.

படையெடுப்பு முதலில் சோவியத் விமானப் படை நவீன விமானங்கள் இல்லாமல் தத்தளித்தது. சோவியத் சண்டை விமானப் படை I-15, I-16 போன்ற காலம் கடந்த விமானங்களை வைத்திருந்தது[70]. புதிய ரக விமானங்களான, MIG-3,LaGG-3, Yak-1 போன்றவை, 1941 கடைசியில் தான் தயாரிக்கப் பட்டன. அவை ஜெர்மனியின் மெசர்ஷ்மிட் B-109 போன்ற விமானங்களை விட கீழ் தரத்தில், திறமையிலும் இருந்தன. படையெடுப்பு தொடங்கிய நாள் சூன் 22, 1941 அன்று 200 புது ரக விமானங்கள் இருந்தும், அவற்றிற்கு 4 பயிற்சி பெற்ற ஓட்டுனர்தான் இருந்தனர் [71] . செஞ்சேனை பெரும் விஸ்தீரணங்களில் பரப்பப் பட்டு, சரியான வாகன வசதி இல்லாமல் போருக்கு வேண்டிய குவிப்பு நிலைக்கு எளிதாக போக முடியவில்லை.

அதனால் படையெடுப்பு தொடங்கிய நாள், எண்ணிக்கை அளவில் சோவியத் ராணுவம், ஜெர்மனியைவிட வலுப் பெற்றது போல தோன்றினாலும், தரத்தில் மோசமாக இருந்தனர். ராணுவ யூனிட்டுகள் எண்ணை மாற்றீடு, தளவாடங்கள் மற்றும் ஆட்கள் மாற்றீடு இவற்றின் வசதி குறைவினால், ஒரு போர் பின்பே, மறுபடியும் சண்டை போட முடியாமல் தோற்றனர். 1938 வரை, சோவியத் ராணுவ சித்தாந்தம் கோடிட்ட பாதுகாப்பு (linear defence) - அதாவது பாதுகாபுப் படைகள் எதிரியை ஒரு கோட்டில் சண்டையிட்டுத் தடுப்பர் - என்பதை அனுசரித்தது. பிரான்சின் தோல்விக்கு பிறகு, அதைக் கைவிட்டு, தரைப்படை பெரும் அமைப்புகளில் குவிக்கப்பட்டனர்[72][73].

மேலதிகத் தகவல்கள் ஜெர்மனியும், சகாக்களும், சோவியத் யூனியன் ...
Source: Mikhail MeltyukhovStalin's Missed Chance” table 47,[76]

.

Remove ads

படையெடுப்பு

அச்சு சக்திகளின் தொகுப்பு

ஹால்டர், ஜெர்மானிய போர் உயர் அதிகாரத்தின் பொதுத்தலைவர், தரை, விமானப் படைகளை இவ்வாறு படையெடுப்புக்கு தொகுத்தார்:

வடக்கு ராணுவ கூட்டம் - கிழக்கு பிரஷ்யாவிலிருந்து தொடக்கம் (26 டிவிஷன்கள்) - தளபதி விலெல்ம் ரிட்டர் வான் லீப்

  • 16த் ராணுவம் (எர்னஸ்ட் புஷ்).
  • 4வது பான்சர் கூட்டம் (ஹோப்னர்).
  • 18த் ராணுவம் (கெஓர்க் வான் குசலர்).
  • 1வது விமான அணி (ஆல்பிரட் கெல்லர்).

மத்திய ராணுவ கூட்டம் - கிழக்கு போலந்தில் இருந்து தொடக்கம் (49 டிவிஷன்கள்).

  • 4வது ராணுவம் (குந்தர் வான் குலூக்).
  • 2 வது பான்சர் கூட்டம் (குடேரியன்).
  • 3 வது பான்சர் கூட்டம் (ஹெர்மன் ஹோத்).
  • 2 வது விமான அணி (ஆல்பர்ட் கெசல்ரிங்).

தெற்கு ராணுவ கூட்டம் - தெற்கு போலந்து, ருமேனியாவில் இருந்து தொடக்கம் - (41 டிவின்கள்).

  • 17வது ராணுவம் (கார்ல் ஹைன்ரிக் வான் ஸ்டுல்ப்நாகல்).
  • 1 வது பான்சர் கூட்டம் (வான் கிளைஸ்ட்).
  • 11 வது ராணுவம் (யூகன் ரிட்டர் வான் ஷோபர்ட்).
  • 6 வது ராணுவம்.
  • 4 வது விமான அணி.

ஜெர்மானிய பிடியில் இருந்த பல ஐரொப்பிய நாடுகளில் இருந்த பல துருப்புகள் சோவியத் படையெடுப்பில் கலந்து கொண்டனர்.

சோவியத் துருப்புகளின் தொகுப்பு

படையெடுப்பின் ஆரம்பத்தில், செஞ்சேனையின் பொறுப்பில் இருந்த மேற்கு சோவியத் பகுதிகள் 4 முன்னணிகளாக பிரிக்கப் பட்டிருந்தன.. இன்னும் சில முன்னணிகள் ஆக்கப் பட்டு , அவை 3 யுக்தியுள்ள கண்காணிப்பின் கீழே கொண்டு வரப்பட்டன. அவை பொதுவாக ஜெர்மனியரின் 3 ராணுவ கூட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தன. படையெடுப்பு தொடங்கியவுடன், வடக்கு, வடமேற்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு முனன்ணிகள் சூன் 1941ல் ஆக்கப் பட்டன.

10ம் சூலை, 1941 ஆணைப்படி, வோரோஷிலாவ் வடமேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும், டிமோஷென்கோ மேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும், பிடியோனி தென்மேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும் கமாண்டர்களாக நியமிக்கப் பட்டனர்[77] .

வடமேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு:

  • வடக்கு முன்னணி ( கேணல் ஜெனரல் மார்கியான் போபாவ்) 14 வது, 7 வது, 23 வது ராணுவங்களை கொண்டு பின்லாந்து எல்லையில்
  • வடமேற்கு முன்னணி (கேணல் ஜெனரல் பியோடார் குஸ்நெட்சாவ்) 8 வது, 11 வது 27 வது ராணுவங்களை கொண்டு , பால்டீய பகுதிகளின் பாதுகாப்பு
  • வடக்கு மற்றும் பால்டீய கடற்படைகள்

மேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு:

  • மேற்கு முன்னணி (ஜெனெரல் டிமிட்ரி பேவலாவ்) 3வது, 4 வது, 10 வது, 133 வது ராணுவஙகள்

தென்மேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு:

  • தென்மேற்கு முன்னணி (கேனல் ஜெனெரல் மிகைல் கிர்போனோஸ்) 5வது, 6வது, 12 வது, 26 வது ராணுவஙக்ள்
  • தெற்கு முன்னணி (ஜெனெரல் இவான் டுலுநெயேவ்) 9 வது, 18 வது ராணுவங்கள்
  • கருங்கடல் கடற்படை

இதையும் தவிர , இன்னும் 6 ராணுவங்கள் மேற்கு சோவியத்தில் இருந்தன - 16 வது, 19 வது, 20 வது, 21 வது, 22 வது , 24 வது ராணுவஙக்ள் ஸ்டாவ்கா என்ற சோவியத் ராணுவ மிக உயர்ந்த அதிகாரத்தின் நேர் கண்காணிப்பில் இருந்து, பிறகு கையிருப்பு முன்னணி ( Reserve Front) என அழைக்கப் பட்டு ஸ்டாலினின் நேர் ஆணைகள் கீழ் வந்தன.

தொடக்கக் கட்டம் ( 22 சூன் 1941 - 3ர்ட் சூலை 1941)

Thumb
பர்பரோசாவின் தொடக்க கட்டத்தில் ஜெர்மனியின் முன்னேற்றங்கள்

சூன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 சூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்..

லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும்[78] . லூஃப்ட்வாஃப முதல் நாளிலேயே 1489 சோவியத் போர் விமானங்களை தரையிலே அழித்ததாக பீற்றிக் கொண்டது. ஆனால் உண்மையில் 2000 மேல் விமானங்கள் அழிக்கப் பட்டன.. லூஃப்ட்வாஃப முதல் நாள் போரில் 35 விமானங்களை இழந்ததாக அறிவித்தது. ரஷ்ய சரித்திர ஆய்வாளர் விக்டர் குகிகாவ் படி, முதல் 3 நாட்களில் 3922 சோவியத் விமானங்கள் அழிக்கப் பட்டன[79]- பெரும்பாலும் தரையிலேயே.. லூஃப்ட்வாஃப 3 போர் பகுதிகளிலும் ஆகாய மேன்மையை வருடம் பூராகவும் நிலைநாட்டியது[80].

வடக்கு ராணுவ கூட்டம்

இதற்கெதிராக இரு சோவியத் ராணுவங்கள் இருந்தன. முதல் நாளிலேயே நெமன் நதியை கடந்தன. ரசநியாய் நகர் அருகே 300 சோவியத் டாங்கிகளால் தடுக்கப் பட்டு, கடும் போர் மூண்டது. 4 நாள் தீவிர பிறகு சோவியத் துருப்புகள் அழிக்கப் பட்டன[81] . ஜெர்மானிய பான்சர் அணிகள் துவின நதியை கடந்து லெனின்கிராடின் தாக்குதல் தூரத்தில் வந்தன. அப்பொது, ஹிட்லர் அவர்களை நின்று, மேலும் தரை துருப்புகளின் வலுவூட்டல் பின்பு லெனின்கிராட் மீது செல்லமாறு ஆணையிட்டார்.. இந்த நில் ஆணைகள் சோவியத்துகளுக்கு லெனின்கிராடின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அவகாசம் கொடுத்தன. அதே சமயம் , லிதுவேனியாவில், சோவியத்துகள் எதிராக கிளர்ச்சி ஏற்பட்டு, 60,000 லிதுவேனிய துருப்புகள் சோவியத் எதிராக போர் புரிந்தனர்[82]. இது எஸ்டோனியாவிலும் ஏற்பட்டு, ஜெர்மானியர் 7ம் ஆகஸ்து எஸ்தோனியாவை அடைந்தனர்.

மத்திய ராணுவ கூட்டம்

இதற்கெதிராக, 4 சோவியத் ராணுவங்கள் இருந்தன, 3வது, 4வது, 10 வது, 11 வது. சோவியத் துருப்புகள் மூக்குப்பகுதியில் இருந்தன. ஜெர்மானியர் யுக்தி, இரண்டு பான்சர் ராணுவங்கள் இவற்றை சுற்றி சென்று , பெல்லொரசியாவின் தலைநகரமும், பெரிய ரயில் தொடர்பு நகரமுமான மின்ஸ்கில் சந்திப்பது. அப்படி செய்து , தங்கள் வசத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எல்லா சோவியத் ராணுவங்கலையும் அழைப்பது. அந்த திட்டம் படி, 3 வது பான்சர் கூட்டம் மூக்குப்பகுதிக்கு வடக்கும், 2 வது பான்சர் ராணுவம் மூக்குப்பகுதிக்கு தெற்கேயும் பெரும் சக்தியோடு செல்லத் தொடங்கின. மாஸ்கோவில் ஸ்டாவ்காவிற்கு இந்த ஜெர்மன் அசைவுகளின் நோக்கம் புரியவில்லை; அதனால் , சோவியத் ராணுவம் செய்ய முடியாதவற்றை , அதாவது ஒரே பாய்ச்சலில் எல்ல ஜெர்மானிய ராணுவத்தினரஒ அழிப்பது - ஆணை இட்டது[83]. 27 வது சூன் , 2 வது, 3 வது பான்சர் ராணுவங்கள் மின்ஸ்கில் இணைந்து, சோவியத் நாட்டிற்குள் 200 மைல் உள்ளே சென்று விட்டன.

தெற்கு ராணுவ கூட்டம்

இதன் எதிரில் 5வது, 6 வது, 26 வது சோவியத் ராணுவ கூட்டங்கள் இருந்து, கடுமையாக சண்டையிட்டு தடுப்பு கொடுத்தன. மற்ற பகுதிகள் போல் அல்லாமல், இங்கு சோவியத்துகள் பெரும் தடுப்பை கொடுத்தனர். 1 வது பான்சர் ராணுவம் 600 டாங்கிகளுடன் சோவியத் 6 வது ரணுவத்தை நசுக்கி பிராட் நகரை கைப்பற்றியது. 26 சூன் அன்று 1000 சோவியத் டாங்கிகள், அதன் பீது எதிர் அடி கொடுததன. 4 நாள் தீவிர போர் ,பின்பு ,அதிக சேதத்துடன் ,ஜெர்மானியர் வென்றனர்[84],

முதல் வாரப் போரிலேயே, ஜெர்மானியர் பெரும் வெற்றிகளை கண்டனர்; பெரும் பகுதிகளை கைப்பற்றியனர்; ஆனால் இந்த வெற்றிகளால், கைப்பிடித்த பகுதிகளை நிர்வாகிப்பதில், மாஸ்கோ மேல் முன்னேறுவது ஓரளவு தடை செய்யப்பட்டது.

இடைக் கட்டம் (3 சூலை 1941 - 2 அக்டோபர் 1941)

3ம் சூலை நாள், ஹிட்லர் தன் ராணுவங்களுக்கு மறுபடியும் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை தொடங்குமாறு ஆணை இட்டான். உள்ளே போகப் போக, சோவியத்துகளில் எருமை தீவிரம் அதிகரித்தது. மத்திய ராணுவ கூட்டத்தின் அடுத்த இலக்கு ஸ்மாலென்ஸ்க் நகரத்தை கைப்பற்றுவதாகும். ஜெர்மானியர்களுக்கு எதிராக 6 சோவியத் ராணுவங்கள் இருந்தனர். 6 வது சூலையில், சோவியத்துகள் 700 டாங்கிகளுடன் 3 வது பான்சர் ராணுவத்தை தாக்கினர். ஜெர்மானியர் இத்தாக்குதலை விமான குண்டுகளால் தாக்கி, முறியடித்தனர். 2 வது பான்சர் ராணுவம் டினீபர் நதியை கடந்து, தெற்கு வழியாக ஸ்மாலென்ஸ்க் நோக்கி படையெடுத்தது. அதே சமயம், 3 வது பான்சர் ராணுவம், ஸ்மாலென்ஸ்கை வடக்கு வழியாக அடைந்தது. சூலை 26ம் நாள், இரு பான்சர் ராணுவங்களும் ஸ்மாலென்ஸ்கில் இணைந்து, 180,000 சோவியத் துருப்புகளை கைதியாக பிடித்தன[85]. ஆனால் 100000 சோவியத் துருப்புகள் ஜெர்மானிய பிடியை தப்பித்து ஓடினர்.

4 வாரம் கழித்து, ஜெர்மானியர் சோவியத்துகளில் பலத்தை குறைவாக கணிப்பித்தலின் தவரை உணர்ந்தனர். மேலும் தங்கள் ஆயுத, உணவு கிடங்குகளில் இருந்து அதிக தூரத்தில் வருவதின் அபாயத்தை உணர்ந்தனர்; அதே சமயம் தாங்கள் தன்னிச்சையாக கைப்பற்றிய சோவியத் புகுதிகளில் அசைவதின் அபாயத்தை உணர்ந்தனர். அதனால் கோபமடைந்த ஹிட்லர், சோவியத் நாடு மீது பெரும் பொருளாதார சேதத்தை செய்ய , தொழில் பகுதிகலான கர்காவ், டோனெட்ஸ் பள்ளம் பகுதி, காகசஸ் எண்ணெய்த் தொழில்கள் இவற்றை கைப்பற்ற ஆணையிட்டான்.

ஹிட்லரின் தளபதிகள் ஜெர்மன் ராணுவம் மாஸ்கோவிற்கு எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ, அவவ்ளவு விரைவாக எல்லா ராணுவங்களுடன் படை எடுக்க வேண்டும் என ஹிட்லருடன் வாதிட்டனர். எதிரியின் தலை நகரததின் வீழ்ச்சியினால் ஏற்படும் மனச் சோர்வு தவிற, மாஸ்கோ தளவாட உற்பத்திக்கும், ரயில் போக்குவரத்து, தொடர்புக்கும் மையம் ஆகும்; மேலும் மாஸ்கோவின் பாதுகாப்பிற்காக செஞ்சேனை செமியோன் பியூடனி கீழ் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளது. இதயெல்லம் கருதி, மாஸ்கோவைப் பிடிப்பது தளபதிகளின் ஆசை. ஆனால் ஹிட்லர் தன் கருத்துகளில் விடாப் பிடியாக இருந்து, மத்திய ராணுவ கூட்டத்தின் டாங்கிகளை வடக்கும், தெற்கும் அனுப்ப ஆணை இட்டார். சூலை நடுவில், ஜெர்மானியர் கீவ் நகரத்தில் அருகில் வந்தனர். 1 வது பான்சர் ராணுவம் தெற்கேயும், 17 வது பான்சர் ராணுவம் கிழக்கேயும் பெரும் அடிகளை கொடுத்து , 3 பெரிய சோவியத் ராணுவங்களை உமான் அருகெ சுற்றி வளைத்துக் கொண்டது.. அந்த சோவியத் துருப்புகளை தோற்கடித்து, ஜெர்மன் டாங்கிகள் வடக்கே திரும்பி முன்னேறி, டினீபர் நதியை கடந்தன. இதற்கிடையில், 2 வது பான்சர் ராணுவம் , மத்திய ராணுவ கூட்டத்துடன் பிரிக்கப்பட்டு , டெஸ்னா நதியை கடந்து, தெற்கே முன்னேறியது. . இந்த இரு ராணுவங்களும் 4 சோவியத் ராணுவங்களை சுற்றி வளைத்துக் கொண்டன.

லெனின்கிராட் மீதான தாக்குதலுக்கு , 4 வது பான்சர் ராணூவம் , டாங்கிகளால் அதிகரிக்கப் பட்டது. ஆகஸ்து 4ம் தேதி, லெனின்கிராடுக்கு 30 மைல்களுக்கு உள்ளாக முன்னேறியன. அப்பொழுது, ஹிட்லர் லெனின்கிராடின் மொத்த அழிப்பிற்கு ஆணை இட்டார். ஆகஸ்த் 8 அன்று வடக்கு ராணுவ கூட்டம் லெனின்கிராடின் மீதான கடைசி தள்ளுதலை ஆரம்பித்தனர். 10 நாட்களுல், லெனின்கிராடின் 10 கி.மீ. தொலைவில் இருந்தனர். அப்போது, ஹிட்லர் லெனின்கிராட் பெருமளவு தாக்கப்பட்டு கைப்பற்றபடாமல், பசி பஞ்சத்தால் சரணடைய செய்ய வேண்டும் என ஆணை இட்டார். அப்போது லெனின்கிராட் முற்றுகை தொடங்கியது.

மாஸ்கோ மீது ஆக்கிரமிப்பு முனால், கீவை கைப்பற்ற வேண்டும் என ஹிட்லர் ஆணையிட்டார். அதனால் மத்திய ராணுவ கூட்டத்தில் பாதி தெற்கே சென்றது, தெற்கு ராணுவ கூட்டம் வடக்கெ முன்னேறியது. செப்டம்பர் 16 நாள், ஜெர்மானியா ராணுவம் சோவியத் ராணுவங்களை கீவ் அருகே சுற்றி வளைத்துக் கொண்டது. 10 நாள் கொடும் சண்டைகளுக்கு பிரகு, 600000 சோவியத் போர் கைதிகள் பிடிக்கப் பட்டனர்; 453720 சோவியத் துருப்புகள் இறந்தனர்[86] .

கடைசி கட்டம்( 2 சூலை 1941 - 7 ஜனவரி 1942)

மாஸ்கோ யுததம்.

Thumb
மாஸ்கோ யுத்தத்தின் போது கிழக்கு களம்:
  தொடக்க வேர்மாக்ட் முன்னேற்றங்கள் -சூலை 9,1941 வரை
  பிறகு முன்னேற்றாங்கள் - செப்டம்பர் 1, 1941 வரை
  சுற்றிவளைப்பும் கீவ் யுத்தமும் - 9 செப்டம்பர் 1941 வரை
  கடைசி வேர்மாக்ட் முன்னேற்றம் - 5 டிசம்பர் 1941 வரை

கீவின் தோல்விக்கு பிறகு, செஞ்சேனையின் எண்ணிக்கை ஜெர்மானிய துருப்புகளை விட குறைந்தது. அதனால் மாஸ்கோவை, காப்பாற்ற ஸ்டாலின் 83 டிவிஷன்களில் 800,000 துருப்புகளை வைத்திருந்தாலும், 25 டிவிஷன்கள் தான் செயலில் இடமுடியும். டைபூன் ஆபரேஷன், மஸ்கோவின் மீதான படையெடுப்பு, அக்டோபர் 2ம் நாள் துவங்கியது.. மாஸ்கோவை காப்பதற்கு சில பாதுகாப்பு வளையங்களை, ,வியாசுமாவிலும், மொசாக்கிலும் மையமாக , சோவியத்துகள் செய்திருந்தனர்

ஓரெல் நகரை கைப்பற்றி ஜெர்மானியர்களின் கொடுத்த முதல் அடி சோவியத்துகளை பெரும் அதிசயத்துக்குள் ஆக்கியது, ஏனெனில் அது சோவியத்துகளில் பாதுகாப்பு வளையத்திற்கு 75 கிமி அருகில் இருந்தது. 3 நாட்கள் கழித்து, ஜெர்மானியர் பிரியாண்ஸ்கை பைபற்றினர். அதனால் 3 சோவியத் ராணுவங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. வடக்கில் 3 வது, 4 வது பான்சர் ராணுவங்கள் வியாஸ்மாவை கைப்பற்றி, இன்னும் 5 சோவியத் ராணுவங்களை சுற்றி வளைத்தன. மாஸ்கோவின் முதல் பாதுகாப்பு வளையம் உடைந்தது. அதனால் 663,000 போர் கைதிகள் பிடிக்கப் பட்டு, சோவியத் கைதிகள் எண்ணிக்கை 3 மில்லியன் ஆயிற்று. சோவியத்துகள் கையில் மாஸ்கோவின் பாதுகாப்பிற்கு 90000 துருப்புகள், 150 டங்கிகள்தான் இருந்தனர்.

அக்டோபர் 13ம் தேதி, 3 வது பான்சர் ராணுவம் மாஸ்கோவின் 90 மைல்களுக்கு உள் வந்துவிட்டது.. ஆபரேஷன் டைபூன் முதலில் இருந்தே, வாநிலை மோசமாகிக் கொண்டு இருந்தது. குளிர் உறையும் அளவு வந்தது. ஜெர்மானிய துருப்புகளுக்கு புதிய சரக்குகள் எளிதில் கிடைக்க வில்லை. முதல் தரைப் பனி நீராக கரைந்தவுடன், பூகி என்கும் சேறாகி விட்டது. அதனால் டாங்கிகளோ, பார வண்டிகளோ, பீரங்கிகளோ முன் செலவது மிக கடினமாக போயிற்று. வண்டிகளின் சக்கரங்கள் சேற்றில் புதந்து, வண்டி, டாங்கி, பீரங்கிகளால் முன் நகருவது மிகக் கடினமாக இருந்தது. அச்சமயத்தில், ஜெர்மானிய ராணுவம் ஒவ்வொரு நாளைக்கு சராசரி 2 கி.மீ. தான் நகர முடிந்தது. அக்டோபர் 31 அன்று, முன்னேற்றைத்தை நிருத்தி, ஆயுத, மற்ற சரக்ககுகளை அதிகரித்து முன் செல்லுமாறு ஆணை பிறப்பிக்கப் பட்டது. இந்த நிறுத்தம் சோவியத்துகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க அவகாசம் கொடுத்தது. அந்த மாதத்தில் ஸ்டாலின், 11 புதிய ராணுவங்களையும், 30 பனிப் போரில் சிறந்த சைபீரிய டிவிஷஙளையும் உண்டாக்கினார், சோவியத் ராணுவ உளவு, ஜப்பானியர்கள் சோவியத்துகளை தாக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்து ஜப்பானை எதிர் நோக்கியிரிருந்த 30 சைபீரிய டிவிஷன்களை மாஸ்கோ பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்டார்கள்.

நவம்பர் 15ம் நாள், தரை கெட்டியானவுடன், ஜெர்மானிய ராணுவம் மாஸ்கோவை நோக்கி தன் முன்னேற்றத்தை , மறுதுவக்கம் செய்தது. ஆனல் அவர்கள் ஆயுத, இதர சரக்குகள் முடைப்பாகத்தான் இருந்தன. மாஸ்கோவிற்கு தெற்கே, 2 வது பான்சர் ராணுவம் தடுக்கப் பட்டது. நவம்பர் 22 ல் சைபீரிய துருப்புகள் 2 வது பான்சர் ராணுவத்தை தாக்கி, அவர்களை தோற்கடித்தன. ஆனால் 4 வது பான்சர் ராணுவம் முன்னேறி, மாஸ்கோவை சுற்றத் தொடங்கியது.

டிசம்பர் 2ம் நாள், 4 வது பான்சர் ரணுவம், மாஸ்கோவின் 15 மைல் தொலைவில் இருந்தன, ஆனால் அந்நேரத்தில், முதல் பனிப்புயல்கள் தொடங்கியன. ஜெர்மன் ராணுவம் பனிக்கால போருக்கு தன்னை தயார் செய்து கொள்ளவில்லை. பனிக்கடியும், நோய்களும் எதிர்களை விட அதிகமாகவே ஜெர்மானியரை கொன்றன. சில டிவிஷன்கள் எண்ணிக்கை 50% ஆக குறைந்தது. பயங்கர பனி, -40 டிகிரி பனி, பீரங்களுக்கும், துப்பாக்கிகளுக்கும் பெரும் சேதத்தை கொடுத்தன. லூஃப்வாஃப அவரக்ளுக்கு வாநிலை காரணமாக ஆகாயத்தில் இருந்து சப்ளை செய்ய முடியவில்லை. புதிய சோவியத் ராணுவங்களின் எண்ணிக்கை இப்போது 500000 ஆக உயர்ந்தது. டிசம்பர் 5ம் நாள், சோவியத்துகள் மாபெரும் பதிலடியை கொடுக்கத் தொடங்கினர். அந்த பதிலடி ஜெர்மானியர்களை 300 கிமி பின்னுக்கு தள்ளியது. அதுவரை , ஜெர்மானியரின் படையெடுப்பு 250,000 இறப்புகளையும், 500000 காயம் அடைந்தவர்களையும் அவர்களுக்கு கொடுத்தது. அதில் பெரும்பான்மை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்டது

Remove ads

விளைவு

பர்பரோசா ஆபரேஷனின் உச்சகட்டம் மத்திய ராணுவ கூட்டம், ஏற்கெனவே ஆயுத, இதற சப்ளைகளில் முடங்கி இருந்தபோதும், மாஸ்கோ மீது படையெடுக்க ஆணை வாங்கியது ஆகும்; அதன் முன்னணி துருப்புகள் டிசம்பர் முதலில் கிரெம்லின் பார்வைக்கு வந்தனர். சைபீரிய துருப்புகளால், வலுவாக்கப்பட்ட சோவியத் ராணுவம், மாஸ்கோவை பாதுகாத்து, ஜெர்மானியர்களை விரட்டி அடித்தது..

கூரை , தேவையான பனிக்கால உடைகள், உணவு இவற்றின் பற்றாக்குரை, வேறெங்கும் செல்ல முடியாத நிலை இவைகளால், ஜெர்மானிய துருப்புகள் பனிகாலம் முழுவதும், இருந்த இடத்தில் மாட்டிக் கொண்டனர். சோவியத் எதிரடிகளால் ஏற்படக்கூடிய மொத்த அழிப்பை, ஆக்ரோஷமான பாதுகாப்பினால் தவிர்த்தாலும், போர்களாலும், பனிப் பருவத்தாலும் பெரும் சேதத்திற்கு உட்பட்டனர்.

அச்சமயம், மாஸ்கோவை கைப்பற்றுதல் ஜெர்மனியின் மைய இலக்காக இருந்தது. பர்பரோசா அதில் தோற்றது.டிசம்பர் 1941ல், அமெரிக்கா மேல் போர் அறிவிப்பதில் ஜெர்மனி, ஜப்பானுடன் சேர்ந்தது. பர்பரோசா ஆரம்பித்து ஆறு மாதங்களில் உலக ராணுவ யுக்தி நிலை மாபெரும் மாற்றங்களை கண்டது, ஜெர்மனி மிக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது, ஏனெனில் ஜெர்மனிய தொழில் துறை வெகு நீண்ட போருக்கு ஆயத்தமாக இல்லை.

பர்பரோசா ஆபரேஷனின் விளைவு சோவியத்துகளுக்கும் பெரும் ஆபத்தில் முடிந்தது. ஜெர்மானியர் மாஸ்கோவை கைப்பற்ற முடியவில்லை ஆனாலும், பெரும் சோவியத் பகுதிகளை தன் வசம் வைத்தனர். 1941 முடிவில் ஜெர்மனியர், 1,300,000 சதுர கி.மீ. பரப்பையும், 75 மில்லியன் மக்களையும் தங்கள் ஆதிக்கம் கீழ் கொண்டு வந்தனர்[87] . வேர்மாக்ட் முதலிலிருந்தே, ஹிட்லர் கொடுத்த ஆணைகளால், மிகவும் குரூரமாக நடந்து கொண்டது; ஹிட்லரின் கருது ருசிய ஸ்லாவிய இனத்தவர் கீழ்மக்கள் (ஜெர்மன் மொழி untermenschen). ஜெர்மானியர் கைப்பற்றிய சில இடங்களில், உள்ளூர் மக்கள் , ஜெர்மன் ராணுவத்தை ஸ்டாலினின் கொடுங்கோலில் இருந்து விடுதலை செய்ய வந்தவர் என நினைத்து, வரவேற்றனர்; அப்படி இருந்தும், ஜெர்மானியரின் குரூரமான இனக் காழ்ப்பு கொள்கைகளால், ஜெர்மன் அதிகாரத்தில் வந்த மக்கள் கோபமுற்றனர். சோவியத் ராணுவங்கள் தோற்றபின், தப்பித்த துருப்புகள் ஜெர்மனிக்கு எதிரான எருமை சக்திகள் ஆக மாறினர். இந்த சக்திகளின் தாக்குதல்களை ஜெர்மானியர் மூர்க்கமான முறையில் அடக்கியது, இரு பக்கங்களிலும் பெரும் இழப்பை உண்டு பண்ணிற்று. ஒரு சமீபத்திய ஜெர்மானிய கணிப்பு படி 4.3 மில்லியன் ஜெர்மானிய துருப்புகளும், இதர 900000 அச்சு துருப்புகளும், சோவியத் யூனியனில் போர்களிலோ, சிறையிலோ மடிந்தனர்.

சோவியத் யூனியன் போர் கைதிகளை மனிதாப முறையில் நடத்தும் நியதிகளை வரையருத்து ஜினீவா வழக்காறுகளை கையெழுத்திடவில்லை. அதனால் ஹிட்லரின் ஆணைப்படி சோவியத் போர் கைதிகளையும், மக்களையும் மனிதாப முறையில் நடத்த வில்லை[88] [89] .

Remove ads

பர்பரோசா நடவடிக்கையின் தோல்வியின் காரணஙகள்

Thumb
சிறைபட்ட செஞ்சேனை கைதிகள் மின்ஸ்க் அருகே.

இது நெப்போலியனின் ரஷ்யாமீது படையெடுப்பிற்கு பல ஒப்புமைகளை கொடுக்கிரது.

சோவியத் வலுவை குறைத்து மதிப்பீடுதல்

ஜெர்மனியின் போர் திட்டமிடுபவர்கள் செஞ்சேனையின் ஆள் அதிகரிப்பு சக்தியை குறைவாக மதிப்பிட்டு விட்டர்கள்[90]. எவ்வளவு சோவியத் துருப்புகள் களத்தில் இறங்கினார்களோ, அதில் பதியைத் தான் ஜெர்மானியர் எதிர்பார்த்தனர். ஆகஸ்த் ஆரம்பத்தில், அழைக்கப் பட்ட ராணூவங்களின் இடத்தை புதிய ராணுவங்கள் கொண்டன.. சராசரி மாதத்திற்கு அரை மில்லியன் புது துருப்புகள் ஏற்றப் பட்டனர். சோவியத் யூனியனின் பரந்த பல இனங்களிலிருந்தும், தேசங்களிலிருந்தும் இந்த புது ராணுவம் ஆக்குதல்கள்தான் , சோவியத் முதல் ஆறு மதத்தில் குலையாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தது. ஜெர்மன் ராணுவம் முன்னேற, பல தொழிற்சாலைகளை முழுவதுமாக அக்கு அக்காக கழற்றி, ஜெர்மானியருக்கு கைக்கெட்டாத தொலை கிழக்குக்கு எடுத்துச் சென்று, அங்கு மறுபடியும் தொழிற்சாலைகள் போடப் பட்டன. சோவியத் ஆயுத உற்பத்தி, அதிகமாயிற்று. சோவியத் அரசு நிலை குலைந்து விழும்படியாக எந்த சந்தர்ப்பத்திலும் இல்லை, அது வலுவாக நின்று , நாட்டை தலைமை தாங்கி சென்றது. ஜெர்மானியரின் இன காழ்ப்பு கொள்கையினால், சோவியத் மக்கள் என்ன செய்தாலும், ஜெர்மனிக்கு சரணடைய மாட்டோம் என மன திடத்துடன் நின்று, சோவியத் அரசு கோரித்த எந்த தியாகத்தையும் செய்ய முன் வந்தனர். ஜெர்மானியர் சோவியத் மக்களை மட்டமாக கருதி, உடனே புறங்காட்டி ஓடுவர் என நினைத்தனர்; ஆனால் சோவியத் துருப்புகளில் வீரத்தையும், கட்டுபாடையும், சாகசத்தையும், தியாக மனப் பான்மையை கண்டு பயந்து விட்டனர். சோவியத் மக்கள் , அளவற்ற இன்னல்கள் இருந்தாலும், சோவியத் ராணுவத்திற்கு ஆதரவு தருவதில் திண்ணமாக இருந்தனர்.

தளவாடங்கள் வழங்கும் திட்டத்தில் பிழைகள்

பருவ நிலை மோசமாக மாறியதும், செஞ்சேனை சுதாரிக்க ஆரம்பித்தது, அப்போது ஜெர்மானிய முன்னேற்றம் தட்டுபட்டது. ஜெர்மனி நெடிய யுத்தத்திற்கு தயாராக இல்லை. டாங்கிகளுக்கும், வண்டிகளுக்கும் அதன் இலக்குகளை சேரும் அளவு கூட மண்ணெண்னை இல்லை. அது ஜெர்மன் ராணுவ தளவாட வழங்கும் அமைப்புகளால் புரிந்து கொள்ளப் பட்டது; ஆனால் அவர்கள் எச்ச்ரிக்கைகளை உயர் ராணுவ அதிகாரம் புறக்கணித்தது.. ஜெர்மானியர் கைப்பற்றிய சோவியத் நெடும்சாலைகளும், ரயில் போக்குவரத்தும் நல்ல நிலையில் இருக்கும், அதனால் சுலபமாக சரக்குகளை நகர்தி விடலாம் என நினைத்தனர். ஆனால் உண்மையில், சோவியத் நெடும்சாலைகளும் ரயில் போக்குவரத்தும் மோசமான நிலையில் இருந்ததால், அவற்றை பயன் படுத்த முடியவில்லை[91] .

வாநிலை

1981ல் நடத்தப் பட்ட ஒரு அமெரிக்க அரசாங்க ஆய்வு படி ஹிட்லரின் திட்டங்கள் கொடும்பனி காலம் வரும் முன்னரே, பிறழ்ந்து போயின. ஹிட்லர் விரைவான வெற்றியில் மிகுந்த நம்பிக்கை வைத்து, பனிக் கால போருக்க ஆயத்தம் செய்யவில்லை[92] . சோவியத் நாட்டு தரை, இளவேனிர்காலத்தில் சேறாகவும், பனிக்காலத்தில் கெட்டியான தரைப் பனியாகவும் மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட தரை நிலையில் ஜெர்மானிய டாங்குகள் அசைவதெ கடினமாக போயிற்று. மாறாக, புது சோவியத் டாங்கி ரகங்களான T-34, KV போன்றவை அகலமான சக்கரத்தை கொண்டு, சோவியத் தரையில் எளிதாக செயலாற்றின. ஜெர்மானியர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 600,000 குதிரைகளை போருக்காக இறக்குமதி செய்து, படையுடன் அனுப்பினர், ஆனால் சோவியத் கொடூர பனிகளில் அவை சரியாக வேலை செய்ய மறுத்தன.

ஜெர்மானியரின் உடைகள் கொடும் பனிக்கு ஏற்றதாக இல்லை, சரியான காலணிகளும் இல்லை, சில துருப்புகள் , செய்தி தாள்களை தங்கள் ஜேக்கடுகளுக்குள் சொருக வேண்டியிருந்தது. உஷ்ணம் -30 இறங்கும் போது, குளிர்காய ஆயுதங்களுக்கு வேண்டிய எண்ணெயை எரித்தனர், அது வாகனங்கள், டாங்கிகள் செலுத்துவதை பாதித்தது.

Remove ads

பின்விளைவுகள்

Thumb
இரண்டாம் உலகப் போரிற்கு பின் சோவியத்தில் வெளியிடப்பட்ட ஹிட்லரும், கோரிங்கும் உட்பட "ஜெர்மானியர்கள் விரட்டியடிக்கப்பட்டதை" காண்பிக்கும் சுவரொட்டி

ஸ்டாலின் ஜெர்மானிய போர் கைதிகளை பணி முகாம்களுக்கு அனுப்பினார். ஸ்டாலின் ஆணையில் பல இனங்கள் மொத்தமாக நாடு கடத்தப் பட்டர்கள். செப்டெம்பர் 1941ல், 439000 வோல்கா ஜெர்மானியர் கசக்ஸ்தானுக்கு கடத்தப்பட்டனர். பிறகு, கிரைமிய தார்தாரிகள் கிரைமியாவிலிருந்து உஸ்பெகிஸ்தானுக்கும், எல்லா செச்னியர்களும், இங்குஷ்களும் கசக்ஸ்தானுக்கும் அனுப்பப்பட்டனர்.

Remove ads

குறிப்புகள்

  1. Germany's allies, in total, provided a significant number of troops and material to the front. There were also numerous units under German command recruited in German-occupied Europe and sympathetic puppet or neutral states, including the Spanish Blue Division, the Legion of French Volunteers Against Bolshevism, the 369th Croatian Infantry Regiment, the Croatian Air Force Legion, and the Croatian Naval Legion.
  2. The Light Transport Brigade from Croatia was attached to the 3rd Cavalry Division "Principe Amedeo Duca d'Aosta"
  3. Of the AFVs, Askey reports there were 301 assault guns, 257 tank destroyers and self-propelled guns, 1,055 armoured half-tracks, 1,367 armoured cars, 92 combat engineer and ammunition transport vehicles. [5]
  4. 881,788 of which are German[16]
  5. Excludes an additional 395,799 who were deemed unfit for service due to non-combat causes, transported out of their Army Group sectors for treatment, and treated in divisional/local medical facilities. 98% of those 395,799 eventually returned to active duty service, usually after relatively short treatment, meaning about 8,000 became permanent losses. Askey 2014, p. 178.
  6. 855 killed, 2,288 wounded in action, 277 missing and captured, 1,000 sick and injured[23]
  7. German: Unternehmen Barbarossa; Russian: Операция Барбаросса, romanized: Operatsiya Barbarossa
  8. See for instance the involvement of Latvian and Ukrainian forces in killing Jews cited by historian Raul Hilberg.[33]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads