மந்திரமார்க்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மந்திரமார்க்கம் என்பது, சைவ சமயத்தின் இருபெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றையது ஆதிமார்க்கம் என்று அறியப்படுகின்றது.[1] இருபிரிவுகளிலும் ஆதிமார்க்கமே பழைமையானதாகக் கருதப்படுகின்றது எனினும், மந்திரமார்க்கம் அதற்குச் சமனான காலத்தில் நிலவி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதிமார்க்கம், தனிப்பட்ட ரீதியிலான ஆன்ம ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க, மந்திரமார்க்கம், குடும்பம், சமூகம் என்று முழு உலகும் ஈடேறுவதற்கான மெய்யியலை முதன்மைக்கொள்கையாகக் கொண்டிருந்தது.[2]
Remove ads
வரலாறு
பொ.பி நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மந்திரமார்க்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் காணப்படும்போதும், பொ.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அது முழு வளர்ச்சியடைந்த நெறியாக மாறியமைக்கான பல சான்றாதாரங்களைக் காணமுடிகின்றது.[3] தென்னகச் சிவாகமங்கள் பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குக் குறையாத பழைமை வாய்ந்தனவாக இனங்காணப்படுகின்றன.[4] உருத்திரபேத ஆகமங்களில் ஒன்றான நிஸ்வாச ஆகமம், பொ.பி 450 - 500 ஆண்டுகளுக்கிடையே தொகுக்கப்பட்டிருக்கிறது.[3] இன்னும் ஏனைய காஷ்மீர சைவத் தந்திரங்களையும், குலமார்க்க தந்திரங்களையும் ஆராயும் போது, பொ.பி 500 முதல் 1000 வரையான ஆண்டுகள் மந்திரமார்க்கம் பெருவளர்ச்சி பெற்றிருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.
Remove ads
ஆதிமார்க்கம்

ஆதிமார்க்கமானது, சிவகதி அடைதலொன்றையே நோக்கமாகக் கொண்டிருந்தது. அதற்கென்று பிரத்தியேகமான அடைமுறைகளும், இரகசியச் சடங்கு முறைகளும், சமூகத்துக்கொவ்வாத மீமாந்த வழிபாடுகளும் அதன் சாதனங்களாக அமைந்திருந்தன. ஆனால், மந்திரமார்க்கமானது முழுச் சமூகத்தின் கதிபேறடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆலயங்கள் அமைத்தல், சிவனை வழிபடல், சிவநூல்களைப் படித்தல், சிவநூல்கள் சொல்லும் நடைமுறைப்படி அரசாளுதல், சமூக வகிபாகத்தை மேற்கொள்ளல் போன்ற கடமைகளை மந்திரமார்க்கம் வலியுறுத்தியது. மந்திரமார்க்கத்தின் அவசியத்தை அறிந்திருந்ததால், பெரும்பாலும் ஆதிமார்க்கம் அதை நிராகரிக்கவில்லை. எனினும், ஆதிமார்க்கிகள் நேரடியாகவே சிவகதி அடையமுடியுமென்றும்(சத்யோமுக்தி) , மந்திரமார்க்கிகள் நேரடியாக அல்லாமல், தேவலோகத்தில் இன்பம் நுகர்ந்தபின்பே சிவகதி அடைவர் (கிரமமுக்தி) என்றும் அவர்கள் கூறினர்.[5]
Remove ads
மந்திரமார்க்கம்
மந்திரங்கள் மூலம் இறைவழிபாடு செய்து, இயற்கையையும், அனர்த்தங்கள், நோய்கள், தீங்குகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மந்திரமார்க்கத்தின் கொள்கை. இவ்வாறு உலகியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ஆதிமார்க்கம் துறவறத்தை வலியுறுத்த, மந்திரமார்க்கமானது, இல்லறத்தை முதன்மையாகக் கவனித்தது. எனவே ஆரம்பத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த சைவம், பொ.பி ஐந்தாம் நூற்றாண்டுகளின் பின், மந்திரமார்க்கம் மூலம் வேகமாக முன்னிலையடைந்தது. தமிழகத்தில் உருவான பக்தி இயக்கம், மந்திரமார்க்கத்தின் வழியே சைவம் முன்னிலை பெற்று வந்ததற்கான மிகச்சிறந்த சான்றாகும். சைவ ஆச்சாரியர் தொடர்ச்சியான முன்னிலையைப் பெறப்பெற, நாடு கடந்து, தென்கிழக்கு ஆசியாவிலும் சைவம் புகழ்பெற்றது. அங்கோர், சாவகம், இந்தோனேசியா என்று பல பிராந்தியங்களிலும் சைவப்பேரரசுகள் எழுச்சியடைந்தது மந்திரமார்க்கத்தின் விருத்தியுடன் தான்.[6]
பிரிவுகள்
மந்திரமார்க்கமானது, இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. சதாசிவனுக்கு அல்லது உருத்திரனுக்கு முதன்மையளிக்கும் "சித்தாந்தம்", தனியே வைரவனுக்கு , (சில சந்தர்ப்பங்களில்) சக்திக்கும் முதன்மை அளிக்கும் "புறச்சித்தாந்தம்" என்பன அவை.
சித்தாந்தம்
சித்தாந்தம் காஷ்மீரில் வளர்ச்சியடைந்த போதும், தென்னகத்தில் இன்று பெரும்புகழோடு நிலவும் மந்திர மார்க்கச் சைவம் ஆகும். மிருகேந்திர ஆகமம், கிரணாகமம், காலோத்தர தந்திரங்கள் என்பன வடநாட்டில் தோன்றிய முக்கியமான சித்தாந்த நூல்களாகக் கருதப்படுகின்றன.[7] இவற்றுக்குச் சமனான காலத்தில், காரணம், காமிகம் முதலான தென்னகச் சிவாகமங்கள் தோன்றி வளர்ச்சி பெற்று முக்கியமான சித்தாந்த நூல்களாக இனங்காணப்பட்டிருக்கின்றன. இவற்றில், சிவவழிபாடு மாத்திரமன்றி, ஆலயங்களை அமைத்தல், அவற்றைப் பேணல், அங்கு செய்யவேண்டிய கிரியைகள், யோகப் பயிற்சிகள் முதலானவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நிஸ்வாசமூலம் முதலான ஆகமங்களில், அரசனுக்கு மகுடாபிஷேகம் செய்வதற்கான கிரியைகளும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை, சைவம் எத்தகைய அரச ஆதரவு பெற்றிருந்த மதம் என்பதற்கான மிகச்சிறந்த சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.[3]
வடநாட்டில் சித்தாந்தம் இன்று பெருமளவு வழக்கிழந்து விட்டது. பரசிவத்தை, ஐந்து முகங்களும் பதின்கரங்களும் கொண்ட பதினாறு வயது இளைஞன் உருவிலுள்ள சதாசிவனாக, தென்னகச் சிவாகமங்கள் வழிபடும்.
புறச்சித்தாந்தம்
மூன்றாம் ஆதிமார்க்கமான காபாலிகம், மந்திரமார்க்கத்துடன் இணைந்ததன் பயனே இந்தப் புறச்சித்தாந்தப் பிரிவுகள் என்பது பொதுவான கருதுகோள்.[8] சித்தாந்தம் போலன்றி, தனியே சிவனை வழிபடாமல், சக்தியையும் போற்றிய - அல்லது சக்திக்கு ஒருபடி அதிக முன்னுரிமை அளித்த மந்திர மார்க்க சைவப்பிரிவுகள் "புறச்சித்தாந்தம்" என்று வகைபிரிக்கப்பட்டுள்ளன.இவற்றின் பெருக்கமே "சாக்தம்" எனும் தனிப்பிரிவை உருவாக்கியதா, அல்லது சாக்தமும் சைவமும் ஒன்றாகவே பண்டுதொட்டு இணைந்து வளர்ந்துவந்தனவா என்பது இன்றும் ஆய்வாளர் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்துவருகின்றது.[5] எனினும், குலமார்க்கம் அல்லது கௌலம் எனும் சைவ - சாக்தப் பிரிவு, தனிச்சாக்தப்பிரிவாக பின்னாளில் வளர்ந்தது என்பதை பல ஆதாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.[9]
புறச்சித்தாந்தப் பிரிவுகள், பைரவனுக்கே அதிக முன்னுரிமை அளிப்பன. அதன் வழிபாட்டில் பயன்படும் அனைத்துத் தேவதைகளும் பெரும்பாலும் உக்கிரதேவதைகளே. புறச்சித்தாந்த சைவத்தின் நூல்கள் பொதுவாக "பைரவ தந்திரங்கள்" என்று அறியப்படினும் அவை தாம் உருவாக்கிய கிளைநெறிகளுக்கேற்ப பலவகைப்படுகின்றன. இன்று "காஷ்மீர சைவம்" என்று அறியப்படுவது, பல புறச்சித்தாந்தப் பிரிவுகளின் தொகுதி ஆகும். முக்கியமான புறச்சித்தாந்தப் பிரிவுகளைக் கீழே காணலாம்:
- வாமம் = ஜயை, விஜயை, அஜிதை, அபராஜிதை ஆகிய நான்கு தேவியரையும் அவர்களின் தமையன் தும்புருவையும் வழிபடும் பிரிவு.
- தட்சிணம் = சுவச்சண்ட பைரவரை வழிபடுவது. அவர் தேவியான அகோரேசுவரியும் முன்னிலைப்படுத்தப்படுவதுண்டு.
- யாமளம் = கபாலீச வைரவரும் சண்டகபாலினியும்.
- நேத்திரம் = அமிர்தேசுவரரும் அமிர்தலட்சுமியும்.
- திரிகம் = பரை, அபரை, பராபரை எனும் மூன்று தேவியரும் மாத்ருஸத்பவரும்.
- குப்ஜிகம் = குப்ஜிகையும் நவாத்ம பைரவரும்.
- காளிகுலம் = காளி வழிபாட்டினர்
- ஸ்ரீகுலம் = இலலிதை வழிபாட்டினர்.
இவற்றில் இறுதி நான்கும், "சிஞ்சினிதந்திரம்" எனும் நூலில் சாக்தக் கிளைநெறிகளாகச் சொல்லப்படுபவை. எனினும், குப்ஜிகநெறியும் திரிகமும் சமகாலத்தில் சைவக்கிளைநெறிகளாகவே கருத்திற்கொள்ளப்படுகின்றன.[4]
Remove ads
உசாத்துணைகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads