அன்புமணி ராமதாஸ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அன்புமணி ராமதாஸ்
Remove ads

அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவரும் ஆவார்.[2] இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார்.[3] 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.[4] 2009-இல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014-இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] பின்னர் 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

விரைவான உண்மைகள் அன்புமணி இராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

இளமைக்காலமும் கல்வியும்

அன்புமணி 1968 அக்டோபர் 9 ஆம் நாளில் மருத்துவர் ராமதாஸ், சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு புதுச்சேரியில் பிறந்தார். பத்தாம் வகுப்பை ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபர்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முடித்தார். பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பை தன் சொந்த ஊரான திண்டிவனத்தில் புனித அண்ணாள் மேல்நிலைப் பள்ளியில் 1986 ஆம் ஆண்டு படித்து முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.[7][8] பின்னர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.[3] படிப்பை முடித்தவுடன் திண்டிவனத்திலுள்ள டி. நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தார். இவர் 2003 ஆம் ஆண்டு இலண்டன் பொருளியல் பள்ளியில், பெருநிலைப் பொருளியல் என்னும் படிப்பை படித்துள்ளார்.[9]

அன்புமணி படிக்கும் காலத்தில் இறகுப்பந்தாட்டம், கூடைப்பந்து, கால்பந்து, விரைவோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் முதல் மாணவனாக இருந்தார். கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்றார்.[10]

அன்புமணி தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தார்.[11]

Remove ads

திருமண வாழ்க்கை

இவர் சௌமியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.[12] இவர்களில் சம்யுக்தாவிற்கும், அன்புமணியின் அக்கா மகனான பிரித்தீவன் என்பவருக்கும் அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.[13]

அரசியல் வாழ்க்கை

Thumb
மே 25, 2004 அன்று அன்புமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தில்லியில் பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்பு கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.[14][15] 2004-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]

போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொகுதியின் பெயர் ...
வெற்றி தோல்வி

வகித்த பதவிகள்

2016 சட்டமன்றத் தேர்தல்

சேலத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[17] மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இவரும், இவருடைய கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற பென்னாகரம் தொகுதியில் 58,402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.[18] 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி (23,00,775 வாக்குகள், 5.3 %) மூன்றாவது இடம் வந்தது.[19]

பசுமைத்தாயகம்

இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[20]

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு

Thumb

இவர் அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை கீழ் தடை செய்யப்பட்டன.[21]

புகைப் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.[22] அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது.[23]

Remove ads

108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி

Thumb
108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி

இவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.[24][25] 108 (நூற்று எட்டு; நூற்றெட்டு) என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.

போலியோ ஒழிப்பு

இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, இவருடைய முயற்சியால் போலியோவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழித்ததாக, உலக சுகாதாரத் நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இச்செயலைப் பாராட்டி உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது பெற்றார். இவ்விருதினை இதுவரை உலக அளவில் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், மற்றும் கோபி அன்னான் போன்ற தலைவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.[26] பின்னர் 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.

Remove ads

பன்னாட்டு நிகழ்ச்சிகள்

  • 2000-ஆவது ஆண்டில் செருமனி அனோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.[27]
  • 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.[28]

வென்ற விருதுகள்

Thumb
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின், லூதர் எல். டெர்ரி விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அன்புமணி உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).[29]
  • உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control).[30]
  • உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership).[31]
  • உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award).[32]

தேசிய விருதுகள்

  • சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.[33]
  • இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.[34]

வழக்கு

2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த காங்கிரசுக் கட்சி ஆட்சியின்போது இவரின் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அமைந்துள்ள ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.[35]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads