ஈலாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈலாம் (Elam) இன்றைய தென் மேற்கு ஈரானில் செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, குசெசுத்தான், ஈலம் மாகாணம் ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான சபோல் (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் ஈராக்கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மை கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.[1]

பண்டைய மெசொப்பொத்தேமியாவுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. நடு வெண்கலக் கால ஈலம் அன்சானை (Anshan) மையமாகக் கொண்டு ஈரானியச் சமவெளியிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த சூசாவை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது.[2] இதன் பண்பாடு, குட்டியப் பேரரசில், சிறப்பாக ஆக்கிமெனிட் வம்சக் காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் ஈல மொழி பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
ஈல மொழிக்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. சுமேரிய மொழியைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், ஈல-திராவிடம் என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
Remove ads
சொற்பிறப்பு
ஈல மக்கள் தமது நாட்டை ஹல்தம்தி (Haltamti) என அழைத்தனர்.[3] சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே ஈலம், ஈலமு ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர்.[4] ஈப்ரூக்களின் விவிலியத்திலும் இது ஈலம் என்றே குறிப்பிடப்படுகிறது.
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான சூசாவின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. தொலமிக்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை சூசியானா என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று குசெசுத்தான் என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ஃபார்சு என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய பாரசீக மொழியில், ஹூஜியா எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் ஹூஸ் எனப்பட்டது. இது சுசியானா என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் க்சுஸ் (Xuz) ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் ஸ்தான் என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து குசெசுத்தான் என்ற பெயரைப் பெற்றது.
Remove ads
வரலாறு
ஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரியா, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது.
- முதனிலை ஈலக் காலம்: கிமு 3200 - கிமு 2700
- பழைய ஈலக் காலம்: கிமு 2700 - கிமு 1600
- நடு ஈலக் காலம்: கிமு 1500 - கிமு 1100
- புதிய ஈலக் காலம்: கிமு 1100 - கிமு 539
முதனிலை ஈல நாகரிகம்

முதனிலை ஈல நாகரிகம் டைகிரிசு, இயூபிரட்டீசு ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை அன்சான், அவான், சிமாசுக்கி என்பன. இவற்றுள் "அன்சான்", தற்கால "ஃபார்சு" பகுதியிலும், "சிமாசுக்கி" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. "அவான்" தற்கால லுரிசுத்தான் ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புகள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய "குசெசுத்தான்" ஆன "சுசியானா" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் வாராக்சே, இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான சியால்க், கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது.
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads