உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் நிக்கலாசு (Nicholas II அல்லது நிக்கொலாய் II அலெக்சாந்திரொவிச் ரொமானொவ் (Nikolai II Alexandrovich Romanov, உருசியம்: Никола́й II Алекса́ндрович Рома́нов; (18 மே [பழைய நாட்காட்டி 6 மே] 1868 – 17 சூலை 1918), உருசிய மரபுவழித் திருச்சபையில் புனிதர் நிக்கலாசு உருசியம்: Свято́й страстоте́рпец Никола́й) என அறியப்பட்டவர் உருசியப் பேரரசின் கடைசிப் பேரரசராக 1894 நவம்பர் 1 முதல் 1917 மார்ச் 15 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை பதவியில் இருந்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மிகப் பெரும் வல்லரசாக இருந்த உருசியப் பேரரசு பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக பெரும் வீழ்ச்சியைக் கண்டது. சோவியத் வரலாற்றாசிரியர்களால் அவர் ஒரு பலவீனமான, திறமையற்ற தலைவராக அறியப்பட்டார். அவரது செயல்கள் இராணுவத் தோல்விகளுக்கும் மில்லியன் கணக்கான குடிமக்களின் இறப்புகளுக்கும் வழிவகுத்தன. இதற்கு மாறாக, ஆங்கிலோ-உருசிய வரலாற்றாளர் நிக்கோலாய் தால்சுதாய் "நிக்கலாசின் ஆட்சியில் பல மோசமான நிகழ்வுகள் இடம்பெற்றன ஆயினும், அவர் ஒரு எதேச்சதிகாரத்தை மரபுரிமையாகப் பெற்றார், அவருடைய செயல்களுடன் ஒப்பிடுகையில், அவரை விடப் பயங்கரமான குற்றங்கள் சோவியத்துகளால் செய்யப்பட்டன" என்கிறார்.[1]
பேரரசராக, நிக்கலாசு அவரது உயர்மட்ட உதவியாளர்களான செர்கே விட்டே, பியோத்தர் இசுத்தாலிப்பின் ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை வழங்கினார், ஆனால் அவர்கள் முழுமையாக பிரபுத்துவ எதிர்ப்பை எதிர்கொண்டனர். வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பிரான்சுடனான நெருங்கிய உறவுகளின் அடிப்படையில் நவீனமயமாக்கலை அவர் ஆதரித்தார், ஆனால் புதிய நாடாளுமன்றத்திற்கு (தூமா) முக்கிய அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்தார். கோதின்கா அவலம், யூதர்களுக்கு எதிரான படுகொலைகள், 1905 இரத்த ஞாயிறு, 1905 உருசியப் புரட்சி வன்முறை அடக்குமுறை, அரசியல் எதிரிகளை அடக்குதல் மற்றும் உருசிய-சப்பானியப் போர் (1904-1905) தோல்விக்கு அவரது பொறுப்பு ஆகியவற்றால் அவர் விமர்சிக்கப்பட்டார். இதன் மூலம் சுசீமா போரில் உருசிய பால்ட்டிக் கடற்படையை நிர்மூலமாக்கியமை, மஞ்சூரியா மற்றும் கொரியா மீது உருசியா செல்வாக்கை இழந்தமை, சக்காலின் தீவின் தெற்குப் பகுதி சப்பானுடன் இணைத்தமை ஆகியன இவருக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது.

நிக்கலாசு 1907 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-உருசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இது செருமனி மத்திய கிழக்கில் செல்வாக்கைப் பெறுவதற்கான முயற்சிகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் உருசியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான மோதலின் பெரும் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர் செர்பியாவை ஆதரித்தார், 1914 சூலை 30 இல் உருசிய இராணுவத்தை நவீனமயப்படுத்த ஒப்புதல் அளித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, செருமனி 1914 ஆகத்து 1 இல் உருசியா மீதும், ஆகத்து 3 இல் உருசியாவின் நட்பு நாடான பிரான்சு மீதும் போரை அறிவித்து,[2] முதலாம் உலகப் போர் தொடங்க வழிவகுத்தது. மக்களால் வெறுக்கப்பட்ட வேளாண்மைப் பாதிரியார் கிரிகோரி ரஸ்புடினின் நிக்கலாசு மீதான சக்திவாய்ந்த செல்வாக்கைக் கண்டு பிரபுக்கள் அவரை எச்சரித்தனர். கடுமையான இராணுவ இழப்புகள் 1917 பெப்ரவரிப் புரட்சியில் ரொமானோவ் அரண்மனையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவரது மாளிகையிலும் வெளியேயும் நிக்கலாசின் மன உறுதி சரிந்தது. நிக்கலாசு பதவி விலகினார். போல்செவிக்குகள் அவரை சிறையில் அடைத்து 1918 சூலை 17 இல் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் சேர்த்து நிக்கலாசை சுட்டுக் கொன்றனர்.[3]
Remove ads
புனிதர்களாக அறிவிப்பு
1981 ஆம் ஆண்டில், நிக்கலாசு, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் உருசியாவிற்கு வெளியே நியூயார்க் நகரத்தில் உருசிய மரபுவழித் திருச்சபையினால் தியாகிகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.[4] 1991 இல் சோவியத் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், நிக்கலாசு குடும்பத்தின் எச்சங்கள் வெளியெடுக்கப்பட்டு 1998 சூலை 17 அன்று சென் பீட்டர்ஸ்பேர்க்கில் ஒரு விரிவான அரசு மற்றும் தேவாலய விழாவுடன் மீண்டும் புதைக்கப்பட்டன.[5] 2000 ஆம் ஆன்டு ஆகத்து 15 இல் உருசிய மரபுவழித் திருச்சபை அவர்களைப் புனிதர்களாக அறிவித்தது.[6][7]
நிக்கலாசின் குடும்பம்
- அலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (1872-1918, அகவை 46)
- ஒல்கா நிக்கலாயெவ்னா, இளவரசி (1895-1918, அகவை 23)
- தத்தியானா நிக்கலாயெவ்னா, இளவரசி (1897-1918, அகவை 21)
- மரீயா நிக்கலாயெவ்னா, இளவரசி (1899-1918, அகவை 19)
- அனஸ்தாசியா நிக்கலாயெவ்னா, இளவரசி (1901-1918, அகவை 17)
- அலெக்சி நிக்கலாயெவ், இளவரசன் (1904-1918, அகவை 14)
Remove ads
வம்சம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads