சோவியத் ஒன்றியம்
1922 முதல் 1991 வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த சோசலிச நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோவியத் சமதர்மக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics[a]/USSR[b]; Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது பெரும்பாலான ஐரோவாசியாவுக்கு விரிவடைந்து இருந்த, கண்டங்களில் பரவியிருந்த ஒரு நாடு ஆகும். இது பொதுவாக சோவியத் ஒன்றியம்[c] (Soviet Union, இரசியம்: Сове́тский Сою́з - சவியெத்ஸ்கி சயூஸ்)அல்லது அலுவல் சாராத முறையில் பொதுவுடைமைவாத உருசியா என்று அறியப்பட்டது. இந்நாடு 1922 முதல் 1991 வரை நீடித்திருந்தது. இது அமைந்திருந்த நேரத்தில் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய நாடாக இருந்தது. இது 11 நேர வலையங்களில் அமைந்திருந்தது. 12 நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது. உலகின் மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாக இருந்தது.[d] ஒட்டு மொத்தமாக உருசியப் பேரரசில் இருந்து உருவான இந்நாடு தேசியக் குடியரசுகளின் ஒரு கூட்டாட்சியாக பெயரளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் மிகப் பெரியதும், மிக அதிக மக்கள் தொகையை உடையதுமாக உருசிய சோவியத் கூட்டாட்சி சமதர்மக் குடியரசானது இருந்தது.[e] நடைமுறையில் இதன் அரசாங்கம் மற்றும் பொருளாதாரம் அதிக அளவுக்கு மையப்படுத்தப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியால் ஆளப்பட்ட ஒரு கட்சி அரசு இதுவாகும். உலகெங்கும் இருந்த பொதுவுடைமைவாத அரசுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமுமாக மாஸ்கோ திகழ்ந்தது.
சோவியத் ஒன்றியத்தின் தொடக்கமானது 1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியில் இருந்து தொடங்கியதாகும். விளாதிமிர் லெனினால் தலைமை தாங்கப்பட்ட புதிய அரசாங்கமானது உருசிய சோவியத் கூட்டாட்சி சமதர்மக் குடியரசை நிறுவியது. உலகின் முதல் அரசியலமைப்பு ரீதியிலான சமதர்மக் குடியரசு இதுவாகும். உருசியக் குடியரசுக்குள் இருந்த அனைவராலும் இப்புரட்சியானது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது உருசிய உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்தது. உருசிய சோவியத் கூட்டாட்சி சமதர்மக் குடியரசு (சோ. கூ. ச. கு.) மற்றும் அதன் துணைக் குடியரசுகளானவை 1922இல் சோவியத் ஒன்றியமாக இணைக்கப்பட்டன. 1924இல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து ஜோசப் ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்தார். துரிதமான தொழில்மயமாக்கம் மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட கூட்டுப் பண்ணைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது குறிப்பிடத்தக்க அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தது. ஆனால், 1930 மற்றும் 1933க்கு இடையில் தசம இலட்சக்கணக்கானவர்களைக் கொன்ற ஒரு பஞ்சத்திற்கும் பங்களித்தது. குலாக் எனப்படும் சோவியத் கட்டாய வேலை முகாம் அமைப்பானது விரிவாக்கப்பட்டது. 1930களின் பிற்பகுதியின் போது எதிரிகளை நீக்குவதற்காகப் பெரும் துப்புரவாக்கம் எனும் நடவடிக்கையை ஸ்டாலின் அரசாங்கம் நடத்தியது. பெருமளவிலான இறப்பு, சிறையில் அடைக்கப்படுதல் மற்றும் நாடு கடத்தப்படுதலில் இது முடிவடைந்தது. 1939இல் சோவியத் ஒன்றியம் மற்றும் நாசி செருமனி ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. ஆனால், 1941இல் வரலாற்றின் மிகப் பெரிய நிலப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் மூலம் செருமனியானது கிழக்குப் போர் முனையைத் திறந்தது. அச்சு நாடுகளைத் தோற்கடிப்பதில் சோவியத்துக்கள் ஒரு தீர்க்கமான பணியை ஆற்றினர். ஒரு மதிப்பீட்டின்படி 2.70 கோடி மக்களை இழந்தனர். நேச நாடுகள் பக்கம் நிகழ்ந்த பெரும்பாலான இழப்புகளாக இது திகழ்ந்தது. போருக்குப் பிறகு செஞ்சேனையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலப்பரப்பை சோவியத் ஒன்றியமானது நிலைப்படுத்தியது. தொலைதூர ஆதரவு நாடுகளை உருவாக்கியது. துரித பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஒரு வல்லரசாக இதன் நிலையை இந்நடவடிக்கைகள் உறுதிப்படுத்தின.
இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை.
சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.
முதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: அர்மீனிய சோ.சோ.கு, அசர்பைஜான் சோசோகு, பியாலோரசியன் சோசோகு, எஸ்டோனியன் சோசோகு, ஜார்ஜிய சோசோகு, கசாக் சோசோகு, கிர்கிசிய சோசோகு,லாட்விய சோசோகு, லிதுவேனிய சோசோகு, மோல்டாவிய சோசோகு, ரஷ்ய சோசோகு, டாஜிக் சோசோகு, துருக்மான் சோசோகு, உக்ரெயின் சோசோகு, மற்றும் உஸ்பெக் சோசோகு.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads