காளிதாசன்

இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். (சமஸ்கிருதம்) From Wikipedia, the free encyclopedia

காளிதாசன்
Remove ads

காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் காளிதாசர், பிறப்பு ...
Thumb
ரவி வர்மர் வரைந்த சகுந்தலை ஓவியம்
Remove ads

காலம்

காளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன.

  • விக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், பொ.ஊ.மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர்.
  • உஜ்ஜைய்னியை விக்ரமாதித்தியன், இரண்டாம் சந்திரகுப்தர் (பொ.ஊ.மு. 380–415) மற்றும் யசோதர்மன் (பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.[4]
  • குப்த பேரரசின் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் (அ) மூன்று அரச தலைமுறைகளான சந்திர குப்தர் II [விக்கிரமாதித்யா] (பொ.ஊ. 375-413 ஆம் ஆண்டு), குமார குப்தா [மகேந்திராதித்யா] (பொ.ஊ. 413-455 ஆம் ஆண்டு), ஸ்கந்த குப்தா [விக்கிரமாதித்யா] (பொ.ஊ. 455-467 ஆம் ஆண்டு) வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

காளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6]

மேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[7]

காசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான "லட்சுமி தார் கல்லா" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துகளில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[8][9][10]

  • உஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை.
  • காசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன.
  • கல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது.
  • காசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ஒரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா எனும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) "காசுமீர்" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
  • கல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் வாதிடுகிறார்.[11]

நாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[12] அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[13]

Remove ads

படைப்புகள்

அபிஞான சாகுந்தலம்

மகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார்.

கானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான்.

காலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோபங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க சபிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும்.

அபிஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது.

இரகுவம்சம்

இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அஜன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.[14]

மேகதூதம்

குபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள தூது வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.[15]

குமாரசம்பவம்

சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம்.

விக்கிரமோவர்சியம்

Thumb
புரூரவனை விட்டுச் செல்லும் ஊர்வசி, ரவி வர்மாவின் ஓவியம்

புரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான்.

மாளவிகாக்கினிமித்திரம்

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகாக்கினிமித்திரம் ஆகும்.

இதர படைப்புகள்

  • ருது சம்ஹாரம் - இருது சங்கார காவியம் என தமிழில் தி. சதாசிவ ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.[16] இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர்.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads