நிக்கோபார் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிக்கோபார் தீவுகள் (Nicobar Islands) என்பது இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1,300 கி.மீ. தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

பொதுவான தரவுகள்
நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கி.மீ.². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர்.
Remove ads
மக்கள் தொகை
2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள்.
வரலாறு
நிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்[1].
"நிக்கோபார்" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த "நக்கவரம்" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது[2][3].
இத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் "பிரெடெரிக்சோர்ன்" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது.
கடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது[4].
இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது.
2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது.
2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.
நிருவாகம்
நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (Tribal Pass) பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads