மலேசிய மக்களவை
மலேசிய பாராளுமன்றத்தின் கீழவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மக்களவை அல்லது டேவான் ராக்யாட் (மலாய்:Dewan Rakyat, ஆங்கிலம்: House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் (Dewan) என்றால் அவை; ராக்யாட் (Rakyat) என்றால் மக்கள் என பொருள்படும். மலேசியாவின் அனைத்துச் சட்ட முன்வரைவுகளும் இங்கு விவாதிக்கப்பட்டு, பின்னர் சட்டங்களாக இயற்றப்படுகின்றன.
அவ்வாறு இயற்றப்படும் சட்ட முன்வரைவுகள், மக்களவையில் இருந்து மலேசிய மேலவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர், அந்த சட்ட முன்வரைவுகள் சட்டங்களாகின்றன. மலேசிய மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.
டேவான் ராக்யாட் எனும் மக்களவை உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
Remove ads
அமைப்பு
மலேசிய நாடாளுமன்றம் என்பது மலேசியாவின் ஆக உயர்ந்த சட்டப் பேரவையாகும். சட்டங்களை இயற்றுவதும், சட்டங்களை மாற்றித் திருத்தி அமைப்பதும் அதன் தலையாய பண்பு நலன்களாகும். மலேசிய அரசர் நாட்டுத் தலைவராக இருந்தாலும், அவருக்குச் சார் நிலையான ஒரு தகுதியில், மலேசிய அரசியலமைப்பின் 39-ஆவது விதிகளின்படி மலேசிய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.[1]
மக்களவை உறுப்பினர் ஒருவர் சத்திய வாக்கு எடுத்துக் கொண்டதும், அவருக்கு நாடாளுமன்ற சட்ட விலக்களிப்பு (ஆங்கிலம்: Parliamentary immunity) அதாவது நாடாளுமன்ற தடைக்காப்பு வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தன் கருத்துகளைச் சொல்வதற்கு முழு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இனத் துவேச சொற்களைப் பயன்படுத்துவது; மற்றும் அரசுப் பகையை மூட்டிவிடும் விசயங்களைப் பற்றி பேசுவதில் அல்லது எழுதுவதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மேலவை கீழவை உறுப்பினர்கள்) தடை செய்யப்படுகின்றனர்.
13 மே இனக்கலவரம், பூமிபுத்ராகளின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மலேசியப் பேரரசரையும், நீதிபதிகளையும் குறை சொல்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.[2]
ஒரு சட்டம் எப்படி இயற்றப்படுகிறது
மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா எப்படி சட்டம் ஆக்கப்படுகிறது. அதன் பின்னணி:
- ஓர் அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர் ஒரு மசோதாவிற்கான வரைவோலையைத் (ஆங்கிலம்: Draft) தயார் செய்கிறார். வரைவோலை தயார் செய்வதில் மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் உதவி செய்கிறார்.
- அந்த வரைவோலையைப் பற்றி மலேசிய அமைச்சரவை முதலில் விவாதிக்கிறது.
- அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததும், வரைவோலை எனப்படுவது ஒரு மசோதா எனும் தகுதியைப் பெறுகிறது.
- அந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நகல் மசோதா விநியோகிக்கப்படுகிறது.
- டேவான் ராக்யாட்டில் மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெறுகிறது. முதல் கட்டமாக அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது.
- இரண்டாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
- மூன்றாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவதற்காக, அவர்களின் வாக்களிப்பிற்குச் செல்கின்றது. மசோதா நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை தேவை. சில சமயங்களில் ஓர் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் போதும்.
- அந்த மசோதாவிற்கு பெரும்பான்மை கிடைத்ததும், டேவான் நெகாரா (மலாய்: Dewan Negara) எனும் மேலவைக்கு அனுப்பப்படுகிறது. டேவான் ராக்யாட்டில் எப்படி மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெற்றதோ, அதே போல இங்கேயும் மூன்று கட்டங்களில் வாசிப்பு நடைபெறும்.
- அந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் இருந்து டேவான் நெகாரா தடைவிதிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிக்காமல் போகலாம். ஆனால், அது காலதாமதத்தை தான் ஏற்படுத்தும். ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு காலதாமதம் செய்யலாம். அதற்குப் பின்னர், டேவான் நெகாராவின் சம்மதம் இல்லாமலேயே, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
- அந்த மசோதா மலேசிய பேரரசரின் பார்வைக்கும், சம்மதத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 30 நாள்கள் கால அனுமதி வழங்கப்படுகிறது.
- பேரரசர் சம்மதிக்கவில்லை என்றால் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர் அந்த மசோதாவை மறுபடியும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி விடுவார்.
- அடுத்து வரும் 30 நாள்களுக்குள், நாடாளுமன்றம் அந்த மசோதாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து, மறுபடியும் பேரரசரின் சம்மதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- இதன் பின்னர் 30 நாள்களுக்குள் பேரரசர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் சம்மதிக்கிறாரோ இல்லையோ அதன் பிறகு அந்த மசோதாவை ஒரு சட்டமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
- அரசாணையில் (ஆங்கிலம்: Government Gazette) இடம்பெறும் வரையில் அந்த மசோதா ஒரு சட்டமாகக் கருதப்பட மாட்டாது. அல்லது ஒரு சட்டமாகச் செயல்படவும் முடியாது.
நாடாளுமன்றச் சபாநாயகர்
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்த வயது 21. நாடாளுமன்றத்தின் தலைவரை சபாநாயகர் என்று அழைக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அவரைத் தவிர இரு துணைச் சபாநாயகர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
டேவான் ராக்யாட்டின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அலுவலகம் இருக்கிறது. இதன் தலைவரை பேரரசர் நியமனம் செய்கிறார். அவரைப் பதவியில் இருந்து பேரரசர் அல்லது நீதிபதிகள் மட்டுமே நீக்க முடியும்.
Remove ads
மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்
Remove ads
தேர்தல் முடிவுகள் 2013
- 2008 தேர்தலின் பின்னர் சபா முற்போக்கு கட்சி தேசிய முன்னனியில் இருந்து விலகியதனால், 2 மேலதிக இடங்கள் இழப்பு ஏற்பட்டது.
சான்றுகள்
- Means, Gordon P. (1991). Malaysian Politics: The Second Generation, pp. 14, 15. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588988-6.
- HOUSES OF PARLIAMENT (PRIVILEGES AND POWERS) ACT 1952 – Incorporating all amendments up to 1 January 2006
- Shuid, Mahdi & Yunus, Mohd. Fauzi (2001). Malaysian Studies, pp. 33, 34. Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-74-2024-3.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads