புல்வாமா தாக்குதல் 2019
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும்.[1] இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.[2] இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
Remove ads
பின்னணி
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது.[3] 2016 பிப்ரவரி மற்றும் ஜூன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்சி நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்.[1]
Remove ads
தாக்குதல்
2019 பிப்ரவரி 14 ஆம் நாள் 78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய சேமக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகரிலிருந்து ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலைவழியாக ஜம்மு காஷ்மீர் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவிலிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் இந்திய நேரப்படி 15:15 மணியளவில் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே மகேந்திரா ஸ்கார்பியோ வகை சிற்றுந்தொன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்தது. இந்தச் சிற்றுந்தில் சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாகவும், அதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தன. இந்தத் தாக்குதலில் 76 ஆவது பட்டலியனைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட காவல்படையினர் இறந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.[1] இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இத்தாக்குதலுக்குப் பாக்கிஸ்தானிய ஆயுதக்குழுவான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்று, அதில் அகமத்தின் காணொளியையும் வெளியிட்டது.[1][4] அந்தக் காணொளியில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.[5] 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.[6]
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பன்னிரண்டு வீரர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும், தமிழ் நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும், அஸ்ஸாம், கேரளா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு வீரர்களும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் க. சுப்பிரமணியன்(28) மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரது மகன் சி. சிவசந்திரன் என்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களாவார்கள்.[7][8]
Remove ads
விசாரணை
தேசிய புலனாய்வு முகமை ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து விசாரணை செய்து வருகின்றது.[1]
எதிர்வினைகள்
இந்தியா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கடுமையான கண்டனைத்தைப் பதிந்து, வீரர்களின் உயிரிழப்பு வீண்போகாது என இரங்கல் தெரிவித்தார். மேலும் இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.[9][10] காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனைக்குப் பின்னர் பாக்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை நாடு திரும்ப உத்தரவு வழங்கப்பட்டது. பாக்கிஸ்தானின் வர்த்தக அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது, மேலும் பாக்கிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தப் போவதாகவும் கூறியது.[11] ஜம்மு காஷ்மீரில் முழுக்கடை அடைப்பு நடந்து, பல இடங்களில் வன்முறை வெடித்தது.[12] தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கும் தலா 20 லட்சம் இழப்பீட்டைத் தமிழக அரசு அறிவித்தது.[7] உத்தரப் பிரதேச மாநில அரசு உயிரிழந்த இம்மாநில வீரர்கள் பன்னிரண்டு பேருக்குத் தலா 25 லட்சம் இழப்பீடாக அறிவித்தது.[8]
அனைத்துலகம்
பாக்கித்தான் இத்தாக்குதலுக்குப் பின்னால் பாக்கிஸ்தான் இருப்பதாக இந்தியச் செய்தி ஊடகங்களும் இந்திய அரசும் வெளியிட்ட குற்றச்சாட்டைப் பாக்கிஸ்தான் செய்தியாளர் மறுத்தார்.[13]
ஐக்கிய அமெரிக்கா ஜம்மு காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் கென்னட் ஜஸ்டர் தெரிவித்தார். மேலும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார்[14]
ஐக்கிய நாடுகள் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களும் உயிரிழந்தவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஐநாவின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு சார்பாக அவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.[15]
இலங்கை இலங்கையின் குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நிகழ்விற்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கண்டித்தனர்.[16]
உருசியா தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் அதனை ஒழிக்கப் பாடுபடுவோம் என்றும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும் காயமுற்றோர்களுக்கு ஆறுதலையும் உருசிய தூதரகம் தெரிவித்தது.[17]
ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் "ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது. இந்தத் தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள், நிதியுதவி அளித்தவர்கள் என, அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், அரசுக்கும், இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், எங்கு நடந்தாலும், அதை ஏற்க முடியாது" என கூறியுள்ளது.[18]
பிரான்சு, சீனா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இசுரேல், ஆப்கானித்தான் சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவுகள் போன்ற நாடுகளும் இத்தாகுதலைக் கண்டித்தன.[17][19]
Remove ads
புல்வாமா தாக்குதலை கொண்டாடியவருக்கு சிறை
பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 22 வயது இளைஞர் பயாஸ் ரசீத் என்பவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலை கொண்டாடியும், இந்திய இராணுவத்தை இழிபடுத்தியும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டமைக்காக, 1 நவம்பர் 2022 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பயாஸ் ரசீத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.[20][21]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads