அகோரநாத் சட்டோபத்யாயா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகோரநாத் சட்டோபாத்யாய் (Aghorenath Chattopadhyay) (1851-1915) ஒரு இந்திய கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார்.[1] அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான இவர், பின்னர் ஐதராபாத்தின் நிசாம் கல்லூரியின் முதல் முதல்வரானார்.[2] புகழ்பெற்ற கவிஞரும், இந்திய அரசியல் ஆர்வலருமான சரோஜினி நாயுடு இவரது மூத்த மகளாவார்.
வாழ்க்கை
இளமை, கல்வி,
இவர் விக்ரம்பூரின் பிரம்மொங்கானில் பிறந்தார் (இந்த இடம் இப்போதைய வங்காளதேசம்). டாக்கா கல்லூரிப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர், கொல்கத்தா, மாநிலப் பல்கலைக்கழகத்தில் மூன்றரை ஆண்டுகள் கழித்தார். பிறகு உயர் படிப்புகளுக்காக கில்கிறிஸ்ட் உதவித்தொகையில் எடின்பரோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[3] இவர் தனது படிப்பில் சிறந்து விளங்கினார். மேலும் ஹோப் பரிசு, பாக்ஸ்டர் உதவித்தொகை ஆகியவற்றையும் பெற்றார்.[4][5]
இந்தியா திரும்பியதும், ஐதராபாத் மாநில நிசாமின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்குள்ள கல்வி முறையை நவீனப்படுத்த முயற்சி மேற்கொண்டார். முதன்முதலாக ஒரு ஆங்கில நடுத்தர பள்ளியைத் தொடங்கினார். பிறகு தொடங்கிய ஐதராபாத் கல்லூரியின் முதல் முதல்வராக ஆனார். பின்னர் அது நிசாம் கல்லூரியாக மாறியது. பின்னர் இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பெண்கள் கல்லூரியைத் தொடங்குவதற்கான முயற்சிகளையும் தொடங்கினார். பிரிட்டிசு இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1872 சிறப்பு திருமணச் சட்டத்தை ஐதராபாத் மாநிலத்தில் அமல்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். சமூக அரசியல் மற்றும் இலக்கிய தலைப்புகளில் விவாதித்த ஐதராபாத்தின் புத்திஜீவிகளின் கூட்டணியில் அகோரநாத் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். இந்த நேரத்தில் அகோரநாத்தும் அரசியலில் ஈடுபட்டார்.[6]
சாந்தா இரயில் திட்டத்தில் நிசாமுடன் இவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதிருப்தி அடைந்த நிசாம் இவரை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்து 1883 மே 20 அன்று ஐதராபாத்திலிருந்து வெளியேற்றினார்.[7][8] இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் திரும்ப அழைக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். நிசாம் தான் பின்னர் சரோஜினிக்கு இங்கிலாந்தில் அவரது படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கினார்.[9],.
ஐதராபாத்தில் அகோரநாத் தனது அரசியல் செயல்பாட்டைத் தொடர்ந்தார், எனவே கூடிய சீக்கரம் ஓய்வு பெற்று கொல்கத்தாவுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவரும் இவரது மனைவி வரதா சுந்தரி தேவியும் கொல்கத்தாவின் லவ்லாக் தெருவில் குடியிருப்பை அமைத்தனர்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
அகோரநாத் எடின்பரோ செல்வதற்கு முன்பு வரதா சுந்தரி தேவி என்பவரை மணந்தார். வரதா சுந்தரி, கேசவ சந்திர சென் நடத்தும் கல்வி மையமான பாரத் ஆசிரமத்தில் மாணவியாகி தன் கல்வியைமுடித்தார். அகோரநாத் திரும்பி வந்தபின் இருவரும் ஐதராபாத்திற்கு 1878 இல் சென்றனர். தம்பதியருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இதி சரோஜினி மூத்தவராவார். சரோஜினி நாயுடு தனது தந்தையை "அளவில்லா ஆர்வம் கொண்ட புத்திஜீவி" என்று விவரிக்கிறார். இந்த ஆர்வம்தான் தங்கத்திற்கான செய்முறையைத் தேடி இவரை இரசவாதியாக ஆக மாற்றியது.[10] "கோல்டன் த்ரெஷோல்ட்" (தங்க வாசல்) என்ற கவிதைகளின் தொகுப்பை சரோஜினி வெளியிட்ட பிறகு, ஐதராபாத்தில் இவர் குடும்பம் தங்கியிருந்த வீடு "கோல்டன் த்ரெஷோல்ட்" என்று அழைக்கப்பட்டது. இது தற்போது ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. இரண்டாவது மகள் மிருணாலினி கேம்பிரிச்சில் இருந்து தனது படிப்பை முடித்தார். பின்னர் லாகூரில் உள்ள கங்காராம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் முதல்வரானார். இது இப்போது லாகூர் மகளிர் கல்லூரி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது மகள் சுநாலினி ஒரு கதக் நடனக் கலைஞராவார். இளைய மகள் சுகாசினி ஒரு அரசியல் ஆர்வலரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் பெண் உறுப்பினருமாவார்.
அகோரநாத்தின் மூத்த மகன் வீரேந்திரநாத் ஒரு இடதுசாரி ஆவார். இவர் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக பிரிட்டிசாரின் குற்றப் பதிவேட்டில் இருந்தார். இவர் தனது காலத்தை ஐரோப்பாவில் கழித்தார்.[11]. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவை சேகரித்தார். இவர் மாஸ்கோவில் தங்கியிருந்தபோது, ஸ்டாலினின் அரசியல் அடக்கு முறைக்கு பலியானார், செப்டம்பர் 2, 1937 இல் தூக்கிலிடப்பட்டார்.[12] இளைய மகன் அரிந்திரநாத் ஒரு ஆர்வலரும், கவிஞரும், நடிகருமாவார். இவர் 1973 இல் இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயர் விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார்.[13]
Remove ads
இறுதி நாட்கள்
அகோரநாத் தனது லவ்லாக் சாலை இல்லத்தில் சனவரி 28, 1915 அன்று இறந்தார்.[2],[14],[15]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads