கூலாய் மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூலாய் மாவட்டம் (Kulai District; மலாய்:Daerah Kulai; சீனம்:古来区)) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கூலாய் தலைநகரமாக விளங்குகிறது.
கூலாய் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 302 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 142 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 51 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 31 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
Remove ads
பொது
இந்த மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகள்:
- கூலாய்
- கூலாய் ஜெயா
- ஆயர் பெம்பான் (Ayer Bemban)
- பண்டார் புத்ரா கூலாய் (Bandar Putra Kulai)
- புக்கிட் பத்து (Bukit Batu)
- இண்டாபுரா (Indahpura)
- பண்டார் பாரு கங்கார் பூலாய் (Bandar Baru Kangkar Pulai)
- கெலாப்பா சாவிட்
- சாலேங் (Saleng)
- செடனாக்
- சீலாங்
- செனாய்
- செங்காங்
இந்த நகர்ப்பகுதிகள் அனைத்தும் இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) எனும் பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ளன.
Remove ads
பெயர் வரலாறு
இந்த மாவட்டம் முன்பு பூலாய் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்கு தற்போதைய துணை மாவட்டமான பூலாய் முக்கிமை உள்ளடக்கி இருந்தது.
1892-ஆம் ஆண்டில் உவாங் குவோ மாவோ (Huang Guo Mao) என்பவரின் தலைமையிலான ஆக்கா சீன மக்கள் (Chinese Hakka); ஜொகூருக்கு குடிபெயர்ந்தனர். ஒரு குடியேற்றப் பகுதியைத் திறந்தனர்.
அவர்கள் குடியேறிய அந்த இடத்திற்கு குய்லாய் (Gui Lai) என்று பெயர் வைத்தார்கள். குய்லாய் என்றால் ஆமைகள் வருகின்றன என்று பொருள். இந்தக் குய்லாய் எனும் பெயர்தான் பின்நாட்களில் கூலாய் என்று திரிந்தது.[1]
Remove ads
புவியியல்

கூலாய் மாவட்டத்தின் பரப்பளவு 753.75 சதுர கிலோமீட்டர் ஜொகூர் மாநிலத்திலேயே சிறிய மாவட்டமாகும்.[2] மாநிலப் பரப்பளவில் 3.96%. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 329,497 மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த மாவட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறக் குடியிருப்புகளின் கலவையைக் கொண்டு உள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஜொகூர் பாரு மாநகருக்கு அருகில் உள்ள நகரங்களில் குடியேறி வருகிறார்கள்.
கூலாய் ஜெயா மற்றும் செனாய் போன்ற நகரங்கள், கூலாய் மாவட்டத்தின் அதிக மக்கள்தொகை மையங்களாக மாறி வருகின்றன. அத்துடன் அந்த நகரங்கள் ஜொகூர் பாரு மாநகரப் பகுதியின் புறநகர்ப் பகுதிகளாகவும் மாறி உள்ளன.
வரலாறு
ஸ்ரீ விஜய பேரரசு காலத்தில் இருந்தே கூலாய் நிலப் பகுதிகளில் தொடக்கக் காலக் குடியேற்றங்கள் தோற்றம் கண்டு உள்ளன. தற்போதைய பண்டார் தெங்காராவில் (Bandar Tenggara) உள்ள சாயோங் நதிப் படுகையில், முதன்முதலாகக் கூலாய் குடியேற்றம் தொடங்கி உள்ளது.[3]
மலாயா மற்றும் சிங்கப்பூர் நாட்டுப்புறக் கதைகளின் நாயகர்களாக விளங்கும் பாடாங் (Badang) என்பவரின் சொந்த ஊர், சாயோங் ஆற்றின் மேல்புறத்தில் உள்ள ஓராங் அஸ்லி குடியிருப்புப் பகுதியாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.[4]
மலாக்கா சுல்தானகம் நிறுவப் படுவதற்கு முன்னர், 13-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்தது. அந்தப் பேரரசிற்கு உட்பட்டதாக சிங்கப்பூர் அரசு விளங்கியது.
ராஜா ராணா விக்ரமா
அந்த அரசை 1362–ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சி செய்தார். அப்போது பாடாங் என்பவர் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தார். அவர் காலத்தில் கூலாய் பகுதியில் குடியேற்றம் நடந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.[5]
1548-ஆம் ஆண்டில், கம்பார் (சுமத்திரா) எனும் இடத்தில் மலாக்காவின் கடைசி சுல்தான் மகமுட் சா (Sultan Mahmud Syah) காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மகனும் இளவரசருமான அலாவுதீன் ரியாட் சா (Sultan Alauddin); சுமத்திராவின் கம்பார் தலைநகரை ஜொகூர், கூலாய், சாயோங் பகுதிக்கு மாற்றினார்.
ஜொகூர் சுல்தானகத்தின் முதல் தலைநகராக கோத்தா சாயோங் பினாங்கு (Kota Sayong Pinang) எனும் நகரம் நிறுவப்பட்டது. அதன் பின்னர் ஜொகூர் ஆற்றின் முகப்பில் உள்ள கோத்தா பத்து எனும் இடத்திற்கு தலைநகரம் மாற்றம் கண்டது.
கூலாய் ஜெயா மாவட்டம்
இப்போதைய கூலாய் நவீன மாவட்டம், ஜொகூர் பாரு மாவட்டத்தின் முன்னாள் துணை மாவட்டமாகும். 2008 சனவரி 1-ஆம் தேதி, கூலாய் ஜெயா என்று முழு மாவட்ட நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.
கூலாய் ஜெயா மாவட்டம் (District of Kulaijaya) மாநிலத்தின் 9-ஆவது மாவட்டமாக அங்கீகரிக்கப் பட்டது.[6] 2015 ஆகஸ்டு 28-ஆம் தேதி, ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுமாயில் இப்னி சுல்தான் இசுகந்தர் (Sultan Ibrahim Ismail ibni Sultan Iskandar) அவர்கள், கூலாய் ஜெயாவின் பெயரை அதன் அசல் பெயரான கூலாய் என்பதற்கு மாற்றம் செய்ய ஆணையிட்டார்.[7][8]
Remove ads
நிர்வாகப் பகுதிகள்

கூலாய் மாவட்டம் 4 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[9]
மக்கள் தொகை
கூலாய் மாவட்ட மொத்த மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 44.3%. இவர்களைத் தொடர்ந்து மலேசிய சீனர்கள் (40.1%); இவர்களுக்கு அடுத்த நிலையில் மலேசிய இந்தியர்கள் (4.1%) உள்ளனர்.[10]
தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல், 2018
மலேசிய மக்களவையில் கூலாய் மாவட்டத்தின் தொகுதிகள்
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் கூலாய் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[11]
Remove ads
நகரங்கள்

- பண்டார் பெனாவார் (Bandar Penawar)
- பண்டார் தெங்காரா (Bandar Tenggara)
- டெசாரு (Desaru)
- ஜொகூர் லாமா (Johor Lama)
- கோத்தா திங்கி (Kota Tinggi)
- கோலா செடிலி (Kuala Sedili)
- பெங்கேராங் (Pengerang)
- சுங்கை ரெங்கிட் (Sungai Rengit)
- தஞ்சோங் சூராட் (Tanjung Surat)
- டெலுக் செங்காட் (Teluk Sengat)
இதர நகரங்கள்

- கூலாய் (Kulai Town)
- ஆயர் பெம்பான் (Ayer Bemban)
- புக்கிட் பத்து (Bukit Batu)
- கங்கார் பூலாய் (Kangkar Pulai)
- கெலாப்பா சாவிட் (Kelapa Sawit)
- சாலேங் (Saleng)
- செடனாக் (Sedenak)
- சீலோங் (Seelong)
- செனாய் (Senai)
பொருளியல்
மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள்: தகவல் தொடர்பு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், பொருட்கள் கொன்டு செல்லும் சேவை ஆகும்.[12]
சுற்றுலா இடங்கள்

- ஜொகூர் பிரீமியம் விற்பனை நிலையங்கள்
- ஜொகூர் பூலாய் மலை
- ஊத்தான் பண்டார் புத்ரா கூலாய் (புத்ரா பொழுதுபோக்கு வனப்பூங்கா)
- நான்யன் மீன்வள மையம், ஆயர் பெம்பான்
- உவா குவோ ஷான் கோயில், செடனாக்
- கூலாய் புத்துவோ கிராமம்
போக்குவரத்து
சாலைகள்
கூலாய் மாவட்டத்தில் ஸ்கூடாய் (Skudai) நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 1 (மலேசியா), செனாய் விமான நிலைய நெடுஞ்சாலை 16 (Senai Airport Highway 16), ஸ்கூடாய் - பொந்தியான் நெடுஞ்சாலை 5 (Skudai–Pontian Highway 5), ஜாலான் கூலாய் - கோத்தா திங்கி 94 (Jalan Kulai-Kota Tinggi 94), டைமண்ட் சந்திப்பு (Diamond Interchange) ஆகியவை மிக முக்கியமான சாலை இணைப்புகள் ஆகும்.
ஸ்கூடாய் நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, கூலாய் - செனாய் மாற்றுவழிச் சாலை (Kulai-Senai Bypass) என்ற புதிய சாலையைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
1970 - 1980ஆம் ஆண்டுகளில் ஜோகூர் பாரு - கோலாலம்பூர் தலைநெடுஞ்சாலை இருந்த போது, கூலாய் நகரம் ஒரு முக்கியமான நிறுத்தமாக இருந்தது. 1994-ஆம் ஆண்டில் வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) திறக்கப்பட்டது. இந்தச் சாலை கூலாய் நகரத்திற்குச் செல்லாமல் தவிர்த்து தனித்துப் போகிறது.
செனாய் அனைத்துலக விமான நிலையம்

செனாய் வடக்கு சாலை இணைப்பு (Senai North Interchange (NSE) EXIT 253) சிங்கப்பூர் பெருநகரத்தை இணைக்கிறது. இந்தச் சாலை பூலாய் மலைக்குச் செல்லும் பாதையாகவும் அமைகிறது.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம், கூலாய் மாவட்ட நகராட்சிக்குள் தான் அமைந்து உள்ளது. கூலாய் நகரத்தில் ஓர் இரயில் நிலையமும் உள்ளது.
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை E3 (Second Link Expressway E3); இசுகந்தர் புத்திரி, துவாஸ், சிங்கப்பூர் ஆகிய இடங்களை இணைக்கிறது. அண்மைய காலங்களில் ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் ஜொகூர் பாரு - சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் அதிகமாய்ப் போக்குவரத்து நெரிசல்.
அதனால் சிங்கப்பூர் செல்வதற்கு மலேசியர்கள் இந்த இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலையை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மலாக்காவில் இருந்து செல்லும் பயணிகள் இந்த விரைவுச்சாலையைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads