கே. கே. நகர், மதுரை
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. கே. நகர் (K. K. Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில், 9°57'34.9"N, 78°09'18.0"E (அதாவது, 9.959700°N, 78.155000°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். (தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்) கலைஞர் கருணாநிதி (Kalaignar Karunanidhi) நகர் என்பதின் சுருக்கமே கே. கே. (K. K.) நகர். மதுரை, செல்லூர் தல்லாகுளம், கோரிப்பாளையம், கருப்பாயூரணி ஊராட்சி, வண்டியூர், அண்ணா நகர், சின்ன சொக்கிகுளம் மற்றும் செனாய் நகர் ஆகியவை கே. கே. நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். கே. கே. நகர் பகுதியிலிருந்து முறையே சுமார் 2 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மதுரை - அண்ணா பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. கே. கே. நகர் பகுதியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.
விகாசா பொது பள்ளி மற்றும் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இங்குள்ள முக்கியமான பள்ளிகளாகும்.
மருத்துவ வசதிகள் அதிகம் கொண்ட அருகிலுள்ள அரசு மருத்துவமனை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அரசு இராசாசி மருத்துவமனை ஆகும்.[1] தனியார் அப்போலோ மருத்துவ குழுமத்தின் அப்போலோ மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மதுரையின் கே. கே. நகரில் 300 படுக்கை வசதிகளுடன் 1997-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.[2]
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கே. கே. நகர் பகுதியில் அமைந்துள்ளது. கே. கே. நகரின் மதுரை நீதிமன்றத்திற்கு அருகில், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர்.-இன் நினைவாக 2001-ஆம் ஆண்டில் அவரது உருவில் வெண்கலச் சிலை ஒன்றும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2019-ஆம் ஆண்டில் அவரது உருவில் வெண்கலச் சிலை ஒன்றும் நிறுவப்பட்டு, அவர்களது நினைவாக பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் அவர்களது தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றன.[3]
கே. கே. நகரின் முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்களாக, சுந்தரம் பூங்கா[4] மற்றும் குழந்தைகள் அறிவியல் பூங்கா[5] ஆகியவை அமைந்துள்ளன. ஈ. வெ. ரா. பெரியார் நூற்றாண்டு நினைவு ஆண்டில் தோரண வாயில் ஒன்று கே. கே. நகரில் உருவாக்கப்பட்டு, இவ்வூரின் அடையாளமாக விளங்குகிறது.
டாடா குழுமத்தின் டைடன் இன உடைகள் பிரிவான டானீரா (Taneira) தனது முதல் காட்சியறையை, 2022-ஆம் ஆண்டு அக்டோபரில், கே. கே. நகர் பகுதியில் துவங்கியது.[6]
இங்குள்ள கற்பக விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[7]
கே. கே. நகர் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[8] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads