சு. வெங்கடேசன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. வெங்கடேசன் (Su. Venkatesan, பிறப்பு: மார்ச் 16, 1970) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும், இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவராக உள்ளார்.[1]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த விவசாயி இரா. சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு 1970 மார்ச் 16 அன்று மகனாகப் பிறந்தார்.[2] இவர் ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், திருநகர் எம்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வியை பயின்றார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 1998-இல் பி.ஆர். கமலா என்பவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
Remove ads
எழுத்துப் பணி
இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-இல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.[4] இவர் செம்மலர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[5] இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[6] தமிழின் முதல் வரைகலைப் புதினமான சந்திரஹாசத்தை 2015 இல் வெளியிட்டார். ஆனந்த விகடனில் இவரின் வரலாற்றுத் தொடராக வெளிவந்து பின்னர் 2019 இல் நூலான வீரயுக நாயகன் வேள்பாரி 2025 வரை ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியது.[7]
புதினங்கள்
- காவல் கோட்டம் (2008)
- சந்திரஹாசம் (2015)
- வீரயுக நாயகன் வேள்பாரி (2019)
கவிதைகள்
- ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989)
- திசையெல்லாம் சூரியன் (1990)
- பாசி வெளிச்சத்தில் (1997)
- ஆதிப் புதிர் (2000)
புத்தகங்கள்
- கலாசாரத்தின் அரசியல் (2001)
- மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள் (2003)
- கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (2003)
- மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2003)
- ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை (2004)
- உ.வே.சா. சமயம் கடந்த தமிழ் (2005)
- அலங்காரப் பிரியர்கள் (2014)
- கீழடி (2017)
- வைகை நதி நாகரிகம் (2018)
- கதைகளின் கதை (2019)
- இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் (2022)
மொழிபெயர்ப்புகள்
- இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
இவரின் சந்திரஹாசம் (Chandrahasam) நூலானது ஜோநாதன் ரிப்ளேவின் மொழிபெயர்ப்பில் 2015 இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதில் ஓவியராக கே. பாலசண்முகமும் ஆசிரியராக ஏ.ஆர். வெங்கடாசலபதியும் பங்காற்றினர்.[8] காவல் கோட்டம் நூலானது தி பாஸ்டியன் (The Bastion) என்ற பெயரில் பட்டு எம். பூபதியால் ஆங்கிலத்திலும் காவலு கோட்டா என்ற பெயரில் முனைவர் வி. கோபாலகிருஷ்ணனால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.[9]
Remove ads
அரசியல் செயல்பாடுகள்
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.[10] மாமதுரை போற்றுவோம் என்ற கலை விழாவை நடத்தியதில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர்.[11] தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரிடிப்பு உள்ளிட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார்.[12] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[13] 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14] 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 2.08 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[15]
மதுரை மக்களவை உறுப்பினராகச் செயல்பாடுகள்
- மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[16]
- தமிழ் நாகரிகம் உருவான காலத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[17]
- மக்கள் சந்திப்பு இயக்கம் எனும் பெயரில் மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட 124 ஊராட்சி, 2 பேரூராட்சி, மேலூர் நகராட்சி, மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொடா்ந்து 14 மாதங்களாக சிறப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.[18]
- இவர் முயற்சியில் மாநகராட்சி வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் வகையில் படிப்பகப் பூங்காவினைத் தொடங்கினார்.[19][20]
வகித்த பதவிகள்
- 17வது மக்களவை உறுப்பினர் (2019)
- இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்
- கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்
- மதுரை விமான நிலைய ஆலோசனை குழுவின் துணை தலைவர்
- சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் (2022)
- தமுஎகச மாநிலத் தலைவர் (2018 - 2022)
- சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் (2018 - 2022)
- தமுஎகச மாநில பொதுச்செயலாளர் (2011 - 2018)
- தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஆலோசனைக் குழு உறுப்பினர் (2019)
Remove ads
விருதுகள்
- ஆனந்த விகடன் விருதுகள் 2008 - சிறந்த நாவல் - காவல் கோட்டம்[21]
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2010 புனைவுக்கான விருது - காவல் கோட்டம்[22]
- சாகித்திய அகாதமி விருது 2011 - காவல் கோட்டம்[23]
- மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் 2020 - அனைத்துலக சிறந்த படைப்பு விருது - வீரயுக நாயகன் வேள்பாரி[24]
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019 இயல் விருது - வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது[25]
- நொய்யல் இலக்கிய விருது - காவல் கோட்டம்[26]
- ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 - சிறந்த நாவல் - வீரயுக நாயகன் வேள்பாரி[27]
- நியூஸ் 18 தமிழ்நாடு மகுடம் விருதுகள் 2019 - சிறந்த எழுத்தாளர் - வீரயுக நாயகன் வேள்பாரி[28]
- புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2012 - நம்பிக்கை நட்சத்திரம்[29]
- சி. கே. கே. அறக்கட்டளை இலக்கிய விருது 2023 - வீரயுக நாயகன் வேள்பாரி[30]
- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2010 - சிறப்புப் பரிசு - காவல் கோட்டம்[31]
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் - காவல் கோட்டம்[32]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்கள்
திரைப்படத் துறைப் பங்களிப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் நாவலின் முக்கிய பகுதிகளைத் தழுவியே படமாக்கப்பட்டது.[33]
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.[34]
இவர் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது.[35]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads