ஜெய்சல்மேர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்சல்மேர் கோட்டை (Jaisalmer Fort) இந்திய மாநிலமான இராசத்தானின், ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையாகும். இராஜஸ்தானின் ஆறு மலைக் கோட்டைகளில் ஒன்றாக ஜெய்சல்மேர் மலைக்கோட்டையும் உலகப் பாரம்பரியக் களமாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]
இம்மலைக்கோட்டையை 1156-இல் இராசபுத்திர குல ஆட்சியாளர் ராவல் ஜெய்சல் என்பவரால் தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள திரிகூட மலையில் கட்டப்பட்டது.
பிரித்தானிய ஆட்சிக்கு முன்னர் வணிகர்கள், பயணிகள், அகதிகள் மற்றும் போர்ப்படையினர் இப்பகுதியை கடந்து செல்கையில், இக்கோட்டையில் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்வர்.
மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் பகலில் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், மாலையில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும். எனவே ஜெய்சல்மேர் கோட்டை சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை எனப்பெயர் பெற்றது.[3]
Remove ads
வரலாறு

ஜெய்சல்மேர் கோட்டையை மன்னர் ராவல் ஜெய்சல் என்பவர் 1156-இல் எழுப்பினார். 1276-ஆம் ஆண்டில் ஜேட்சி எனும் இராசபுத்திர குல மன்னர், தில்லி சுல்தானகத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஜெய்சல்மேர் கோட்டையை வலுப்படுத்தினான். கோட்டையின் உச்சியில் 56 கண்காணிப்பு கோபுரங்களை நிறுவி, 3,700 படைவீரர்களைக் கொண்டு ஜெய்சல்மேர் நகரத்தையும், கோட்டையையும் கண்காணித்தான். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தில்லி சுல்தான் படையினர் இக்கோட்டையையும், கோட்டையில் உள்ள சிறு அரண்மனையையும் தகர்த்தனர்.
ராசபுத்திர குல பட்டி என்ற வம்சத்தவர்கள் இக்கோட்டையை வசப்படுத்தினர். 1306-இல் ரத்தோர் வம்சத்தவர்களை வென்ற தோடூ வம்சத்தினர் ராவல் என்பவரை தேர்ந்தெடுத்தனர். ராவல் ஜெய்சல்மேர் கோட்டையை பலப்படுத்தினான்.
மத்திய கால வரலாற்றில் பட்டுப் பாதையில் அமைந்த ஜெய்சல்மேர் நகரத்தின் இக்கோட்டை, பன்னாட்டு வணிகர்களின் பொருட்களின் கிடங்குகளாகச் செயல்பட்டது. பாரசீகம், அரேபியா, எகிப்து, ஆப்பிரிக்கா, மற்றும் சீனா போன்ற பன்னாட்டு வணிகர்களுக்கு ஜெய்சல்மேர் கோட்டை பாதுகாப்பு அரணாக விளங்கியது.
இக்கோட்டை மூன்றடுக்கு வரிசையில் அமைந்த சுவர்களால் கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவர் திடமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. கோட்டையின் இரண்டாவது அல்லது நடுவில் பாம்பு போன்று வளைந்து சுருண்ட சுவர்கள் உள்ளது.
கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் நகரத்தை கண்காணிக்க 1633-47 கால கட்டத்தில் இக்கோட்டையின் உச்சியில் 99 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டது.
தில்லி சுல்தான்கள் காலத்தில்
13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சி இக்கோட்டைத் தாக்கி 9 ஆண்டுகள் தன் கைவசம் வைத்திருந்தார். இக்கோட்டை அலாவுதீன் கில்ஜி முதலில் கைப்பற்றும் போது, சுல்தானின் படைவீரர்களின் கையில் சிக்கி சீரழியாமல் இருக்க, கோட்டையில் இருந்த இராசபுத்திர குலப் பெண்கள் ஜௌஹர் எனப்படும் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிர்த் தியாகம் செய்தனர்.
முகலாயர்கள் காலத்தில்
முகலாய மன்னர் உமாயூன் 1541-இல் ஜெய்சல்மேர் நகரத்தின் கோட்டையைத் தாக்கினார். பின்னர் அக்பரின் படைகள் 1570-இல் ஜெய்சல்மேர் கோட்டையைத் தொடர்ந்து தாக்கியதால், ஜெய்சல்மேர் மன்னர் அக்பருடன் போர் உடன்படிக்கை செய்து கொண்டார்.[4]
மகாராஜா மூல்ராஜ் 1762-இல் ஜெய்சல்மேர் கோட்டையைக் கைப்பற்றும் வரை முகலாயர் ஆட்சியில் இருந்தது.
பிரித்தானிய இந்தியா மற்றும் இந்திய ஒன்றியத்தில்
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களும் – ஜெய்சல்மேர் மன்னர் மூல்ராஜும் 12 டிசம்பர் 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, ஜெய்சல்மேர் கோட்டையும், ஜெய்சல்மேர் நகரமும் மூல்ராஜ் வசம் இருந்தது. 1820-இல் மூல்ராஜ் இறந்த பின் அவரது மகன் கஜ் சிங் ஜெய்சல்மேர் கோட்டைக்கு தலைவரானார்.[4]
1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் ஜெய்சல்மேர் நகரமும், கோட்டையும் இந்திய அரசிடம் இணைக்கப்பட்டது.
Remove ads
கட்டிடக் கலை
ஜெய்சல்மேர் கோட்டை 1500 நீளமும், 750 அடி அகலமும், 250 அடி உயரமும், 15 அடி அடித்தளமும் (அஸ்திவாரம்) கொண்டது. கோட்டையின் உச்சியில் 30 அடி உயர கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டை மூன்றடு வரிசையில் அமைந்த சுவர்களால் கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவர் திடமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. கோட்டையின் இரண்டாவது அல்லது நடுவில் பாம்பு போன்று வளைந்து சுருண்ட சுவர்கள் உள்ளது. ஜெய்சல்மேர் இக்கோட்டை நான்கு வாயில் கொண்டது. அவற்றில் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.[4]
- கோட்டையில் முக்கியப் பகுதிகள்:
- ராஜ் மகால் (அரண்மனை)
- சமணர் கோயில்கள்[5]
- இலக்குநாதன் கோயில்
- நான்கு 4 கனமான கதவுகள்
- வணிகர்கள் தங்குமிடங்கள்
Remove ads
சிறப்பு
ஜெய்சல்மேர் கோட்டையில் இத்தாலிய, பிரஞ்சு பூர்வீக உணவுகள் உட்பட எண்ணற்ற நாடுகளின் உணவு வகைகளை வழங்கும் உணவகங்கள் உள்ளன. 1974-இல் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய், ஜெய்சல்மேர் கோட்டைக் குறித்து வங்க மொழியில் சோனார் கெல்லா (தங்கக் கோட்டை) எனும் திரைப்படத்தின் மூலம் விளக்கியுள்ளார்.[6] சூன் 2013-இல் புனோம் பென்னில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 37-ஆவது கூட்டத்தின் போது இராசத்தானின் ஆறு கோட்டைகள், அதாவது ஆம்பர் கோட்டை, சித்தார்கோட்டை, காக்ரோன் கோட்டை, ஜெய்சல்மேர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவை தொடர் கலாச்சார சொத்தாகவும் ராஜ்புத் மலை கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டன.[7][8]
மறுசீரமைப்பு
உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் கோட்டை சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். உலகப் பாரம்பரியக் கள நிதி உதவியுடன் ஜெய்சல்மேர் கோட்டை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீரமைக்கப்பட்டது.[9][10]
ஜெய்சல்மேர் கோட்டையில் சமணர் கோயில்கள்
சமணர்களின் 16 வது தீர்த்தங்கரர் சாந்திநாதர் மற்றும் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் போன்றவர்களுக்கு ஜெய்சல்மேர் கோட்டையில் கோயில்களும் அழகிய சிற்பத் தூண்களும் உள்ளது.
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- ஜெய்சல்மார் கோட்டையினுள் அரண்மனை
- ஜெய்சல்மார் கோட்டையில் பீரங்கி
- மாலை நேரத்தில் கோட்டையின் காட்சி
- கோட்டையின் நுழைவாயில்
- ஜெய்சல்மேர் கோட்டையும், நகரமும்
- கோட்டையின் காவற்கோபுரங்கள்
- கோட்டையின் சிற்பங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads