அறபுத் தீபகற்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறபுத் தீபகற்பம் (Arabian Peninsula), என்பது ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். எண்ணெய், இயற்கை எரிவளி ஆகியன இங்கு பெருமளவில் கிடைப்பதால் இப்பகுதி மத்திய கிழக்கில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

புவியியல்
அறபுத் தீபகற்பத்தின் தெற்கே செங்கடல், அக்காபா வளைகுடா, தென்கிழக்கே அராபியக் கடல் (இந்தியப் பெருங்கடலின் பகுதி), வடகிழக்கே ஓமான் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, பாரசிக வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. இதன் வடக்கு எல்லையில் ஈரான், ஈராக்கிய மலைத்தொடரான சக்ரோசு மலைத்தொடர்கள் உள்ளது.
புவியியல் ரீதியாக இப்பகுதி ஈராக்கின் மேற்குப் பகுதியையும், சிரியாவின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக இது ஆசியாவின் ஏனையப் பகுதிகளை யூபிரேட்டிஸ் ஆறுகளினால் பிரிக்கிறது.
பின்வரும் நாடுகள் அறபுத் தீபகற்பத்தில் தற்போது அடங்குகின்றன:
- பஹ்ரேய்ன், குடாவின் கிழக்குக் கரையில் உள்ள தீவு நாடு
- ஈராக்
- இஸ்ரேல்
- குவெய்த்
- லெபனான்
- ஓமான்
- பாலஸ்தீனம்
- கட்டார்
- சவுதி அரேபியா
- சிரியா
- ஜோர்தான்
- ஐக்கிய அரபு அமீரகம்
- யேமன்
இவற்றில் ஆறு நாடுகள் மட்டுமே அரசியல் ரீதியாக அறபுத் தீபகற்பத்தில் அடங்குகின்றன. இவை அரபு வளைகுடா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
2008 மதிப்பீட்டின்படி, இத்தீபகற்பத்தின் மக்கள் தொகை 77,983,936 ஆகும்[1].
Remove ads
வரலாறு
130,000 ஆண்டுகளுக்கு முன்பு அராபிய தீபகற்பத்தில் மனித வாழ்விடங்களுக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.[2] ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியாவிற்கு குடியேறிய முதல் மனித இடம்பெயர்வு சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதன் சான்றாக நெபுட் பாலைவனத்தில் உள்ள அல் வுஸ்டாவில் ஹோமோ சேபியன் புதைபடிவ விரல் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.[3]
வடமேற்கு சவுதி அரேபியாவில் உள்ள டி'ஸ் அல் கடாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிற விலங்குகளின் புதைபடிவங்களுடன் மத்திய பாலியோலிதிக் காலத்திலிருந்து வந்த கல் கருவிகள், ஹோமினிட்கள் 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்பு அராபியாவில் குடியேறியதை குறிக்கலாம்.[4] அரேபிய தீபகற்பத்தில் மனித வாழ்விடம் சுமார் 106,000 முதல் 130,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கான சான்றுகள் உள்ளன.[5]
இஸ்லாத்தின் எழுச்சி
ஏழாம் நூற்றாண்டில் அராபிய தீபகற்பத்தில் இஸ்லாம் எழுச்சி கண்டது. கி.பி. 570 இல் இறைத்தூதர் முகமது நபி மக்காவில் பிறந்தார்கள். கி.பி 610 இல் அவரது 40வது வயதில் நபித்துவம் பெற்று பிரச்சார பணியை தொடங்கினார்கள். கி.பி 622 இல் மக்காவில் இருந்து மதீனா நகரிற்கு குடிபெயர்ந்தார்கள். அங்கிருந்து அவர் அரேபிய பழங்குடியினரை ஒன்றிணைத்து அரேபிய தீபகற்பத்தில் முஸ்லீம் சமூகத்தை உருவாக்கினார்கள். முஹம்மது நபி அரேபிய தீபகற்பத்தில் புதிய ஒருங்கிணைந்த அரசியலை நிறுவினார்கள். கி.பி 632 இல் முஹம்மது நபியின் மரணத்திற்கு பின் முஸ்லீம் சமூகத்தின் தலைவராக (கலீபா) முகம்மது நபியின் உற்ற தோழரான அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள். இவர்களது ஆட்சிக் காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது.[6] கி.பி. 634 இல் அபூபக்கர் (ரலி)யின் இறப்பிற்கு பிறகு முறையே உமர் இப்னு கத்தாப்(ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் ஆட்சியாளர்களாக பதவி வகித்தனர். முதல் நான்கு கலீபாக்களும் குலபாஉர் ராஷிதீன்கள் (நேர்வழிகாட்டப்பட்ட கலீபாக்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். குலபாஉர் ராஷிதீன்கள், அவர்களிக்கு பின் வந்த உமையாக்களின் ஆட்சிகளில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் வடமேற்கு இந்திய துணைக் கண்டம், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, தெற்கு இத்தாலி மற்றும் ஐபீரிய தீபகற்பத்தில் இருந்து பைரனீஸ் வரை விரிவடைந்தது.[7] மேலும் பைசாந்திய பேரரசு, பாரசீக சாம்ராஜியம் என்பன கைப்பற்றபட்டன.
சவூதி அராபிய நகரங்களான மக்கா, மதீனா முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரை மக்காவிற்கு சென்று கஃபாவை தரிசிப்பதாகும்.[8] மதீனாவில் மஸ்ஜித் அல்-நபவி பள்ளிவாயலில் நகரில் முகம்மது நபியின் அடக்கஸ்தலம் காணப்படுகின்றது. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கா மற்றும் மதீனா உலகெங்கிலும் உள்ள ஏராளமான முஸ்லிம்களுக்கான புனித யாத்திரை தலங்களாக மாறின.[9]
அரபுக் கிளர்ச்சி
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரபுக் கிளர்ச்சி மற்றும் உதுமானிய பேரரசின் சரிவு ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நிகழ்ந்தன. சிரியாவின் அலெப்போவில் இருந்து யேமனில் ஏடன் வரை உதுமானிய பேரரசில் இருந்து விடுதலை பெறுவதற்காக செரிப் ஹூசைன் பின் அலியினால் 1916 இல் அரபுக்கிளர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு சவுத்தின் கீழ் சவூதி அரேபியாவிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1902 இல் ரியாத்தை கைப்பற்றினார். பின் போரிட்டு பிற பகுதிகளையும் கைப்பற்றினார் 1932 இல் தற்போதைய சவூதி அரேபியா உருவானது.
எண்ணெய் இருப்பு
1930ம் ஆண்டுகளில் ஏராளமான எண்ணெய் இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் உற்பத்தி ஏமனைத் தவிர்த்து பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் செல்வத்தை சேர்த்தன.
வளைகுடா போர்
1990 ஆம் ஆண்டுகளில் ஈராக் குவைத் மீது படையெடுத்தது.[10] குவைத்தின் மீதான படையெடுப்பு வளைக்குடா போரிற்கு வழிவகுத்தது. எகிப்து, கத்தார், சிரியா மற்றும் சவூதி அரேபியா ஆகியவை ஈராக்கை எதிர்க்கும் ஒரு பன்னாட்டு கூட்டணியை அமைத்தன. ஜோர்தான் மற்றும் பாலஸ்தீனம் ஈராக்கிற்கு ஆதரவளித்ததன் விளைவாக பல அரபு நாடுகளுக்கிடையேயான உறவுகள் சிதைந்தன.
ஏமனில் அரபு வசந்தம்
2011 ஆம் ஆண்டில் அரபிய வசந்தம் எழுச்சி ஏமனை வந்தடைந்தது.[11] ஏமன் மக்கள் சனாதிபதி அலி அப்துல்லா சலாவின் மூன்று தசாப்த கால ஆட்சிக்கு எதிராக வீதிக்கு வந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் ஆளும் பொது மக்கள் காங்கிரஸ் (ஜிபிசி) மற்றும் சலேவின் சன்ஹானி குலத்தில் விரிசல்களுக்கு வழிவகுத்தது.[12] சலா தனது சனாதிபதி பதவியைக் காப்பாற்ற சலுகை மற்றும் வன்முறை தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினார்.[13] சலா பல முயற்சிகளுக்குப் பிறகு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டார். இறுதியில் அவர் துணை ஜனாதிபதி ஹாதியிடம் அதிகாரத்தை வழங்கினார்.
Remove ads
தொழில்துறைகள்
எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு என்பன அரேபிய தீபகற்பத்தின் முக்கிய தொழில்துறை நடவடிக்கைகள் ஆகும். இந்ந பிராந்தியத்தில் செயல்படும் கட்டுமானத் துறையும் உள்ளது. எண்ணெய் தொழிலால் பல நகரங்கள் செழிப்புற்று விளங்குகின்றன. கட்டுமானத் துறையைப் போல பணித்துறையில் நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. கம்பளம்-நெசவு போன்ற பாரம்பரிய கைவினைப்பொருட்கள் அரேபியாவின் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads