தங்காக் மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்காக் மாவட்டம் (ஆங்கிலம்: Tangkak District; மலாய்: Daerah Tangkak; சீனம்: 東甲縣); ஜாவி:تڠكق ) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தங்காக் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

தங்காக் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 136 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 180 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவை தங்காக் மாவட்டத்தின் எல்லை மாநிலங்களாக உள்ளன.
மலாக்கா, கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய நான்கு மாநகரங்களுக்கும் மையத்தில் தங்காக் மாவட்டம் அமைந்து உள்ளது.
Remove ads
வரலாறு
தங்காக் மாவட்டம் முன்பு தன்னாட்சி பெற்ற ஒரு துணை மாவட்டமாக இருந்தது. மூவார் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் ஒரு பகுதியாக இருந்தது. மூவார் நகரத்தில் இருந்து முவார் நதியால் பிரிக்கப்பட்டு இருந்தது.
2008 ஜூன் 9-ஆம் தேதி, ஜொகூர் சுல்தானின் தலைமையில் நடைபெற்ற ஒரு விழாவில், தங்காக் பகுதி ஜொகூரின் 10-ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தங்காக் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள லேடாங் மலையின் பெயரால் அந்த மாவட்டத்திற்கு லேடாங் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.[2]
2015-ஆம் ஆண்டின் இறுதியில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள இடங்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெயர்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் அவர்கள் ஆணை பிறப்பித்தார். அதன்படி இந்த மாவட்டம் தங்காக் மாவட்டம் என மறுபெயரிடப்பட்டது.[3][4][5]
தங்காக் வரலாறு
18-ஆம் நூற்றாண்டில், மலாக்காவில், தங்காக் நகருக்குச் சற்றுத் தொலைவில் சோகோங் எனும் ஒரு குடியிருப்புப் பகுதி இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் வேறு ஓர் இடத்திற்குப் புலம் பெயர்ந்தனர். கீசாங் ஆற்றின் வழியாக புதிய இடத்திற்கு வந்தனர். அந்த இடம் அடர்ந்த காடுகளாகவும், சதுப்பு நிலமாகவும் இருந்தது. அதற்கு தங்காக் என்று பெயர் வைத்தனர்.
தங்காக் புதிய குடியேற்றப் பகுதிக்கு குடியேறிய மக்கள், தங்களின் பழைய இடமான சோகோங் குடியிருப்புப் பகுதிக்கும் அடிக்கடி வந்து சென்றனர். அந்தச் சமயத்தில் சோகோங் குடியிருப்பில் இருந்தவர்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் மலாய் மொழியில் தாங் மெராங்காக் (மலாய்: Tang Merangkak) என்று பதில் கூறினர். அந்தத் தாங் மெராங்காக் எனும் சொற்களில் இருந்து உருவானதுதான் தங்காக் எனும் பெயர்.
Remove ads
பொருளாதார நடவடிக்கைகள்
தங்காக் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள்: சுற்றுலா, மலையேற்ற விளையாட்டுகள், இலகு உற்பத்திகள்; நெசவு ஆடை தொழில். தங்காக் மாவட்டத்திற்கு ’துணிமணிகளின் சொர்க்கபுரி’ எனும் ஓர் அடைமொழிப் பெயரும் உள்ளது.[7] இந்த மாவட்டத்தின் சுற்றுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாயத் துறையைச் சார்ந்து உள்ளன.
1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய ரப்பர், எண்ணெய்ப் பனை, கொக்கோ பயிர்த் தோட்டங்கள் இருந்தன. மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தங்காக் மாவட்டமும் ஒன்றாகும். அண்மைய காலங்களில் ஏற்பட்ட புறநகர் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் தமிழர்கள் மக்கள்தொகை கணிசமாகக் குறைந்து விட்டது.
டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த மாவட்டம் பெயர் போனது. மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
மலேசியாவில் பிரபலமான குனோங் லேடாங், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரமான தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. லேடாங் மலை வரலாற்றுப் புகழ் பெற்றது. லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்கலாம்.[8]
Remove ads
லேடாங் மலை
மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த மலையைத் தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும்.[9] மலையேறிகள், பறவைப் பார்வையாளர்கள், இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் லேடாங் மலையில், மிதவெப்ப மண்டல காடுகளின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கே பல சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
மேகக் கூட்டம் இல்லாத பிரகாசமான நாளில், லேடாங் மலை உச்சியில் இருந்து மலாக்கா நீரிணையையும் சுமத்திரா தீவையும் பார்க்க முடியும்.
கட்டமைப்பு
தங்காக் நகருக்கு விரிவான சாலைத் தொடர்புகள் உள்ளன. மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, இந்த நகருக்கு மிக அருகாமையில் தான் செல்கிறது. இங்கு இருக்கும் தங்காக் மாவட்ட மருத்துவமனை, மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரியின் கற்பித்தல் மருத்துவமனையாக விளங்கி வருகின்றது. இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், இந்தியர்களின் வழிபாட்டுத் தளமாக இருக்கிறது.
நிர்வாகப் பகுதிகள்
தங்காக் மாவட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 1. முக்கிம்கள். 2. பெருநகரங்கள். 3. சிறுநகரங்கள்.
முக்கிம்கள்
தங்காக் மாவட்டத்தில் 6 முக்கிம்கள் உள்ளன.
- புக்கிட் செரம்பாங் (Bukit Serampang)
- கிரிசே (Grisek)
- கீசாங் (Kesang)
- குண்டாங் (Kundang)
- செரோம் (Serom)
- தங்காக் (Tangkak)
பெருநகரங்கள்
- புக்கிட் கங்கார் (Bukit Kangkar)
- பாரிட் பூங்கா (Parit Bunga)
- செரோம் (Serom)
- சுங்கை மத்தி (Sungai Mati)
- தங்காக் (Tangkak)
சிறுநகரங்கள்
- கிரிசே (Grisek)
Remove ads
தங்காக் மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
ஜொகூர்; தங்காக் மாவட்டத்தில் (Tangkak District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 412 மாணவர்கள் பயில்கிறார்கள். 67 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் ஒன்றான புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளி 1934-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர் பற்றாக்குறையினால் 2017 டிசம்பர் 15-ஆம் தேதி மூடப்பட்டது. அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி திறக்கப் பயன்படுத்தப் பட்டு உள்ளது.
ஜொகூர் பாரு தாமான் புக்கிட் இண்டா எனும் இடத்தில் புதியத் தமிழ்ப்பள்ளிக்கு அந்த உரிமம் மாற்றம் செய்யப்பட்டது. 12 அறைகளைக் கொண்ட இந்தப் பள்ளி 70 இலட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு உள்ளது.
மாணவர் பற்றாக்குறையினால் தமிழ்ப்பள்ளிகள் மூடப் பட்டாலும், பள்ளி உரிமங்கள் காலாவதியாகாமல் இருப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. புதிதாகத் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டினால் உரிமம் கிடைப்பது சிரமம். ஆகவே பழைய உரிமங்கள் பாதுகாக்கப்பட்டுப் புதிய பள்ளிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
Remove ads
ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
காட்சியகம்
- லேடாங் நீர்வீழ்ச்சி 2
- லேடாங் மலை தகவலகம்
- மூவார் ஆற்றில் இருந்து லேடாங் மலை
- லேடாங் மலை
- லேடாங் நீர்வீழ்ச்சி
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads