இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுலாத்துக்கு முந்திய அரபு நாட்டில் சமயம் (Religion in pre-Islamic Arabia), அரேபியாவில் இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியத் தீபகற்பத்தின் அரேபியர்கள், யூதம், கிறித்தவம், சரதுசம், மானி போன்ற சமயங்களையும், பழங்குடி சமயங்களின் உருவச் சிலைகளையும் வணங்கினர்.

அரபு நாட்டின் பல கடவுள் வணக்க முறையில் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவை அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் என்பனவாகும்.
அரேபியர்கள் மக்காவின் கஃபா வழிபாட்டுத் தலத்தின் சுவரில் ஏறத்தாழ 360 தேவதைகளின் சிலைகளை நிறுவி வழிபட்டனர். ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன்னரே அரபு நாட்டில் யூத சமயம் அறிமுகம் ஆகி இருந்தது. உரோமர்களால் வலுக்கட்டாயமாகக் கிறித்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு அஞ்சிய யூதர்கள் பலர் அரபுத் தீபகற்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
அரபு நாட்டில் கிரேக்க, உரோமைப் பேரரசு, அக்சும் பேரரசு என்பவற்றின் தாக்கத்தால், அரபு நாட்டில் கிறித்தவமும், சாசானியப் பேரரசின் தாக்கத்தால் சரதுசமும் அரபுத் தீபகற்பத்தில் பின்பற்றப்பட்டது. உரோமர்களின் தாக்கத்தால் அரபுத் தீபகற்பத்தின் வடகிழக்கிலும் பாரசீக வளைகுடா பகுதிகளிலும் கிறித்தவம் பரவியது. பொ.கா. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த மானி என்ற இறைவாக்கினர் அறிமுகப்படுத்திய மானி சமயம் மக்காவிலும் பயிலப்பட்டது.
Remove ads
பின்னணியும் ஆதாரங்களும்
அரபு நாட்டில் யூதமும் கிறித்தவமும் சிறிய அளவில் பின்பற்றப்பட்டாலும், பொ.கா. நான்காம் நூற்றாண்டு வரை அரபு மக்கள் பல கடவுள் வணக்க முறை கொண்டிருந்தனர்.[1][2][3]
அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகள் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் என்பனவாகும். கிரேக்க வரலாற்று அறிஞரான ஸ்டிராபோவின் கூற்றுப்படி அரேபியர்கள் பண்டைய கிரேக்க கடவுள்களான சியுசு, ஒரெகன், பெண் கடவுளான உரானியா என்போரை வழிபட்டனர்.[4] பழைய ஏற்பாடு நூலில் உள்ள சிலைகள் புத்தகத்தின் படி, மக்காவில் தங்கியிருந்த இப்ராகிமின் வழித்தோன்றல்கள், கஃபாவின் புனிதக் கற்களை தம்முடன் எடுத்துக் கொண்டு அரேபிய நாட்டின் பல பகுதிகளில் குடியேறி, அங்கு புனிதக் கற்களை கஃபா போன்று வடிவமைத்து வழிபட்டனர். [5] இதுவே பின்னர் அரபு நாட்டில் உருவச் சிலை வழிபாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.[5][5]
Remove ads
வழிபாட்டு முறை
தேவதைகள்

இசுலாமிற்கு முந்தைய அரபு நாடோடி பழங்குடிகள் பல சமயங்களை பின்பற்றி, பல வழிபாட்டு முறைகளின் படி பல தேவதைகளையும், கடவுள்களையும் வழிபட்டனர். நாடோடிகளாக இருந்த அரபுப் பழங்குடிகள் மக்கா மற்றும் மதீனா போன்ற நகர இராச்சியங்களை அமைத்துக் கொண்டு நிலையான ஓரிடத்தில் வாழ்ந்த காலத்தில் சமய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள், பழக்க வழக்கங்களில், பிற நாடோடி அரேபியர்களிடமிருந்து வளர்ச்சியடைந்திருந்தது.[6] நடோடி அரேபியர்கள் அடையாளப்பொருள் நம்பிக்கை, குலக்குறிச் சின்னம் மற்றும் நீத்தார் வழிபாடுகளைக் கொண்டிருந்தனர்.[6]
நிரந்தரமான ஒரே இடத்தில் குடியிருந்த அரேபியர்கள் பல கடவுள் வணக்க முறை கொண்டிருந்தனர்.[6] ஹெஜாஸ் பகுதியின் மக்கா, மற்றும் மதீனா நகர அரேபியர்கள் கஃபா, பாலைவனச் சோலைகள் மற்றும் நகரங்களில் தங்களது கடவுள்களுக்கு நிரந்தர கட்டிட அமைப்புகள் நிறுவி வழிபட்டனர். அரபு நாட்டின் நாடோடி மக்கள் தங்கள் வழிபடு கடவுளை தங்களுடனேயே கொண்டு சென்றனர்.[7]
ஆவிகள் வழிபாடு
தெற்கு அரபு நாட்டின் அரேபியர்கள் நீத்தாரை, தங்கள் குலத்தை காக்கும் ஆவி வடிவத்தில் வழிபட்டனர்.[8] வடக்கு அரபு நாட்டின் பல்மைரா நகரத்து கல்வெட்டுக் குறிப்பிகளின் படி, அரேபியர்கள் ஜின் (jinn) என்ற ஜினவே எனும் ஆவியை வழிபட்டனர். எதிர்காலத்தை கணிப்பவர்கள், மெய்யியல் அறிஞர்கள் மற்றும் கவிஞர்களை ஜின் என்ற ஆவியுடன் தொடர்புடையவர்கள் என பண்டைய அரேபியர்கள் நம்பினர்.[9] மேலும் பல்வேறு நோய்களுக்கும், மனநோய்களுக்கும் ஜின் என்ற ஆவியே காரணம் என நம்பி அரேபியர்கள் பயந்தனர்.[10]
தேவதைகளின் பங்கு
இசுலாம் தோன்றுவதற்கு முன்னர் பல கடவுள் வணக்க முறை கொண்டிருந்த அரேபியர்கள், முகமது நபியின் உபதேசங்களால் படைப்புக் கடவுளாக அல்லா எனும் ஒரே இறைவனை வணங்கினர்.[11] அல்லா எனும் சொல்லிற்கு அரபு மொழியில் இறைவன் என்பதாகும். [12] இசுலாமிற்கு முந்தைய சமயச் சாத்திரங்களில் மக்காவாசிகளும் மற்றும் அதன் அன்மைப் பகுதியில் உள்ளோரும் அல்லாவின் மகள்களாக அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் பெண் தேவதைகளுக்கு சிலை எழுப்பி வழிபட்ட செய்திகள் உள்ளது.[2][13][14][15]
அல்லாஹ் என்ற சொல் பிரதேச மாறுபாடுகள் கொண்டுள்ளது. பேகன் மற்றும் கிறித்துவம் மற்றும் இசுலாமிற்கு முந்தைய கல்வெட்டுகளில் பேகன் எனும் சொல் காணப்படுகிறது.[16][17] இசுலாமிற்கு முந்தைய, முகமது நபிக்கு முன்னோரும், கவிஞருமான ஜுபைர் பின் அபி சல்மாவின் செய்யுட்களில் அல்லா எனும் சொல் குறிப்பிட்டுள்ளது.[18] முகமது நபியின் தந்தை பெயரான அப்துல்லா இபின் அப்துல் முத்தலிப்பு எனும் பெயருக்கு கடவுளின் பணியாள் எனப்பொருளாகும்.[19]
அல்லா எனும் பெயர் இசுலாமிற்கு முந்தைய கடவுளான அய்லியா, இலா மற்றும் ஜெஹோவா போன்ற பெயரிலிருந்து தோன்றிருக்கலாம் என சார்லஸ் ரஸ்சல் கௌல்ட்டர் மற்றும் பேட்டீரிசியா டர்னர் ஆகியோர் கருதுகின்றனர். மேலும் சந்திரக் கடவுளான அல்மக்கா, வாத் மற்றும் வாரா போன்ற கடவுள்கள் பெயர்களிலிருந்து அல்லா எனும் பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.[20]
இலாஹ் மற்றும் பாபிலோனிய மற்றும் கானான் தேசக் கடவுளான எல்லிற்கும் அல்லாஹ்விற்கும் தொடர்பு சரியாக அறியப்படவில்லை என ஆல்பிரட் குல்லாயும் கூறுகிறார். யூத மற்றும் கிறித்துவ ஆதாரங்களின்படி, பல தெய்வ வழிபாடு கொண்ட அரேபியர்கள் அல்லாவை தங்கள் தலைமைக் கடவுள் என்று நன்கு அறிந்தவர்களாக இருந்தனர் என வெல்ஹௌசன் குறிப்பிடுகிறார்.[21] கிபி 4-ஆம் நூற்றாண்டின் தெற்கு அரபு நாட்டின் கல்வெட்டுக் குறிப்புகள் ரஹ்மான் எனும் கடவுளை சொர்க்கத்தின் தலைவர் எனக்குறிப்பிடுகிறது.[22]
அல்-லாத், மனாத் மற்றும் அல்-உஸ்ஸா
அல்-லாத், மனாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆகிய பெண் தெய்வங்களை அரபு நாட்டின் மக்கா மற்றும் மதீனா நகரங்கள் கொண்ட ஹெஜாஸ் பகுதிகளில் அதிகமாகக் கொண்டாடினர்.[13][23][24][25][26]
குலக்குறிச் சின்ன வழிபாடு
மக்கா நகரில் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையின் சுவரில் அமைக்கப்பட்டுள்ள கறுப்புக் கல்லை இறைவனால் பூமியில் இறக்கப்பட்டது எனக்கருதி அரேபியர்கள் உள்ளிட்ட ஆபிரகாமிய சமய மக்கள் தங்கள் குலக்குறிச் சின்னமாக வழிபட்டனர்.[27]
Remove ads
சமயச் சடங்குகள்

சிலை வழிபாட்டுப் பழக்கம்
அரேபியர்கள் கருங்கல்லில் செய்யப்பட்ட தெய்வங்களின் உருவச் சிலைகளைச் சுற்றி வலம் வந்து வழிபாட்டனர்.[28] [29] பொதுவாக தெற்கு அரேபியால் கடவுள் சிலையின் முகம் மட்டும் தெரியும் அளவிற்கு வடிக்கப்பட்டிருக்கும்.[28]
சிலைகளின் நூலில் இரண்டு வகையான சிலைகள் விவரிக்கப்பட்டுள்ளது. அவைகள் மரம், தங்கம் மற்றும் வெள்ளியால் மனித வடிவத்தில் செய்யப்பட்டவைகளுக்கு சிலைகள் என்றும், கல்லால் செய்யப்பட்டவைகளை படிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[30]
தெற்கு அரபு நாட்டில், இறைவியின் பிரதிநிதியாக, கழுகு அல்லது எருது போன்ற விலங்குகள் வடிவத்தில் சிலை செய்து வழிபடும் வழக்கம் பொதுவாக இருந்ததுள்ளது.[31]

புனித இடங்கள்
அரேபியர்கள் புனித இடங்களை ஹிமா, ஹரம் அல்லது மகரம் என்று குறிப்பிடுவதுடன், வழிபாட்டுத் தலங்களில் வன்முறை தடைசெய்யப்பட்டிருந்தது.[32] அரபு நாட்டில் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறந்த வெளியில், நீர் ஊற்றுகள் அல்லது சோலைகளுடன் கூடியிருந்தது. [32] நகரங்களில் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றி சுவர் எழுப்பியும், அலங்காரத்துடன் விளங்கியது.[33]
பூசாரிகளும் மற்றும் காவலர்களும்
அரபு நாட்டின் புனித தலங்களில், குறிப்பாக ஹெஜாஸ் பிரதேசத்தில், குறைசி மக்கள் காவல் புரிபவர்களாகவும் மற்றும் பூசாரிகளாகவும் இருப்பர்.[34] இவர்கள் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உரிமையாளர்களாக இருப்பதுடன், வழிபட வருபவர்களிடமிருந்து காணிக்கைகளைப் பெறுவர்.[34] பெரிய வழிபாட்டுத் தலங்களில் தலைமைப் பூசாரிகள் வழிபாடு நடத்துவர்.[34]
புனித யாத்திரைகள்
அரபு நாட்டில் புனிதத் தலங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை யாத்திரை செல்வது மக்கள் சமயக் கடமையாகக் கொண்டிருந்தனர்.[35] தெற்கு அரேபியர்கள் அல்-மக்கா எனும் தலத்திற்கு சூலை மாதம் புனித யாத்திரை மேற்கொண்டனர்.[36][36]
மக்கா யாத்திரை
இசுலாமுக்கு முந்தைய அரேபியர்கள் புனித மாதங்களில் அரபா குன்றுக்கு அருகே அமைந்த மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, மக்காவில் உள்ள கஃபாவை வழிபட்டு வலம் வந்தனர்.[37]
சமயச் சடங்குகள் மற்றும் பலி காணிக்கை

இசுலாமிற்கு முந்தைய அரேபியர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமயச் சடங்குகளில் ஒட்டகம் போன்ற விலங்குகள், வேளாண் பயிர்கள், சமைத்த உணவு, விலையுயர்ந்த பொருட்கள் இறைவனுக்கு காணிக்கையாக படைத்தனர்.[38] கால்நடைகளை மேய்க்கும் நாடோடி அரேபியர்கள் புனித இடங்களில் ஒட்டகம், ஆடு போன்ற விலங்குகளையும் மற்றும் பறவைகளையும் கடவுளுக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.[39] சமயச் சடங்குகள் மற்றும் பலியிடங்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.[40] பலியிட்ட விலங்கின் இரத்தத்தை பலி பீடங்களில் பூசுவதன் மூலம், தங்களுக்கும், தேவதைக்கும் இடையே நல்ல தொடர்பு ஏற்படுவதாக கருதினர்.[40] சில நேரங்களில் போர்க் கைதிகளை கடவுளுக்கு பலியிடும் முறை இசுலாமுக்கு முந்தைய அரபு நாட்டில் வழக்கத்தில் இருந்தது.[39]
பிற பழக்கங்கள்
மாதவிடாய் கண்ட பெண்களை சிலை வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிப்பதில்லை.[31] தெற்கு அரபு நாட்டின் வழிபாட்டுத் தலங்களில் உடலுறவுக் கொள்வது தடைசெய்ப்பட்டு இருந்தது.[31]
அரபுக் குடிகள் மீதான தாக்கங்கள்
வடக்கு அரபுப் பழங்குடிகளின் ஆக்கிரமிப்புகளால், தெற்கு அரபு சமயத்தில், வடக்கு அரபு மக்களின் சமயக் கடவுள்களின் தாக்கம் அதிகரித்தது.[41] வடக்கு அரபு நாட்டின் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் போன்ற பெண் தெய்வங்களை, தெற்கு அரபு நாட்டில் லாத், உஸ்சயான் மற்றும் மனவ்த் என அழைத்தனர்.[41]
யூத மத மாற்றங்கள்
கிபி 380-இல் யூத சமயத்திற்கு ஆதரவாக ஹிம்யாரைட்டு மன்னர்கள் பல தெய்வ வழிபாட்டை அரபு நாட்டில் தடை செய்தனர்.[42] இருப்பினும் மறைமுகமான இடங்களில் பல தெய்வ வணக்க முறை நடைபெற்றது.[42]
ஹெஜாஸ் பிரதேசம்
அரபு நாட்டின் வடமேற்கில் அமைந்த ஹெஜாஸ் பிரதேசத்தில் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் எனும் மூன்று பெண் தெய்வங்களின் வழிபாடு சிறப்புடன் விளங்கியது. இவைகள் குறைசி எனும் அரபுப் பழங்குடிகளின் வழிபாட்டுத் தெய்வமாக விளங்கியது. [43][44] முக்கியமான மனாத் தெய்வத்தின் சிலை மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே அமைந்திருந்தது. மனாத் தெய்வத்தை வழிபட்டு, பின்னர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் அரேபியர்களிடம் இருந்தது.[30]
இசுலாமிற்கு பிந்தைய அரேபியா
இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் அரபு நாட்டில் பல தெய்வச் சிலைகள் வழிபாடு மறைந்து, உருவமற்ற ஓர் இறை வழிபாடு தற்போது வரை நிலவுகிறது.
Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads