இலங்கை சட்டவாக்கப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை (Legislative Council of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்க சபையாகும். இது 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் சேர் ரொபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனுடன் இணைந்து இலங்கை நிறைவேற்றுப் பேரவையும் நிறுவப்பட்டது. இந்த சட்டவாக்கப் பேரவையே இலங்கையின் முதலாவது பிரதிநிதித்துவ முறையிலான அரசு ஆகும். இந்த சட்டசபை 1931 டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கை அரசாங்க சபையாக மாற்றப்பட்டது.
Remove ads
அறிமுகம்
பிரித்தானிய இலங்கைக்கான பிரதிநிதித்துவ முறைக்கான அரசொன்றை அமைப்பதற்கான முதற்கட்டமாக 1833 கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு சட்டசபையை நிறுவியது. ஆரம்பத்தில் 16 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது: பிரித்தானியத் தேசாதிபதி, நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நிறைவேற்றுப் பேரவை (தலைமைச் செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வுத் தலைவர், பொருளாளர், பொதுப் படைத்தலைவர்), 4 அரச ஊழியர்கள் (மேல், மற்றும் மத்திய மாகாண அரச அதிபர்கள் அடங்கலாக), மற்றும் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், மற்றும் ஒரு பரங்கி) ஆகியோர். அதிகாரபூர்வமற்ற ஆறு உறுப்பினர்களுக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரும் அதிகாரம் இருக்கவில்லை; இவர்கள் சட்டமூலத்துக்கான விவாதங்களில் மட்டுமே பங்குபற்ற முடியும். இதன் மூலம் பிரித்தானிய இலங்கை நிருவாகத்தில் உள்ளூர் மக்களின் குரலைக் கொண்டு வரும் முதலாவது முயற்சியாகும்.
1889 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு தென்னிலங்கைச் சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு பரங்கி).
Remove ads
மெக்கலம் சீர்திருத்தங்கள்
1910 ஆம் ஆண்டில் சட்டசபைக்கு மெக்கலம் சீர்திருத்தங்கள் (McCallum Reforms) அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வமாகவும், 10 பேர் அதிகாரபூர்வமற்ற வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் 6 பேர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர் (இரண்டு தென்னிலங்கைச் சிங்களவர், இரண்டு தமிழர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு முஸ்லிம்). ஏனைய நால்வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (இரண்டு ஐரோப்பியர்கள், ஒரு பரங்கி, மற்றும் ஒரு இலங்கைக் கல்விமான்).
மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் இச்சீர்திருத்தத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனாலும் படிப்பு, மற்றும் சொத்து அடிப்படையிலேயே வாக்களிக்கும் தகைமை கணிக்கப்பட்டது. இதன்படி, 3,000 இற்கும் குறைவானோரே (4%) வாக்களிக்கத் தகுதியுடையோராக இருந்தனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். வருவாயைக் கவனிப்பதற்கெனெ நிதிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
Remove ads
முதலாவது மானிங் சீர்திருத்தங்கள்
1920 ஆம் ஆண்டில் மேலும் சீர்திருத்தங்கள் மானிங் சீர்திருத்தங்கள் (Manning Reforms) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 இலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 14 பேர் அதிகாரபூர்வமானவர்களாகவும் 23 பேர் அதிகாரபூர்வமற்றவர்களாகவும் இருந்தனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் நால்வர் தேசாதிபதியினாலும் (இரண்டு கண்டிச் சிங்களவர், ஒரு முஸ்லிம் மற்றும் ஒருவர் இந்தியத் தமிழர்) ஏனையோர் (11 பேர் பிராந்திய ரீதியாக, 5 ஐரோப்பியர், 2 பரங்கியர், ஒரு வணிகக் கழகத்தவர்) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11 பிராந்தியப் பிரதிநிதிகளில் மூவர் மேற்கு மாகாணத்தில் இருந்தும், ஏனைய 8 மாகாணங்களிலும் இருந்து ஒவ்வொருவரும் ஆவர். இவர்களில் மூவர் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரண்டாவது மானிங் சீர்திருத்தங்கள்
1923 ஆம் ஆண்டில் நடைமுரைப்படுத்தப்பட்ட இரண்டாவது மானிங் சீர்திருத்தங்களை அடுத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 இலிருந்து 49 ஆக அதிகரிக்கப்பட்டது. இவற்றில் 12 பேர் அதிகாரபூர்வமானவர்களாகவும், 37 பேர் அதிகாரபூர்வமற்றவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில், 8 பேர் (இவர்களில் மூன்று முஸ்லிம்கள், இரண்டு இந்தியத் தமிழர்கள் அடங்குவர்) தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். ஏனைய 29 பேரும் (23 பேர் பிராந்திய ரீதியாகவும், 3 ஐரோப்பியர்களும், இரண்டு பரங்கிகளும், மேல் மாகாணத்தில் இருந்து ஒரு இலங்கைத் தமிழரும்) தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட்டனர். 23 பிராந்தியத் தொகுதிகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டன:
- மத்திய மாகாணம் 2
- கிழக்கு மாகாணம் 2
- வட மாகாணம் 5
- மவட்மத்திய மாகாணம் 1
- வடமேற்கு மாகாணம் 2
- சபரகமுவா மாகாணம் 2
- தென் மாகாணம் 3
- ஊவா மாகாணம் 1
- மேல் மாகாணம் 5
இலங்கைச் சட்டசபையின் தலைவராக தேசாதிபதி இருந்தார், ஆனாலும் புதிய சீர்திருத்தங்களை அடுத்து சட்டசபைத் தலைவர் பதவி அமைக்கப்பட்டு தலைவராக தேசாதிபதியே இருந்தார். சட்டசபைப் பிரதித் தலைவர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், தேசாதிபதியே நாட்டின் பெரும்பாலான அதிகாரத்தைக் கொண்டிருந்தார். நிறைவேற்றுப் பேரவையின் ஒரு பகுதியாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் நால்வர் செயற்குழுவில் அங்கத்துவம் பெற்றார்கள்.
Remove ads
சட்டசபை அரசாங்க சபையாக மாற்றம்
மானிங் சீர்திருத்தங்களில் காணப்பட்ட சில குறைபாடுகளை ஆராய்வதற்காக 1927 ஆம் ஆண்டில் டொனமூர் கோமகன் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு டொனமூர் ஆணைக்குழு என அழைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் பரிந்துரையின் படி, டொனமூர் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி உரிமையைப் பெற்றது. 1931 ஆம் ஆண்டில் சட்டசபை கலைக்கப்பட்டு பதிலாக இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது.
சட்டசபை உறுப்பினர்கள்
அதிகாரபூர்வ உறுப்பினர்கள்
|
அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்பரங்கிகள்
வர்த்தகச் சங்கம்
படித்த இலங்கையர்
ஐரோப்பியர்இந்தியத் தமிழர்
கண்டியச் சிங்களவர்
கீழ்ப் பகுதிச் சிங்களவர்
முஸ்லிம்கள்
சிங்களவர்
தமிழர்
பிராந்தியம்
|
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads