சவூதி அரேபியா
மேற்கு ஆசிய நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவூதி அரேபியா[d] (Saudi Arabia) மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபிய இராச்சியம்[e] (Kingdom of Saudi Arabia அல்லது KSA) என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் நடுவில் இது அமைந்துள்ளது. வளைகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை இது ஆக்கிரமித்துள்ளது. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 21.50 இலட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்நாட்டை ஆசியாவில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும், மத்திய கிழக்கில் இருப்பதிலேயே மிகப் பெரிய நாடாகவும், மற்றும் உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடாகவும் ஆக்குகிறது.[14] இந்நாட்டின் மேற்கே செங்கடலும், வடக்கே ஜோர்தான், ஈராக்கு, மற்றும் குவைத்தும், கிழக்கே பாரசீக வளைகுடா, பகுரைன்,[15] கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும், தென் கிழக்கே ஓமானும், தெற்கே யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் வட மேற்கே அமைந்துள்ள அகபா வளைகுடாவானது சவூதி அரேபியாவை எகிப்து மற்றும் இசுரேலிலிருந்து பிரிக்கிறது. செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகிய இரு கடல்களின் கடற்கரையையும் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா தான். இந்நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி வறண்ட பாலைவனம், தாழ்நிலப் பகுதி, புல்வெளி மற்றும் மலைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் ரியாத் ஆகும். ஜித்தா மற்றும் இஸ்லாமின் இரு மிகப் புனிதமான நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளிட்டவை பிற முக்கியமான நகரங்களில் உள்ளடங்கியவையாகும். இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3.22 கோடியாகும். அரபு உலகத்தில் சவூதி அரேபியா நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
நவீன கால சவூதி அரேபியாவை உள்ளடக்கிய நிலப்பரப்பான இஸ்லாமுக்கு முந்தைய அரேபியாவானது பல பண்டைக் காலப் பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களின் தளமாகும். ஆப்பிரிக்காவுக்கு வெளியில் சில தொடக்க கால மனிதச் செயல்பாடுகளின் தடங்களை வரலாற்றுக்கு முந்தைய சவூதி அரேபியாவானது காண்பிக்கிறது.[16] உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமயமான இஸ்லாம் தற்போதைய சவூதி அரேபியா என்று அழைக்கப்படும் பகுதியில் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகியது.[17] இஸ்லாமிய இறை தூதர் முகம்மது நபி அரபுத் தீபகற்பத்தின் மக்களை ஒன்றிணைத்தார். ஓர் ஒற்றை இஸ்லாமிய சமய ஆட்சி அமைப்பை உருவாக்கினார். பொ. ஊ. 632இல் இவரது இறப்பைத் தொடர்ந்து இவரைப் பின்பற்றியவர்கள் முஸ்லிம் ஆட்சியை அரேபியாவைத் தாண்டி விரிவாக்கினர். வடக்கு ஆப்பிரிக்கா, நடு, தெற்கு ஆசியா மற்றும் ஐபீரியா ஆகிய நிலப்பரப்புகளை தசாப்தங்களுக்குள்ளாகவே வென்றனர்.[18][19][20] நவீன கால சவூதி அரேபியாவில் இருந்து தோன்றிய அரபு அரசமரபுகள் ரசிதுன் (632–661), உமையா (661–750), அப்பாசிய (750–1517), மற்றும் பாத்திமா (909–1171) கலீபகங்களையும், மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏராளமான பிற அரசமரபுகளையும் தோற்றுவித்தன.
சவூதி அரேபியா இராச்சியமானது 1932ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அசீசால் நிறுவப்பட்டது. இவர் அப்துல்லா பின் அப்துல் அசீசு என்றும் கூட அறியப்படுகிறார். இவர் ஹெஜாஸ், நஜது, கிழக்கு அரேபியாவின் (அல் அக்சா) பகுதிகள் மற்றும் தெற்கு அரேபியா (அசீர்) ஆகியவற்றை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மூலம் ஓர் ஒற்றை அரசாக மாற்றினார். இவரது படையெடுப்புகள் 1902ஆம் ஆண்டு ரியாத்தைக் கைப்பற்றியதிலிருந்து தொடங்கின. ரியாத்தே இவரது சவூத் குடும்பத்தின் பூர்வீக இடமாகும். அன்றிலிருந்து சவூதி அரேபியா ஓர் ஒட்டு மொத்த முடியரசாக, பொது மக்களின் உள்ளீடு இன்றி, தாங்களாகவே முடிவெடுக்கும் உரிமையைப் பிறருக்கு அளிக்காத, முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை அமைத்துள்ளது.[21] இதன் அடிப்படைச் சட்டத்தில் சவூதி அரேபியா தன்னைத் தானே ஓர் இறையாண்மையுள்ள அரபு இஸ்லாமிய அரசு என்றும், அதன் அதிகாரப்பூர் சமயம் இஸ்லாம் என்றும், அதிகாரப்பூர்வ மொழி அரபு மொழி என்றும் வரையறுத்துள்ளது.[22][23] ஏமன் உள்நாட்டுப் போரில் இதன் தலையீடு, தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக ஆதாரம் இல்லாவிட்டாலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் பரவலான மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு கொள்கைகளுக்காக சவூதி அரசாங்கமானது விமர்சனத்தை ஈர்த்துள்ளது.[24][25]
சவூதி அரேபியா ஒரு பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாகக் கருதப்படுகிறது.[26][27] 1938இல் இந்நாட்டில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து[28][29] இராச்சியமானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் உருவாகியுள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வளங்களையும், ஆறாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.[30] சவூதி அரேபியா உலக வங்கியால் ஒரு அதிக வருமானப் பொருளாதாரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி-20 முக்கியமான பொருளாதாரங்களில் உள்ள ஒரே ஒரு அரபு நாடு இதுவாகும்.[31][32] சவூதி அரேபியாவின் பொருளாதாரமானது மத்திய கிழக்கிலேயே மிகப் பெரியதாகவும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகிலேயே 19ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி 17ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் சவூதி அரேபியா அதிக உயர் தரத்தைக் கொண்டுள்ளது.[33] இலவசப் பயிற்சியுடைய பல்கலைக்கழகக் கல்வி, தனி நபர் வருமான வரி இல்லாத நிலை[34] மற்றும் அனைவருக்குமான இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை சவூதி அரேபியா வழங்குகிறது. அயல் நாட்டுப் பணியாளர்கள் மீதான இதன் சார்பின் காரணமாக சவூதி அரேபியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய குடியேற்ற மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியர்கள் உலகின் மிக இளம் வயதுடைய மக்களில் ஒருவராக உள்ளனர். மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் 25 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக உள்ளனர்.[35][36] வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஐக்கிய நாடுகள் அவை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு நாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஓப்பெக் ஆகியவற்றில் செயல்பாட்டிலுள்ள மற்றும் தொடக்கக் கால உறுப்பினராக சவூதி அரேபியா திகழ்கிறது. மேலும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு பேச்சுவார்த்தைப் பங்கெடுப்பாளராகவும் உள்ளது.
Remove ads
பெயர்க் காரணம்
ஹெஜாஸ் மற்றும் நஜது இராச்சியத்தின் ஒன்றிணைப்பைத் தொடர்ந்து அப்துல் அசீசு பின் சவூத் 23 செப்டம்பர் 1932 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டார். புதிய அரசுக்கு அல்-மம்லக்கா அல்-அரபிய்யா அஸ்-ஸுவுதிய்யா (அரபு மொழி المملكة العربية السعودية ) என்று பெயரிட்டார். இது பொதுவாக "சவூதி அரேபிய இராச்சியம்" என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.[37] ஆனால், இலக்கிய ரீதியாக இதன் பொருளானது "சவூதி அரபு இராச்சியம்"[38] அல்லது "அரேபியாவின் சவூதி இராச்சியம்" (ஜோர்தானை ஒப்பிடுக) ஆகும்.
"சவூதி" என்ற சொல்லானது இந்நாட்டின் அரபுப் பெயரான அஸ்-ஸுவுதிய்யா என்ற ஆக்கக்கூறில் இருந்து தருவிக்கப்பட்டதாகும். ஒரு நிசுபா என்று அறியப்படும் பெயரடையின் ஒரு வகை இதுவாகும். இது சவூதி அரச குடும்பத்தின் அரசமரபுப் பெயரான அல் சவூதியிலிருந்து (அரபு மொழி آل سعود) உருவாக்கப்பட்டது. இதன் சேர்ப்பானது நாடானது அரச குடும்பத்தின் தனியுடைமை என்ற பார்வையை வெளிப்படுத்துகிறது.[39][40] அல் சவூத் என்பது ஓர் அரேபியப் பெயர் ஆகும். "இவரின் குடும்பம்" என்ற பெயருடைய அல் என்ற வார்த்தையைச் சேர்த்ததன் மூலம் இது வருகிறது.[41] இதனுடன் முன்னோரின் தனி நபர் பெயரான சவூத் சேர்க்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் இந்த அரசமரபைத் தோற்றுவித்த முகம்மது பின் சவூதின் தந்தையான சவூத் இப்னு முகம்மது இப்னு முக்ரினின் பெயரானது அல் சவூத் என்ற பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது.[42]
Remove ads
வரலாறு
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

அரபுத் தீபகற்பத்தில் மனிதக் குடியிருப்புக்கான ஆதாரமானது 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளது என காலமிடப்படுகிறது.[43] ஒரு 2011ஆம் ஆண்டு ஆய்வானது கிழக்கு ஆசியா முழுவதும் பரவிய முதல் நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கொம்பு மற்றும் அரேபியாவை இணைக்கும் பாபுல் மந்தபு வழியாகப் பரவினர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[44] மனிதனின் பரிணாமம் மற்றும் பரவலைப் புரிந்து கொள்வதற்கு அரபுத் தீபகற்பமானது ஒரு மையப் பகுதியாகக் கருதப்படுகிறது. குவாட்டர்னரி (25.8 இலட்சம் ஆண்டுகள் முதல் தற்போது வரை) காலத்தில் அரேபியா ஒரு மட்டு மீறிய சூழ்நிலை ஏற்றத் தாழ்வுகளின் கீழ் சென்றது. மிகப் பெரிய பரிணாமம் மற்றும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு இது வழி வகுத்தது. அரேபியா ஒரு செழிப்பான தொடக்க கற்காலத்தின் கடைசிப் பகுதியில் கொண்டுள்ளது. இப்பகுதியில் ஓல்தோவன் போன்ற களங்களின் எண்ணிக்கையானது ஐரோவாசியாவைத் தொடக்க கால மனித இனங்கள் காலனிப்படுத்தியதில் அரேபியா ஆற்றிய ஒரு முக்கியமான பங்கைக் காட்டுகிறது.[45]
புதிய கற்காலத்தில் நவீன கால தென்மேற்கு நஜத்தில் அதன் மையத்தைக் கொண்டிருந்த அல்-மகர் போன்ற முக்கியமான பண்பாடுகள் செழித்திருந்தன. மனித அறிவு மற்றும் கைவினைத் திறமைகளில் அல்-மகர் ஒரு "புதிய கற்காலப் புரட்சியாகக்" கருதப்படலாம்.[46] இப்பண்பாட்டை விலங்குகளைப் பரவலாகக் கொல்லைப்படுத்தியதைக் கொண்டிருந்த உலகின் முதல் பண்பாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். குறிப்பாக குதிரையைக் குறிப்பிடலாம். இது புதிய கற்காலத்தின் போது செழித்திருந்தது.[47][48] அல்-மகர் சிலைகளானவை அப்பகுதியிலேயே கிடைக்கப்பட்ட கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. சிலைகள் ஒரு மையக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்ததாகத் தோன்றுகிறது. குடியிருப்பு வாசிகளின் சமூக மற்றும் சமய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்கை இது ஆற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[49]
நவம்பர் 2017இல் வடமேற்கு சவூதி அரேபியாவின் ஒரு குன்றுப் பகுதியான சுவாய்மிசில் அநேகமாகக் கொல்லைப்படுத்தப்பட்ட நாய்கள் (கானான் நாயை ஒத்திருந்தன) மற்றும் தோல் வார்களை அணிந்திருந்த படங்களைக் காட்டும் வேட்டையாடும் காட்சிகளானவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பாறை ஓவியங்களானவை 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. உலகில் நாய்கள் தொடக்க காலத்தில் சித்தரிக்கப்பட்ட ஓவியங்களாக இது இந்த ஓவியங்களை ஆக்குகிறது.[50]
பொ. ஊ. மு. 4ஆவது ஆயிரம் ஆண்டின் முடிவில் அரேபியா வெண்கலக் காலத்திற்குள் நுழைந்தது. உலோகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இக்காலமானது அதன் 2 மீட்டர் உயரச் சமாதிகளை பண்பாகக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான கோயில்களின் இருப்பானது தொடருகிறது. உண்மையில் சிவப்பு நிறங்களால் வண்ணம் பூசப்பட்ட பல தனியாக நிற்கக் கூடிய சிற்பங்களையும் இக்கோயில்கள் உள்ளடக்கியிருந்தன.[51]
மே 2021இல் ஐல் பகுதியில் அன் நசீம் என்று பெயரிடப்பட்ட 3,50,000 ஆண்டுகள் பழைய ஒரு தழும்பழிக் களத்தைக் கண்டறிந்ததாக தொல்லியலாளர்கள் அறிவித்தனர். வடக்கு சவூதி அரேபியாவில் மிகப் பழமையான மனிதக் குடியிருப்பாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கைக் கோடாரிகள் மற்றும் கல் கருவிகள் உள்ளிட்ட 354 தொல்பொருட்கள் தென்மேற்கு ஆசியாவில் குடியமர்ந்திருந்த தொடக்க காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கருவி உருவாக்கும் பாரம்பரியங்கள் குறித்த தகவலை அளித்தன. நெபுத் பாலைவனத்தில் தழும்பழிக் களங்களில் கண்டறியப்பட்ட பொருட்களின் எச்சங்களை ஒத்தவாறு பழைய கற்காலத் தொல்பொருட்களும் இருந்தன.[52][53][54][55]
இஸ்லாமுக்கு முன்

சவூதி அரேபியாவில் தொடக்க கால நிலையான வாழ்ந்த மக்களின் பண்பாடானது உபைதுகள் காலத்தில் தொசாரியாவில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் வறண்ட நிலையின் தொடக்கம் ஆகியவை குடியிருப்பின் இந்த கட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், இதைத் தொடர்ந்து வந்த ஆயிரமாவது ஆண்டில் சிறிதளவே தொல்லியல் ஆதாரமானது எஞ்சியுள்ளது.[57] இப்பகுதியில் குடியிருப்புகளானவை மீண்டும் தில்முன் காலத்தில் மூன்றாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் தொடங்குகின்றன. உரூக்கிலிருந்து கிடைக்கப் பெற்றதாக அறியப்படும் பதிவுகளானவை தில்முன் என்ற ஒரு இடத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. இந்த இடமானது பல தருணங்களில் தாமிரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பிந்தைய காலங்களில் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரக்கட்டைகளின் ஒரு ஆதாரமாக இப்பகுதி திகழ்ந்தது. உண்மையில் சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இது குறித்தது என அறிஞர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக உட்பகுதியில் அமைந்திருந்த உம் அன்-நுசி மற்றும் உம் அர்-ரமத் மற்றும் கடற்கரையிலிருந்த தரௌத் ஆகிய முதன்மையான தில்முனியக் குடியிருப்புகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. சாத்தியமான வகையில் தரௌத் தீவானது தில்முனின் முதன்மையான துறைமுகமாகவும், தலைநகரமாகவும் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[56] பொறிக்கப்பட்ட மெசொப்பொத்தேமியக் களிமண் பட்டிகைகளானவை தில்முனியத் தொடக்க காலத்தில் படி நிலை அமைப்புடைய ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பின் ஒரு வடிவமானது இருந்தது என்று பரிந்துரைக்கின்றன. 1966இல் தரௌத் என்ற இடத்தில் நடத்தப்பட்ட நில ஆய்வானது தில்முனியக் காலத்திற்குக் (பொ. ஊ. மு. 3ஆவது 1,000 ஆண்டின் நடுப்பகுதி) காலமிடப்பட்ட ஒரு பெரிய சிலையை வெளிக் கொணர்ந்த ஒரு பண்டைக் கால சமாதிக் களத்தை வெளிக் காட்டியது. இச்சிலையானது தில்முனின் கலை ரீதியான கொள்கை மீதான வலிமையான மெசொப்பொத்தேமியத் தாக்கத்தின் கீழ் அப்பகுதியிலேயே உருவாக்கப்பட்டிருந்தது ஆகும்.[56]
பொ. ஊ. மு. 2,200ஆம் ஆண்டு வாக்கில் அறியப்படாத காரணங்களுக்காக தில்முனின் மையமானது தரௌத் மற்றும் சவூதி அரேபியக் கண்டப் பகுதியிலிருந்து பகுரைன் தீவுக்கு இடம் மாற்றப்பட்டது. ஓர் உயர் வளர்ச்சியையுடைய குடியிருப்பானது அங்கு உருவாகியது. அங்கு இக்காலத்திற்குக் காலமிடப்படும் பணியாட்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோயில் வளாகம் மற்றும் ஆயிரக்கணக்கான சமாதி மேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[56]
வெண்கலக் காலத்தின் பிந்தைய பகுதி வாக்கில் சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு வரலாற்று ரீதியில் பதியப்பட்ட மக்கள் மற்றும் நிலம் (மிதியர் மற்றும் மிதியா) விவிலியத்தில் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தபௌக்கில் மையத்தைக் கொண்டிருந்த இது வடக்கே வாடி அரபா முதல் தெற்கே அல் வெச் பகுதி வரை நீண்டிருந்தது.[58] மிதியாவின் தலை நகரமானது குரய்யா ஆகும்.[59] 35 எக்டேர் பரப்பளவைக் கொண்டிருந்த ஒரு பெரிய அரண்களையுடைய நகர்க் காப்பரணை இது கொண்டிருந்தது. இதற்குக் கீழ் 15 எக்டேர் பரப்பளவிலான ஒரு சுவர்களையுடைய குடியிருப்பானது அமைந்திருந்தது. இந்நகரமானது 12,000 குடியிருப்பாளர்கள் வரையிலும் கொண்டிருந்தது.[60] மிதியாவுடனான இசுரேலின் இரு போர்கள் குறித்து விவிலியம் குறிப்பிடுகிறது. இவை பொ. ஊ. மு. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நடைபெற்றிருந்தன. அரசியல் ரீதியாக மிதியர்கள் ஐந்து மன்னர்களால் (எவி, ரெகெம், திசுர், குர், மற்றும் ரெபா) தலைமை தாங்கப்பட்ட அதிகாரப் பரவலையுடைய அமைப்பைக் கொண்டிருந்ததாக விளக்கப்பட்டுள்ளனர். இம்மன்னர்களின் பெயர்களானவை முக்கியமான மிதியக் குடியிருப்புகளின் இட அமைப்பின் பெயர்களாகத் தோன்றுகிறது.[61] பழங்குடியினங்களின் ஒரு கூட்டமைப்பை மிதியா குறிப்பிட்டிருக்கலாம் என்ற பார்வையைக் கொண்டிருப்பது பொதுவானதாக உள்ளது. நிலையான வாழ்க்கை வாழ்ந்த மக்கள் ஹிஜாசில் குடியமர்ந்திருந்தனர். அதே நேரத்தில், அவர்களின் நாடோடித் துணை மக்கள் மேய்ச்சல் வாழ்க்கை நடத்தினர். சில நேரங்களில் பாலத்தீனம் வரை சூறையாடல்கள் செய்தனர்.[62] ஒட்டகங்கள் கொல்லைப்படுத்தப்பட்டதிலிருந்து மிகு நலம் பெற்ற தொடக்க கால மக்களில் ஒருவராக நாடோடி மிதியர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இப்பகுதியில் கடினமான நிலப்பரப்புகள் வழியாக பயணிப்பதற்கு ஒட்டகங்கள் இவர்களுக்கு வாய்ப்பளித்தன.[62]

பொ. ஊ. மு. 7ஆம் நூற்றாண்டின் முடிவில் வடமேற்கு அரேபியாவில் ஒரு வளர்ந்து வந்த இராச்சியமானது தோன்றியது. இது தெதான் சேக்கியமாகத் தொடங்கியது. லிகியான் இராச்சியமாக வளர்ச்சியடைந்தது.[64][65] இக்காலத்தின் போது ஒரு பெரிய பரவலான நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த ஓர் இராச்சியமாக தெதான் உருமாறியது.[64] பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கு மற்றும் வடக்கு இடையிலான பரபரப்பான பொருளாதாரச் செயல்பாடுகளுடன் லிகியானானது கவிகை வண்டிச் சாலையில் இதன் உத்தி ரீதியிலான அமைவிடத்திற்குத் தகுந்த பெரிய செல்வாக்கைப் பெற்றது.[66] லிகியானியர் தெற்கே யத்ரிப்பில் இருந்து வடக்கே லெவண்டின் பகுதிகள் வரையிலான ஒரு பெரிய நிலப்பரப்பு மீது ஆட்சி செலுத்தினர்.[67] பண்டைக் காலத்தில் அகபா வளைகுடாவானது லிகியான் வளைகுடா என்று அழைக்கப்பட்டு வந்தது லிகியார் பெற்ற விரிவான செல்வாக்கிற்கு ஒரு சான்றாகும்.[68]
பொ. ஊ. மு. 65 வாக்கில் நபாத்தியர் எக்ராவைக் கைப்பற்றியதற்குப் பிறகு தய்மா மீதான அவர்களது அணி வகுப்பின் போது லிகியானியர்கள் நபாத்தியர்களின் கைகளில் விழுந்தனர். பொ. ஊ. மு. 9ஆம் ஆண்டில் அவர்களது தலைநகரமான தெதானுக்கும் நபாத்தியர் அணி வகுத்தனர். உரோமைப் பேரரசால் அவர்களது நிலப்பரப்பு இணைக்கப்படும் வரை வட அரேபியாவின் பெரும் பகுதிகளை நபாத்தியர் ஆட்சி செய்தனர். உரோமானியர் இவ்வாறு இணைக்கப்பட்ட பகுதியை அரேபியா பெத்ரியா என்று பெயர் மாற்றினார். பொ. ஊ. 630 வரை உரோமானியர்களின் ஆட்சியின் கீழ் தான் இப்பகுதி இருந்தது.[69]
நடுக் காலங்களும், இஸ்லாமின் வளர்ச்சியும்

இஸ்லாமின் தொடக்கத்திற்குச் சற்று முன்னர் நகர்ப்புற வணிகக் குடியிருப்புகள் (மக்கா மற்றும் மதீனா போன்றவை) தவிர்த்து தற்போது சவூதி அரேபியாவாக உருவாகி இருக்கும் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதியானது நாடோடி மேய்ச்சல் வாழ்வுப் பழங்குடியினச் சமூகங்களால் குடியமரப்பட்டிருந்தது.[72] இஸ்லாமிய இறை தூதர் முகம்மது மக்காவில் அண். பொ. ஊ. 570இல் பிறந்தார். 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகம்மது தீபகற்பத்தின் பல்வேறு பழங்குடியினங்களை ஒன்றிணைத்தார். ஓர் ஒற்றை இஸ்லாமிய சமய ஆட்சி அமைப்பை உருவாக்கினார்.[73] 632இல் இவரது இறப்பைத் தொடர்ந்து இவரைப் பின்பற்றியவர்கள் முஸ்லிம் ஆட்சியின் கீழ் நிலப்பரப்பை அரேபியாவைத் தாண்டியும் விரிவாக்கினர். மேற்கே ஐபீரியத் தீபகற்பம் முதல் கிழக்கே நடு மற்றும் தெற்காசியாவின் பகுதிகள்[சான்று தேவை] வரையிலான நிலப்பரப்பைச் சில தசாப்தங்களுக்குள்ளாகவே வென்றனர்.[18][19][20] புதிதாக வெல்லப்பட்ட நிலங்களுக்குக் கவனமானது மாறிய போது முஸ்லிம் உலகின் அரசியல் ரீதியாக மிக வெளிப் பகுதியாக அரேபியா உருவானது.[73]
நவீன கால சவூதி அரேபியாவில் குறிப்பாக ஹெஜாஸ் பகுதியில் தோன்றிய அரேபியர்கள் ரசிதுன் (632–661), உமையா (661–750), அப்பாசிய (750–1517), மற்றும் பாத்திமா (909–1171) கலீபகங்களை நிறுவினர். 10ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மக்காவின் சரீப் என்று அறியப்பட்ட ஓர் உள்ளூர் அரேபிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கா மற்றும் மதீனா இருந்தன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பகுதாது, கெய்ரோ அல்லது இசுதான்புலை அடிப்படையாகக் கொண்டிருந்த முக்கியமான இஸ்லாமியப் பேரரசுகளில் ஒன்றின் ஆட்சியாளரிடம் சரீப் தன் ஆதரவை வேண்டியிருந்தார். தற்போது சவூதி அரேபியாவாக உருவாகிய பகுதியின் எஞ்சிய பிற அனைத்துப் பகுதிகளும் பாரம்பரிய பழங்குடியின ஆட்சிக்கு மீண்டும் திரும்பின.[74][75]

பெரும்பாலான 10ஆம் நூற்றாண்டில் பாரசீக வளைகுடாவில் மிக சக்தி வாய்ந்த படையாக இசுமாயிலி கர்மதியர்கள் இருந்தனர். 930இல் கர்மதியர்கள் மெக்காவைச் சூறையாடினர். முஸ்லிம் உலகத்தை மிகுந்த சினத்திற்கு உள்ளாக்கினர். குறிப்பாகக் கறுப்புக் கல்லை அவர்கள் திருடியது இதற்குக் காரணமானது.[76] 1077-1078இல் அப்துல்லா பின் அலி அல் உயுனி என்று பெயரிடப்பட்ட ஓர் அரேபிய சேக் பகுரைன் மற்றும் அல்-அசாவில் செல்யூக் பேரரசின் உதவியுடன் கர்மதியர்களைத் தோற்கடித்தார். உயுனி அரசமரபைத் தோற்றுவித்தார்.[77][78] உயுனிய அமீரகமானது பின்னர் அதன் நிலப்பரப்பை நஜத்திலிருந்து சிரியப் பாலைவனம் வரை விரிவாக்கியது.[79] இவர்கள் உசுபுரியர்களால் 1253இல் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்.[80] 1320இல் ஓர்முசுவின் பாரசீக ஆட்சியாளர்கள் பகுரைன் மற்றும் கதீபைக் கைப்பற்றியதற்குப் பிறகு உசுபுரிய ஆட்சியானது பலவீனம் அடைந்தது.[81] ஓர்முசுவிற்குத் திறை செலுத்திய சர்வானிய அரசமரபானது 14ஆம் நூற்றாண்டில் கிழக்கு அரேபியாவை ஆட்சி செய்யத் தொடங்கியது.[82][83] 15ஆம் நூற்றாண்டில் சர்வனியர்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்ததற்குப் பிறகு இப்பகுதியின் கட்டுப்பாட்டை சப்ரியர்கள் பெற்றனர். இப்பகுதியின் பொருளாதார வருவாய்களுக்காக இரு தசாப்தங்களுக்கும் மேலாக சப்ரியர்கள் ஓர்முசுவுடன் மோதலில் ஈடுபட்டனர். சப்ரியர்கள் 1507இல் இறுதியாகத் திறை செலுத்த ஒப்புக் கொண்டனர்.[82] இப்பகுதியை அல்-முந்தபிக் பழங்குடியினமானது பிறகு ஆட்சி செய்தது. அவர்கள் உதுமானிய மேலாட்சியின் கீழ் வந்தனர். அவர்களுக்கு எதிராக பானி கலீத் பழங்குடியினமானது பின்னர் 17ஆம் நூற்றாண்டில் கிளர்ச்சி செய்தது. கட்டுப்பாட்டைப் பெற்றது.[84] அவர்களின் ஆட்சியானது உச்ச நிலையில் ஈராக்கிலிருந்து ஓமன் வரை விரிவடைந்திருந்தது. இவர்களும் கூட உதுமானிய மேலாட்சியின் கீழ் வந்தனர்.[85][86]
உதுமானிய ஹெஜாஸ்
16ஆம் நூற்றாண்டில் உதுமானியர்கள் பேரரசில் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாக் கடற்கரையை (ஹெஜாஸ், அசீர் மற்றும் அல்-அக்சா) இணைத்தனர். உள் நிலப்பரப்புகள் மீதும் தங்களது மேலாட்சிக்கு உரிமை கோரினார். இதற்கு ஒரு காரணம் செங்கடல் (இவ்வாறாக ஹெஜாஸ்) மற்றும் இந்தியப் பெருங்கடலைத் தாக்கும் போத்துக்கீசிய முயற்சிகளை முறியடிப்பதாகும்.[87] பேரரசின் மைய அதிகாரத்தின் ஏற்ற இறக்கம் உடைய வலிமை அல்லது பலவீனத்துடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்த நிலங்களின் மீதான உதுமானியர்களின் கட்டுப்பாட்டின் அளவானது வேறுபட்டது.[88][89] மான் மற்றும் அகபா நகரங்கள் உள்ளிட்ட மானின் சஞ்சக்கைச் சேர்ப்பது தொடர்பாக தெற்கு ஜோர்தானுடனான பிரச்சினை போன்ற பிந்தைய நிச்சயமற்ற தன்மைகள் இத்தகைய மாற்றங்களுக்குப் பங்களித்தன.[சான்று தேவை]
சவூத் அரசமரபும், ஒன்றிணைப்பும்

அல் சவூத் என்று அறியப்படும் சவூதி அரச குடும்பமாக உருவானதன் வளர்ச்சியானது நடு அரேபியாவின் நஜத்தின் திரியா பட்டணத்தில் 22 பெப்பிரவரி 1727 அன்று முகம்மது பின் சவூத் அமீராகப் பதவிக்கு வந்ததிலிருந்து தொடங்கியது.[90][91] 1744இல் இவர் சமயத் தலைவரான முகம்மது இப்னு அப்த் அல்-வகாபுடன் இணைந்தார்.[92] வகாப் வகாபி இயக்கத்தை நிறுவியவர் ஆவார். சன்னி இஸ்லாமின் ஒரு கண்டிப்பான தூயநெறி வடிவம் இவ்வியக்கம் ஆகும்.[93] சவூதி விரிவாக்கத்திற்குச் சித்தாந்த ஊக்கத்தை இக்கூட்டணி கொடுத்தது. இன்றும் சவூதி அரேபிய அரசமரபு ஆட்சியின் அடிப்படையாக இது தொடர்கிறது.[94]
ரியாத்தைச் சுற்றியிருந்த பகுதியில் நிறுவப்பட்ட திரியா அமீரகமானது துரிதமாக விரிவடைந்தது. சவூதி அரேபியாவின் தற்கால நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றைக் குறுகிய காலத்திற்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1802இல் கர்பலாவைச் சூறையாடியது. 1803இல் மக்காவைக் கைப்பற்றியது. 1818இல் எகிப்தின் உதுமானிய அரசப் பிரதிநிதியான மொகம்மெது அலி பாசாவால் இது அழிக்கப்பட்டது.[95] இதை விட மிகச் சிறிய நஜத் அமீரகமானது 1824இல் நிறுவப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதி முழுவதும் சவூதி அரேபியாவாக உருவான நிலப்பரப்பின் உட்பகுதிகளின் கட்டுப்பாட்டிற்கு அல் சவூத் மற்றொரு அரேபிய ஆட்சி செய்யும் குடும்பமான அல் ரசீதுடன் போட்டியிட்டார். அல் ரசீத் சபால் சம்மர் அமீரகத்தை ஆட்சி செய்தார். 1891 வாக்கில் அல் ரசீத் வெற்றி பெற்றார். அல் சவூத் நாடு கடந்து குவைத்துக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[74]

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதுமானியப் பேரரசானது தொடர்ந்து கட்டுப்பாட்டையோ அல்லது மேலாட்சியையோ பெரும்பாலான தீபகற்பம் முழுவதும் கொண்டிருந்தது. இந்த மேலாட்சியின் கீழாக அரேபியாவானது பழங்குடியின ஆட்சியாளர்களின் ஒட்டு வேலை போன்ற ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.[96][97] இதில் முக்கியத்துவமிக்கவராக மக்காவின் சரீப் திகழ்ந்தார். அவர் ஹெஜாஸ் பகுதியை ஆட்சி செய்தார்.[98] 1902இல் அப்துல் ரகுமானின் மகனான அப்துல் அசீசு ரியாத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றினார். இவர் அப்துல்லா பின் அப்துல் அசீசு என்று பிற்காலத்தில் அறியப்பட்டார். அல் சவூத் ஆட்சியை நஜத்திற்குக் கொண்டு வந்தார். மூன்றாவது "சவூதி அரசை" உருவாக்கினார்.[74] வகாபிய இயக்கத்தால் அகத் தூண்டுதல் பெற்ற ஒரு பழங்குடியின இராணுவமான இக்வானின் ஆதரவை இப்னு சவூத் பெற்றார். இந்த இராணுவத்திற்கு பைசல் அல்-தவீசு தலைமை தாங்கினார். 1912இல் இதன் நிறுவுதலைத் தொடர்ந்து சீக்கிரமே இது வளர்ச்சியடைந்தது.[99] இக்வானின் உதவியுடன் இப்னு சவூத் 1913இல் உதுமானியர்களிடம் இருந்து அல்-அக்சாவைக் கைப்பற்றினார்.
1916இல் அந்நேரத்தில் முதலாம் உலகப் போரில் உதுமானியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பிரித்தானியாவின் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவுடன் மக்காவின் சரீப்பான உசேன் பின் அலி உதுமானியப் பேரரசுக்கு எதிரான பரவலான அரபுக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஓர் ஒன்றிணைந்த அரபு அரசை உருவாக்கினார்.[100] இக்கிளர்ச்சி அதன் நோக்கத்தில் தோல்வி அடைந்தாலும் முதலாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றியானது அரேபியாவில் உதுமானிய மேலாட்சி மற்றும் கட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்படக் காரணமானது. உசேன் பின் அலி ஹெஜாசின் மன்னரானார்.[101]
அரபுக் கிளர்ச்சியில் பங்கெடுப்பதை இப்னு சவூத் தவிர்த்தார். மாறாக அல் ரசீத்துடனான தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அல் ரசீத்தின் இறுதித் தோல்வியைத் தொடர்ந்து இப்னு சவூத் 1921 நஜத்தின் சுல்தான் என்ற பட்டத்தைப் பெற்றார். இக்வானின் உதவியுடன் 1924-25இல் ஹெஜாஸ் இராச்சியமானது வெல்லப்பட்டது. 10 சனவரி 1926 அன்று இப்னு சவூத் தன்னைத் தானே ஹெஜாஸின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[102] அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் தன்னுடைய இரட்டை இராச்சியங்களின் இரு பகுதிகளைத் தனித்தனிப் பிரிவுகளாக நிர்வகித்தார்.[74]
ஹெஜாஸ் கைப்பற்றப்பட்டதற்குப் பிறகு இக்வான் தலைமைத்துவத்தின் குறிக்கோளானது வகாபியப் பகுதிகளைத் தெற்கு ஜோர்தான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய பிரித்தானியப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் விரிவாக்குவதாக மாறியது. இவர்கள் இப்பகுதிகள் மீது ஊடுருவல்களைத் தொடங்கினர். இதற்கு இப்னு சவூத் எதிர்ப்புத் தெரிவித்தார். பிரித்தானியாவுடனான ஒரு நேரடி மோதலின் ஆபத்தை இவர் அறிந்திருந்தார். அதே நேரத்தில் இப்னு சவூதின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து இக்வானுக்கு நல்லெண்ணம் இல்லாமல் போனது. நவீன மயமாக்கத்திற்கு ஆதரவளித்ததாக மற்றும் நாட்டில் முஸ்லிம் அல்லாத அயல் நாட்டவரின் எண்ணிக்கையை அதிகரித்ததாக இக்கொள்கைகள் தோன்றியதன் விளைவாக இப்னு சவூதிற்கு எதிராக அவர்கள் திரும்பினர். 2 ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு 1929இல் சபில்லா யுத்தத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அங்கு இக்வான் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[103] இப்னு சவூதிற்காக இளவரசர் பைசல் 23 செப்தம்பர் 1932 அன்று ஒன்றிணைப்பை அறிவித்தார். ஹெஜாஸ் மற்றும் நஜத் ஆகிய இரு இராச்சியங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சவூதி அரேபிய இராச்சியமானது உருவானது.[74] இந்நாளானது தற்போது ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இது சவூதி தேசிய நாள் என்று அழைக்கப்படுகிறது.[104]
20ஆம் நூற்றாண்டு

புதிய இராச்சியமானது வரம்புக்குட்பட்ட வேளாண்மை மற்றும் புனிதப் பயண வருவாய்களைச் சார்ந்திருந்தது.[105] 1938இல் பாரசீக வளைகுடாக் கடற்கரையை ஒட்டி அல்-அக்சாப் பகுதியில் பெரும் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்த அராம்கோவின் (அரேபிய அமெரிக்க எண்ணெய் நிறுவனம்) கீழ் 1941இல் எண்ணெய் வயல்களை முழு அளவில் மேம்படுத்துவது தொடங்கியது. எண்ணெயானது சவூதி அரேபியாவுக்குப் பொருளாதாரச் செழிப்பையும், பன்னாட்டு அளவில் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கையும் கொடுத்தது.[74] பண்பாட்டு வாழ்வானது துரிதமாக வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக ஹெஜாஸில் இவ்வாறு வளர்ச்சி அடைந்தது. செய்தித் தாள்கள் மற்றும் வானொலிக்கு மையமாக ஹெஜாஸ் திகழ்ந்தது. எனினும், எண்ணெய்த் தொழில் துறையில் சவூதி அரேபியாவில் பெருமளவிலான அயல் நாட்டுப் பணியாளர்களின் உள் வரவானது ஏற்கனவே இருந்த அயல் நாட்டவர்கள் மீதான பயமுடைய மனப்பாங்கை அதிகரித்தது. அதே நேரத்தில் அரசாங்கம் அதிகரித்து வந்த அளவாக வீணான மற்றும் ஆடம்பரமாக உருவானது. 1950களில் இது பெரும் அரசாங்க நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் அதிகப்படியான அயல்நாட்டுக் கடன்களுக்கு வழி வகுத்தது.[74] 1953இல் சவூதி அரேபியாவின் சவூத் மன்னராகப் பதவிக்கு வந்தார். 1964இல் இவரது ஒன்று விட்ட சகோதரரான சவூதி அரேபியாவின் பைசலுக்காக இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சவூதின் போட்டி மனப்பான்மை குறித்து அரச குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகங்களால் தூண்டப்பட்ட ஒரு கடுமையான பகைமைக்குப் பிறகு நீக்கப்பட்டார். 1972இல் சவூதி அரேபியா அராம்கோவில் 20% கட்டுப்பாட்டைப் பெற்றது. சவூதி எண்ணெய் மீதான ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டை இவ்வாறாக இது குறைத்தது.[106] 1973இல் எகிப்து மற்றும் சிரியாவுக்கு எதிராக யோம் கிப்பூர்ப் போரில் இசுரேலுக்கு ஆதரவளித்த மேற்குலக நாடுகளுக்கு எதிராகச் சவூதி அரேபியா எண்ணெய் வழங்குதலுக்கான தடைகளுக்குத் தலைமை ஏற்றது. கச்சா எண்ணெய் விலையானது நான்கு மடங்காக உயர்வதற்கு இது காரணமானது.[74] 1975இல் பைசலை அவரது உடன் பிறப்பின் மகனான இளவரசர் பைசல் பின் முசைத் அரசியல் கொலை செய்தார். இதற்குப் பிறகு பைசலின் ஒன்று விட்ட சகோதரரான கலீத் மன்னராகப் பதவிக்கு வந்தார்.[107]

1976 வாக்கில் சவூதி அரேபியா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உருவானது.[108] ஒரு மட்டு மீறிய துரித வீதத்தில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கலீத்தின் ஆட்சியானது கண்டது. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி அமைப்பை மாற்றியது.[74] அயல்நாட்டுக் கொள்கைகளில் ஐக்கிய அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகள் வளர்ச்சி அடைந்தன.[107] 1979இல் அரசாங்கத்துக்கு மிகக் கவலையை ஏற்படுத்திய இரு நிகழ்வுகள் நடைபெற்றன.[109] சவூதி அயல்நாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் ஒரு நீண்ட காலத் தாக்கத்தை இவை ஏற்படுத்தின. முதலாம் நிகழ்வானது ஈரானின் இஸ்லாமியப் புரட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் (இப்பகுதி தான் எண்ணெய் வயல்களின் அமைவிடமாகவும் கூடத் திகழ்ந்தது) நாட்டின் சியா சிறுபான்மையினர் தங்களது ஈரானிய இணை-சமயப் பிரிவினரின் செல்வாக்கின் கீழ் கிளர்ச்சி செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. 1979ஆம் ஆண்டின் கதீப் கிளர்ச்சி போன்ற இப்பகுதியில் ஏராளமான அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டன.[110] இரண்டாவது நிகழ்வானது இஸ்லாமிய இயக்கத்தவர்களால் மக்காவில் பெரிய பள்ளிவாசல் கைப்பற்றப்பட்டதாகும். இலஞ்ச ஊழல் மற்றும் சவூதி அரசாங்கத்தின் இஸ்லாமுக்கு மாறான இயல்பு என்று அவர்கள் கருதியதால் ஒரு பகுதி கோபமடைந்த இயக்கத்தவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.[110] 10 நாட்களுக்குப் பிறகு அரசாங்கமானது மசூதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது. பிடிக்கப்பட்டவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். நாட்டில் பாரம்பரிய சமய மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களை மிகக் கடுமையாக பயன்படுத்துவதை அமல்படுத்துவது மற்றும் அரசாங்கத்தில் உலேமாவுக்கு ஒரு மிகப் பெரிய பங்கைக் கொடுப்பது ஆகியவை அரச குடும்பத்தின் பதிலில் ஒரு பகுதியாக இருந்தன.[111] இவை இரண்டுமே முழுவதுமாக வெற்றியடையவில்லை.[112]

1980இல் அராம்கோவில் எஞ்சியிருந்த அனைத்து அமெரிக்கப் பங்குகளையும் சவூதி அரேபியா வாங்கியது.[113] சூன் 1982இல் மன்னர் கலீத் மாரடைப்பால் காலமானார். அவருக்குப் பின் அவரது சகோதரர் பகத் மன்னரானார். கடவுளைத் தவிர்த்து யார் ஒருவருடனும் "மேன்மை" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அடிப்படைவாதிகளிடம் இருந்து வந்த குறிப்பிடத்தக்க அழுத்தத்தின் விளைவாக 1986இல் தன்னுடைய பெயருடன் "இரு புனித மசூதிகளின் பாதுகாப்பாளர்" என்ற பட்டத்தைப் பகத் சேர்த்தார். ஐக்கிய அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதைத் தொடர்ந்தார். அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத் தளவாடங்களை வாங்குவதை அதிகரித்தார்.[74] கச்சா எண்ணெய் வருவாய்களால் உற்பத்தி செய்யப்பட்ட பரவலான செல்வமானது சவூதி சமூகம் மீது இதை விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இது துரித தொழில்நுட்ப (ஆனால் பண்பாட்டு முன்னேற்றத்தில் அல்ல) நவீனமயமாக்கம், நகரமயமாக்கம், பெரும் அளவிலான பொதுக் கல்வி மற்றும் புதிய ஊடகத்தின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு வழி வகுத்தது. இது மற்றும் அதிகரித்து வந்த பெருமளவிலான அயல்நாட்டுப் பணியாளர்களின் இருப்பானது பாரம்பரிய சவூதி அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள் மீது பெருமளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க பெருமளவிலான மாற்றம் இருந்த போதிலும் அரசியல் சக்தியானது அரச குடும்பத்தால் மட்டும் கொண்டிருக்கப்பட்டிருந்தது.[74] அரசாங்கத்தில் பரவலான பங்களிப்புக்கு விருப்பம் கொண்ட பல சவூதி நாட்டவர் மத்தியில் இது அதிருப்திக்கு வழி வகுத்தது.[114]
1980களில் ஈரான்-ஈராக் போரில் (1980-1988) சதாம் உசேனுக்கு ஆதரவாக சவூதி அரேபியா மற்றும் குவைத் ஐஅ$25 பில்லியன் (₹1,78,790 கோடி)களைச் செலவளித்தன.[115] எனினும், 1990இல் ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பைச் சவூதி அரேபியா கண்டித்தது. தலையிடுமாறு ஐக்கிய அமெரிக்காவிடம் வேண்டியது.[74] சவூதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் கூட்டணித் துருப்புக்கள் நிலை நிறுத்தப்படுவதற்கு மன்னர் பகத் அனுமதி அளித்தார். குவைத் அரசாங்கம் மற்றும் அதன் குடிமக்களில் பலர் சவூதி அரேபியாவில் வந்து தங்குவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். ஈராக்குக்கு அவர்களது அரசாங்கம் ஆதரவளித்ததன் காரணமாக யெமன் மற்றும் ஜோர்தான் குடிமக்களை அவர் வெளியேற்றினார். 1991இல் ஈராக் மீதான குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மற்றும் குவைத்துக்கு விடுதலை அளிக்க உதவிய நிலப் படையெடுப்பு ஆகிய இரண்டிலுமே சவூதி அரேபியப் படைகள் பங்கெடுத்தன. இதுவே வளைகுடாப் போர் (1990-1991) என்று அறியப்பட்டது.[106]
சவூதி அரேபியாவில் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதிகரிப்புக்கு வழி வகுத்த விவகாரங்களில் ஒன்று மேற்குலகத்துடனான சவூதி அரேபியாவின் உறவு முறைகள் ஆகும். மேலும், சவூதி நாட்டவர்களால் மேற்குலக நாடுகளில் நடத்தப்படும் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் கூட இது காரணமாக இருந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உசாமா பின் லாதின் ஒரு சவூதி குடிமகனாக (1994இல் இவரது குடியுரிமை நீக்கப்படும் வரை) இருந்தார். கிழக்கு ஆப்பிரிக்காவில் 1998ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கத் தூதரகக் குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்புடையவராகவும், யெமனின் ஏடன் துறைமுகத்துக்கு அருகில் யூஎஸ்எஸ் கோல் என்ற ஐக்கிய அமெரிக்கப் போர்க் கப்பலின் மீது 2000ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்குக் காரணமானவராகவும் இவர் இருந்தார். செப்தெம்பர் 11, 2001 தாக்குதல்களில் பங்கெடுத்திருந்த 15 கடத்தல்காரர்கள் சவூதி நாட்டவர்களாய் இருந்தனர்.[116] இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காத பல சவூதி நாட்டவர்கள் உள்ள போதிலும் அவர்களும் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஆழமான மகிழ்ச்சியின்மையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[117]
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்கு இஸ்லாமியம் மட்டும் ஒரு காரணமாக இல்லை. 21ஆம் நூற்றாண்டு வாக்கில் மட்டுமீறிய அளவுக்குச் செல்வச் செழிப்புடன் இருந்த போதிலும் சவூதி அரேபியப் பொருளாதாரமானது கிட்டத்தட்ட வளர்ச்சியின்றி உள்ளது. அதிகப்படியான வரிகள் மற்றும் வேலை வாய்ப்பின்மையில் அதிகரிப்பு ஆகியவை அதிருப்தியின்மைக்குப் பங்களித்துள்ளன. மக்களிடையே அமைதியின்மையின் ஓர் அதிகரிப்பு மற்றும் அரச குடும்பத்தினருடனான அதிருப்தியின்மை ஆகியவற்றில் இது பிரதிபலிக்கப்படுகிறது. பதிலுக்கு மன்னர் பகத்தால் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. மார்ச்சு 1992இல் இவர் "அடிப்படைச் சட்டத்தை" அறிமுகப்படுத்தினார். ஒரு ஆட்சியாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை இது வலியுறுத்தியது. திசம்பர் 1993இல் கலந்தாய்வு மன்றமானது தொடங்கப்பட்டது. ஒரு தலைவர் மற்றும் 60 உறுப்பினர்களை இது உள்ளடக்கியிருந்தது. இவர்கள் அனைவருமே மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இது சனநாயகத்தை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லை என்பதை பகத் தெளிவுபடுத்தி இருந்தார்.[74]
1995இல் பகத் பலவீனப்படுத்திய மாரடைப்புக்கு ஆளானார். பட்டத்து இளவரசரான அப்துல்லா நடைமுறை ரீதியிலான அரசப் பிரதிநிதியின் பங்கை ஏற்றுக் கொண்டார். எனினும், இவரது அதிகாரத்திற்கு பகத்தின் சகோதரர்கள் ஆறு பேருடனான (பகத்துடன் சேர்த்து இவர்கள் "சுதய்ரி ஏழ்வர்" என்று அழைக்கப்படுகின்றனர்) பிரச்சினைகளால் தடங்கல் ஏற்பட்டது.[118]
21ஆம் நூற்றாண்டு
2003 மற்றும் 2004இல் ரியாத், ஜித்தா, யன்பு மற்றும் கோபர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஒரு தொடர்ச்சியான குண்டு வெடிப்புகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வன்முறை ஆகியவை அதிருப்திக்கான அறிகுறிகளில் உள்ளடங்கியுள்ளன.[119] பெப்பிரவரி-ஏப்பிரல் 2005இல் சவூதி அரேபியாவில் தேசிய அளவிலான மாநகராட்சித் தேர்தல்கள் முதன் முறையாக நடத்தப்பட்டன. இதில் பங்கெடுக்கப் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.[74]
2005இல் மன்னர் பகத் இறந்தார். அவருக்குப் பின் அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். குறைவான சீர்திருத்தம் மற்றும் போராட்டங்களைக் கடுமையாகத் தடுப்பது என்ற கொள்கையைத் தொடர்ந்தார். கச்சா எண்ணெய் வருவாயை நாடு சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மன்னர் அறிமுகப்படுத்தினார். கட்டுப்பாடுகள் வரம்புக்குட்பட்டு தளர்த்தப்படுதல், அன்னிய முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். பெப்பிரவரி 2009இல் நீதித்துறை, ஆயுதப்படைகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கு ஒரு தொடர்ச்சியான அரசாங்க மாற்றங்களை இந்த அமைப்புகளை நவீனமயமாக்குவதற்காக அறிவித்தார். நீதித்துறையில் மூத்த நியமிப்பாளர்களை மாற்றுவது, முதவீன்களாக (சமய காவல் துறையினர்) மிக மிதமான தனிநபர்களை நியமிப்பது, நாட்டின் முதல் பெண் துணை அமைச்சரை நியமிப்பது ஆகியவை இதில் அடங்கும்.[74]
29 சனவரி 2011இல் 11 பேர் வெள்ளத்தால் இறந்ததற்குப் பிறகு நகரத்தின் தரமற்ற உட்கட்டமைப்புக்கு எதிராக விமர்சனத்தைக் காட்டும் ஓர் அரிதான நிகழ்வாக ஜித்தாவில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர்.[120] சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு ஆர்ப்பாட்டத்தைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 30 முதல் 50 பேரைக் கைது செய்தனர்.[121]
2011இல் இருந்து சவூதி அரேபியாவானது அதன் சொந்த அரபு வசந்தப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.[122] பதிலுக்கு மன்னர் அப்துல்லா 22 பெப்பிரவரி 2011 அன்று ஐஅ$36 பில்லியன் (₹2,57,457.6 கோடி) மதிப்புள்ள ஒரு தொடர்ச்சியான நலத்திட்டங்களைக் குடிமக்களுக்காக அறிவித்தார். இதில் ஐஅ$10.7 பில்லியன் (₹76,522.1 கோடி)யானது வீடுகள் கட்டித் தருவதற்காக ஒதுக்கப்பட்டது.[123][124][125] நிதி சார்ந்த குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சில கைதிகள் மன்னிக்கப்பட்டிருந்தாலும் அரசியல் சீர்திருத்தங்கள் எதுவும் இதில் உள்ளடங்கியிருக்கவில்லை.[126] ஐஅ$93 பில்லியன் (₹6,65,098.8 கோடி) மதிப்புள்ள ஒரு திட்டத்தையும் கூட அப்துல்லா அறிவித்தார். ஐஅ$67 பில்லியன் (₹4,79,157.2 கோடி) மதிப்பில் 5 இலட்சம் புதிய வீடுகளையும், 60,000 புதிய பாதுகாப்பு வேலைகளையும் உருவாக்குவதை இது உள்ளடக்கியிருந்தது.[127][128] 29 செப்தெம்பர் 2011 அன்று ஆண்களுக்கு மட்டுமான மாநகராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தாலும்,[129][130] 2015 மாநகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் மற்றும் சுரா மன்றத்திற்கு பெண்கள் பெயர் முன்மொழியப்படவும் கூட அப்துல்லா அனுமதியளித்தார்.[131]
Remove ads
புவியியல்


சவூதி அரேபியாவானது அறபுத் தீபகற்பத்தில் (உலகின் மிகப் பெரிய தீபகற்பம்) சுமார் 80%ஐ ஆக்கிரமித்துள்ளது.[134] 16° மற்றும் 33° வடக்கு அட்ச ரேகைகள், மற்றும் 34° மற்றும் 56° கிழக்குத் தீர்க்க ரேகைகளுக்கு இடையில் இந்நாடு அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானுடனான இந்நாட்டின் தென் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளானவைத் துல்லியமாக வரையறுக்கப்படாததால் இந்நாட்டின் மிகச் சரியான அளவானது வரையறுக்கப்படாமல் உள்ளது.[134] ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவானது இந்நாட்டின் பரப்பளவை 21,49,690 சதுர கிலோமீட்டர்கள் என்று மதிப்பிடுகிறது. சவூதி அரேபியாவை உலகின் 12ஆவது மிகப் பெரிய நாடாகப் பட்டியலிடுகிறது. மத்திய கிழக்கு மற்றும் அரேபியப் புவித் தட்டில் புவியியல் ரீதியாக மிகப் பெரிய நாடு இதுவாகும்.[135]
அரேபியப் பாலைவனமானது சவூதி அரேபியாவின் புவியியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. பகுதியளவு-பாலைவனம், புதர் நிலம், புல்வெளிகள், பல மலைத் தொடர்கள், எரிமலைக் குழம்புக் களங்கள் மற்றும் உயர் நிலங்கள் ஆகியவற்றுடன் இதன் புவியியலானது தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் 6,47,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள றுப்உல் காலீ ("வெற்றுப் பகுதி") உலகின் மிகப் பெரிய தொடர்ச்சியான மணல் பாலைவனமாக உள்ளது.[136][137] இந்நாட்டில் ஏரிகள் இருந்தாலும் பரப்பளவு அடிப்படையில் எந்த ஒரு நிலையான ஆறுகளையும் கொண்டிராத உலகின் மிகப் பெரிய நாடு சவூதி அரேபியா ஆகும். எனினும், வாடிகள், நிலையற்ற ஆறுகள் ஆகியவை இந்த இராச்சியம் முழுவதும் ஏராளமான எண்ணிக்கையில் உள்ளன. வாடிகள், வடி நிலங்கள் மற்றும் பாலைவனச் சோலைகளின் வண்டல் படிவுகளில் வளமான பகுதிகள் காணப்படுகின்றன.[136] செங்கடல் மற்றும் அரேபிய வளைகுடாவில் தோராயமாக 1,300 தீவுகள் உள்ளன.[138]
இந்நாட்டின் முதன்மையான இட அமைவிடச் சிறப்பானது நடுப் பீடபூமியாகும். இது செங்கடலில் இருந்து திடீரென எழுந்து அரேபிய வளைகுடாவை நோக்கிப் படிப்படியாக நஜது பகுதிக்கு உயரம் குறைகிறது. செங்கடல் கடற்கரையில் திகமா என்று அறியப்படும் ஒரு குறுகலான கடற்கரைச் சமவெளி உள்ளது. இதற்குப் பக்கத்தில் நீண்ட தொலைவிற்கு ஒரு தனித்துவமான செங்குத்துச் சரிவானது அமைந்துள்ளது. தென்மேற்கு மாகாணமான அசீர் மலைப்பாங்கான பகுதியாகும். இது 3,002 மீட்டர் உயரமுடைய சபல் பெர்வா சிகரத்தைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் மிக உயரமான புள்ளி இது தான்.[136] சவூதி அரேபியாவானது 2,000க்கும் மேற்பட்ட தூங்கும் எரிமலைகளுக்குத் தாயகமாக உள்ளது.[132] ஹெஜாஸில் உள்ள எரிமலைக் குழம்புக் களங்களானவை உள்ளூர் அளவில் அவற்றின் அரேபியப் பெயரான "அர்ராத்"தால் (ஒருமைப் பெயர் அர்ரா) அறியப்படுகின்றன. இவை உலகின் மிகப் பெரிய கார எரிமலைக் கரும் பாறைப் பகுதிகளில் ஒன்றை அமைக்கின்றன. இது சுமார் 1.80 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[133]
அசீர் போன்ற தென்மேற்குப் பகுதிகள் தவிர்த்து சவூதி அரேபியா ஒரு பாலைவனக் காலநிலையைக் கொண்டுள்ளது. கோடை காலத்தின் போது மிக அதிக பகல் வெப்பநிலையையும், இரவில் கடுமையான வெப்ப நிலைக் குறைவையும் இந்நாடு கொண்டுள்ளது. சராசரி கோடைகால வெப்பநிலைகளானவை 45 °C ஆக உள்ளன. ஆனால், இவை 54 °C வரையிலும் அதிகரித்துக் காணப்படலாம். குளிர்காலத்தில் வெப்பநிலையானது அரிதாகவே உறைநிலைக்குக் கீழே செல்கிறது. இதற்கு விதி விலக்கு பெரும்பாலும் நாட்டின் வடக்குப் பகுதிகள் ஆகும். அங்கு வருடாந்திரப் பனிப் பொழி என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இல்லை. குறிப்பாக தபூக்கு மாகாணத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இவ்வாறான நிலை காணப்படுகிறது.[139] சவூதி அரேபியாவில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான வெப்பநிலை -12 °C ஆகும். இது துரைப் என்ற இடத்தில் அளவிடப்பட்டுள்ளது.[140] வளைகுடா நாடுகளிலேயே மிக அடிக்கடி பனி பொழியும் சாத்தியத்தை சவூதி அரேபியா கொண்டுள்ளது.[141]
இளவேனிற்காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் வெப்பமானது மிதமானதாக உள்ளது. வெப்பநிலைகளானவை சராசரியாக 29°Cக்கு அருகில் அமைகின்றன. வருடாந்திர மழைப் பொழிவானது மிகக் குறைவானதாக உள்ளது. நாட்டின் தெற்குப் பகுதிகள் இதில் மாறுபடுகின்றன. இந்தியப் பெருங்கடல் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளால் இப்பகுதிகள் தாக்கம் பெறுகின்றன. இக்காற்றானது பொதுவாக அக்தோபர் மற்றும் மார்ச்சு மாதங்களுக்கு இடையில் வீசுகிறது. இக்காலத்தின் போது சராசரியாக 300 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பொழிகிறது. ஆண்டு மழைப் பொழிவில் இது சுமார் 60% ஆகும்.[142]
உயிரினப் பல்வகைமை
அரேபியக் குதிரை அரேபியாவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். பாரம்பரிய அரேபிய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு முக்கியமான பகுதியாக இது உள்ளது.
சவூதி அரேபியா ஐந்து நிலச் சூழ்நிலைப் பகுதிகளுக்குத் தாயகமாக உள்ளது: அரேபியத் தீபகற்பக் கடற்கரை மூடுபனி பாலைவனம், தென்மேற்கு அரேபிய மலையடிவார சவானா, தென்மேற்கு அரேபிய மலைக் காட்டு நிலங்கள், அரேபியப் பாலைவனம் மற்றும் செங்கடல் நுபோ-சிந்திய சிந்திய வெப்ப மண்டலப் பாலைவனம் மற்றும் பகுதியளவு-பாலைவனம்.[143] அரேபியச் சிறுத்தை,[144][145] அரேபிய ஓநாய், வரிக் கழுதைப்புலி, கீரி, பபூன் குரங்கு, முனை முயல், மணல் பூனை மற்றும் செர்போவா ஆகியவை இங்கு காணப்படும் விலங்குகளாகும். மறிமான்கள், ஆப்பிரிக்க மறிமான், சிறுத்தைகள் மற்றும் வேங்கைப் புலிகள் போன்ற விலங்குகள்[146] 19ஆம் நூற்றாண்டு வரை ஒப்பீட்டளவில் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. அந்நேரத்தில் விரிவான வேட்டையாடுதலானது இந்த விலங்குகளைக் கிட்டத்தட்ட அற்று விடும் நிலைக்குக் குறைத்து விட்டது. பண்பாட்டு ரீதியாக முக்கியமான ஆசியச் சிங்கமானது சவூதி அரேபியாவில் 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதி வரை காட்டுப் பகுதியில் வேட்டையாடி அழிக்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்டது.[147] வல்லூறுகள் (வேட்டையாடுவதற்காகப் பிடிக்கப்பட்டு இவை பயிற்றுவிக்கப்படுகின்றன), கழுகுகள், பாறுகள், பிணந்தின்னிக் கழுகுகள், மண் கௌதாரி மற்றும் கொண்டைக் குருவிகள் உள்ளிட்டவை இங்கு காணப்படும் பறவை இனங்களில் அடங்கியுள்ளன. ஏராளமான பாம்பு இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை விஷமுடையவையாகும். பழம் பெருமை வாய்ந்த அரேபியக் குதிரை, அரேபிய ஒட்டகம், செம்மறி ஆடு, ஆடு, கால்நடை, கழுதைகள், கோழிகள் மற்றும் பல உள்ளிட்டவை இங்கு காணப்படும் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள் ஆகும்.
செங்கடலானது ஒரு செழிப்பான மற்றும் பல்வகைச் சூழல் மண்டலம் ஆகும். இங்கு 1,200க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் காணப்படுகின்றன.[148] இதில் சுமார் 10% அகணிய உயிரிகள் ஆகும்.[149] இதில் 42 ஆழ் கடல் நீர் மீன் இனங்களும் கூட உள்ளடங்கியுள்ளன.[148] இந்த செழிப்பான பல்வகைமைக்கு ஒரு பங்குக் காரணம் கடற்கரையை ஒட்டிப் பக்கவாட்டில் விரிவடைந்துள்ள 2,000 கிலோமீட்டர் நீளப் பவளப்பாறைகள் ஆகும். இந்த விளிம்புப் பவளப் பாறைகள் பெரும்பாலும் கல் கடற்காஞ்சொறி மற்றும் துளைபாறை பவளங்களால் உருவாகியுள்ளன. இந்தப் பவளப் பாறைகள் சில நேரங்களில் மேட்டு நிலங்களையும், சில நேரங்களில் காயல்களையும் கடற்கரையை ஒட்டிப் பக்கவாட்டில் அமைக்கின்றன. உருளைகள் (தகப் என்ற இடத்தில் காணப்படும் நீலத் துளை போன்றவை) போன்ற பிற சிறப்புகளையும் அவ்வப்போது இவை அமைக்கின்றன. இந்தப் பவளப் பாறைகளுக்கு சுறாக்களின் சுமார் 44 இனங்கள் உள்ளிட்ட வெட்ட வெளிக் கடல் மீன் இனங்களும் கூட வருகின்றன. ஏராளமான கடைக்கரவுப் பவளப் பாறைகளும் இங்கு உள்ளன. இதில் பல பவளத் தீவுகளும் அடங்கும். பல வழக்கத்திற்கு மாறான கடைக்கரவு பவளப் பாறை அமைப்புகளானவை பாரம்பரிய (அதாவது டார்வினிய) பாறை வகைப்பாட்டு முறைகளில் அடங்காதவையாக உள்ளன. இப்பகுதியின் இயற்பண்பாக உள்ள அதிக அளவிலான புவித் தட்டுச் செயல்பாடுகளை இவை பொதுவான காரணங்களாகக் கொண்டுள்ளன.
நாட்டின் ஆதிக்கம் மிகுந்த பாலைவனச் சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாக குறைவான நீரைக் கொண்டு வாழும் மூலிகைகள், தாவரங்கள் மற்றும் புதர்களே இங்கு காணப்படும் தாவர இனங்களாகப் பெரும்பாலும் உள்ளன. பேரீச்சை பனையானது (பேரீச்சை) இந்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.[136]
Remove ads
அரசாங்கமும், அரசியலும்
மொகம்மெது பின் சல்மான்
பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர்
பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர்
சவூதி அரேபியா ஓர் ஒட்டு மொத்த முடியரசாகும்.[150] எனினும், 1992ஆம் ஆண்டு அரசாணையின் படி பின்பற்றப்படும் சவூதி அரேபியாவின் அடிப்படைச் சட்டத்தின் படி மன்னர் இசுலாமியச் சட்ட முறைமை மற்றும் திருக்குர்ஆனுக்குப் பணிந்து ஆட்சி நடத்த வேண்டும். அதே நேரத்தில், திருக்குர்ஆன் மற்றும் நபிவழி ஆகியவை நாட்டின் அரசியலமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.[151] எந்த ஓர் அரசியல் கட்சிகளும் அல்லது தேசியத் தேர்தல்களும் அனுமதிக்கப்படவில்லை.[150] அதே நேரத்தில், சில விமர்சகர்கள் இந்நாட்டை ஒரு வல்லாட்சி அரசாகக் கருதுகின்றனர்.[152][153] மற்றவர்கள் வல்லாட்சி அரசின் அம்சங்களை இந்நாடு கொண்டிருக்கவில்லை என்று கருதுகின்றனர்.[154][155][156] ஆனால், இருந்த போதிலும் இதை ஓர் ஆதிக்கப் போக்குடைய, முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என வகைப்படுத்துகின்றனர். தி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கையானது அதன் 2022ஆம் ஆண்டு சனநாயகச் சுட்டெண்ணில் சவூதி அரசாங்கத்தை 167 நாடுகளில் 150ஆவது இடத்தில் தரநிலைப்படுத்தியது.[157] பிரீடம் ஹவுஸ் அமைப்பானது அதன் மிகக் குறைவான "சுதந்திரமற்ற" மதிப்பீட்டை இந்நாட்டுக்குக் கொடுத்தது. 2023இல் 100 மதிப்பெண்களில் 8 மதிப்பெண்களைக் கொடுத்தது.[158] 2023ஆம் ஆண்டின் வி-டெம் சனநாயகச் சுட்டெண்ணின் படி மத்திய கிழக்கில் மிகக் குறைவான சனநாயகத்தைக் கொண்ட நாடு சவூதி அரேபியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[159]
தேசியத் தேர்தல்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இல்லாத நிலையில்[150] சவூதி அரேபியாவில் அரசியலானது இரு தனித் தனி இடங்களில் நடைபெறுகிறது: அல் சவூத் எனும் அரச குடும்பத்திற்குள், மற்றும் அரச குடும்பம் மற்றும் சவூதி சமூகத்தின் எஞ்சிய பிரிவினருக்கு இடையில் நடைபெறுகிறது.[160] அல் சவூத் குடும்பத்திற்கு வெளியில் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்பானது ஒப்பீட்டளவில் மக்கள் தொகையில் மிகச் சிறிய பிரிவினருடன் மட்டுமே என வரம்புபடுத்தப்பட்டுள்ளது. அரச குடும்பமானது உலேமா, பழங்குடியின சேக்குகள் மற்றும் முக்கியமான வணிகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆகியோருடன் முதன்மையான முடிவுகளை எடுப்பதில் நடத்தும் பேச்சுவார்த்தைகள் என்ற வடிவத்தில் இது நடைபெறுகிறது.[136] இச்செயல்பாடுகளானவை சவூதி ஊடகங்களால் குறிப்பிடப்படுவதில்லை.[161]

வழக்கப்படி மசிலிசு என்று அறியப்படும் பாரம்பரியப் பழங்குடியினச் சந்திப்பின் வழியாக மன்னரிடம் நேரடியாக மனு அளிக்க முழு வயதை எட்டிய அனைத்து ஆண்களுக்கும் உரிமை உள்ளது.[162] பல வழிகளில் அரசாங்கத்தை அணுகுவது என்பது பழங்குடியின ஆட்சியின் பாரம்பரிய அமைப்பில் இருந்து சிறிதளவே வேறுபடுகிறது. பழங்குடியின அடையாளமானது தொடர்ந்து வலிமையானதாக உள்ளது. அரச குடும்பத்திற்கு வெளியே அரசியல் செல்வாக்கானது அடிக்கடிப் பழங்குடியினத் தொடர்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. பழங்குடியின சேக்குகள் உள்ளூர் மற்றும் தேசிய நிகழ்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பேணி வருகின்றனர்.[136] 1990களின் ஆரம்பத்தில் கலந்தாய்வு மன்றம் மற்றும் 2003இல் தேசிய பேச்சுவார்த்தை மன்றம் நிறுவப்பட்டது போன்ற அரசியல் பங்களிப்பைப் பரவலாக்க சமீபத்திய ஆண்டுகளில் வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகளே எடுக்கப்பட்டுள்ளன.[163] 2005இல் முதல் மாநகராட்சிச் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2007இல் கூட்டணி மன்றமானது அடுத்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.[163] 2009இல் முக்கியமான பதவிகளுக்குச் சீர்திருத்தவாதிகளை நியமித்தது மற்றும் ஒரு அமைச்சர் பதவிக்கு முதல் பெண்ணை நியமித்தது ஆகியவற்றின் மூலம் மன்னர் அரசாங்கத்தில் பெருமளவுக்கு தனி நபர் மாற்றங்களைச் செய்தார்.[164][165] எனினும், இந்த மாற்றங்கள் மிக மெதுவானவையாக அல்லது வெறுமனே ஒப்பனை என விமர்சிக்கப்படுகின்றன.[166]
அல் சவூத் குடும்பத்தின் ஆட்சியானது அரசியல் எதிர்ப்பை நான்கு ஆதாரங்களிலிருந்து எதிர் கொண்டுள்ளது: சன்னி இஸ்லாமியச் செயல்பாடு; தாராளமய விமர்சகர்கள்; சியா சிறுபான்மையினர்-குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில்; மற்றும் நீண்ட காலப் பழங்குடியின மற்றும் மாகாணச் சார்பு எதிர்ப்பாளர்கள் (எடுத்துக்காட்டாக ஹெஜாஸ் பகுதியில்).[167] இதில் சிறுபான்மையினச் செயல்பாட்டாளர்களே அரசாங்கத்திற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக உள்ளனர். நாட்டில் வன்முறையான நிகழ்வுகளில் சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் பங்கெடுத்துள்ளனர்.[119] எனினும், அரசாங்கத்துக்கு எதிரான வெளிப்படையான போராட்டங்கள் அமைதியாகவே நடந்தாலும் கூட அவை சகித்துக் கொள்ளப்படுவதில்லை.[168]
முடியரசும், அரச குடும்பமும்

மன்னர் நாடாளுமன்றம், செயல்பாட்டு அவை மற்றும் நீதித்துறைச் செயல்பாடுகளை ஒருங்கே கொண்டுள்ளார்.[136] அரசாணைகளானவை நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையை அமைக்கின்றன.[169] சவூதி அரேபியாவின் அமைச்சர்களின் மன்றம் மற்றும் சவூதி அரேபியாவின் கலந்தாய்வு மன்றம் மீது பிரதமர் மேற்பார்வையிடுகிறார். பொதுவாக மன்னரே பிரதமராகவும் கூட இருந்துள்ளார். இதற்கு விதி விலக்கு இரண்டு முறைகள் மட்டுமே: மன்னர் சவூத்தின் ஆட்சியின் போது பிரதமராக இருந்த பட்டத்து இளவரசர் பைசல்[170] மற்றும் 2022இல் இருந்து தற்போது வரை பிரதமராக இருக்கும் பட்டத்து இளவரசர் மொகம்மெது பின் சல்மான்.[171] அரச குடும்பமானது அரசியல் அமைப்பில் ஆதிக்கம் மிக்கதாக உள்ளது. இக்குடும்பத்தின் உறுப்பினர்களின் பெரும் எண்ணிக்கையானது இராச்சியத்தின் பெரும்பாலான முக்கியப் பதவிகளை இது கட்டுப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பங்கெடுத்து இருப்பைக் கொண்டுள்ளதற்கும் அனுமதியளித்துள்ளது.[172] இளவரசர்களின் எண்ணிக்கையானது குறைந்தது 7,000 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சக்தி மற்றும் செல்வாக்கானது இப்னு சவூத்தின் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் வழித்தோன்றல்களால் கொள்ளப்பட்டுள்ளது.[173] முக்கியமான அமைச்சகங்களானவை பொதுவாக அரச குடும்பத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.[150] இதே போல 13 மாகாண ஆளுநர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.[174]

சவூதி அரசாங்கமும்,[175][176][177] அரச குடும்பமும்[178][179][180] பல ஆண்டுகளாக ஊழலுக்காக அடிக்கடிக் குற்றம் சாட்டப்படுகின்றன.[181] இது 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.[182] அரச குடும்பத்திற்குச் "சொந்தமான" மற்றும் அவர்களின் பெயரைக் கொண்டுள்ள ஒரு நாட்டில்[40] அரசின் உடைமைகள் மற்றும் மூத்த இளவரசர்களின் தனி நபர் செல்வங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான கோடுகளானவை மங்கியதாக உள்ளன.[173] ஊழலின் விரிவானது அமைப்பு ரீதியிலானதாகவும்,[183] வழக்கமாகக் காணப்படுவதாகவும், ஒழிப்பதற்குக் கடினமானதாகவும்[184] விவரிக்கப்படுகிறது. ஊழலின் இருப்பானது 2001ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில்[185] இளவரசர் பந்தர் பின் சுல்தானால் (அரச குடும்பத்தின் ஒரு மூத்த உறுப்பினர்)[186] ஒப்புக் கொள்ளப்பட்டது,[187] அதற்குத் தற்காப்பாகவும் அவர் வாதிட்டார்.[188]
2010இல் அதன் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் அமைப்பானது சவூதி அரேபியாவுக்கு 4.7 என்ற சுட்டெண்ணைக் கொடுத்தது (இது 0 முதல் 10 வரையிலான ஓர் அளவீடாகும், 0 "மிகவும் ஊழல் மலிந்த" என்றும், 10 என்பது "மிகவும் ஊழலற்ற" என்றும் பொருள்படுகிறது).[189] பொது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க மற்றும் நல்ல நிர்வாகத்துக்காகவும் அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தங்களின் ஒரு செயல்பாட்டின் கீழ் சவூதி அரேபியா சென்றுள்ளது. ஆனால் இந்நாட்டில் தொழிலில் ஈடுபடும் போது குருதிச் சலுகை மற்றும் ஆதரவுக்குப் பதிலாக சலுகை வழங்கும் முறை ஆகியவை பரவலாக உள்ளன. ஊழலுக்கு எதிரான சட்டங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் மீது அமல்படுத்தப்படுகின்றன. தண்டனை மற்றும் விளைவுகளிலிருந்து விலக்கீட்டு உரிமையுடன் பொதுப்பணி அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர். முக்கியமான சவூதி இளவரசர்கள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட 500 பேர் வரையிலானோர் நவம்பர் 2017இல் ஊழலுக்கு எதிரான ஒரு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.[190]
அல் அஷ்-சேக் மற்றும் உலேமாவின் பங்கு
அரசாங்கத்தில் ஒரு நேரடி பங்கை உலேமாவுக்குக் (இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மற்றும் நீதிபதிகளின் ஒரு அமைப்பு) கொடுப்பதில் சவூதி அரேபியா ஒரு தனித்துவமான நாடாக உள்ளது.[191] தேர்ந்தெடுக்க விருப்பமான உலேமாவாக சலாபி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். முக்கியமான அரசாங்க முடிவுகளில் ஒரு முக்கியமான செல்வாக்கை உலேமா கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, 1973இல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பு மற்றும் 1990இல் சவூதி அரேபியாக்கு அயல்நாட்டுத் துருப்புக்களை அழைத்தது ஆகிய நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.[192] மேலும், நீதித்துறை மற்றும் கல்வி அமைப்புகளில் அவர்கள் ஒரு முக்கியப் பங்கையும்,[193] சமய மற்றும் சமூக நன்னெறி விதிகளில் ஒரு முழுமையான அதிகாரத்தையும் கொண்டுள்ளனர்.[194]
1970களில் கச்சா எண்ணெயால் பெற்ற செல்வம் மற்றும் மன்னர் பைசலால் தொடங்கப்பட்ட நவீனமயமாக்கம் ஆகியவற்றின் ஒரு விளைவாக சவூதி சமூகத்தில் முக்கியமான மாற்றங்கள் நடைபெற்றன. உலேமாவின் அதிகாரமானது குறையத் தொடங்கியது.[195] எனினும், 1979இல் மக்காவில் பெரிய பள்ளிவாசல் இஸ்லாமிய இயக்கத்தவர்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலை மாறியது.[196] உலேமாவின் அதிகாரத்தை வலிமையாக்குவது மற்றும் அவர்களுக்கான நிதி ஆதரவை அதிகரிப்பது உள்ளிட்டவை இப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளாக இருந்தன.[111] குறிப்பாகக் கல்வி அமைப்பு மீதான ஒரு மிகப் பெரும் கட்டுப்பாடு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.[196] நன்னெறி மற்றும் சமூக நடத்தை குறித்த வகாபி விதி முறைகளின் கடுமையான பின்பற்றுதலைச் செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.[111] 2005இல் மன்னர் அப்துல்லா அரியணைக்கு வந்ததற்குப் பிறகு உலேமாவின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். எடுத்துக்காட்டாக பெண்கள் கல்வி மீதான கட்டுப்பாட்டை கல்வி அமைச்சகத்திற்கு மாற்றினார்.[197]
வரலாற்று ரீதியாக உலேமாவானது அல் அஷ்-சேக்கால் தலைமை தாங்கப்பட்டு வந்துள்ளது.[198] இதுவே நாட்டின் முன்னணி சமயக் குடும்பம் ஆகும்.[194] அல் அஷ்-சேக் என்பவர்கள் சவூதி அரேபியாவில் தற்போது முதன்மையானதாக இருக்கும் சன்னி இஸ்லாமின் வகாபி வடிவத்தைத் தோற்றுவித்த 18ஆம் நூற்றாண்டு நிறுவனரான முகம்மது இப்னு அப்த் அல்-வகாபின் வழித்தோன்றல்களாவர்.[199] இந்நாட்டில் இக்குடும்பத்தை விட அல் சௌத் (அரச குடும்பம்) குடும்பம் மட்டுமே அதிக மதிப்புடையதாக உள்ளது.[200] இரு குடும்பங்களும் "பரஸ்பர ஆதரவு ஒப்பந்தம்"[201] மற்றும் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்தன.[192] இந்த ஒப்பந்தமானது இன்றும் தொடர்கிறது.[201] சமய விவகாரங்களில் அல் அஷ்-சேக்கின் அதிகாரத்தைப் பேணுவது மற்றும் வகாபி விதிமுறைகளை நிலைநாட்டிப் பரப்புவதை அல் சவூத் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பதிலுக்கு அல் அஷ்-சேக் அல் சவூத்தின் அரசியல் அதிகாரத்திற்கு ஆதரவளிக்கும்.[202] அரச குடும்பத்தின் ஆட்சியை முறைப்படுத்துவதற்காக இவ்வாறாக அதன் சமய நன்னெறி அதிகாரத்தை அல் அஷ்-சேக் பயன்படுத்துகிறது.[203] சமீபத்திய தசாப்தங்களில் உலேமாவில் அல் அஷ்-சேக்கின் முன்னிலையானது குறைந்திருந்தாலும்[204] மிக முக்கியமான சமயப் பதவிகளை அவர்கள் இன்னும் கொண்டுள்ளனர். அல் சவூத் அரச குடும்பத்துடன் அதிக அளவிலான திருமண உறவுகள் மூலம் நெருக்கமாகத் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளனர்.[194]
சட்ட அமைப்பு

சட்டத்தின் முதன்மையான ஆதாரமாக இசுலாமியச் சட்ட முறைமையானது உள்ளது. இது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் போதனைகளிலிருந்து தருவிக்கப்பட்டதாகும்.[169] ஷரியா ஒழுங்கமைக்கப்படாததிலும், நீதி முன்னுதாரணங்களின் எந்த ஓர் அமைப்பு இல்லாததிலும் நவீன முஸ்லிம் அரசுகளிலேயே சவூதி அரேபியா தனித்துவமானதாக உள்ளது. நீதிபதிகள் சுதந்திரமான சட்ட மதிப்பீடுகளைப் பயன்படுத்தி ஒரு முடிவை எடுப்பதற்கு இது அனுமதியளிக்கிறது. இவ்வாறாக வெளிப்படையாக ஒரே போன்று உள்ள வழக்குகளிலும் கூட வேறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.[206] சட்ட விரிவுரை கணிக்கப்படுவதை இது கடினமாக்குகிறது.[207] நவீன காலத்திற்கு முந்தைய நூல்களில் காணப்படும் ஹன்பாலி பள்ளியின் சட்ட அமைப்பின் கொள்கைகளை சவூதி நீதிபதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[208] திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் இலக்கிய ரீதியான விளக்க முறைக்காக இது குறிப்பிடப்படுகிறது.[209] எனினும், 2021இல் குழப்பங்களை நீக்கியதாக, முழுவதுமாக ஒழுங்கமைக்கப்பட்ட சட்டத்திற்கு வழி வகுக்கும் நீதித்துறைச் சீர்திருத்தங்களைச் சவூதி அரேபியா அறிவித்தது.[210]
அரசாணைகளானவை சட்டத்தின் பிற முதன்மையான ஆதாரமாக உள்ளன. ஆனால், இவை சட்டங்கள் என்று குறிப்பிடப்படாமல் ஒழுங்கு முறைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில், இவை ஷரியாவுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளன.[169] பணியாள், வணிகம் மற்றும் நிறுவனச் சட்டம் போன்ற பகுதிகளில் ஷரியாவுக்குப் பதில் அரசாணைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பாரம்பரியப் பழங்குடியினச் சட்டம் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக இவை உள்ளன.[211] மேற்கொண்ட-ஷரியா அரசாங்க தீர்ப்பாயங்களானவை பொதுவாகக் குறிப்பான அரசாணையுடன் தொடர்புடைய பிரச்சனைகளைக் கையாளுகின்றன.[212] ஷரியா நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத் தீர்ப்பாயங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் கொண்டு செல்லப்படும் இறுதி மேல் முறையீடானது மன்னரிடம் செல்கிறது. அனைத்து நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் ஷரியா சட்டங்களின் ஆதாரம் மற்றும் செயல் முறைகளைப் பின்பற்றுகின்றன.[213]
பழி வாங்கும் தண்டனைகள் அல்லது கிசாசு இங்கு பழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, தனது சொந்தக் கண்ணை இழந்த ஒரு பாதிப்பாளரின் அறிவுறுத்தலில் குற்றம் செய்தவரின் ஒரு கண்ணானது அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட முடியும்.[214] சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பமானது குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்தல் அல்லது அவரைத் திய்யாவைச் (குருதிப் பணம்) செலுத்தச் செய்து அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.[215]
நிர்வாகப் பிரிவுகள்
சவூதி அரேபியா 13 மாகாணங்களாகப் (அரபு மொழி: مناطق إدارية; மனதிக் இதாரிய்யா, ஒருமை. منطقة إدارية; மிந்தகக் இதாரிய்யா) பிரிக்கப்பட்டுள்ளது.[216] இப்பகுதிகளானவை மேற்கொண்டு 118 ஆளுநர் பகுதிகளாகப் (அரபு மொழி: محافظات; முகாபசத், ஒருமை. محافظة; முகாபசா) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 13 மாகாணத் தலைநகரங்களும் அடங்கும். இவை மேயர்களால் (அரபு மொழி: أمين; அமீன்) தலைமை தாங்கப்பட்ட மாநகராட்சிகளாக (அரபு மொழி: أمانة; அமனா) ஒரு வேறுபட்ட நிலையைக் கொண்டுள்ளன. ஆளுநர் பகுதிகளானவை மேற்கொண்டு துணை ஆளுநர் பகுதிகளாகப் (அரபு மொழி: مراكز; மரகிசு, ஒருமை. مركز; மர்கசு) பிரிக்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டு உறவுகள்
சவூதி அரேபியா 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.[37][217] அரபு நாடுகள் கூட்டமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், முஸ்லிம் உலகக் குழுமம், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (தற்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) ஆகியவற்றில் ஒரு நிறுவன உறுப்பினராக இந்நாடு உள்ளது.[218] அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இந்நாடு ஒரு முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. 2005இல் இந்நாடு உலக வணிக அமைப்பில் இணைந்தது.[37]
1960இலிருந்து சவூதி அரேபியா ஓப்பெக் அமைப்பை நிறுவிய ஓர் உறுப்பினர் ஆகும். உலகக் கச்சா எண்ணெய்ச் சந்தையை நிலைப்படுத்துவது மற்றும் மேற்குலக நாடுகளின் பொருளாதாரங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படாதவாறு துல்லியமான விலை ஏற்ற இறக்கங்களை மிதப்படுத்த முயற்சிப்பது ஆகியவற்றை இதன் கச்சா எண்ணெய் விலை விதிப்புக் கொள்கையானது பொதுவானதாகக் கொண்டுள்ளது.[37][219] 1973இல் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் மற்றும் பிற மேற்குலக நாடுகளுக்கு எதிராக கச்சா எண்ணெய் ஏற்றுமதித் தடையை அக்தோபர் 1973இல் யோம் கிப்பூர்ப் போரில் இசுரேலுக்கு ஆதரவளித்ததற்காக சவூதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகள் விதித்தன.[220] இந்தத் தடையானது ஓர் எண்ணெய் நெருக்கடிக்குக் காரணமானது. இது பல குறுகிய- மற்றும் நீண்ட-கால விளைவுகளை உலக அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.[221]
சவூதி அரேபியாவும், ஐக்கிய அமெரிக்காவும் உத்தி ரீதியிலான கூட்டாளி நாடுகள் ஆகும். சவூதி அரேபியா மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஒரு நாடாகக் கருதப்படுகிறது.[222][223][224][225] 20 மே 2017இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஆகியோர் 10 ஆண்டுகளுக்கு மொத்தமாக ஐஅ$350 பில்லியன் (₹25,03,060 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சவூதி அரேபியாவுக்கு வாங்குவதற்கான எண்ணமுடைய ஒரு தொடர்ச்சியான மடல்களில் கையொப்பமிட்டனர்.[226][227] 1991இல் வளைகுடாப் போரில் சவூதி அரேபியாவின் பங்கு, குறிப்பாக 1991 முதல் சவூதி அரேபிய மண்ணில் ஐக்கிய அமெரிக்கத் துருப்புகளை நிலை நிறுத்துவது ஆகியவை உள்நாட்டு அளவில் ஓர் எதிர்ப்பு ரீதியிலான இஸ்லாமிய பதில் வினையின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[228] இதன் விளைவாக சவூதி அரேபியா ஓரளவுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2003ஆம் ஆண்டில் ஈராக்கு மீதான ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்கு ஆதரவளிக்கவோ அல்லது படையெடுப்பில் பங்கெடுக்கவோ சவூதி அரேபியா மறுத்தது.[136]
சமீபத்திய தசாப்தங்களில் சீனா மற்றும் சவூதி அரேபியாவின் உறவு முறைகளானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சவூதி அரேபியர்களும் கூட சீனா குறித்து ஒரு நேர் மறையான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.[229][230][231] பெப்பிரவரி 2019இல் உய்குர் முஸ்லிம்களுக்கான சீனாவின் சிஞ்சியாங் காவல் முகாம்களுக்கு தற்காப்பாகப் பட்டத்து இளவரசர் மொகம்மது வாதிட்டார்.[232][233] த டிப்லோமெட் பத்திரிக்கையின் படி, சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலையானது "அயல் நாடுகளிலிருந்து தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி இருத்தல் மற்றும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு சுற்று வழியாகச் சீனாவை தற்காப்பது என்பது உருவாகியுள்ளது" என்று இது குறித்துக் குறிப்பிட்டது.[234]
2003ஆம் ஆண்டுப் படையெடுப்பு மற்றும் அரேபிய வசந்தத்தின் விளைவுகளானவை சவூதி முடியரசுக்குள் இப்பகுதியில் ஈரானின் செல்வாக்கின் வளர்ச்சி குறித்து அதிகரித்து வந்த எச்சரிக்கைக்கு வழி வகுத்துள்ளன.[235] இந்த அச்சங்களானவை மன்னர் அப்துல்லாவின் உரையாடலில் பிரதிபலித்துள்ளன.[197] அவர் தனிநபர் உரையாடலில் ஈரானைத் தாக்குமாறும், "பாம்பின் தலையை வெட்டி விடுமாறும்" ஐக்கிய அமெரிக்காவிடம் வலியுறுத்தினார்.[236]

அரபு-இசுரேல் முரண்பாட்டில் ஒரு மிதப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும் நாடாகச் சவூதி அரேபியா பார்க்கப்படுகிறது. இசுரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையில் அவ்வப்போது ஓர் அமைதித் திட்டத்தை முன் வைப்பது மற்றும் ஹிஸ்புல்லாவைக் கண்டிப்பது போன்ற செயல்பாடுகளைச் சவூதி அரேபியா செய்துள்ளது.[237] 6 ஆகத்து 2018இல் பெண்கள் உரிமைச் செயல்பாட்டாளரான சமர் பதாவியை இராச்சியமானது கைது செய்த பிரச்சினை தொடர்பாக ஒரு மிகைப்படுத்தப்பட்ட கடுமையாகக் கனடாவுடன் புதிய வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை இடை நிறுத்தி, தூதரக உறவுகளைச் சவூதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.[238][239]
2017இல் இதன் அணு மின் சக்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சவூதி அரேபியா யுரேனியத்தை உள்நாட்டு அளவிலேயே பிரித்தெடுக்கத் திட்டமிட்டது. அணு எரிபொருளை உற்பத்தி செய்வதில் சுயசார்பை அடையும் ஒரு படியை முன்னெடுத்தது.[240]
இராணுவம்
வேத்தியல் சவூதி தரைப் படைகளின் எம்1 ஆப்ராம்ஸ் பீரங்கி வண்டி
வேத்தியல் சவூதி விமானப் படையின் யூரோபைட்டர் டைபூன் போர் விமானம்
சவூதி அரேபியாவின் இராணுவப் படைகளானவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழான சவூதி அரேபியாவின் ஆயுதம் ஏந்திய படைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் வேத்தியல் சவூதி தரைப்படைகள் (வேத்தியல் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர்), விமானப்படை, கடற்படை, மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் உத்தி ரீதியிலான ஏவுகணைப் படை ஆகியவை அடங்கும்; தேசியப் பாதுகாவலர் அமைச்சகத்தின் கீழான சவூதி அரேபிய தேசியப் பாதுகாவலர்கள்; உள்துறை அமைச்சரின் கீழான துணை இராணுவப் படைகள், இதில் சவூதி அரேபிய எல்லைப் பாதுகாவலர்கள் மற்றும் துணை நலப் பாதுகாப்புப் படை ஆகியவை அடங்கும்; அரசின் பாதுகாப்பின் தலைமைத்துவம், இதில் சிறப்புப் பாதுகாப்பு படை மற்றும் அவசரப் பாதுகாப்புப் படைகள் உள்ளடங்கியுள்ளன. 2023ஆம் ஆண்டு நிலவரப் படி ஆயுதம் ஏந்திய படைகளில் 1,27,000 செயல்பாட்டில் உள்ள வீரர்களும், தேசியப் பாதுகாவலர்களில் 1,30,000 பேரும், துணை இராணுவப் பாதுகாப்புப் படைகளில் 24,500 பேரும் உள்ளனர். தேசியப் பாதுகாவலர்கள் சவூதி அரச குடும்பத்திற்கு விசுவாசமுள்ள பழங்குடியினப் படைகளால் உருவாக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அயல்நாட்டுத் தற்காப்பு ஆகிய இரு நிலைகளிலும் ஒரு பங்கை ஆற்றியுள்ளனர்.[241][242] சவூதி அரேபியா ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு உறவு முறைகளைக் கொண்டுள்ளது. இந்நாடுகள் சவூதி அரேபியாவுக்குப் பயிற்சியையும், ஆயுதங்களையும் வழங்குகின்றன.[243]
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்த்ல் உலகிலேயே அதிகப்படியான இராணுவச் செலவீனங்களில் ஒன்றைச் சவூதி அரேபியா கொண்டுள்ளது. இதன் இராணுவத்திற்கு இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8%ஐ இது செலவிடுகிறது. 2020ஆம் ஆண்டு இசுடாக்கோம் பன்னாட்டு அமைதி ஆய்வு அமைப்பின் மதிப்பீடானது[244] ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பின் உலகின் மூன்றாவது மிகப் பெரிய இராணுவச் செலவீனத்தைக் கொண்டதாக இந்நாட்டை தரநிலைப்படுத்துகிறது.[245] 2015 முதல் 2019 வரை உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராகவும் சவூதி அரேபியா திகழ்ந்தது. மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ஐக்கிய அமெரிக்க ஆயுதங்களிலும் பாதியைச் சவூதி அரேபியா பெற்றுள்ளது.[246][247] 1990களின் நடுவில் இருந்து தற்காப்பு மற்றும் பாதுகாப்புச் செலவீனங்களானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன. 2019ஆம் ஆண்டில் இந்நாட்டின் மொத்த இராணுவச் செலவீனமானது சுமார் ஐஅ$78.4 பில்லியன் (₹5,60,685.4 கோடி)யாக இருந்தது.[245] போர் ஆய்வுகளுக்கான போன் பன்னாட்டு மையம் (பிஐசிசி) என்ற அமைப்பின் கூற்றுப் படி சவூதி அரேபியா உலகில் 28ஆவது மிக அதிகமாக இராணுவ மயமாக்கப்பட்ட நாடு ஆகும். இசுரேலுக்குப் பிறகு இப்பகுதியில் இரண்டாவது மிகச் சிறந்த இராணுவத் தளவாடங்களை தரத்தின் அடிப்படையில் இந்நாடு கொண்டுள்ளது.[248] இதன் நவீன உயர்-தொழில்நுட்ப படைக் கலமானது சவூதி அரேபியாவை உலகின் மிகவும் அடர்த்தியான ஆயுதமுடைய நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது.[249]
இராச்சியமானது பாக்கித்தானுடன் ஒரு நீண்டகால இராணுவ உறவு முறையைக் கொண்டுள்ளது. பாக்கித்தானின் அணுகுண்டுத் திட்டத்திற்கு சவூதி அரேபியா இரகசியமாக நிதி உதவி அளித்தது மற்றும் அருகாமை எதிர் காலத்தில் பாக்கித்தானிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்குவதற்கு இந்நாடு விரும்புகிறது என்பது நீண்ட காலமாக ஊகிக்கப்பட்டு வருகிறது.[250][251]
மார்ச்சு 2015இல் அண்டை நாடான யெமனில் உள்நாட்டுப் போரில் இதன் தலையீட்டுக்கு ஆதரவளிப்பதற்காக 1.50 இலட்சம் துருப்புகளையும், 100 தாரை வானூர்திகளையும் சவூதி அரேபியா ஒருங்கிணைத்தது.[252][253] ஔதி கிளர்ச்சியாளர்கள் வடக்கு யெமன் மற்றும் தலைநகரமான சனாவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டிருந்த போதிலும் 2016ஆம் ஆண்டின் தொடக்கம் வாக்கில் சவூதி தரைப்படைகள் மற்றும் அவற்றின் கூட்டணிப் படைகள் ஏடன் மற்றும் தென்மேற்கு யெமனின் பகுதிகளைக் கைப்பற்றினர். அங்கிருந்து ஔதிகள் எல்லை தாண்டி சவூதி அரேபியாவுக்குள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினர்.[254] சவூதி இராணுவமானது ஒரு விமான வெடிகுண்டு வீச்சு நடவடிக்கையையும் கூடச் செயல்படுத்தியது. ஔதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாக கொண்டு ஒரு கடல் வழி முற்றுகையையும் நடத்தியது.[255][256]
மனித உரிமைகள்
![]() | இப்பிரிவு சில யோசனைகள், நிழ்வுகள், அல்லது சர்ச்சைகளுக்கு தேவையானதை விட அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கலாம். (சூன் 2023) |
நாட்டுக்குள் மனித உரிமைகளை மீறுவதாக பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களால் சவூதி அரசாங்கமானது கண்டிக்கப்படுகிறது.[257] பிரீடம் ஹவுஸ் அமைப்பின் வருடாந்திர அரசியல் மற்றும் குடிசார் உரிமைகளின் சுற்றாய்வில் "மோசமானவற்றில் மோசமானதாகத்" தொடர்ந்து தரநிலைப்படுத்தப்படுகிறது.[258] பன்னாட்டு மன்னிப்பு அவையின் கூற்றுப் படி பாதுகாப்புப் படைகளானவை கைதிகளைச் சித்திரவதை செய்து, மோசமாக நடத்தி அவர்களிடமிருந்து குற்றம் ஒப்புக் கொள்ளப்படுவதைத் தருவிக்கின்றன. விசாரணைகளில் அவர்களுக்கு எதிராக இந்தத் தருவிப்புகளை ஆதாரமாகப் பயன்படுத்துகின்றன.[259] இசுலாமியச் சட்ட முறைமையிலிருந்து முரண்படுவதாக உலக மனித உரிமைகள் சாற்றுரையைப் பின்பற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் வாக்களிப்பில் இருந்து சவூதி அரேபியா விலகிக் கொண்டது.[260] 2016, 2019 மற்றும் 2022 போன்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட பெருந்திரள் மரண தண்டனைகளானவைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்படுகின்றன.[261]
2001இலிருந்து சவூதி அரேபியா பரவலான இணையத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான இணையத் தணிக்கையானது பொதுவாக இரு பிரிவுகளின் கீழ் வருகிறது: "ஒழுக்கக் கேடான" தணிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒன்று (பெரும்பாலும் ஆபாச மற்றும் ந. ந. ஈ. தி.-ஆதரவு இணைய தளங்களுடன் சன்னி இஸ்லாம் தவிர்த்து பிற எந்த ஒரு சமயக் கொள்கையையும் பரப்பும் இணையதளங்கள்) மற்றும் சவூதி அரேபியாவின் ஊடக அமைச்சகத்தின் தடை செய்யப்படும் பட்டியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. இவை முதன்மையாகச் சவூதி அரசாங்கத்தை விமர்சிக்கும் இணைய தளங்களைத் தடை செய்கின்றன அல்லது சவூதி அரேபியாவை எதிர்க்கும் அல்லது சவூதி அரேபியாவால் எதிர்க்கப்படும் கட்சிகளுடன் தொடர்புடையவற்றை தணிக்கை செய்கின்றன.[262][263][264]
சவூதி அரேபியச் சட்டமானது ஒருவர் எவ்வகையிலான பாலின ஈர்ப்புடையவர் என்பதையோ அல்லது சமயச் சுதந்திரத்தையோ அங்கீகரிப்பதில்லை. பிற சமயங்களின் பழக்க வழக்கங்கள் பொது இடத்தில் பின்பற்றப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.[266] நீதித்துறை அமைப்பானது அடிக்கடி மரண தண்டனையை விதிக்கிறது. சிரச் சேதம் செய்யப்படுவதன் மூலம் பொது இடத்தில் மரண தண்டனை அளிக்கப்படுவதும் இதில் அடங்கும்.[267][268] சவூதி நீதித்துறை அமைப்பின் படி மரண தண்டனையானது கோட்பாட்டு ரீதியாக ஒரு பரவலான தண்டனைகளுக்கு விதிக்கப்படலாம்.[269] இதில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் ஏந்திய கொள்ளை, தொடர்ச்சியான போதைப்பொருள் பயன்பாடு, இறைமறுப்பு,[270] நெறி தவறிய உறவுகள்,[271] பில்லி சூனியம், மந்திரம்[272] ஆகியவை அடங்கும். மரண தண்டனையானது ஒரு வாளின் மூலமாகவோ,[270] கல் எறிந்தோ அல்லது துப்பாக்கி சுடும் குழுவினராலோ[271] நிறைவேற்றப்படலாம். இதற்குப் பிறகு உடல்கள் சிலுவையில் அறையப்படும் (மரண தண்டனைக்குப் பிறகு உடல் வெட்டவெளியில் படுமாறு விடப்படுதல்).[272] 2022இல் சவூதி பட்டத்து இளவரசர் "திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்ட ஒரு பிரிவான கொலை தவிர்த்து" பிற தண்டனைகளுக்குக் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குக் கீழ் மரண தண்டனை நீக்கப்படும் என்று குறிப்பிட்டார்.[273] ஏப்பிரல் 2020இல் சவூதி உச்சநீதிமன்றமானது சவூதி நீதிமன்ற அமைப்பிலிருந்து சவுக்கால் அடிக்கும் தண்டனையை நீக்குவதற்கான ஒரு பணி முறைச் செயற் கட்டளையை வெளியிட்டது. இதற்குப் பதிலாக சிறை வாசமோ அல்லது அபராதங்களோ விதிக்கப்படலாம்.[274][275]
வரலாற்று ரீதியாக சவூதி பெண்கள் தங்களது வாழ்வில் பல அம்சங்களில் பாகுபாட்டை எதிர் கொண்டுள்ளனர். ஆண் பாதுகாவலர் அமைப்பின் கீழ் இவர்கள் செயல்பாட்டு ரீதியாக சட்டப் பூர்வமாக வயதுக்கு வராதவர்களாக நடத்தப்பட்டுள்ளனர்.[276] பெண்கள் நடத்தப்படும் விதமானது "பாலினத் தனிமைப்படுத்தல்"[277][278], "பாலின ஒதுக்கலாகக்" குறிப்பிடப்படுகிறது.[279][280] சூன் 2023 நிலவரப் படி "வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் அல்லது புவியியலாளர்களாகப் பெண்கள் உருவாவதற்கான" தனது தடையை இராச்சியமானது திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. "ஆக்ரோஷமான சீர்திருத்தச் செயலாக்கத் திட்டங்களை" இந்நாடு செயல்படுத்தியும் உள்ளது. பெண்கள் பணியாள் பங்களிப்பு வீதங்களை இரு மடங்காக்கியுள்ளது. இதன் முதல் பெண் பத்திரிக்கை இதழாசிரியர்கள், தூதுவர்கள், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் அரசு வழக்கறிஞர்களைச் சேர்த்துள்ளது. சவூதி பங்குச் சந்தைக்கு ஒரு பெண் தலைவர் மற்றும் சவூதி அராம்கோவின் செயற்குழுவில் ஓர் உறுப்பினராக ஒரு பெண்ணுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது.[281] இதனுடன் சூன் 24, 2018 அன்று சவூதி அரசாங்கமானது வாகன ஓட்டுனராவதற்காகப் பெண்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கும் ஒரு சட்டத்தை வெளியிட்டது.[282]
அடிமைத் தொழிலாளர் முறை மற்றும் வணிக ரீதியான பாலியல் சுரண்டல் ஆகிய நோக்கங்களுக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் கடத்தப்படும் ஒரு குறிப்பிடத்தக்க நாடாகச் சவூதி அரேபியா உள்ளது.[283] ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் கட்டட, விருந்தோம்பல், கபாலா அமைப்பு போன்ற உள்நாட்டுத் தொழில் துறைகளின் கீழ் பணி புரிகின்றனர். நவீன அடிமை முறை உள்ளிட்ட மோசமான நடத்தையுடன் தொடர்புடையதாக மனித உரிமை அமைப்புகள் கபாலா அமைப்பைக் குறிப்பிடுகின்றன.[284][285]
Remove ads
பொருளாதாரம்
பெயரளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஐஅ$1.1 டிரில்லியன் (₹78.7 டிரில்லியன்)க்கும் அதிகமாகவும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி ஐஅ$2.3 டிரில்லியன் (₹164.5 டிரில்லியன்)க்கும் அதிகமாகவும், மத்திய கிழக்கில் (துருக்கிக்குப் பிறகு) இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும், அரபு உலகத்தில் மிகப் பெரிய பொருளாதாரத்தையும், உலகில் 18ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும் சவூதி அரேபியா கொண்டுள்ளது.[286] உலகின் இரண்டாவது மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட பாறை எண்ணெய் வளங்களையும் இந்நாடு கொண்டுள்ளது. பாறை எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும், மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்நாடு உள்ளது.[287][288] இந்நாடு ஆறாவது மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளங்களையும் கூடக் கொண்டுள்ளது.[30] சவூதி அரேபியா ஓர் "ஆற்றல் வல்லரசாகக்" கருதப்படுகிறது.[289][290] இரண்டாவது மிகப் பெரிய ஒட்டு மொத்த மதிப்பிடப்பட்ட இயற்கை ஆற்றல் வளங்களின் மதிப்பை இந்நாடு கொண்டுள்ளது. 2016இல் இதன் வளங்களானவை ஐஅ$34.4 டிரில்லியன் (₹2,460.2 டிரில்லியன்) ஆக மதிப்பிடப்பட்டுள்ளன.[291]
பெரும்பாலும் பாறை எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தைச் சவூதி அரேபியா கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்ட வருவாயில் தோராயமாக 63%க்கும்,[292] ஏற்றுமதி ஈட்டலில் 67%க்கும்,[293] பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45%க்கும் கச்சா எண்ணெய்த் தொழில் துறையானது பங்களிக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது தனியார் துறையானது 40%க்குப் பங்களிக்கிறது. இந்நாடு அயல் நாட்டுப் பணியாளர்களை வலிமையாகச் சார்ந்துள்ளது. தனியார் துறைப் பணியாளர்களில் சுமார் 80% பேர் சவூதியைச் சாராத நாட்டவராக உள்ளனர்.[294][295] தனி நபர் வருமான வீழ்ச்சியைத் தடுப்பது அல்லது வருவாயை அதிகரிப்பது, பணியாளர் துறைக்காக இளைஞர்களைப் பயிற்றுவிக்க கல்வியை மேம்படுத்துவது, அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது, பொருளாதாரத்தை வேறுபட்ட துறைகளைச் சார்ந்ததாக ஆக்குவது, தனியார் துறை மற்றும் வீடு கட்டுமானத் துறையைத் தூண்டுவது, ஊழல் மற்றும் பொருளாதாரச் சமமற்ற நிலையைக் குறைப்பது உள்ளிட்டவை பொருளாதாரம் எதிர் கொண்டுள்ள சவால்களாக உள்ளன.[296]

பாறை எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பானது (ஓப்பெக்) அவற்றின் "நிரூபிக்கப்பட்ட வளங்களை" அடிப்படையாகக் கொண்டு இதன் உறுப்பினர்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியை வரம்புக்குட்படுத்துகிறது. 1980இலிருந்து சவூதி அரேபியாவின் பதிப்பிக்கப்பட்ட வளங்களானவை சிறிதளவே மாற்றத்தைக் காட்டியுள்ளன. இதில் முதன்மையான விதி விலக்கு 1987 மற்றும் 1988க்கு இடையில் ஏற்பட்ட சுமார் 100 பில்லியன் பீப்பாய்கள் அதிகரிப்பாகும்.[297] மேத்யூ சிம்மன்ஸ் என்ற அமெரிக்க மதிப்பீட்டாளர் சவூதி அரேபியா அதன் வளங்களைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் காண்பிக்கிறது என்றும், சீக்கிரமே உற்பத்தி வீழ்ச்சிகளை அடையும் என்றும் பரிந்துரைத்து இருக்கிறார்.[298]


2003 முதல் 2011 வரை "பல முக்கியமான சேவைத் துறைகளானவை" தனியார்மயமாக்கப்பட்டன. இதில் மாநகராட்சிக் குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைத் தொடர்புகள் ஆகியவை அடங்கும். கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் பகுதிகள், போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு மற்றும் சிற்றுந்து விபத்து குறிப்பிடுதல் ஆகியவையும் கூட தனியார் மயமாக்கப்பட்டன. அரபு நியூஸ் பத்திரிக்கையின் பத்திரிகையாளரான அப்துல் அசீசு அலுவைசேக்கின் கூற்றுப் படி "கிட்டத்தட்ட இந்த ஒவ்வொரு துறைகளிலும் இந்தத் தனியார்மயமாக்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடு குறித்து கடுமையான கவலைகளை நுகர்வோர்கள் எழுப்பியுள்ளனர்".[299] நவம்பர் 2005இல் உலக வணிக அமைப்பின் உறுப்பினராகச் சவூதி அரேபியா அங்கீகரிக்கப்பட்டது. அயல்நாட்டுப் பொருட்களுக்கு இதன் சந்தை அனுமதியை அதிகரிக்க சவூதி அரேபியா எந்த அளவுக்கு முயற்சிக்கிறது என்பதைக் கவனக் குவியமாகக் கொண்டு இது இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இராச்சியத்தில் நேரடி அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காகச் சவூதி அரேபியப் பொது முதலீட்டு அதிகார அமைப்பானது அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. அயல்நாட்டு முதலீடு தடை செய்யப்பட்ட துறைகளின் ஒரு பட்டியலையும் சவூதி அரேபியா பேணி வருகிறது. தொலைத்தொடர்புகள், காப்பீடு மற்றும் மின்சாரக் கடத்தல்/பகிர்வு போன்ற அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாத சில துறைகளை அன்னிய முதலீடுகளுக்குக் காலப்போக்கில் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொருளாதாரத்தைச் "சவூதிமயமாக்கும்" ஒரு முயற்சியையும் கூட அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் குறிக்கோளானது அயல்நாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக சவூதி நாட்டவரை வேலையில் அமர்த்துவதாகும். ஆனால் இதற்கு ஓரளவே வெற்றி கிடைத்துள்ளது.[300]

பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுடன் சேர்த்து மகத் அத் தகப் பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க தங்கச் சுரங்கத் தொழில் பிரிவு, குறிப்பிடத்தக்க பிற கனிமத் தொழில் துறைகள், காய்கறிகள், பழங்கள், பேரீச்சைகள் போன்றவை மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மைத் துறை (குறிப்பாகத் தென் மேற்குப் பகுதியில்), தோராயமாக ஆண்டுக்கு 20 இலட்சம் புனிதப் பயணிகளைக் கொண்டுள்ள ஹஜ் புனிதப் பயணத்தால் உருவாக்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான தற்காலிகப் வேலைவாய்ப்புகளையும் சவூதி கொண்டுள்ளது.[296] 1970இலிருந்து சவூதி அரேபியா ஐந்தாண்டு "வளர்ச்சித் திட்டங்களைக்" கொண்டுள்ளது. பொருளாதாரத்தைப் பல்துறை சார்ந்ததாக மாற்றும் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு முயற்சியாகப் பொருளாதார நகரங்களை (எடுத்துக்காட்டு மன்னர் அப்துல்லா பொருளாதார நகரம்) தொடங்குவது இதன் திட்டங்களில் உள்ளடங்கியுள்ளன. ஒவ்வொரு மாகாணம் மற்றும் அவற்றின் பொருளாதாரப் பல்வகைமையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்நகரங்கள் சவூதி அரேபியா முழுவதும் பரவிக் காணப்படும். இந்நகரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஐஅ$150 பில்லியன் (₹10,72,740 கோடி) பங்களிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய்ப் போக்குவரத்தையும் சேர்த்து ஐரோப்பா மற்றும் சீனாவுக்கு இடையில் வணிகத்தில் பங்கெடுக்கும் பொருட்டு இதன் துறைமுகங்களைச் சவூதி அரேபியா அதிகரித்து வந்த நிலையாகச் செயல்பாட்டில் வைத்துள்ளது. இக்குறிக்கோளை அடையும் பொருட்டு ஜித்தா இஸ்லாமியத் துறைமுகம் அல்லது மன்னர் அப்துல்லா பொருளாதார நகரம் போன்ற துறைமுகங்கள் துரிதமாக விரிவாக்கப்படுகின்றன. போக்குவரத்தில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இந்நாடானது வரலாற்று ரீதியாகவும், தற்போதும் கடல்சார் பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது.[302][303][304][305]
இராச்சியத்தில் ஏழ்மை குறித்த புள்ளிவிவரங்களானவை ஐ. நா. ஆதாரங்களின் வழியாகக் கிடைப்பதில்லை. ஏனெனில், சவூதி அரசாங்கமானது எந்த ஒரு புள்ளி விவரங்களையும் வெளியிடுவதில்லை.[306] ஏழ்மை குறித்து கவனம் கொள்ள அழைப்பதற்கோ அல்லது குற்றம் சாட்டுவதற்கோ சவூதி அரசாங்கமானது ஊக்கமளிப்பதில்லை. திசம்பர் 2011இல் சவூதி உள்துறை அமைச்சகமானது மூன்று பத்திரிகையாளர்களைக் கைது செய்தது. ஏழ்மை குறித்து யூடியூப் இணையதளத்தில் ஒரு காணொளியை அவர்கள் பதிவேற்றியதற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காகச் சிறைப்படுத்தி இருந்தது.[307][308][309] இந்தக் காணொளியை உருவாக்கியவர்கள் சவூதி நாட்டவர்களில் 22% பேர் ஏழைகளாகக் கருதப்படலாம் என்று குறிப்பிடுகின்றனர்.[310] இவ்விஷயம் குறித்து ஆய்வு செய்யும் பார்வையாளர்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதையே விரும்புகின்றனர்.[311] ஏனெனில், கைது செய்யப்படும் ஆபத்தை அவர்கள் விரும்புவதில்லை.
பொருளாதாரம் மீது கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்பாராத தாக்கம் சவூதி அரேபியாவின் மோசமான மனித உரிமைகள் பதிவுகளுடன் சேர்த்து இராச்சியத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன் இதற்கு முன் கண்டிராத சவால்களை வைத்துள்ளது. இங்கு 'விஷன் 2030' திட்டத்தின் கீழான சில நிகழ்வுகளும் கூட பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[312] மே 2020இல் சவூதி அரேபியாவின் நிதி அமைச்சர் மொகம்மெது அல்-சதான் தசாப்தங்களில் முதல் முறையாக நாட்டின் பொருளாதாரமானது ஒரு கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். மேலும் உலகளாவிய கச்சா எண்ணெய்ச் சந்தையின் வீழ்ச்சியையும் இதற்குக் காரணமாகக் கூறினார். மொகம்மெது அல்-சதானின் கூற்றுப் படி நாடு "வலி நிறைந்த" நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், இந்தத் தாக்கத்தைச் சரி செய்வதற்காக எல்லா விதமான வாய்ப்புகளையும் திறந்து வைத்திருக்கும் என்றும் கூறினார்.[313]
சூலை 2024இல் சவூதி அரேபியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளூர் மயமாக்க நிறுவனமானது (ஆர்இஎல்சி) சீன நிறுவனங்களுடன் இராச்சியத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்கட்டமைப்பை மேம்படுத்த மூன்று இணைப்புத் திட்டங்களை உருவாக்கியது. சவூதி அரேபியாவின் 2030ஆம் ஆண்டு இலக்குகளின் ஒரு பகுதியாக பொது முதலீட்டு நிதியமானது செயல்பாட்டு ரீதியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் காரணிகள் உள்ளூர் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. சவூதி அரசின் முதலீட்டு நிதியத்தின் ஒரு பிரிவான ஆர்இஎல்சி உள்ளூர் பொருள் வழங்கும் தொடர்புகளை வலிமைப்படுத்துவதற்காக உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் சவூதி தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே கூட்டணிகளை எளிதாக்குகிறது. காற்று விசையாழிப் பொறி ஆக்கக் கூறுகளுக்காக என்விசன் எனர்ஜி, ஒளி மின்னழுத்த மின்கலங்களுக்காக சின்கோ சோலார், மற்றும் ஒளி மின்னழுத்தப் பாளங்கள் மற்றும் மென் தகடுகளுக்காக லூம்டெக் ஆகியவற்றுடன் இணைப்புக் கூட்டணிகள் உள்ளிட்டவை இந்த இணைப்புச் செயல்பாடுகளில் அடங்கும். 2030 வாக்கில் சவூதி அரேபியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் 75% வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாக ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்டவையாக இந்தத் திட்டங்கள் உள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களில் நாட்டை ஒரு முதன்மையான உலகளாவிய ஏற்றுமதியாளராக நிலைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.[314]
பொருளாதாரம் மற்றும் திட்டமிடலுக்கான சவூதி அமைச்சரான பைசல் அல் இப்ராகிம் நியூயார்க்கில் நடந்த 2024ஆம் ஆண்டு உயர்-மட்ட நீடித்த வளர்ச்சிக்கான அரசியல் கூட்டத்தில் உலகக் காலநிலை மாற்ற இலக்குகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் குறித்துக் கவனம் பெறச் செய்தார். சவூதி அரசிதழில் வெளியிடப்பட்டதன் படி நாட்டின் பசுமைப் பொருளாதாரத்துக்காக ஐஅ$180 பில்லியன் (₹12,87,288 கோடி)க்கும் அதிகமான 80க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் முதலீடுகளைக் குறிப்பிட்டார். விஷன் 2030 குறிக்கோள்களுடன் இத்தகைய முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது, உள்ளூர் அளவில் நீடித்த நிலைக்குக் கவனம் செலுத்தப்படுதல், துறைகள் ஒன்று கூட்டப்படுதல், மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை இவர் சுட்டிக் காட்டினார்.[315]
வேளாண்மை

ஒரு வணிக அளவில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் தொடக்க கால முயற்சிகளானவை 1950களின் போது அல் கர்ச் மாவட்டத்தில் (ரியாத்துக்கு சற்று தெற்கில்) நடைபெற்றன.[316] 1970களில் அசட்டை செய்யாத பெரும் அளவிலான வேளாண்மை வளர்ச்சிகள் தொடங்கின.[317] குறிப்பாக கோதுமையைக் கொண்டு தொடங்கப்பட்டன.[318] நவீன பண்ணைத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க, கிராமப்புற சாலைகள், நீர்ப் பாசன அமைப்புகள், கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதிகளை நிறுவ, மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்புகளை ஊக்குவிக்க விரிவான திட்டங்களை அரசாங்கமானது தொடங்கியது. இதன் விளைவாக அனைத்து அடிப்படை உணவுகளின் உற்பத்தியிலும் ஒரு பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாமிசம், பால் மற்றும் முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருட்களில் சவூதி அரேபியா சுயசார்புடையதாக உள்ளது. இந்நாடு பேரீச்சம் பழங்கள், பால் பொருட்கள், முட்டைகள், மீன்கள், பண்ணைப் பறவை மாமிசங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஏற்றுமதி செய்கிறது. ஒரு காலத்தில் சவூதி அரேபியாவின் அடிப்படை உணவாக இருந்த பேரீச்சம் பழங்கள் தற்போது முதன்மையாக உலகளாவிய மனிதாபிமான உதவிகளுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. மேலும், வாற்கோதுமை, மகட்டசோளம் மற்றும் தினை போன்ற பிற தானியங்களையும் சவூதி விவசாயிகள் பெரும் அளவுக்கு விளைவிக்கின்றனர். 2016ஆம் ஆண்டு நிலவரப் படி மதிப்பு மிக்க நீர் ஆதாரங்களைத் தக்க வைக்கும் ஒரு முயற்சியாக ஏற்றுமதிக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமையின் விளைவிப்பானாது நிறுத்தப்பட்டு விட்டது.[319] புதுப்பிக்க இயலாத நிலத்தடி நீரை நுகர்ந்ததானது 2012 வாக்கில் ஒட்டு மொத்த நிலத்தடி நீர் வளங்களில் ஐந்தில் நான்கு பங்கை இழப்பதற்குக் காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[320]
மத்திய கிழக்கில் இராச்சியமானது மிக நவீன மற்றும் மிகப் பெரிய பால் பண்ணைகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது. ஒரு மாட்டுக்கு ஆண்டுக்கு 6,800 லிட்டர்கள் என்ற மிகக் குறிப்பிடத்தக்க உற்பத்தி வீதத்தை பால் உற்பத்தியானது கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய அளவுகளில் இதுவும் ஒன்றாகும். மத்திய கிழக்கில் செங்குத்தாக இணைக்கப்பட்ட மிகப் பெரிய உள்நாட்டுப் பால் உற்பத்தி நிறுவனமாக உள்நாட்டுப் பால் உற்பத்தி நிறுவனமான அல்மராய் திகழ்கிறது.[321]
ஆலிவ் மரமானது சவூதி அரேபியாவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். அல் சௌப் பகுதியானது தசம இலட்சக்கணக்கான ஆலிவ் மரங்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2 கோடி மரங்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[322]
இதன் கடற்கரைக்குப் பக்கவாட்டில் 100 அலையாத்தித் தாவரக் கன்றுகளை நடும் நாட்டின் தற்போது நடைபெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாவரப் பரப்பு வளர்ச்சி மற்றும் பாலைவனமாதலுடன் போராடும் தேசிய மையமானது 1.30 கோடித் தாவரங்களை நட்டுள்ளதாக அறிவித்துள்ளது.[323]
குடிநீர் வழங்கலும், கழிவு நீக்க அமைப்பும்

சவூதி அரேபியாவின் முதன்மையான சவால்களில் ஒன்று தண்ணீர்ப் பற்றாக்குறையாகும். கடல் நீரிலிருந்து உப்பகற்றல், குடிநீர் விநியோகம், கழிவு நீக்க அமைப்பு மற்றும் கழிவு நீரைச் சுத்திகரித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது குடிநீரில் சுமார் 50% ஆனது உப்பகற்றல் மூலமும், 40% ஆனது புதுப்பிக்க இயலாத நிலத்தடி நீரைப் பெறுவதில் இருந்தும், மற்றும் 10% ஆனது நாட்டின் மலைப் பாங்கான தென்மேற்கில் உள்ள மேற்பரப்பு நீரில் இருந்தும் பெறப்படுகிறது.[324] சவூதி அரேபியா இதன் நிலத்தடி மண் படுகைகளில் ஒரு பெரும் அளவுக்கு நீர்க் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இதன் வேளாண்மையானது சிதைவடைந்துள்ளது.[325][326] இதன் விளைவாக ஐக்கிய அமெரிக்கா,[327][328] அர்ஜென்டீனா[329] மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வேளாண்மை நிலங்களைச் சவூதி அரேபியா விலைக்கு வாங்கியுள்ளது.[330][331][332][333] அயல் நாடுகளில் வேளாண்மை நிலத்தை வாங்கும் ஒரு முதன்மையான நாடாகச் சவூதி அரேபியா தரநிலைப்படுத்தப்படுகிறது.[334][335]

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீக்க அமைப்பின் இணைந்த மேற்பார்வைத் திட்டத்தின் (ஜேஎம்பி) படி சவூதி அரேபியாவில் குடிநீர் மற்றும் கழிவு நீக்க அமைப்பிற்கான சமீபத்திய ஏற்கக் கூடிய ஆதாரமானது 2004ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். இது 97% மக்கள் மேம்பட்ட குடிநீர் ஆதாரத்தையும், மற்றும் 99% மக்கள் மேம்பட்ட கழிவு நீக்க அமைப்புக்கான வழிமுறையையும் கொண்டுள்ளனர் என்று காட்டுகிறது. 2015ஆம் ஆண்டிற்கான இந்த ஜே. எம். பி.யானது கழிவு நீக்கத்திற்கான வழிமுறையானது 100% ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. கழிவு நீக்க அமைப்பானது முதன்மையாக அவ்விடங்களிலேயே ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 40% மக்கள் பாதாளச் சாக்கடை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர்.[337] 2015இல் 8,86,000 மக்கள் "மேம்படுத்தப்பட்ட" குடிநீருக்கான வழிமுறையின்றி இருந்தனர்.[338][339]
சுற்றுலா
2019இல் முஸ்லிம் அல்லாதவர்கள் வருகை புரிவதற்கு அனுமதியளிக்க ஒரு பொதுவான சுற்றுலா நுழைவு இசைவைச் சவூதி அரேபியா பின்பற்றத் தொடங்கியது.[340] பெரும்பாலான சுற்றுலாவானது பெருமளவுக்குச் சமயப் புனிதப் பயணங்களைச் சார்ந்திருந்தாலும், ஓய்வுச் சுற்றுலாத் துறையில் வளர்ச்சியும் காணப்பட்டது. உலக வங்கியின் கூற்றுப் படி 2012இல் சவூதிஅரேபியாவிற்குத் தோராயமாக 1.43 கோடி மக்கள் வருகை புரிந்தனர். உலகின் 19ஆவது மிக அதிகம் வருகை புரியப்பட்ட நாடாக இது இதை ஆக்கியது.[341] சவூதி விஷன் 2030 திட்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக சுற்றுலாவானது உள்ளது. 2018இல் பிஎம்ஐ (பிசினஸ் மானிட்டர் இன்டர்நேசனல்) ரிசர்ச் என்ற அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு அறிக்கையின் படி சமயம் மற்றும் சமயம் சாராத சுற்றுலா ஆகிய இரண்டுமே விரிவாக்கத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டது.[342]
விளையாட்டு விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு வரும் அயல்நாட்டவர்களுக்கு இராச்சியமானது ஒரு மின்னணு இசைவை வழங்குகிறது.[343] 2019இல் பயணிகளுக்கு இசைவு விண்ணப்பங்களைத் திறக்கும் தன் திட்டத்தினை இராச்சியமானது அறிவித்தது. இதன் மூலம் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சவூதிக்கான நுழைவு இசைவுகளைப் பெற முடியும்.[344] 2020இல் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் அல்லது ஷெங்கன் இசைவுகளைக் கொண்டவர்கள் சவூதிக்கு வருகை புரியும் போது வருகை புரியும் நேரத்திலேயே ஒரு சவூதி மின்னணு இசைவுக்குத் தகுதியுடையவர்கள் ஆவர் என்று அறிவிக்கப்பட்டது.[345]
- அல் பகா மாகாணத்தில் அமைந்துள்ள தீ ஐன் கிராமம்
- அல்-ருப்' அல்-கலி (வெற்று இடம்) பாலைவனம்
- அல்-'உலாவில் யானைப் பாறை
- செங்கடல் திட்டத்தின் உம்மாகத் தீவுகள்
- சராத் மலைத் தொடரின் 'அசீர் துணைப் பிரிவில் அமைந்துள்ள சபால் சோவுதா (உயரம் 3,000 மீட்டர் அல்லது 9,800 அடி)
- வரலாற்று ரீதியான ஜித்தா மாவட்டத்தில் உள்ள நசீப் வீடு
- திரியாவின் அத்-துரைப் மாவட்டத்தில் உள்ள சல்வா அரண்மனை
- ரியாத்தின் அல்-திரா புறநகர்ப் பகுதியில் உள்ள மஸ்மக் கோட்டை
- வரலாற்று ரீதியான ரிசால் அல்மா கிராமம்
- மதைன் சாலியில் உள்ள கசர் அல்-பரீத் கல்லறை
- பராசான் தீவுகளில் உள்ள அல்-ரிபை வீட்டு வாயில்
Remove ads
மக்கள் தொகை

2022ஆம் ஆண்டு நிலவரப் படி சவூதி அரேபியா அதன் மக்கள் தொகையாக 3,21,75,224 பேரைக் குறிப்பிட்டது.[346] அரபு உலகத்தில் நான்காவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாக இது இதை ஆக்குகிறது.[347] இதன் குடியிருப்புவாசிகளில் கிட்டத்தட்ட 42% பேர் புலம் பெயர்ந்தவர்களாவர்.[348] இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களாவர்.[349]
1950இல் இருந்து சவூதி மக்கள் தொகையானது துரிதமாக வளர்ந்துள்ளது. அந்நேரத்தில் சவூதி அரேபியாவின் மக்கள் தொகையானது 30 இலட்சமாக மதிப்பிடப்பட்டது.[350] 20ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்திற்கு உலகின் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி வீதங்களில் ஒன்றை இந்நாடு கொண்டிருந்தது. ஆண்டுக்கு சுமார் 3% ஆக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது.[351] ஆண்டுக்கு 1.62% என்ற வீதத்தில் இது தொடர்ந்து வளர்ந்தது.[348] எஞ்சிய மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவை விட இது சற்றே அதிகமாகும். இதன் விளைவாக உலகளாவிய சராசரியைப் பொறுத்த வரையில் சவூதி மக்கள் மிகவும் இளமையானவர்களாக உள்ளனர். இந்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக உள்ளனர்.[352]
சவூதி குடிமக்களின் இன ஆக்கக் கூறுகளானவை 90% அராபியர் மற்றும் 10% ஆப்பிரிக்க-அராபியர் என்று உள்ளது.[353] பெரும்பாலான சவூதி நாட்டவர் தென்மேற்குப் பகுதியில் செறிந்துள்ளனர். மிக அதிக மக்கள் தொகையுடைய பகுதியான ஹெஜாஸ்[354] மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்குத் தாயகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் அண்டைப் பகுதியான நஜத் (28%) மற்றும் கிழக்கு மாகாணம் (15%) ஆகியவை உள்ளன.[355] 1970 வரையிலும் கூட கிராமப்புற மாகாணங்களில் பெரும்பாலான சவூதி நாட்டவர்கள் சொற்ப அளவு ஆதாரத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், 20ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இராச்சியமானது துரிதமாக நகரமயமாக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு நிலவரப் படி சுமார் 85% சவூதி நாட்டவர்கள் மெட்ரோ நகரப் பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக ரியாத், ஜித்தா மற்றும் தம்மம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.[356][357] 1960களின் தொடக்கம் வரையிலும் கூட சவூதி அரேபியாவின் அடிமை மக்கள் தொகையானது 3,00,000 பேர் என்று மதிப்பிடப்பட்டது.[358] 1962ஆம் ஆண்டு அடிமை முறையானது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.[359][360]
மொழி
நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அரபு மொழியாகும்.[5][8] நான்கு முதன்மையான மாகாணப் பேச்சு வழக்குக் குழுக்கள் சவூதி நாட்டவர்களால் பேசப்படுகின்றன. அவை நஜதி (சுமார் 1.46 கோடிப் பேரால் பேசப்படுகிறது[372]), ஹெஜாஸி (சுமார் 1.03 கோடிப் பேரால் பேசப்படுகிறது[373]), பகர்னா பேச்சு வழக்கு மொழிகளை உள்ளடக்கிய வளைகுடா அரபு மொழி (சுமார் 96 இலட்சம் பேரால் பேசப்படுகிறது[374]), மற்றும் தெற்கு ஹெஜாஸி மற்றும் திகாமா[375] பேச்சு வழக்கு மொழிகள். பைபி மொழியானது சுமார் 50,000 பேரால் பேசப்படுகிறது. மெக்ரி மொழியும் கூட சுமார் 20,000 மெக்ரி குடிமக்களால் பேசப்படுகிறது.[376] காது கேளாத மாற்றுத் திறனாளி சமூகத்தின் முதன்மையான மொழியாகச் சவூதி சைகை மொழி திகழ்கிறது. இது சுமார் 1 இலட்சம் பேரால் பயன்படுத்தப்படுகிறது. பெருமளவிலான புலம் பெயர்த் தொழிலாளர்களின் சமூகங்களும் கூடத் தங்களது சொந்த மொழிகளைப் பேசுகின்றனர். 2018ஆம் ஆண்டுத் தரவுகளின் படி மிக அதிக எண்ணிக்கையில் பேசப்படுபவையாக வங்காளம் (~15 இலட்சம்), தகலாகு (~9 இலட்சம்), பஞ்சாபி (~8 இலட்சம்), உருது (~7.40 இலட்சம்), எகிப்திய அரபு (~6 இலட்சம்), ரோஹிங்யா, வடக்கு இலெவண்ட் அரபு (இரண்டும் ~5 இலட்சம்)[377] மற்றும் மலையாளம் ஆகியவை திகழ்கின்றன.[378]
சமயம்
அனைத்து சவூதி குடிமக்களும்,[379] குடியிருப்பாளர்களும் முஸ்லிம் ஆவர்.[380][381] சட்டப்படி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் முஸ்லிம் ஆவர். சன்னி இஸ்லாம் மக்கள் தொகையின் மதிப்புகளானவை 85% - 90% வரையில் காணப்படுகின்றன. எஞ்சிய 10 - 15% பேர் சியா முஸ்லிம் ஆவர்.[382][383][384][385] இவர்கள் பன்னிருவர் அல்லது சுலய்மானி இஸ்மாயிலியியத்தைப் பின்பற்றுகின்றனர். சன்னி இஸ்லாமின் அதிகாரப்பூர்வ மற்றும் முதன்மையான வடிவமாக சலாபியம் காணப்படுகிறது. இது பொதுவாக வகாபியம் என்று அறியப்படுகிறது.[386][387][f] இவ்வடிவமானது 18ஆம் நூற்றாண்டில் முகம்மது இப்னு அப்த் அல்-வகாபால் அரேபியத் தீபகற்பத்தில் நிறுவப்பட்டதாகும். சிறுபான்மையின சியா இசுலாம் போன்ற பிற பிரிவுகள் அமைப்பு ரீதியாக இடர்ப்பாடுகளுக்கு ஆளாகின்றன.[388] சவூதி அரேபியாவின் சியா முஸ்லிம்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றனர். குறிப்பாக கதீப் மற்றும் அல்-அக்சா பகுதிகளில் காணப்படுகின்றனர்.[389]
சவூதி அரேபியாவில் 15 இலட்சம் கிறித்தவர்கள் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே அயல்நாட்டுப் பணியாளர்கள் ஆவர்.[390] நாட்டுக்குள் தற்காலிக அயல்நாட்டுப் பணியாளர்களாக நுழையக் கிறித்தவர்களை சவூதி அரேபியா அனுமதிக்கிறது. ஆனால் அவர்களது நம்பிக்கையை வெளிப்படையாகப் பின்பற்ற அவர்களை அனுமதிப்பதில்லை. அதிகாரப்பூர்வமாக கிறித்தவர்களாக உள்ள சவூதி குடிமக்கள் இல்லை.[391] ஏனெனில், சவூதி அரேபியா இஸ்லாமிலிருந்து சமயம் மாறுவதைத் தடை செய்துள்ளது. மாறுபவர்களுக்கு மரணம் தண்டனையாகக் கொடுக்கப்படுகிறது.[392] பியூவ் ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப் படி சவூதி அரேபியாவில் 3.90 இலட்சம் இந்துக்கள் உள்ளனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே அயல்நாட்டுப் பணியாளர்கள் ஆவர்.[393] அதிகாரப் பூர்வமாகத் "தீவிரவாதிகள்" என்று அழைக்கப்பட்டாலும்[394] இறைமறுப்பு மற்றும் அறியவியலாமைக் கொள்கையுடையோர் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[395][396] ஐக்கிய அமெரிக்க அரசுத் துறையானது அதன் 2017ஆம் ஆண்டு சமய சுதந்திர அறிக்கையில் சவூதி அரேபியாவைக் குறிப்பிடத்தக்கக் கவலை கொள்ளச் செய்யும் நாடகக் குறிப்பிட்டது. அமைப்பு ரீதியான, நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் சமயச் சுதந்திரம் அதிர்ச்சியுள்ளாக்கும் வகையில் மீறப்படுவதை இதற்குக் காரணமாகக் கூறியது.[397]
நஜ்ரானானது வரலாற்று ரீதியாக உள்ளூர் கிறித்தவ மற்றும் யூத சமூகங்களுக்குத் தாயகமாக இருந்தது.[398] இசுரேல் நிறுவப்படுவதற்கு முன்னர் நஜ்ரான் 1,000 யூதர்களுக்குத் தாயகமாக இருந்தது. அவர்கள் இப்னு சவூத்துடன் நட்பு ரீதியிலான உறவு முறைகளைக் கொண்டிருந்தனர்.[398] அவர்கள் யெமனிய யூதப் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தனர்.[398] இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் மற்றும் 1948ஆம் ஆண்டின் அரபு-இசுரேலியப் போரைத் தொடர்ந்து யூதர்கள் யெமனில் இருந்து வெளியேறத் தொடங்கினர். அங்கிருந்து இசுரேலுக்குச் சென்றனர்.[398] 1970களில் இந்நாட்டில் எந்த ஒரு யூதரும் இல்லை.
கல்வி
பட்டப் படிப்பானது குடிமக்களுக்கு மட்டுமே என்று வரம்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் கல்வியானது அனைத்து நிலைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.[399] பள்ளி அமைப்பானது தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை உள்ளடக்கியதாக உள்ளது. வகுப்பறைகளானவை பாலினத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. மேல் நிலைக் கல்வியில் மாணவர்கள் மூன்று வகையான பள்ளிகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும். அவை பொதுக் கல்வி, தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, அல்லது சமயக் கல்வி ஆகியவையாகும்.[400] 2020ஆம் ஆண்டில் எழுத்தறிவு வீதமானது ஆண்களுக்கு 99% ஆகவும், பெண்களுக்கு 96% ஆகவும் இருந்தது.[401][402] வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதமானது இரு பாலருக்கும் சுமார் 99.5%ஆக வளர்ச்சியடைந்துள்ளது.[403]

கல்லூரிப் படிப்பானது துரிதமாக விரிவடைந்துள்ளது. குறிப்பாக 2000இலிருந்து ஏராளமான எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன. ரியாத்தில் உள்ள மன்னர் சவூத் பல்கலைக்கழகம், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மற்றும் சித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அசீசு பல்கலைக்கழகம் உள்ளிட்டவை கல்லூரிப் படிப்புக்கான கல்வி நிலையங்களாக உள்ளன. இளவரசி நோரா பல்கலைக் கழகமானது உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகமாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மன்னர் அப்துல்லா பல்கலைக் கழகமானது 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சவூதி அரேபியாவின் முதல் இரு பாலர் பல்கலைக்கழக வளாகம் இதுவாகும். பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இராணுவப் பாடங்கள், சமயம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியப் பாடங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் ஏராளமான அளவில் உள்ளன. பெண்கள் பொதுவாகக் கல்லூரிப் படிப்பை பாலினத்தால் பிரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பெறுகின்றனர்.[136]

சாங்காய் தரநிலைகள் என்று அறியப்படும் உலகப் பல்கலைக் கழகங்களின் கல்வித் தரநிலைகளானவை அதன் 2022ஆம் ஆண்டு உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஐந்து சவூதி கல்வி நிலையங்களைத் தரநிலைப்படுத்தியது.[404] கியூஎஸ் உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலானது 2022ஆம் ஆண்டில் உலகின் முதல் நிலைப் பல்கலைக்கழகங்களில் 14 சவூதிப் பல்கலைக்கழகங்களையும், அரபு உலகத்தில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் 23 சவூதிப் பல்கலைக்கழகங்களையும் தரநிலைப்படுத்தியது.[405] ஐக்கிய அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கையின் மிகச் சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகத் தரநிலைகளின் 2022ஆம் ஆண்டு பட்டியலானது உலகின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் மன்னர் அப்துல் அசீசு பல்கலைக்கழகத்தையும், உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மன்னர் அப்துல்லா பல்கலைக்கழகத்தையும் தர நிலைப்படுத்தியது.[406]
நேச்சர் அறிவியல் இதழின் 2018ஆம் ஆண்டு கூற்றுப் படி உயர்-தர ஆராய்ச்சி பதிப்புகளைப் பொறுத்த வரையில் சவூதி அரேபியா உலக அளவில் 28ஆவது இடத்தைப் பெற்றது.[407] மத்திய கிழக்கு, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் மிகச் சிறந்த பதிப்பு நாடக இது சவூதி அரேபியாவை ஆக்குகிறது.[சான்று தேவை] சவூதி அரேபியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8%ஐக் கல்விக்காகச் செலவிட்டுள்ளது. உலகளவில் சராசரிக் கல்விச் செலவீனம் 4.6%ஆக உள்ளது.[408] 2024இல் உலகளாவிய புதுமையாக்கச் சுட்டெண்ணில் சவூதி அரேபியா 44ஆவது இடத்தைப் பெற்றது. 2019இல் இந்நாடு பெற்ற 68ஆவது இடத்தில் இருந்து இது ஒரு முன்னேற்றமாகும்.[409][410][411]
சவூதி கல்வி அமைப்பின் மீதான குற்றம் சாட்டுகளானவை[412][413] சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வழி வகுத்துள்ளது. செப்தெம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்ட தீவிரவாதம் மற்றும் ஒரு நவீன பொருளாதாரத்துக்கு நாட்டின் பல்கலைக்கழகக் கல்வியானது போதாமையாக உள்ளது ஆகிய இரட்டைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டு "தத்வீர்" சீர்திருத்தத் திட்டத்தின் வழியாகக் கல்வி அமைப்பை மெதுவாக நவீன மயமாக்கும் முயற்சிகளைத் தொடங்கியது.[412] தத்வீர் திட்டமானது தோராயமாக ஐஅ$2 பில்லியன் (₹14,303.2 கோடி) மதிப்பு கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பாரம்பரிய சவூதி முறைகளான மனனம் செய்தல் மற்றும் பொருளுணரா மனப் பாடக் கற்றலிலிருந்து ஆராய்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்கு பயிற்றுவிப்பை நகர்த்துவதாக இது கவனம் கொண்டிருந்தது. ஒரு மிகுந்த சமயச் சார்பற்ற மற்றும் தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியையும் கொடுக்கும் ஒரு கல்வி அமைப்பை உருவாக்குவதையும் கூட இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[414][415]
2021இல் தி வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையானது யூத எதிர்ப்பு மற்றும் பாலினப் பாகுபாடு என்று கருதப்பட்ட பத்திகளில் இருந்து பாட நூல்களைத் பிழை நீக்கச் சவூதி அரேபியா எடுத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டது. தன்பாலின ஈர்ப்பு அல்லது ஒரே பாலின உறவு முறைகளுக்கான தண்டனை குறித்த பத்திகளானவை நீக்கப்பட்டன. யூத எதிர்ப்பு வரிகள் மற்றும் யூதர்களை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான அழைப்பு ஆகியவை குறைவாக ஆயின. அவதூறுக்கு எதிரான குழுமத்தின் பன்னாட்டு விவகாரங்களின் இயக்குனரான தாவிது வெயின்பெர்க் யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் சியா பிரிவினரைத் தீயவர்களாகக் குறிப்பிடும் வரிகள் சில இடங்களில் நீக்கப்பட்டதாகவும் அல்லது அவற்றின் பொருட்களின் தாக்கம் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய அமெரிக்க அரசுத் துறையானது அதன் மின்னஞ்சலில் இந்த மாற்றங்களை வரவேற்றது. அயல் நாட்டு விவகாரங்களுக்கான சவூதி அமைச்சகமானது சவூதி ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சித் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.[416]
சுகாதாரம்

அரசு முகமைகள் மூலமாக இலவச மருத்துவ சேவைகளை அரசாங்கம் கொடுக்கும் ஒரு தேசிய சுகாதார சேவை அமைப்பை சவூதி அரேபியா கொண்டுள்ளது. உயர்தர மருத்துவ சேவையை வழங்கும் 26 மிகச் சிறந்த நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும்.[417] தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சார் சுகாதாரச் சேவையை வழங்குவதற்கான பொறுப்பேற்றுள்ள முதன்மையான அரசாங்க முகமை சுகாதார அமைச்சகமாகும். இந்த அமைச்சகத்தின் பூர்வீகமானது 1925ஆம் ஆண்டுக்குத் தடயமிடப்படலாம். அப்போது ஏராளமான மாகாண மருத்துவத் துறைகள் நிறுவப்பட்டன. முதல் மருத்துவத் துறையானது மக்காவில் நிறுவப்பட்டது. பல்வேறு மருத்துவ சேவை அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு ஓர் அமைச்சக அமைப்பு உருவானது.[418] ஒவ்வொரு மாவட்டங்கள் மற்றும் வேறுபட்ட மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையில் ஒரு நட்பு ரீதியிலான போட்டியை சுகாதார அமைச்சகமானது உருவாக்கியது. இந்த யோசனையானது 2016இல் தொடங்கப்பட்ட "அதா" திட்டத்தின் உருவாக்கத்தில் முடிவடைந்தது. மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான ஒரு தேசிய அளவிலான செயல்பாட்டுச் சுட்டெண் இந்தப் புதிய அமைப்பாகும். இராச்சியம் முழுவதுமான காத்திருப்பு நேரங்கள் மற்றும் பிற முதன்மையான அளவீடுகள் பெருமளவுக்கு முன்னேற்றமடைந்தன.[419]

தவறான வாழ்க்கை முறைத் தேர்ந்தெடுப்புகளைச் சரி செய்ய உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் செயல்பாட்டு உத்தி என்று அறியப்படும் ஒரு புதிய உத்தியானது[420] அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. ஆரோக்கியமற்ற உணவு, பானம் மற்றும் வெண் சுருட்டுகள் மீது ஒரு வரி அதிகரிப்பு வேண்டும் என அமைச்சகமானது அறிவுறுத்தியது. சுகாதாரச் சேவை வாய்ப்புகளை மேம்படுத்த இந்த மேற்கொண்ட வரி பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டு இந்த வரியானது செயல்பாட்டுக்கு வந்தது.[421] இதே உத்தியின் ஒரு பகுதியாக 2019இல் சில உணவு மற்றும் பானப் பொருட்களில் கலோரி அளவு குறிப்பிடப்பட்டது. உடல் பருமனைக் குறைப்பதற்கும், உடல்நலப் பிரச்சினைகள் உள்ள குடிமக்கள் தங்களது உணவுப் பழக்கத்தைப் பேணுவதையும் குறிக்கோளாகக் கொண்டு அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களும் கூட வெளிப்புறத்தில் பட்டியலிடப்பட்டன.[422] உடல் பருமனைக் குறைக்கும் ஒரு கவனத்தின் ஒரு பகுதியாக 2017இல் பெண்களுக்கு மட்டுமேயான உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. உடல் ஆரோக்கியத்தின் உயர் தரங்களைப் பேணுவதற்காக உடல் கட்டாக்கம், ஓடுதல் மற்றும் நீந்துதல் உள்ளிட்டவை இந்த ஒவ்வொரு உடற்பயிற்சி நிலையங்களாலும் அளிக்கப்பட்ட விளையாட்டுக்களாக இருந்தன.[423][424]
புகை பிடிக்கும் பழக்கமானது அனைத்து வயதினரிடையேயும் பரவலாக உள்ளது. 2009இல் மிகக் குறைவான இடைமதிப்பு சதவீதத்தைக் கொண்டிருந்த புகை பிடிப்பவர்களாக பல்கலைக்கழக மாணவர்கள் (~13.5%) இருந்தனர். அதே நேரத்தில், மிக அதிக சதவீதம் உடையவர்களாக மூத்த வயதுடையவர்கள் (~25%) இருந்தனர். இந்த ஆய்வானது பெண்களை விட ஆண்களின் புகை பிடிக்கும் (ஆண்களுக்கு ~26.5%, பெண்களுக்கு ~9%) இடைமதிப்பு சதவீதமானது மிக அதிகமாக இருந்ததையும் கூடக் கண்டறிந்தது. 2010க்கு முன்னர் புகை பிடித்தலைத் தடை செய்யவோ அல்லது வரம்புக்கு உட்படுத்தவோ சவூதி அரேபியா எந்த ஒரு கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை.
சுகாதார அமைச்சகமானது உலக சுகாதார அமைப்பால் "ஆரோக்கியமுடைய நகரம்" விருதை உனய்சா மற்றும் ரியாத் அல் கப்ரா ஆகிய நகரங்களுக்குச் சவூதி அரேபியாவில் 4ஆவது மற்றும் 5ஆவது ஆரோக்கியமான நகரங்களாகப் பெற்றது.[425] உலக சுகாதார அமைப்பானது முன்னர் அத் திரியா, சலசில் மற்றும் அல்-சமூம் ஆகிய மூன்று சவூதி அரேபிய நகரங்களை உலக சுகாதார அமைப்பின் ஆரோக்கியமான நகரங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக "ஆரோக்கியமான நகரமாக" வகைப்படுத்தியிருந்தது. சமீபத்தில் அல்-பகா நகரமும் கூட உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய ஆரோக்கியமான நகரங்களின் பட்டியலில் இணைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆரோக்கியமான நகரமாக வகைப்படுத்தப்பட்டது.[426]
2019இல் அப்போதைய சவூதி சுகாதார அமைச்சரான தவ்பீக் பின் பசுவான் அல்ரபியா சமூக விழிப்புணர்வு, சிகிச்சை மற்றும் ஒழுங்கு முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் வழியாகப் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதற்குப் பதிலாக ஓர் உலகளாவிய விருதைப் பெற்றார்.[427] மே 2019இல் செனீவாவில் நடந்த உலக சுகாதார மன்றத்தின் 72ஆவது அமர்வின் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கப்பட்டது. 2005இல் உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாடு ஆதாரக் கட்டமைப்பு செயற்பாங்கை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்றாகச் சவூதி அரேபியா உருவானதற்குப் பிறகு இந்நாடு 2017இல் 12.7%ஆக இருக்கும் புகையிலைப் பயன்பாட்டை 5%ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.[427]
உலக வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவின் படி சவூதி அரேபியா ஓர் ஆயுட் கால எதிர்பார்ப்பாக 78 ஆண்டுகளைக் (ஆண்களுக்கு 77, பெண்களுக்கு 80) கொண்டுள்ளது.[428] 2022இல் பிறப்பின் போது குழந்தை இறப்பு வீதமானது 1,000 குழந்தைகளுக்கு 6 (ஆண் குழந்தைகளுக்கு 6, பெண் குழந்தைகளுக்கு 5) என்று இருந்தது.[428] 2022இல் வயது வந்த மக்களில் 71.8% பேர் அதிக உடல் எடையையும், 40.6% பேர் உடல் பருமனையும் கொண்டிருந்தனர்.[429]
அயல்நாட்டவர்
புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களின் மையத் துறையானது 2014 ஆம் ஆண்டின் முடிவில் அயல் நாட்டவரின் மக்கள் தொகையை 33% (1.01 கோடி) என்று மதிப்பிட்டது.[430] சிஐஏ ஃபேக்ட் புக் 2013ஆம் ஆண்டு நிலவரப் படி சவூதி அரேபியாவில் வாழும் அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 21% ஆக உள்ளனர் என்று மதிப்பிட்டது. பிற ஆதாரங்கள் வேறுபடும் மதிப்பீடுகளைக் குறிப்பிடுகின்றன.[431] இந்தியர்கள்: 15 இலட்சம், பாக்கித்தானியர்: 13 இலட்சம்,[432] எகிப்தியர்: 9 இலட்சம், யெமனியர்: 8 இலட்சம், வங்கதேசத்தினர்: 4 இலட்சம், பிலிப்பினோக்கள்: 5 இலட்சம், ஜோர்தானியர்/பாலத்தீனியர்: 2.60 இலட்சம், இந்தோனேசியர்: 2.50 இலட்சம், இலங்கையர்: 3.50 இலட்சம், சூடான் நாட்டவர்: 2.50 இலட்சம், சிரியர்: 1 இலட்சம், துருக்கியர்: 80,000.[433]
தி கார்டியன் பத்திரிகையின் கூற்றுப் படி 2013ஆம் ஆண்டு நிலவரப் படி அயல்நாட்டில் பிறந்த பணியாளர்கள் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையான பின்புலத்தைக் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வருகை புரிந்துள்ளனர்.[434] சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு வர அவர்களது தாய் நாடுகளில் ஆள் சேர்க்கும் முகமைகளுக்கு இவர்கள் பொதுவாக ஒரு பெரும் தொகையைக் கட்ட வேண்டியுள்ளது. இந்த முகமைகள் பிறகு தேவையான சட்டரீதியிலான ஆவணப் பணிகளைக் கையாள்கின்றன.[435]
சவூதி மக்கள் தொகை வளர்ச்சியடையும் போதும், கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி வருவாய்களானவை தேங்கும் போதும் "சவூதி மயமாக்குவதற்கான" (அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக சவூதி நாட்டவரைப் பணிக்கு அமர்த்துதல்) அழுத்தமானது அதிகரிக்கிறது. நாட்டில் அயல்நாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சவூதி அரசாங்கமானது நம்பிக்கை கொண்டுள்ளது.[436] 1990 மற்றும் 1991இல் 8 இலட்சம் யெமனியர்களைச் சவூதி அரேபியா வெளியேற்றியது.[437] சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களின் வருகை, போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு எதிராக ஒரு சவூதி-யெமனிய எல்லை தடை வேலியைக் கட்டமைத்தது.[438] நவம்பர் 2013இல் இராச்சியத்தில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய ஆயிரக்கணக்கான எத்தியோப்பியர்களைச் சவூதி அரேபியா வெளியேற்றியது. இந்த விவகாரத்தைச் சவூதி அரேபியா கையாண்ட விதத்தைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருந்தன.[439]
பெரும்பாலும் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் யெமனைச் சேர்ந்த 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்படாத புலம் பெயர் தொழிலாளர்கள் 2013ஆம் ஆண்டிலிருந்து தடுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளனர்.[440] த சண்டே டெலிகிராப் பத்திரிக்கையால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது இராச்சியத்தில் கோவிட்-19 தொற்றைக் கொண்டிருந்ததாக ஆதாரம் இல்லாவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆப்பிரிக்கப் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையை வெளிக் காட்டியது. அவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு மின்சாரம் பாய்ச்சிச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்குப் பிறகு பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் மாரடைப்பு அல்லது தற்கொலைக்கு முயன்றதால் இறந்திருந்தனர். சரியான வாழும் சூழ்நிலை, உணவு மற்றும் நீர் இல்லாமல் இத்தொழிலாளர்கள் இருந்தனர்.[441]
2019இல் ஒரு சிறப்பு மிகைக் கட்டணக் குடியிருப்பு இசைவானது அளிக்கப்படத் தொடங்கினாலும் நிரந்தரக் குடியிருப்புக்கு அயல் நாட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.[442] முஸ்லிம்கள் மட்டுமே சவூதி குடிமக்களாக ஆக முடியும்.[443] இராச்சியத்தில் வாழ்ந்து, பல்வேறு அறிவியல் களங்களில் பட்டப் படிப்புகளைக் கொண்டுள்ள அயல் நாட்டவர்கள் சவூதி குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.[444][445] இதற்கு விதி விலக்கு பாலத்தீனர்கள் ஆவர். ஒரு சவூதி நாட்டைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏனெனில், அரபு நாடுகள் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்களின் படி பாலத்தீனர்களுக்குக் குடியுரிமை அழிப்பதை அரபு நாடுகள் தடை செய்துள்ளன. 1951 ஐநா அகதி உடன்படிக்கையில் சவூதி அரேபியா கையொப்பமிடவில்லை.[446]
Remove ads
பண்பாடு

சவூதி அரேபியா 1,000 ஆண்டுக் காலப் பழமையான நடத்தை முறைகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அரபு நாகரிகத்திலிருந்து தருவிக்கப்பட்டவையாகும். பண்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்திய சில முக்கியமான காரணிகளாக இஸ்லாமியப் பாரம்பரியம் மற்றும் அரேபியப் பாரம்பரியங்களும், மேலும் ஒரு பண்டைக் கால வணிக மையமாக இந்நாட்டின் வரலாற்று ரீதியிலான பங்கும் உள்ளன.[447] இராச்சியமானது ஒரு அதிகப்படியான குடும்பம் சார்ந்த பண்பாட்டையும் கூடக் கொண்டுள்ளது.[448] குடும்பப் பாரம்பரியங்கள் மற்றும் உறவினர் தொடர்புகளைக் காப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.[449]
பாரம்பரியக் களங்கள்

உருவ வழிபாட்டுக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் காரணமாக வரலாற்று ரீதியிலான அல்லது சமய ரீதியிலான முக்கியத்துவமுடைய இடங்கள் வழிபடப்படுவதை சவூதி வகாபியமானது தடை செய்கிறது. மிக முக்கியமான வரலாற்று ரீதியிலான முஸ்லிம் களங்களானவை (மக்கா மற்றும் மதீனாவில் உள்ளவை) மேற்கு சவூதி மாகாணமான ஹெஜாஸில் அமைந்துள்ளன.[450] இதன் விளைவாக சவூதி ஆட்சியின் கீழ் மக்காவின் வரலாற்று ரீதியிலான கட்டடங்களில், இதில் பெரும்பாலானவை 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும், 95% கட்டடங்கள் சமயக் காரணங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.[451] கடைசி 50 ஆண்டுகளில் இறைதூதர் முகம்மது, அவரது குடும்பம் அல்லது தோழர்களுடன் தொடர்புடைய 300 வரலாற்று ரீதியிலான களங்கள் இழக்கப்பட்டுவிட்டன என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.[452] இறைதூதர் முகம்மதுவின் காலத்தைச் சேர்ந்ததாக மக்காவில் 20க்கும் குறைவான கட்டடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.[453] இறைதூதர் முகம்மதுவின் மகள் பாத்திமாவால் உண்மையில் கட்டப்பட்ட மசூதி, மற்றும் அபூபக்கர், உமறு, அலீ மற்றும் சல்மான் அல்-பார்சி (இறைதூதர் முகம்மதுவின் தோழர்களில் மற்றுமொருவர்) ஆகியோரால் நிறுவப்பட்ட பிற மசூதிகளானவை அழிக்கப்பட்ட கட்டடங்களில் உள்ளடங்கியுள்ளன.[454]
சவூதி அரேபியாவின் ஏழு பண்பாட்டுக் களங்கள் உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அல்-ஹிஜ்ர் தொல்லியல் களம் (மதைன் சலி);[455] திரியாவின் துரைப் மாவட்டம்;[456] மக்காவுக்கு நுழைவாயிலான வரலாற்று ரீதியிலான ஜித்தா;[457] அல்-அக்சா பாலைவனச் சோலை;[458] ஐல் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள்;[459] ஹிமா பண்பாட்டுப் பகுதி[460] மற்றும் உருக் பானி மாரித்.[461] 2015இல் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்காக 10 பிற களங்கள் முன் வைக்கப்பட்டன.[462] யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் உணர்ந்தறிய இயலாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் ஆறு காரணிகள் பொறிக்கப்பட்டுள்ளன:[463] அசீரில் உள்ள பெண்களுக்கான பாரம்பரிய உள் சுவர் அலங்காரமான அல்-கத் அல்-அசீரி; குச்சிகளைக் கொண்டு மேளத்துடன், நடனமாடும் அல்மெஸ்மர்; ஒரு வாழும் மனிதப் பாரம்பரியமான வல்லூறு வளர்ப்பு; விருந்தோம்பலின் ஒரு சின்னமான அரேபிய காப்பி; ஒரு பண்பாட்டு மற்றும் சமூக இடமான மசிலிசு; சவூதி அரேபியாவில் நாடகம், மேளம் இசைத்தல் மற்றும் கவிதைக் கலையான அலர்தா அல்நஜ்தியா.
சூன் 2016இல் சவூதி அரேபியாவின் பண்டைக் காலப் பொருட்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான களங்களைப் பாதுகாக்கும் ஒரு அதிகாரத்தை சுற்றுலா மற்றும் தேசியப் பாரம்பரியத்துக்கான சவூதி ஆணையத்துக்கு வழங்கும் ஒரு சட்டத்தை அமைச்சர்களின் மன்றமானது அங்கீகரித்தது. சவூதி விசன் 2030 என்றும் கூட அறியப்படும் 2016 தேசிய உருமாற்றத் திட்டத்தின் அமைப்புக்குள் அதன் வரலாற்று ரீதியான மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க இராச்சியமானது 90 கோடி யூரோக்களை ஒதுக்கியது.[464] மார்ச்சு 2017இல் உருவாக்கப்பட்ட யுத்த பகுதிகளில் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பன்னாட்டுக் கூட்டணியிலும் கூட சவூதி அரேபியா பங்கெடுத்துள்ளது. இக்கூட்டணிக்கு 1.85 கோடி யூரோக்களைப் பங்களித்துள்ளது.[465]
மார்ச்சு 2018இல் பட்டத்து இளவரசர் ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை புரிந்த போது கான்டர்பரியின் பேராயரைச் சந்தித்தார். சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க வாக்குறுதியளித்தார். அடுத்த மாதம் ரியாத்தில் மன்னர் சல்மான் சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கான வாடிகனின் திருச்சபையின் தலைவரைச் சந்தித்தார்.[466] சூலை 2019இல் பண்பாட்டுக்கான சவூதி அமைச்சருடன் ஒரு மடலில் யுனெஸ்கோ கையொப்பமிட்டது. பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஐஅ$25 மில்லியன் (₹178.8 கோடி)யைச் சவூதி அரேபியா இதில் பங்களித்தது.[467]
நவம்பர் 5, 2024இல் சவூதியின் கய்பரில் ஒரு பண்டைக் கால நகரம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைத் தொல்லியலாளர்கள் பதிப்பித்தனர். இந்நகருக்கு அல்-நடா என்று பெயரிடப்பட்டது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த நகரம் இதுவாகும். பொ. ஊ. மு. 2,400 வாக்கில் வெண்கலக் காலத்தின் போது இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நகரம் சுமார் 500 வீடுகளைக் கொண்டிருந்தது. இதற்கு அருகிலேயே சமாதிகளின் தொகுதியும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்குள் உலோக ஆயுதங்கள் இருந்தன.[468]
உடை

சவூதி அரேபிய உடை உடுத்தும் முறையானது கடுமையாக ஹிஜாப் கொள்கைகளைப் (தன்னடக்கத்துக்கான இஸ்லாமியக் கொள்கை, குறிப்பாக உடையில்) பின்பற்றுகிறது. பெரும்பாலும் தளர்வான ஆனால் முழுவதுமாக உடலை மறைக்கும் உடைகளானவை சவூதி அரேபியாவின் பாலைவனச் சூழ்நிலைக்கு ஒத்துப் போகின்றன. பாரம்பரியமாக ஆண்கள் பொதுவாகக் கணுக்கால் வரை உள்ள ஒரு வெள்ளை உடையை அணிகின்றனர். இது கம்பளி அல்லது பருத்தியிலிருந்து (தவாப் என்று அறியப்படுகிறது) உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு கெபியே (தலைப்பாகைக் கயிறு எனும் ஒரு அகலால் இணைக்கப்பட்ட ஒரு பெரிய சதுர கட்டங்களை உடைய பருத்தி உடை) அல்லது ஒரு குத்ரா (ஒரு நல்ல பருத்தியால் உருவாக்கப்பட்ட ஒரு வெற்று வெள்ளை சதுரங்களை உடையது, இதுவும் அகலால் அதன் இடத்தில் இணைக்கப்பட்டுள்ளது) தலையில் அணியப்படுகிறது. அரிதான குளிர் நாட்களுக்காகச் சவூதி ஆண்கள் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட மேலங்கியை (பிஷ்த்) இந்த ஆடைகளுக்கு மேல் அணிகின்றனர். பொது இடங்களில் பெண்கள் ஒரு கருப்பு அபாயா அல்லது பிற கருப்பு உடையை அணிய வேண்டிய தேவையுள்ளது. தங்களது சமயத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவர்களது தலைகளையும் பெரும்பாலான பெண்கள் மூடி இருக்கும் போதிலும், அவர்களது கைகள் மற்றும் பாதங்கள் தவிர்த்து கழுத்துக்குக் கீழ் முழுவதுமாக இந்த ஆடை உடலை மூடி இருக்கும். இந்தத் தேவைகளானவை முஸ்லிம் அல்லாத பெண்களுக்கும் உள்ளதாகும். இதைப் பின்பற்றாதோர் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம். குறிப்பாக நாட்டின் மிகுந்த பழமைவாதப் பகுதிகளில் இந்நிலை ஏற்படலாம். பெண்களின் உடைகளானவை பொதுவாகப் பழங்குடியின உருவங்கள், நாணயங்கள், ஒளிர் தகடுகள், உலோக நூல்கள், மற்றும் ஒப்பனை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்படுகிறது.[469]
கலையும், பொழுதுபோக்கும்

வகாபி ஒழுங்கு முறைகளுக்கு முரண்பட்டதாகப் பார்க்கப்பட்டாலும் 1970களில் இராச்சியத்தில் ஏராளமான திரையரங்குகள் இருந்தன.[470] 1980களில் இஸ்லாமிய புத்துயிர்ப்பு இயக்க காலத்தின் போது 1979ஆம் ஆண்டில் மக்காவில் பெரிய மசூதி கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட அதிகரித்து வந்த இஸ்லாமியச் செயல்பாட்டுக்கான ஓர் அரசியல் நடவடிக்கையாக அரசாங்கமானது அனைத்துத் திரையரங்குகளையும் மூடியது. எனினும், மன்னர் அப்துல்லா மற்றும் மன்னர் சல்மானின் சீர்திருத்தங்களுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.[471] இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மன்னர் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு திரையரங்கமும் அடங்கும்.
18ஆம் நூற்றாண்டு முதல் அதன் போதனைகளுடன் ஒவ்வாத கலை வளர்ச்சியை வகாபி அடிப்படை வாதமானது ஊக்கம் இழக்கச் செய்தது. மேலும், மனிதர்களின் பிரதிநிதித்துவங்களை உருவாக்குவதை தடுத்த சன்னி இஸ்லாமிய தடுப்பானது காட்சிக் கலைகளை வரம்புக்குட்பட்டதாக ஆக்கியது. மனித உருவங்களாக அல்லாமல் இவை வடிவியல் கணிதம் சார்ந்த வடிவங்கள், பூக்கள், புனைவியல் வடிவங்கள் மற்றும் அழகு எழுத்துகளாக இருந்தன. 20ஆம் நூற்றாண்டில் கச்சா எண்ணெய் செல்வச் செழிப்பிலிருந்து மேற்குலக வீடு கட்டும் பாணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடைகள் போன்ற வெளிப்புறத் தாக்கங்களுக்கு இவர்கள் ஆளாயினர். இசையும், நடனமும் என்றுமே சவூதி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. பாரம்பரிய இசையானது பொதுவாகக் கவிதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது அனைவராலும் சேர்ந்து பாடப்படுகிறது. 3-நரம்பு பிடில் இசைக் கருவியை ஒத்த இரிபாப் உள்ளிட்ட இசைக்கருவிகள் மற்றும் தபேலா (மேளம்) மற்றும் தார் (தாம்போரின்) போன்ற தாள இசைக் கருவிகளின் பல்வேறு வகைகள் உள்ளன. இந்நாட்டின் தேசிய நடனம் அர்தா என்று அறியப்படும் பூர்வீக போர் வாள் நடனம் ஆகும். இது நஜத் பகுதியிலிருந்து தொடங்கியதாகும். இதில் ஆண்கள் கோடு அல்லது வட்ட வடிவில் நின்று கொண்டு கவிதைகளைப் பாடுவதையும் உள்ளடக்கியுள்ளது.[472] நபதி என்று அறியப்படும் பெடோயின் கவிதை பிரபலமானதாக உள்ளது.[136]
தங்களது தாய்நாட்டில் அலுவல்பூர்வ எதிர்ப்பை உருவாக்கியிருந்த போதும் பல சவூதி புதின எழுத்தாளர்களும், கவிஞர்களும் அரபு உலகத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டு மற்றும் பிரபலத் தன்மையை அடைந்துள்ளனர். எனினும், சவூதி இலக்கியத்தின் வளர்ச்சியைத் தணிக்கையானது வரம்புக்கு உட்படுத்தியுள்ளது. காசி அல்கோசைபி, மன்சூர் அல்-நொகைதான், அப்தெல்ரகுமான் முனீப், துருக்கி அல்-அமாத் மற்றும் ராஜா அல்-சனே ஆகியோர் இதில் அடங்குவர்.[473][474][475] 2016இல் பொது பொழுதுபோக்கு அமைப்பானது சவூதி பொழுதுபோக்குத் துறையின் விரிவாக்கத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்டது.[476] 25 ஆண்டுகளில் முதல் முறையாக தொடர்ந்து வந்த ஆண்டில் ரியாத்தில் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.[477] நகைச்சுவை நிகழ்ச்சிகள், தொழில்முறை மல்யுத்த நிகழ்ச்சிகள் மற்றும் இராட்சத சரக்குந்து அணிவகுப்புகள் உள்ளிட்டவை பொது பொழுதுபோக்கு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற பிற நிகழ்வுகள் ஆகும்.[478] 2018இல் 35 ஆண்டு காலத் தடைக்குப் பிறகு முதல் பொது திரையரங்கானது திறக்கப்பட்டது. 2030 வாக்கில் 2,000க்கும் மேற்பட்ட திரைகளைக் கொண்டிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.[479]
2018இல் கலைகளின் வளர்ச்சிகளில் கான் திரைப்பட விழா மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் சவூதி அரேபியாவின் திரைப்படங்கள் திரையிடப்பட்டதும் உள்ளடங்கியிருந்தது.[480]
தொலைக்காட்சியும், ஊடகமும்

தொலைக்காட்சியானது சவூதி அரேபியாவில் 1954ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரபு நாடுகளின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கட்டணத் தொலைக்காட்சிகளுக்கு ஒரு முதன்மையான சந்தையாக சவூதி அரேபியா திகழ்கிறது. அரபு உலக ஒளிபரப்புச் சந்தையில் இருப்பதிலேயே மிகப் பெரிய பங்கை இந்நாடு கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. மிடில் ஈஸ்ட் பிராட்காஸ்டிங்க் சென்டர், ரோடனா மற்றும் சவூதி பிராட்காஸ்டிங்க் அத்தாரிட்டி போன்றவை முதன்மையாக சவூதி நாட்டவரால் உடைமையாகக் கொள்ளப்பட்டிருக்கும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆகும்.[481] அலுவல்பூர்வ அரசுச் சட்டத்தின் கீழ் சவூதி அரசாங்கமானது ஊடகத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறது மற்றும் கட்டுப்பாடுகளை இடுகிறது. இத்தகைய கட்டுப்பாடுகளைக் குறைக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், தகவல்களைக் கட்டுப்பாட்டில் வைக்கும் சில அரசாங்கத்தால் தலைமை தாங்கப்படும் முயற்சிகளானவை பன்னாட்டு கவனத்தையும் கூட ஈர்த்துள்ளன. 2022ஆம் ஆண்டு நிலவரப் படி எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பானது இராச்சியத்தின் பத்திரிகைத் துறையை ஒரு "கடுமையான பாதிப்பு" நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.[482]
பாரசீக வளைகுடா பகுதியின் பெரும்பாலான தொடக்க கால செய்தித்தாள்களானவை சவூதி அரேபியாவிலேயே நிறுவப்பட்டன.[483] இந்நாடு மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுவப்பட்ட முதல் செய்தித் தாள் அல் பல்லா ஆகும். இது 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[483] முதல் ஆங்கில மொழி செய்தித்தாளானது அரபு நியூஸ் ஆகும்.[484] இது 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சவூதி அரேபியாவில் பதிப்பிக்கப்படும் அனைத்து செய்தித்தாள்களும் தனியார் வாசம் உள்ளன.[485]
உலக வங்கியின் கூற்றுப் படி 2020ஆம் ஆண்டு நிலவரப் படி சவூதி அரேபியாவின் மக்கள் தொகையில் 98% பேர் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இணையதளப் பயன்பாட்டாளர்களின் மிக அதிக சதவீதத்தை உடைய நாடுகளில் 8ஆவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளது.[486] உலகில் மிக அதிக 5ஜி இணையதள வேகங்களில் ஒன்றைச் சவூதி அரேபியா கொண்டுள்ளது.[487][488] இணைய வணிகத்திற்கான 27ஆவது மிகப் பெரிய சந்தையாக இராச்சியம் உள்ளது. 2021இல் இணையத்தில் ஐஅ$8 பில்லியன் (₹57,212.8 கோடி) வருவாய் பெறப்பட்டது.[489]
சமையல் பாணி

சவூதி அரேபிய சமையல் பாணியானது அரேபியத் தீபகற்பத்தைச் சுற்றியிருக்கும் நாடுகள் மற்றும் பரந்த அரபு உலகத்தை ஒத்ததாக உள்ளது. துருக்கியம, இந்திய, பாரசீக, மற்றும் ஆப்பிரிக்க உணவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியும், அந்த உணவுகளால் தாக்கம் பெற்றும் வந்துள்ளது. இஸ்லாமிய உணவு விதிமுறைகளானவை செயல்படுத்தப்படுகின்றன: பன்றி இறைச்சி அனுமதிக்கப்படுவதில்லை, மற்றும் பிற விலங்குகள் அலால் முறைப்படியே கொல்லபப்டுகின்றன. கெபாப்கள் மற்றும் பிளாபல் ஆகியவை பிரபலமாக உள்ளன. ஆட்டுக்கறி அல்லது கோழிக்கறியைக் கலவையில் ஊற வைத்து வாட்டி உருவாக்கப்படும் சவர்மாவும் இவ்வாறே பிரபலமாக உள்ளது. மன்டி உணவைப் போலவே ஆடு, கோழி, மீன், அல்லது இறாலுடன் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு சோற்று உணவான கப்சா தேசிய உணவுகளில் ஒன்றாக உள்ளது. புரையூட்டுப் பொருள் சேர்த்து உப்ப வைக்கப்படாத மற்றும் தபூன் (தந்தூரி) அடுப்பில் வேக வைக்கப்படும் தட்டையான ரொட்டித் துண்டானது கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவிலும் முதன்மையானதாக உள்ளது. பேரீச்சைகள், பசுமையான பழங்கள், தயிர், மற்றும் கடலைப்பாகும் இவ்வாறே உள்ளன. அரேபிய பாணியில் பரிமாறப்படும் காப்பியானது பாரம்பரிய பானமாகும். ஆனால், தேநீர் மற்றும் பல்வேறு பழச் சாறுகளும் கூடப் பிரபலமாக உள்ளன.[136] காபி குடித்தல் அல்லது காபி மரம் குறித்த தகவலானது 15ஆம் நூற்றாண்டிலிருந்து அரேபியாவின் சூபி மடாலயங்களிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.
விளையாட்டு

சவூதி அரேபியாவின் தேசிய விளையாட்டு கால்பந்து ஆகும். சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணியானது ஆசியாவின் மிக வெற்றிகரமான தேசிய கால்பந்து அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆசியக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி வரை ஆறு வரை முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் 3 (1984, 1988, மற்றும் 1996) வெற்றி பெற்று உள்ளது. 1994ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தில் முதல் முறையாகக் களமிறங்கியதில் இருந்து நான்கு முறை தொடர்ச்சியாக உலக கோப்பைக்காக தகுதி பெற்றுள்ளது. 1994 பிபா உலகக்கோப்பையில் சோர்ச் சோலாரி தலைமையின் கீழ் சவூதி அரேபியா பெல்ஜியம் மற்றும் மொராக்கோ ஆகிய இரு நாடுகளையும் குழு நிலையில் தோற்கடித்தது. பிறகு சுற்று 16இல் சுவீடனைத் தோற்கடிப்பதில் தோல்வியடைந்தது. 1992 பிபா கூட்டமைப்புப் போட்டியானது சவூதி அரேபியாவில் நடத்தப்பட்டது. இந்நாடு இறுதிப் போட்டியை அடைந்தது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டீனாவிடம் 3-1 என்ற கணக்கில் தோற்றது.
ஆழ்கடல் நீச்சல், அலைச்சறுக்கு, பாய்மரக்கப்பல் விளையாட்டு, மற்றும் கூடைப்பந்து (இதில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரண்டுமே விளையாடுகின்றன) ஆகியவையும் கூடப் பிரபலமாக உள்ளன. சவூதி அரேபிய தேசியக் கூடைப்பந்து அணியானது 1999ஆம் ஆண்டின் ஆசியக் கூடைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.[490][491][492] குதிரைப் பந்தயம் மற்றும் ஒட்டகப் பந்தயம் போன்ற அதிகப்படியான பாரம்பரிய விளையாட்டுகளும் கூட பிரபலமானவையாக உள்ளன. ஆண்டு தோறும் நடக்கும் மன்னரின் ஒட்டகப் பந்தயமானது 1974ஆம் ஆண்டிலிருந்து விளையாடப்படுகிறது. நாட்டின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இது உள்ளது. இப்பகுதி முழுவதிலும் இருந்து விலங்குகள் மற்றும் பந்தயக்காரர்களை இது ஈர்த்துள்ளது. வல்லூறுகளை வைத்து வேட்டையாடுவது என்பது மற்றொரு பாரம்பரியப் பொழுது போக்காகும்.[136]

பழமைவாத இஸ்லாமிய சமய அமைப்புகளால் விளையாட்டுகளில் பெண்களின் பங்கெடுப்பானது ஒடுக்கப்படுவதன் காரணமாக பெண்களுக்கான விளையாட்டுக்களானவை சர்ச்சைக்குரியவையாக உள்ளன.[493] எனினும், கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.[494][495][496] 2018ஆம் ஆண்டு வரை விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. முதன்மையான நகரங்களில் மூன்று மைதானங்களில் தனித் தனியான இருக்கைகள், பெண்கள் நுழைய அனுமதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.[497] 2020இலிருந்து சவூதி விளையாட்டுகளில் பெண்கள் இணைக்கப்படுவதற்கான செயல்பாடானது துரிதமாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.[498][499] ஒரு தேசிய கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணி உட்பட தேசிய பெண்களுக்கான அணிகளை 25 சவூதி விளையாட்டுக் கூட்டமைப்புகள் நிறுவியுள்ளன.[500] நவம்பர் 2020இல் சவூதி அரேபிய கால்பந்துக் கூட்டமைப்பானது முதல் தேசிய அளவிலான சவூதி பெண்களுக்கான லீக் போட்டிகள் தொடங்கப்படுவதை அறிவித்தது.[501]
நவீனமயமாக்கும் அதன் காட்சியுருவில் இந்நாடானது பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இராச்சியத்திற்கு விளையாட்டு நட்சத்திரங்களைக் கொண்டு வந்துள்ளது. எனினும், ஆகத்து 2019இல் இராச்சியத்தின் உத்தியானது விளையாட்டு நட்சத்திரங்களின் கவர்ச்சியைப் பயன்படுத்தும் ஒரு முறையாகத் தோன்றுவதாக விமர்சனங்களைப் பெற்றது. சவூதியின் ஐக்கிய அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட 2018ஆம் ஆண்டு ஆதரவு திரட்டும் நடவடிக்கை குறித்து அயல்நாட்டுப் பதிவு ஆவணங்கள் இணையதளங்களில் பதிவிடப்பட்டதற்குப் பிறகு இவ்வாறான விமர்சனங்களைப் பெற்றது. கவர்ச்சியைப் பயன்படுத்தும் ஓர் உத்தியைச் சவூதி அரேபியா செயல்படுத்துவதாக ஆவணங்கள் ஆதாரம் இல்லாவிட்டாலும் குற்றம் சாட்டின. மேஜர் லீக் கால்பந்து, டபுள்யூ. டபுள்யூ. இ. மற்றும் என். பி. ஏ. போன்ற அமைப்புகளின் அதிகார வர்க்கத்தினருடனான சந்திப்புகள் மற்றும் அலுவல்பூர்வ தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவை இந்த உத்தியில் அடங்கியிருந்தன.[502]
சவூதி அரேபியா 2034ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை நடத்த விண்ணப்பித்தது. போட்டிக்குப் பயன்படுத்தப்படும் மைதானங்களின் உருவாக்கமானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 11 புதிய மைதானங்கள் கட்டப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர் பார்க்கப்படும் பயணிகளின் அதிகரிப்பைச் சமாளிப்பதற்காக விமான நிலையங்களும் விரிவாக்கப்பட உள்ளன.[503] திசம்பர் 2024இல் சவூதி அரேபியா 2034 உலகக் கோப்பையை நடத்தும் என்று உறுதி செய்யப்பட்டது.[504]
Remove ads
குறிப்புகள்
- Pegged to the அமெரிக்க டாலர் (USD) at 3.75 riyals per USD since 1986[13]
- /ˌsɔːdi əˈreɪbiə/ (ⓘ) SAW-dee-_-ə-RAY, /ˌsaʊdi-/ (ⓘ) SOW-dee--; அரபி: ٱلسُّعُودِيَّة, romanized: Suʿūdiyya
Remove ads
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads