ஈராக்கு

மேற்காசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia

ஈராக்கு
Remove ads

ஈராக்கு[a] (Iraq) என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக ஈராக்கு குடியரசு[b] (Republic of Iraq) என்று அறியப்படுகிறது. இந்நாட்டின் தெற்கே சவூதி அரேபியா, வடக்கே துருக்கி, கிழக்கே ஈரான், தென் கிழக்கே பாரசீக வளைகுடா மற்றும் குவைத்து, தென்மேற்கே ஜோர்தான் மற்றும் மேற்கே சிரியா ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு 4,38,317 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 4.60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே பரப்பளவின் அடிப்படையில் 58ஆவது மிகப் பெரிய நாடாகவும், 31ஆவது மிக அதிக மக்கள் தொகையையுடைய நாடாகவும் திகழ்கிறது. 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தாயகமாக உள்ள பகுதாதுவானது ஈராக்கின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரமாக உள்ளது.

விரைவான உண்மைகள் ஈராக்கு குடியரசுجمهورية العراق ஜும்ஹூரியா அல்-இராக் (அரபு) كۆماری عێراق கொமாரெ ஈராக்கு (குர்தி), தலைநகரம் ...

பொ. ஊ. மு. 6ஆம் ஆயிரம் ஆண்டில் தொடங்கி ஈராக்கின் டைகிரிசு மற்றும் புறாத்து ஆறுகளுக்கு இடையிலான செழிப்பான சமவெளிகள் மெசொப்பொத்தேமியா என்று குறிப்பிடப்படுகின்றன. தொடக்க கால நகரங்கள், நாகரிங்கள் மற்றும், சுமேரியா, அக்காதியா, மற்றும் அசிரியா உள்ளிட்ட பேரரசுகளின் எழுச்சிக்கு இவை ஆதரவாக விளங்கின. நாகரிகத் தொட்டில் என்று அறியப்படும் மெசொப்பொத்தேமியாவானது எழுத்து முறைகள், கணிதங்கள், நீர் வழிப் பயணம், காலங்காட்டி, ஒரு நாட்காட்டி, வானியல், சக்கரம், பாய்மரக் கப்பல் மற்றும் ஒரு சட்டத் தொகுதி ஆகியவை உருவாக்கப்படுவதைக் கண்டது. பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பிறகு பகுதாதுவானது அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரமானது. இசுலாமியப் பொற்காலத்தின் போது ஓர் உலகளாவியப் பண்பாட்டு மற்றும் சிந்தனை சார் மையமாக உருவானது. ஞான வீடு போன்ற கல்வி நிலையங்களுக்குத் தாயகமாகத் திகழ்ந்தது. 1258இல் மங்கோலியர்களால் பகுதாது அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொற்று நோய்கள் மற்றும் தொடர்ச்சியான பேரரசுகளின் காரணமாக இப்பகுதியானது நீடித்த வீழ்ச்சியை எதிர் கொண்டது. மேலும், கிறித்தவம், யூதம், யசீதியம் மற்றும் மந்தேயியம் ஆகிய சமயங்களில் முக்கியத்துவத்தை ஈராக்கு கொண்டுள்ளது. ஓர் ஆழ்ந்த விவிலிய வரலாற்றை இந்நாடு கொண்டுள்ளது.[1][2][3][4][5]

1932இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நிலையற்ற தன்மை மற்றும் சண்டைகளின் காலங்களுடன் சேர்த்து குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியின் காலங்களையும் ஈராக்கு கண்டுள்ளது. முதலாம் உலகப் போரின் முடிவு வரை ஈராக்கு உதுமானியப் பேரரசின் பகுதியாக இருந்தது. அதற்குப் பிறகு 1921ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் ஈராக்கு நிறுவப்பட்டது. 1932இல் ஒரு சுதந்திரமான இராச்சியமாக இது மாற்றமடைந்தது. 1958இல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து ஈராக்கு ஒரு குடியரசாக உருவானது. முதலில் இதற்கு அப்துல் கரிம் காசிம் தலைமை தாங்கினார். அதற்குப் பிறகு அப்துல் சலாம் ஆரிப் மற்றும் அப்துல் இரகுமான் ஆரிப் ஆகியோர் தலைமை தாங்கினார். பாத் கட்சியானது 1968ஆம் ஆண்டில் அதிகாரத்தைப் பெற்றது. முதலில் அகமது அசன் அல் பக்கர் மற்றும் பிறகு சதாம் உசேன் ஆகியோருக்குக் கீழ் ஒற்றைக் கட்சி அரசை நிறுவியது. 1980 முதல் 1988 வரை ஈரானுக்கு எதிராக மற்றும் பிறகு 1990இல் குவைத்துக்கு எதிரான போர்களுக்குச் சதாம் உசேன் தலைமை தாங்கினார். 2003ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையானது ஈராக்கு மீது படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது. சதாம் உசேனைப் பதவியிலிருந்து நீக்கியது. கிளர்ச்சி மற்றும் பிரிவினை வன்முறைகளை இது தொடங்கி வைத்தது. ஈராக்கு போர் என்று அறியப்படும் இப்போரானது 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2013 முதல் 2017 வரை இசுலாமிய அரசின் உருவாக்கம் மற்றும் தோல்வியுடன் ஈராக்கு மற்றொரு போரை எதிர் கொண்டது. 2011 முதல் 2013 வரையிலான ஓர் இசுலாமியக் கிளர்ச்சியின் ஒரு விளைவாக இந்த அரசு உருவானது. தற்காலத்தில் போருக்குப் பிந்தைய சண்டைகளானவை குறைவான அளவிலேயே தொடர்கின்றன. வளர்ந்து வரும் ஈரானின் செல்வாக்குடன் சேர்த்து 2003ஆம் ஆண்டிலிருந்து ஈராக்கின் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடியவையாக இவை திகழ்கின்றன.[6][7]

ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாக ஈராக்கானது ஒரு வளர்ந்து வரும் நடுத்தர நிலை சக்தியாகக் கருதப்படுகிறது. ஒரு வேறுபட்ட மக்கள் தொகை, புவியியல் மற்றும் காட்டுயிர்களுக்கு இது தாயகமாக உள்ளது. பெரும்பாலான ஈராக்கியர் முசுலிம்கள் ஆவர். அதே நேரத்தில் கிறித்தவர், சரதுசர், மந்தேயியர், யசீதியர், யர்சனியர் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அளவிலான சிறுபான்மையினருக்கும் இந்நாடு தாயகமாக உள்ளது. ஈராக்கியர் இன ரீதியாக வேறுபட்டவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரேபியர் ஆவர். மேலும், குர்தியர், துருக்மென், யசீதியர், அசிரியர், ஆர்மீனியர், தோமுகர், பாரசீகர் மற்றும் சபாகியர் ஆகியோரும் காணப்படுகின்றனர். அரபியும், குர்தியும் ஈராக்கின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. அதே நேரத்தில், சுரேத், துருக்கியம் மற்றும் மந்தேயியம் ஆகியவை மாகாண அளவில் பேசப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வளங்களில் ஒன்றை ஈராக்கு கொண்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்துறையையும் கொண்டுள்ளது. இதன் வேளாண்மை மற்றும் சுற்றுலாவுக்காகவும் கூட இந்நாடு பிரபலமானதாக உள்ளது. தற்போது ஈராக் அயல் நாட்டு உதவியுடன் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.[8][9][10][11][12][13][14][15][16]

Remove ads

பெயர்க் காரணம்

ஈராக்கு என்ற பெயருக்கான ஏராளமான வேர்ச் சொல் பரிந்துரைகள் உள்ளன. ஒரு பரிந்துரையானது சுமேரிய நகரமான உரூக்கைக் குறிப்பிடுகிறது, இவ்வாறாக இறுதியாக இப்பெயர் சுமேரியப் பூர்வீகத்தை உடையதாக உள்ளது.[17][18] மற்றொரு சாத்தியமான பெயர்க் காரணமானது நடுப் பாரசீகச் சொல்லான எராக் (பொருள்: "தாழ்நிலங்கள்") என்பதிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.[19] ஓர் அரபு நாட்டுப்புற பெயர்க் காரணமானது "ஆழமாக வேரூன்றிய, நன்றாக நீர் பெற்ற; செழிப்பான" என்ற பொருளைத் தருகிறது.[20]

நடுக் காலத்தின் போது 'ஈராக் அரபி' ("அரேபிய ஈராக்கு") என்ற பெயரானது கீழ் மெசொப்பொத்தேமியாவையும், 'ஈராக் அசாமி' ("பாரசீக ஈராக்கு")[21] என்ற பெயரானது தற்போதைய நடு மற்றும் மேற்கு ஈரானில் அமைந்திருந்த பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[21] இச்சொல்லானது வரலாற்று ரீதியாக அம்ரின் மலைகளுக்குத் தெற்கே இருந்த சமவெளியை உள்ளடக்கியிருந்தது. ஆனால், நவீன கால ஈராக்கின் நிலப்பரப்பில் வடக்குக் கோடி மற்றும் மேற்குக் கோடிப் பகுதிகளை உள்ளடக்கியிருக்கவில்லை.[22] 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன்னர் எய்ரகா அரேபிகா என்ற சொல்லானது ஈராக்கைக் குறிப்பதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.[23][24]

சவத் என்ற சொல்லும் கூட டைகிரிசு மற்றும் புறாத்து ஆறுகளின் வண்டல் சமவெளி பகுதியைக் குறிக்க தொடக்க கால இசுலாமிய காலங்களின் போது பயன்படுத்தப்பட்டது.

ஓர் அரபிச் சொல்லாக ஈராக் (عراق) என்ற சொல்லின் பொருளானது "ஓரம்", "கரை", அல்லது "விளிம்பு" என்று பொருள்படுகிறது. நாட்டுப்புற பெயர்க் காரணத்தின் படி இப்பெயரானது அல்-ஜசீரா பீடபூமியின் தெற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள பகுதியைப் போல "செங்குத்தான சரிவு" என்று விளக்கம் பெறுகிறது. "அல்-ஈராக் அரபி" பகுதியின் வடக்கு மற்றும் மேற்கு விளிம்புகளை இப்பீடபூமியானது அமைக்கிறது.[25]

அரபி உச்சரிப்பானது [ʕiˈrɑːq] ஆகும். ஆங்கிலத்தில் இது /ɪˈrɑːk/ (ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே ஒரு உச்சரிப்பாகவும், மெரியம்-வெப்ஸ்டர் இணைய அகராதியில் முதல் உச்சரிப்பாகவும் இது உள்ளது[26]) அல்லது /ɪˈræk/ (மக்கேரி அகராதி, அமெரிக்கப் பாரம்பரிய அகராதி[27] மற்றும் ரேண்டம் ஹவுஸ் அகராதி ஆகியவற்றில் இப்பெயர் முதலாவதாக உள்ளது[28]) என்று உச்சரிக்கப்படுகிறது.

பிரித்தானியர் 23 ஆகத்து 1921 அன்று அசேமிய மன்னராக ஈராக்கின் முதலாம் பைசலை அமர்த்திய போது இந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஆங்கிலப் பெயரானது மெசொப்பொத்தேமியாவில் இருந்து உள்நாட்டுப் பெயரான ஈராக்குக்கு மாற்றப்பட்டது.[29] சனவரி 1992இலிருந்து அரசுக்கான அதிகாரப்பூர்வ பெயர் "ஈராக்கு குடியரசு" (சும்கூரியத் அல்-ஈராக்) ஆகும். இது 2005ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[30][31][32]

Remove ads

வரலாறு

Thumb
65,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் என தோராயமாகக் காலமிடப்பட்ட காலத்தில் எட்டு வயது வந்த மற்றும் இரண்டு குழந்தை நியண்டர்தால் மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சானிதர் குகையின் உட்பகுதி.[33][34]

தொடக்க காலத்தில் அறியப்பட்ட நாகரிகமான சுமேரிய நாகரிகத்திற்குத் தாயகமாக இருந்ததால் நவீன ஈராக்கை உள்ளடக்கிய பகுதிக்கு "நாகரிகத்தின் தொட்டில்" என்ற பொதுவான பெயர் வழங்கப்படுகிறது. செப்புக் காலத்தில் (உபைதுகள் காலம்) தெற்கு ஈராக்கின் செழிப்பான டைகிரிசு-புறாத்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் சுமேரிய நாகரிகமானது உருவானது.[35]

இங்கு தான் பொ. ஊ. மு. 4ஆவது ஆயிரம் ஆண்டின் பிற்பகுதியில் உலகின் முதல் அறியப்பட்ட எழுத்து முறையானது உருவானது.[36] சக்கரத்தைப் பயன்படுத்தியதாக மற்றும் நகர அரசுகளை உருவாக்கியதாக முதன் முதலில் அறியப்பட்டவர்களாகவும் கூட சுமேரியர்கள் திகழ்ந்தனர். கணிதம், வானியல், சோதிடம், எழுதப்பட்ட சட்டம், மருத்துவம் மற்றும் அமைப்பு ரீதியிலான சமயம் ஆகியவை குறித்த முதன் முதலில் அறியப்பட்ட ஆதாரத்தை அவர்களது எழுத்துக்கள் பதிவு செய்துள்ளன.[35] சுமேரிய மொழியானது ஒரு தனி மொழியாகும். எரிது, பத்-திபிரா, லார்சா, சிப்பர், சுருப்பக், உரூக், கிஷ், ஊர், நிப்பூர், லகாசு, கிர்சு, உம்மா, அமாசி, அதாப், மாரி, இசின், குதா, தெர் மற்றும் அக்சக் ஆகியவை தொடக்க கால சுமேரிய காலத்தைச் சேர்ந்த முதன்மையான நகர அரசுகள் ஆகும்.[35]

Remove ads

வரலாறு

  • கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3-வது ஆயிரவாண்டு வரை செப்புக் காலத்தில், புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆற்றுச் சமவெளியில் சுமேரிய நாகரிகம் இருந்த பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும். இதுவே இராக்கின் தோற்றமாகக் கருதப்படுகிறது.
  • கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காடியப் பேரரசு ஆட்சி செய்தது
  • கி.மு. 2004 ல் எலமைட்டுகளின் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
  • அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் மூன்றாவது ஊர் வம்சத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
  • கி.மு.1365-1053 வரை மத்திய அசிரிய பேரரசின் கீழ் இருந்தது.மேலும் பாபிலோன் நகரம் பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹம்முராபி, நெபுகத்நேசர் போன்ற புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
  • கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகள் ஈராக்கை ஆண்டது.
  • கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
  • கிபி 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய கலீபாக்களின் கீழ் இருந்தது. இசலமிய பேரரசின் முக்கிய வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்கு வகித்தது.13 ஆம் நூற்றாண்டின் பாக்தாத் முற்றுகையின் போது இப்பேரரசு அழிக்கப்பட்டது.
  • ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசொப்பொத்தேமியாவின் பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.
  • 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
  • 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக்கு குடியரசு உருவாக்கப்பட்டது.
  • ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

உள்நாட்டுக் கலவரம்

ஈராக்கு நாட்டில் ஆளும் சியா பிரிவு இஸ்லாமியர்களின் மீது வெறுப்புக்கொண்ட சுன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்பான இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு (ஐஎஸ்ஐஎல்) என்ற இயக்கம் பல தீவிரவாதச்செயல்களை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா என்ற நகரைக் கைப்பற்றிய இவர்கள் தற்சமயம் 2014ஆம் ஆண்டு 11ஆம் தேதி சூன் மாதம் நகரத்தைக் கைப்பற்றிய மொசுல் நகரைக்கைப்பற்றி அங்கு வாழ்ந்த மக்களை விரட்டினர்.[37]

Remove ads

புவியியல்

ஈராக்கு 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 437,072 சதுர கி.மீ (168,754 சதுர மைல்) ஆகும்.மேலும் இது உலகின் 58 வது பெரிய நாடாக உள்ளது. ஈராக்கில் அதிக அளவு பாலைவன பகுதிகளை கொண்டுள்ளது,எனினும் யுப்ரிடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் ஆண்டுதோறும் 60.000.000 கன மீட்டர் வளமான வண்டல் மண்ணை சமவெளி பகுதியில் கொண்டுவந்து சேர்க்கின்றது.நாட்டின் வடக்கு பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்து காணபடுகின்றது இந்நாட்டின் உயர்ந்த பகுதி பெயரிடப்படாத 3,611 மீ (11,847 அடி) உயர மலையாகும் எனினும் இது உள்ளூர் மக்களால் சீக்கா தர் (கருப்பு கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஈராக்கு பாரசீக வளைகுடா பகுதியில் 58 கி.மீ. (36 மைல்) நீள கடலோர பகுதியையும் கொண்டுள்ளது.

Remove ads

காலநிலை

ஈராக்கில் மிக மிதவெப்ப மண்டல சூடான வறண்ட காலநிலையை நிலவுகிறது. இங்கு சராசரி கோடை வெப்பம் 40 °C (104 °F) க்கு அதிகமாக உள்ளது. எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 48 °C (118.4 °F) க்கு மேல் நிலவுகிறது. குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை 21 °C (69.8 °F) ஆகவும் இரவு நேர வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். மேலும் குறைவாகவே மழை பெய்கிறது. மழையளவானது ஆண்டுக்கு 250 மி.மீ க்கு குறைவானது. மலைப்பாங்கான வடக்குப் பகுதிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

Remove ads

பொருளியல் நிலை

Thumb
1950 முதல் 2008 வரையிலான ஈராக்கின் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி.
Thumb
2006இல் ஈராக்கு ஏற்றுமதியின் உலகப் பரம்பல்.

ஈராக்கின் பொருளியலில் எண்ணெய்த்துறை பெரும்பங்கு வகிக்கிறது; அன்னியச்செலாவணி வருமானத்தில் ஏறத்தாழ 95% இதிலிருந்து கிடைக்கின்றது. மற்ற துறைகள் வளர்ச்சியடையாததால் வேலையின்மை 18%–30% ஆகவும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி $4,000க்கு குறைந்தும் உள்ளது.[8] 2011ஆம் ஆண்டில் முழுநேரப் பணிகளில் கிட்டத்தட்ட 60% பொதுத்துறையில் இருந்தன.[38] பொருளியலில் முதன்மை வகிக்கும் எண்ணெய் ஏற்றுமதித் தொழில், மிகக் குறைந்தளவே வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது.[38] தற்போது மிகுந்த குறைந்தளவிலேயே பெண்கள் பணிகளில் பங்கேற்கின்றனர் (2011இல் மிக உயர்ந்த மதிப்பீடாக 22% இருந்தது).[38]

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக, ஈராக்கின் திட்டமிட்ட பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான தொழில்கள் அரசுத்துறையில் இருந்தன. வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியைத் தவிர்க்க கடும் தீர்வைகள் நிலவின.[39] 2003இல் அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு கூட்டணி தற்காலிக அரசு பொருளியலை தனியார்மயமாக்கும் ஆணைகளை இட்டு அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகுத்தது.

Thumb
மக்களின் முதன்மைத் தொழிலாக வேளாண்மை உள்ளது
Remove ads

ஈராக்கின் பண்டைய நகரங்கள்

மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. அரபி: ٱلْعِرَاق, romanized: al-ʿIrāq; Kurdish: عێراق, romanized: Êraq, Imperial Aramaic: ܥܝܪܐܩ
  2. அரபி: جُمْهُورِيَّة ٱلْعِرَاق Jumhūriyya al-ʿIrāq; Kurdish: کۆماری عێراق, romanized: Komarî Êraq

மேற்கோள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads