பத்து பகாட் நகரம்
ஜொகூரில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்து பகாட் (மலாய்:Batu Pahat; ஆங்கிலம்:Batu Pahat; (BP) சீனம்: 峇株巴辖; ஜாவி: باتو ڤاهت) என்பது மலேசியா, ஜொகூர், பத்து பகாட் மாவட்டத்தில் ஒரு நகரம்; மற்றும் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்திற்கு தென்கிழக்கே மூவார் அரச நகரம்; தென்மேற்கே குளுவாங்; வடமேற்கே சிகாமட்; தெற்கே பொந்தியான் நகரங்கள் உள்ளன.
பத்து பகாட் நகரம் மக்கள்தொகை அடிப்படையில் மலேசியாவின் 20-ஆவது பெரிய நகர்ப்புறமாகும். 2006-ஆம் ஆண்டில், பத்து பகாட் நகரம் மூவார் நகரத்தையும் தாண்டிய நிலையில், ஜொகூர் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறமாக மாறியது. 2012-ஆம் ஆண்டில், மக்கள்தொகை அடிப்படையில் மலேசியாவின் 16-ஆவது பெரிய நகர்ப்புறமானது.
2022-ஆம் ஆண்டு, இன மக்கள்தொகை அடிப்படையில், சீன மக்கள் 59%; மலாய்க்காரர்கள் 34%; இந்தியர்கள் 7% ஆகவும் உள்ளனர்.
Remove ads
நிலவியல்
பத்து பகாட் தெற்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஜொகூர் மாநிலத்தில்; கோலாலம்பூருக்கு தெற்கே 239 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பத்து பகாட்டிற்கு மிக அருகில் உள்ள நகரம் மூவார் ஆகும். இந்த நகரம் வடமேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
குளுவாங் நகரம், தென்கிழக்கில் சுமார் 52 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜொகூர் மாநிலத்தின் தலைநகரான ஜொகூர் பாரு, பத்து பகாட் நகரத்தின் தென்கிழக்கே சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. வடமேற்கில் 95 கி.மீ. தொலைவில் மலேசிய வரலாற்று நகரமான மலாக்கா உள்ளது.
மாவட்டங்களைப் பொருத்த வரையில், வடக்கில் சிகாமட் மாவட்டம், கிழக்கில் குளுவாங் மாவட்டம், மேற்கில் மூவார் மாவட்டம் ஆகியவை எல்லையாக உள்ளன; மற்றும் தென்கிழக்கில் பொந்தியான் மாவட்டம் ஓர் எல்லையைப் பகுதியைப் பகிர்ந்து கொள்கிறது. மலாக்கா நீரிணையின் கடற்கரை தெற்கே உள்ளது.
Remove ads
சொற்பிறப்பியல்




பத்து பகாட் என்பதற்கு மலாய் மொழியில் "செதுக்கப்பட்ட பாறை" என்று பொருள். ஒரு கற்சுரங்கத்தில் இருந்த ஒரு கல்லில் இருந்து இந்தப் பெயர் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. இது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன.
1456-ஆம் ஆண்டில், சயாமிய இராணுவம், மலாக்காவைத் தாக்குவதற்கு களம் இறங்கியது. சயாமிய இராணுவத்திற்கு கடல்படைத் தளபதி அவி டி சூ (Admiral Awi Di Chu) என்பவர் தலைமை தாங்கினார். சயாமிய இராணுவத்தால் மலாக்காவைக் கைப்பற்ற முடியவில்லை. பின்வாங்கிய நிலையில் கடலோர கிராமமான கம்போங் மினியாக் பெக்கு எனும் இடத்தில் தண்ணீர் பெறுவதற்கு முகாமிட்டது.
கம்போங் மினியாக் பெக்கு
அங்கே ஒரு பெரிய கற்பாறை. அந்தக் கற்பாறையில் ஒரு சிறிய குழி. அதில் கொஞ்சம் நீர் இருந்து இருக்கிறது. மேலும் நீர் கிடைக்கும் எனும் ஆர்வத்தில் கூர்மையான உளிகளைக் கொண்டு குழியை அகலமாகத் தோண்டி இருக்கிறார்கள்.
அதன்வழி பத்து பகாட் எனும் பெயர் உருவானதாக உள்ளூர் புராணங்களின் மூலமாக அறியப்படுகிறது. அந்தக் கற்பாறை, ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் பத்து பகாட்டில் உள்ளது.[1]
1893-ஆம் ஆண்டில் பத்து பகாட்
முன்பு காலத்தில் உப்பு சேர்க்கப்பட்ட மீன்களுக்குப் பத்து பகாட் புகழ்பெற்ற இடமாக விளங்கியது. அதனால் முன்பு இந்த நகரம் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) என்று அழைக்கப்பட்டது. அதாவது "உப்பு தயாரிப்பாளர்களின் நகரம்" என்று பொருள்.
1893-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் சுல்தான் அபுபாக்கரின் கட்டளையின் பேரில் தற்போதைய நகரத்தை டத்தோ பெண்டாரா லுவார் முகமட் சாலே பெராங் (Dato' Bentara Luar, Mohamed Salleh bin Perang) என்பவர் நிறுவினார்.[2]
பிஜி நாட்டு தரைப் படை
1952 முதல் 1956 வரை மலாயா அவசரகாலத்தில் பொதுநலவாயப் படைகளின் ஒரு பகுதியாக பிஜி நாட்டைச் சேர்ந்த தரைப்படை (1Bn Fiji Infantry Regiment) இங்குதான் இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
அந்தப் படைப் பிரிவில் 1,600 இராணுவ வீரர்கள் இருந்தார்கள். ஜொகூர், மலாக்கா மாநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கி உள்ளார்கள்.[3]
பத்து பகாட் வரலாற்றில் ஒரு துர்நிகழ்ச்சி
பத்து பகாட் வரலாற்றில், 1980 அக்டோபர் 16-ஆம் தேதி ஓர் இரத்தக்களரி நாளாகக் குறிக்கப் படுகிறது. அன்றைய தினம் காலை 9:30 மணியளவில் நடந்த நிகழ்ச்சி. முகமட் நசீர் இசுமாயில் என்பவரின் தலைமையில், 20 முசுலிம் தீவிரவாதிகள். பத்து பகாட் காவல் நிலையத்திற்குள் வீச்சு அரிவாள்களுடன் நுழைந்தார்கள்.
காவல் நிலையத்தில் இருந்த 23 காவலர்களையும்; பொதுமக்களையும் வெட்டி காயப் படுத்தினார்கள். இந்தத் துர்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் 8 பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றார்கள். தாக்குதலின் நோக்கம் இன்று வரையிலும் முழுமையாகத் தெரியவில்லை.[4]
Remove ads
மொழிகள்
பத்து பகாட் நகரத்தில் சீனச் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஆக்கியான் இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சீனாவின் தெற்கு புஜியான் மாநிலத்தின் குவான்சோ, சியாமென் மற்றும் சாங்சோ பகுதிகலில் இருந்து இடம்பெயர்ந்த சீன மக்களின் வழித்தோன்றல்கள் ஆகும்.
எனவே, ஆக்கியான் மொழி (Hokkien) இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் சீன மொழியாகும். குறிப்பிடத்தக்க அளவில், கேசிய மொழி, கண்டோனீயம், மற்றும் ஹைனான் மொழிகள் பேசுபவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.
ஜொகூர்-ரியாவ் பேச்சுவழக்கு
மலாய்க்காரர்கள் பொதுவாக ஜொகூர்-ரியாவ் பேச்சுவழக்கு என்று அழைக்கப்படும் ஜொகூர் மலாய் பேச்சுவழக்கைப் பயன்படுத்துகின்றனர். ஜொகூர்-ரியாவ் பேச்சுவழக்கு என்பது ஜொகூர் சுல்தான்கள் மற்றும் மலாக்கா சுல்தான்களிடம் இருந்து பெறப்பட்ட இலக்கிய நிலையிலான மொழியாகும்.
பத்து பகாட்டில் உள்ள மலாய்க்காரர்களில் பெரும்பாலோர், ஜொகூர்-ரியாவு மலாய்க்காரர்கள், ஜாவானியர்கள், பூகிஸ், பஞ்சார் மற்றும் ஒராங் கோலா போன்ற பல்வேறு துணை இனக்குழுக்களில் இருந்து வந்தவர்கள் ஆகும்.
பத்து பகாட்டில் உள்ள இந்தியச் சமூகம், பெரும்பாலும் தமிழ் மொழி பேசும் தமிழர்களைக் கொண்டது.
மதம்

பத்து பகாட்டில், பல மத நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பௌத்தம், தாவோயியம், கன்பூசியசிசம், இசுலாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து மதம். பத்து பகாட் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட சீனர்க் கோயில்கள் உள்ளன. ஒரு சில கோயில்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை. இவற்றுள் பல கோயில்கள் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன.
மேலும் மலேசியாவின் பிற மாநிலங்களிலிருந்து, குறிப்பாக மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சீனர்க் கோயில்கள், தனித்துவமான சுற்றுலாத் தலங்களாகத் திகழ்கின்றன.
பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் செகந்திங், செங்காராங் மற்றும் புக்கிட் பாசிர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சீனர்க் கோயில்கள் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படும் பிரபலமான இடங்களாகும். இது ஒரு வகையில் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் மாறியுள்ளது.
Remove ads
வாழ்வியல்
பத்து பகாட்டில் மிகப்பெரிய இரப்பர், செம்பனை, தென்னை மற்றும் கொக்கோ தோட்டங்கள் உள்ளன. தர்பூசணி, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசி, டுரியான் போன்ற பழங்கள் மற்றும் 20 வகையான காய்கறிகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பல மீனவக் கிராமங்களும் உள்ளன.
பத்து பகாட் தமிழ்ப்பள்ளிகள்
பத்து பகாட் நகர்ப்புறத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 100 மாணவர்கள் பயில்கிறார்கள். 20 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
