2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வீட்டைப் பட்டியலிடுதல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டைப் பட்டியலிடுதலில், அனைத்துக் கட்டிடங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 01, 2010 அன்று தொடங்கியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கான தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் கட்டமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011 பிப்ரவரி 09-28 இடையே நடத்தப்பட்டது.


இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு, பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவை பற்றிய விவரங்களைச் சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும் இது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1872-லிருந்து இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தியா 29 மாநிலங்களும் 7 ஒன்றியப் பகுதிகளும் கொண்டுள்ளது. மொத்தம் 640 மாவட்டங்கள், 5,767 வட்டங்கள், 7,933 நகரங்கள், 600,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2.7 மில்லியன் அலுவலர்கள், 7,933 நகரங்களிலும், 600,000 கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று பாலினம், சமயம், கல்வி, தொழில் வாரியான மக்கட்தொகையின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தனர்.[2] இக்கணக்கெடுப்பிற்கான மொத்தச் செலவு தோராயமாக ₹2200 கோடிகள்(330 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். இது ஒரு நபருக்கு $0.50 ஐ விடக் குறைவானது. மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்கு ஒரு நபருக்கான உலகச் சராசரிச் செலவான $4.60 ஐவிட இது மிகக் குறைவாகவே உள்ளது.[2]
அப்போதைய இந்திய நடுவண் அரசின் ஆளுங் கூட்டணியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் மற்றும் எதிர்க் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, அகாலி தளம், சிவ சேனா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியோரின் கோரிக்கைகளின்படி, சாதிவாரியான மக்கட்தொகைக் கணக்கெடுப்பும் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.[3] இதற்கு முன்னர் கடைசியாக இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு 1931 (பிரித்தானியாரின் ஆட்சியில்). முந்தைய கணக்கெடுப்பில் சமுதாய அந்தஸ்து கருதி மக்கள் தங்கள் சாதியை உயர்த்திக் கூறும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்பொழுது அரசு தரும் சலுகைகளுக்காகச் சாதிகளைக் குறைத்துக் கூறும் மனப்போக்கு காணப்படுகிறது.[4] 1931 க்குப் பின் 80 ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் பொருட்டு 2011 இல் சாதி அடிப்படையிலாகக் கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற கருத்து ஏற்பட்டுப்[5][6][7][8] பின்னர் சமூகப் பொருளாதார சாதி அடிப்படையிலான 2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் கணக்கீட்டு விவரங்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் ஜூலை 3, 2015 இல் வெளியிடப்பட்டது.[9]
இக்கணக்கெடுப்பின் இடைக்கால விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி. கே. பிள்ளை முன்னிலையில், இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பு ஆணையாளர் சி. சந்திர மவுலி 31 மார்ச் 2011ல் வெளியிட்டார். தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் கோ. பாலகிருசினன் சென்னையில் வெளியிட்டார்.[10]
Remove ads
மக்கட்தொகைக் கணக்கெடுப்பு
2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தவர் சி. சந்திரமௌலி ஆவார்.
மக்கட்தொகை விவரம் 16 மொழிகளில் சேகரிக்கப்பட்டது. பயிற்சிக் குறிப்பேடுகள் 18 மொழிகளில் தயாரிக்கப்பட்டன. முதன்முறையாக 2011இல் இந்தியாவும் வங்க தேசமும் இணைந்து எல்லையோரப் பகுதிகளில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பை நடத்தின.[11][12] இரு கட்டங்களாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீடுகளைப் பட்டியலிடும் பணி ஏப்ரல் 1, 2010 இல் தொடங்கப்பட்டது. இதில் அனைத்துக் கட்டிடங்கள், வீடுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.[13] இக்கட்டத்தில், தேசிய மக்கட்தொகைப் பதிவேட்டிற்கானத் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் பெப்ரவரி 9-28, 2011 வரை நடத்தப்பட்டது. கொள்ளைநோய் ஒழிப்பு, பல்வேறு நோய்களுக்கும் தகுந்த மருந்துகளின் கண்டுபிடிப்பு, வாழ்க்கைத்தர முன்னேற்றம் ஆகியவை இந்திய மக்கட்தொகையின் அதிகளவு வளர்ச்சிக் காரணிகளாகும்.
Remove ads
தகவல்
வீட்டுப்பட்டியல்கள்
வீட்டைப்பட்டியலிடும் அட்டவணையிலுள்ள 35 கேள்விகள்:[14]
கட்டிட எண் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு வீட்டு எண் தரை, சுவர், மேற்கூரையின் மூலப்பொருள் கணக்கெடுப்பு வீட்டின் நிலைமை வீட்டு எண் (Household number) குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கை குடும்பத் தலைவரின் பெயர் குடும்பத் தலைவரின் பாலினம் சாதி (SC/ST/பிறர்) |
வீட்டு உரிமை குறித்த நிலை வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை குடும்பத்தில் திருமணமானோர் எண்ணிக்கை குடிநீர் வசதி குடிநீர் வசதி உள்ளமை ஒளியமைப்பு மூலம் கட்டிடத்துக்குள் அமைந்துள்ள கழிவறை கழிவறையின் வகை கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு கட்டிடத்துக்குள் குளிக்கும் வசதி |
சமயலறை வசதி சமைக்கப் பயன்படுத்தும் எரிபொருள் வானொலிப் பெட்டி/Transistor தொலைகாட்சிப் பெட்டி கணினி/மடிக்கணினி தொலைபேசி/நகர்பேசி மிதிவண்டி குதியுந்து/விசையுந்து/தானியங்கு மிதிவண்டி மகிழுந்து/பொதியுந்து/கூண்டுந்து வங்கிச் சேவைகள் பயன்படுத்தல். |
மக்கட்தொகை கணக்கிடுதல்
மக்கட்தொகைக் கணக்கீட்டு அட்டவணையின் 30 கேள்விகள்:[15][16]
நபரின் பெயர் குடும்பத் தலைவருடன் உறவுமுறை பாலினம் பிறந்த தேதியும் வயதும் தற்போதையத் திருமண நிலை திருமணத்தின்போது வயது சமயம் பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் மாற்றுத் திறன் (ஊனம்) தாய் மொழி |
அறிந்த பிற மொழிகள் எழுத்தறிவு நிலை கல்விநிலையம் செல்பவர்களின் நிலை அதிகபட்ச கல்வி நிலை கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா? பொருளாதார நடவடிக்கையின் வகை நபரின் தொழில் தொழில்/வியாபாரம் அல்லது சேவையின் தன்மை வேலை செய்பவரின் வகை பொருளீட்டா நடவடிக்கை |
பணி தேடுகின்றாரா/பணியாற்றத் தயாரா? பணிசெய்யும் இடத்துக்குப் பயணம் பிறந்த இடம் கடைசியாக வசித்த இடம் குடிபெயர்ந்த காரணங்கள் குடிபெயர்ந்த இடத்தில் தங்கியிருக்கும் காலவளவு உயிருடன் வாழும் குழந்தைகள் உயிருடன் பிறந்த குழந்தைகள் கடந்த ஓராண்டில் உயிரோடுடன் பிறந்த குழந்தைகள் |
தேசிய மக்கள்தொகை பதிவேடு
தேசிய மக்கட்தொகை பதிவேட்டு அட்டவணையின் ஒன்பது கேள்விகள்:[17]
நபரின் பெயரும் இருப்பிடத் தகுதியும் மக்கட்தொகை பதிவேட்டில் காணப்பட வேண்டிய அந்நபரின் பெயர் குடும்பத் தலைக்கு உறவுமுறை பாலினம் பிறந்த தேதி திருமண நிலை கல்வி நிலை பணி/நடவடிக்கை தந்தை, தாய், கணவன்/மனைவியின் பெயர் |
தகவல் சேகரிக்கப்பட்டு எண்ணிமப்படுத்தப்பட்ட பின்னர், கைரேகைகளும் ஒளிப்படங்களும் சேகரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு 12-இலக்க அடையாள எண், இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பால் வழங்கப்படுகிறது.[18][19][20]
Remove ads
2011 மக்கட்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள்
மக்கட்தொகைக் கணக்கீட்டின் தற்காலிகத் தரவு மார்ச் 31, 2011 இல் வெளியிடப்பட்டது. (பின்னர் மே 20, 2013 இல் இற்றைப்படுத்தப்பட்டது)[21][22][23][24][25]
மக்கட்தொகை | மொத்தம் | 1,210,193,422 |
ஆண்கள் | 623,724,248 | |
பெண்கள் | 586,469,174 | |
எழுத்தறிவு | மொத்தம் | 74% |
ஆண்கள் | 82.10% | |
பெண்கள் | 65.50% | |
மக்கட்தொகை அடர்த்தி | ஒரு சதுர கிலோமீட்டருக்கு | 382 |
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு | 940 பெண்கள் |
குழந்தைகள் பாலின விகிதம் (0–6 வயதினர்) | 1000 ஆண்களுக்கு | 919 பெண்கள் |
மக்கட்தொகை
மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை தசாப்தவளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது.[26] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
Remove ads
சமயவாரியான மக்கட்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள்
2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி[31][32][33], இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%)[34][35][36][35][37], கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது[38][39]. முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.[40][41]
- இந்திய மக்கட்தொகையின் முதன்மையான சமயவாரியான போக்கு (1951–2011)
Remove ads
எழுத்தறிவு
எந்தவொரு மொழியிலும் எழுத, படிக்க, புரிந்துகொள்ளத் தெரிந்த ஏழு வயதுக்கு மேற்பட்டோர் எழுத்தறிவு பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். 1991 க்கு முந்தைய கணக்கெடுப்புகளில், ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாகக் கருதப்பட்டனர். மொத்த மக்களையும் கொண்டு கணக்கிடப்படும் எழுத்தறிவு வீதம் ”தோராயமான எழுத்தறிவு வீதம்” ("crude literacy rate") என்றும், ஏழு வயதுக்கு மேற்பட்டோரை மட்டும் எடுத்துக் கணக்கிடப்படுவது ”திறனுறு எழுத்தறிவு வீதம்” ("effective literacy rate") எனவும் அழைக்கப்படும். எழுத்தறிவு வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது ( 82.14% ஆண்கள்; 65.46% பெண்கள்).[43]
- இந்தியாவின் எழுத்தறிவு வீத விவர அட்டவணை (1901–2011) [44]
Remove ads
சாதி வாரி கணக்கெடுப்பு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு எதிர்கட்சிகளின் கோரிக்கையையடுத்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1931ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்கப் பட்டது. சுதந்திரத்திற்கு பின்பு 1968ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் மார்க்சிய பொதுவுடமை கட்சியின் ஆட்சியின் போது இ.எம்.எஸ். நம்பூதிரிப்பட் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்களின் சமூக நிலையை அறிய சாதிவாரியாக கணக்கெடுக்கப் பட்டது. அதன் அறிக்கை 1971ம் ஆண்டு கேரள கெசட்டில் வெளியிடப்பட்டது[45]
Remove ads
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிகள்
- மக்கட்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், 1948
- மக்கட்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், 1990
- குடியுரிமைச் சட்டம், 1955
- குடியுரிமை (குடிமக்கள் பதிவும் தேசிய அடையாள அட்டை வழங்கலும்) விதிகள், 2003
- பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969
நகர்புறம் மற்றும் கிராமப்புறம்
2011 மக்கட்தொகை கணக்கீட்டில் நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என்பதற்கு கீழ்கண்ட வரையறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நகர்புறம்
- நகராட்சி, மாநகராட்சி மற்றும் ராணுவக்குடியிருப்பு ஆகிய பகுதிகளின் கீழ் வரும் அனைத்து இடங்களும் நகர்புறம் எனக் கருதப்படும்.
- கீழ்கண்ட மூன்று தகுதிகளையும் உடைய எந்தொரு இடமும் நகர்புறமாக கொள்ளப்படும்: அ) குறைந்தது 5000 மக்கள் ஆ) ஆண்களில் 75 சதவீதம் பேர் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடுபட்டிருப்பது. இ) சதுர கிலோமீட்டருக்கு குறைந்தது 400 பேர் (அல்லது சதுர மைலுக்கு 1000 பேர்)
ஊர்புறம்
நகர்புறத்திற்கு வரையறுக்கப்பட்ட தகுதிகள் இல்லாத எந்த ஒரு குடியிருப்பும் கிராமப்புறமாக கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் கணக்கெடுக்கப்படும் பணி 1, சூன், 2010 முதல் 15, சூலை, 2010 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட பணியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் 9, பிப்ரவரி, 2011 முதல் 28, பிப்ரவரி, 2011 வரை நடைபெற்றது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads