அருந்ததியர்
தமிழ்நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் (Chakkiliyar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்[1][2] மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர்.
Remove ads
பூர்வீகம்
தமிழகத்தில் சக்கிலியர்கள் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆவணப்படி, சக்கிலியர்கள் பல உட்பிரிவினர்களாக இருக்கின்றனர். தொட்டியச் சக்கிலியர், அனுப்பச் சக்கிலியர், முரசச் சக்கிலியர், கொல்லச் சக்கிலியர் என்று பல உட்பிரிவுகள் உள்ளன.[3]
தமிழ் சக்கிலியர்: தமிழகத்தில் விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பே ஓரிரு தமிழ் கல்வெட்டுகளில் சக்கிலியர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. தமிழ் பேசும் சக்கிலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கு சக்கிலியர்: தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட சக்கிலியர்கள், தொட்டியச் சக்கிலியர் மற்றும் கொல்லச் சக்கிலியர் என இரு உட்பிரிவினராக வாழ்ந்து வருகின்றனர்.[4] இவர்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து குடியேறினர். தெலுங்கு மொழியினை பேசும் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.[5]
தொட்டியச் சக்கிலியர் : இவர்கள் தங்களை கம்பளத்தார் எனும் ஒன்பது வகை சாதியருள் ஒரு பிரிவினர் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.[6] இவர்களை தொட்டிய நாயக்கர் இன சமூகத்தின் வழித்தோன்றல்கள் எனக்கூறும் தொன்மம் இவர்களின் வழக்காறுகளில் உள்ளது.[7] இவர்கள் தங்களை கம்பளத்து சக்கிலியர் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[8]
கொல்லச் சக்கிலியர்: தெலுங்கு மொழியினை பேசும் இவர்கள் தங்களை கொல்ல கம்பளம் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[9]
கன்னட சக்கிலியர்: கன்னடம் பேசும் அருந்ததியர்களைத் அனுப்பச் சக்கிலியர் , முரசச் சக்கிலியர் என்று அழைக்கின்றனர்.[10]
Remove ads
பெயர் மாற்றம்
ரிஷி வசிட்டரின் மாணவியான அருந்ததி மாதிகா இனத்தை சேர்த்த பெண் எனக்கூறும் தொன்மம் இவர்களின் வழக்காறுகளில் உள்ளது.[11] இதன் காரணமாக தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் தங்களை அருந்ததியலூ அழைத்துக்கொள்ள விரும்பினார்.[12] தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவரான ராவ் சாகிப் எல். சி. குருசாமியால் அருந்ததியர்களின் முதலாவது அமைப்பாகக் கருதப்படுகிற அருந்ததியர் மகாசபை சென்னையில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[13] அருந்ததியர் மகாசபை மூலம் எல். சி. குருசாமி, ரிஷி வசிட்டர் மற்றும் அருந்ததி வழித்தோன்றல்களே மாதிகா இனத்தவர்கள் எனக்கூறும் தொன்ம கதையைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மாதிகாகளின் மரியாதைக்குரிய அடையாளத்தை முன்வைக்க முயன்றார்.[14] அருந்ததியர் மகாசபா முயற்சியால் 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கோவை, சேலம், செங்கல்பட்டு, வடஆற்காடு ஆகிய மாவட்டங்கள் உட்பட சென்னை மாகாணத்தில் 17,396 பேர் சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்திருக்கின்றனர்.[15] எச்.எம்.ஜெகநாதம், 5 ஆகஸ்டு 1932ல் சென்னை மாகாண அவையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார்.தற்போது மாதிகா, சக்கிலியர், மாதாங்கா,, கோசாங்கி, ஆதி-ஜம்புவா ஆகியோரை அருந்ததியர் ஐயாகாரு அல்லது ஐயா அவர்கள் என்றே அரசாங்க பதிவேடுகளில் குறிக்கவேண்டும்’ என்பதே அத்தீர்மானம்.அதனைத் தொடர்ந்து 10 ஆகஸ்டு 1932ல் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[16] ஐதராபாத் மாகாணத்தில் மாதிகா இனத்தவர்கள் நலனுக்காக ராமசாமியால், 1931 ஆம் ஆண்டு அருந்ததியர் மகாசபா ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.[17]
Remove ads
பெயர்க் காரணம்
சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.[18]
தொழில்கள்
இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாளன், பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.[19]
இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.[20]
ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.
இந்திய விடுதலைக்கு பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமூகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.
Remove ads
உள்ஒதுக்கீடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல அமைப்புகளின் போராட்டங்களின் விளைவாக அருந்ததிய சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீடு குறித்து சனவரி 23 , 2008 ஆம் ஆண்டு சட்டசபையில் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதி உள்ளது என்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பதிவு செய்தார் . பின்பு மார்ச் 12 , 2008 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீங்கலாக அனைத்து கட்சியினரும் அருந்ததியினர் சமூக உள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர் . அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் உரையில் , 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , தமிழ்நாட்டில் அருந்ததியர்களின் மக்கள் தொகை 771,659 சக்கிலியர் மக்கள் தொகை 777,139 இவ்விரு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 792 பேர் உள்ளனர், இந்த இருபிரிவினர் மொத்த பட்டியலின மக்கள் தொகையில் 13.06 % ஆகும். எனவே அம்மக்களுக்கு 2.35% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு உத்தேச முடிவு எடுக்கப்பட்டது . அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அருந்ததிய சமூக இயக்கங்கள் , ஆய்வு செய்வதற்காக ஆணையம் கோரியது . அதன் விளைவாக , நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் - 2008 ஆம் ஆண்டு மார்ச் 25 தேதி அமைக்கப்பட்டது. இக்குழு ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் பல விசாரணைகள் நடத்தியும், விபரங்கள் சேகரித்தும் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கியது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பெறும் 7 சாதிகளின் மொத்த மக்கள்தொகை 18 லட்சத்து 61 ஆயிரத்து 457 பேர் ஆகும், இது மாநிலத்தின் பட்டியலின மக்களில் 15.70 ஆகும். அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் 2.88% ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு, பரிந்துரை செய்தது.ஒருநபர் குழுவின் பரிந்துரையாக 2.88% உள்இட ஒதுக்கீட்டை 3% வீதமாக மாற்றி வழங்குவதென அரசு கொள்கை அளவில் முடிவு செய்வதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் 18% இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது.[21] சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். எஸ். ஜனார்த்தனம் தலைமையிலான ஒருநபர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், பட்டியலின மக்கள் என வகுக்கப்பட்டுள்ள 72 ஜாதிப்பட்டியலில்:
ஆதி ஆந்திரர் (எண் 1)
அருந்ததியர் (எண் 5)
சக்கிலியர் (எண் 12)
மாதாரி (எண் 37)
மாதிகா (எண் 38)
பகடை (எண் 48)
தோட்டி (எண் 67)
போன்ற 7 சாதிகளுக்கு 3% உள் இடவொதுக்கீடு வழங்கப்பட்டது.
Remove ads
மக்கட் தொகை
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் உள்ஒதுக்கீடு பெறும் 7 சாதிகளின் மொத்த மக்கள்தொகை 18,61,457 ஆகும், இது மாநிலத்தின் பட்டியலின மக்களில் 15.70 சதவீதமாக இருப்பதாக நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலான ஒருநபர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[22]
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில்
அருந்ததியர் - 771,659
சக்கலியர் - 777,139
மாதாரி - 249494
ஆதி ஆந்திரர் - 40371
பகடை - 13795
மாதிகா - 5103
தோட்டி - 3896
Remove ads
குறிப்பிடத்தக்க மக்கள்
- ஒண்டிவீரன் - பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்[23]
- நாமக்கல் அருணாசலம் - முன்னாள் ஊரகத் தொழில்துறை அமைச்சர்
- எல். முருகன் - மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்
- மா. மதிவேந்தன் - தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்
- ப. தனபால் - தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்டியலின சபாநாயகர், முன்னாள் உணவு துறை அமைச்சர்
- வி. பி. துரைசாமி -தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்
- அந்தியூர் செல்வராஜ் - மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் கதர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர்
- என்.சந்திரசேகரன் - மாநிலங்களவை உறுப்பினர்
- க. ராணி - முன்னாள் இராசிபுரம் மக்களவை உறுப்பினர்
- கந்தசாமி - முன்னாள் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர்
- தியாகராஜன் - முன்னாள் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads