வித்து அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாகத் தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது.

Thumb
பழமும் அதன் விதைகளும்
Thumb
பல வகையான அவரை விதைகள்

விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறைமூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்குச் சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

பலவகையான விதைகள் உள்ளன. சில தாவரங்கள் ஒரே ஒரு விதையை உருவாக்கும்; வேறு சில பன்மடங்கு விதைகளை உருவாக்குகின்றன; இன்னும் சில மிகக் குறைவான விதைகளை உருவாக்குகின்றன, மற்றும் சில அளவில் பெரிய விதைகளை உருவாக்குகின்றன. விதைகள் பொதுவாகக் கடினமான மேலுறை கொண்டும் அளவில் சிறியதாகவும் இருக்கும். ஆனால் அளவில் பெரிய தேங்காயும் ஓர் விதையே. விதைகளின் பருப்புப் பகுதியில் அவை வளர்வதற்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய விதைகள் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோருக்கு நல்ல உணவாக அமைகிறது.

பூக்கும் தாவரங்களில் விதைகள் தாவரங்களின் பழங்களின் உள்ளே இருக்கின்றன. வித்துமூடியிலித் தாவரங்களில் விதையானது பழம் போன்ற அமைப்பினுள்ளே மூடி வைக்கப்படாமல் வெறுமையாக இருக்கும். மக்கள் விவசாயம் செய்யும் நெல்,கோதுமை,கம்பு,சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகளே. விதையின் வெளிப்புறம் பாதுகாப்பிற்காக உறை ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இது வித்துறை அல்லது உமி என அழைக்கப்படுகிறது.

சில சமயங்களில் இந்த விதை என்ற பதம் வேறு சில பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சூரியகாந்தி விதை எனப்படுவது உண்மையில் சூரியகாந்தியின் பழமேயாகும். அதேபோல் உருளைக்கிழங்கில் "விதைக் கிழங்கு" எனப்படுவது உண்மையில் உருளைக்கிழங்கில் கலவியற்ற இனப்பெருக்கத்திற்கு உதவும் தண்டுக்கிழங்காகும். இவை புதிய தாவர உருவாக்கத்திற்காக விதைக்கப்படுவதனாலேயே "விதை" என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. தென்னையிலும் புதிய தாவர உருவாக்கத்திற்கு தென்னையின் பழமான தேங்காயே பயன்படுத்தப்படுகின்றது. தேங்காயில் உள்ளாக இருக்கும் சிரட்டை/கொட்டாங்கச்சியும் அதன் உள்ளான பகுதிகளுமே வித்தாகும்.

வித்தின் அமைப்பு

Thumb
இருவித்திலைத் தாவர வித்து ஒன்றின் கட்டமைப்பு: (a) வித்துறை, (b) வித்தகவிழையம், (c) வித்திலை, (d) வித்திலைக்கீழ்த்தண்டு
Thumb
இருவித்திலைத் தாவரமான வெண்ணெய்ப் பழத்தின் வித்துறை, வித்தகவிழையம், முளையம் போன்றவற்றைக் காட்டும் வரிப்படம்

ஒரு மாதிரி வித்தானது முக்கியமாக மூன்று அமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

  • முளையம் (Embryo):

முளையமே முதிர்ச்சியடையாத இளம் தாவரமாகும். இது பின்னர் தகுந்த சூழல் நிலைகள் இருக்கையில் விருத்தியடைந்து புதிய தாவரத்தை உருவாக்கும். இந்த முளையத்தில், சூல்வித்தகம் அல்லது வித்திலை (Cotyledens) எனப்படும் பகுதியும், தண்டாக விருத்தியடையும் முளைத்தண்டு/முளைக்குருத்து (Plumule) பகுதியும், வேராக விருத்தியடையும் முளைவேர்ப் (Radicle) பகுதியும் காணப்படும். இருவித்திலைத் தாவரங்களில் முளைத்தண்டு, முளைவேர்ப்பகுதியை இணைத்து வித்திலைக்கீழ்த்தண்டுப் (Hypocotyl) பகுதியும் காணப்படும். ஒருவித்திலைத் தாவரங்களில் ஒரே ஒரு வித்திலையும், இரு வித்திலைத் தாவரங்களில் இரண்டு வித்திலைகளும், வித்துமூடியிலித் தாவரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வித்திலைகளும் காணப்படும்.

  • வித்தகவிழையம் (Endosperm):

முளையமானது முளைத்து நாற்றாக வளரும்போது அதற்குத் தேவையான ஊட்டக்கூறுகளை வழங்குவதற்காக, முளையத்தைச் சுற்றியிருக்கும் உணவு சேமிக்கும் பகுதியே வித்தகவிழையமாகும். இது வேறுபட்ட வகைத் தாவரங்களில் வேறுபட்ட அமைப்பாக இருக்கும். பூக்கும் தாவரங்களில் இந்த வித்தகவிழையமானது இரட்டைக் கருக்கட்டல் (Double fertilization) முறையினால் தோன்றும் மும் மடியநிலையைக் கொண்டிருக்கும். இம்மும்மடிய வித்தகவிழையமான எண்ணெய், மாப்பொருள், புரதம் போன்ற ஊட்டக்கூறுகளை அதிகளவில் கொண்டிருக்கும். வித்துமூடியிலித் தாவரங்களில் பெண் புணரித் தாவரத்தின் ஒரு பகுதியே வித்தகவிழையமாக விருத்தியடைவதனால் இது ஒரு மடியநிலையைக் கொண்டிருக்கும். சில இனங்களில் முளையமானது வித்தவிழையத்தினுள் வைத்திருக்கப்பட்டு, முளைத்தலின்போது, அங்கிருக்கும் உணவு முளையத்தினால் பயன்படுத்தப்படும். வித்து மூடியிலிகள், ஒருவித்திலைத் தாவரங்கள், மற்றும் பல இரு வித்திலைத் தாவரங்கள் இவ்வகையான விதைகளைக் கொண்டிருக்கும். வேறு சில இனங்களில், முளையமானது வித்தினுள் இருக்கும்போதே விருத்தியடைய ஆரம்பித்து, வித்தகவிழையத்திலுள்ள உணவு முளையத்தினால் உறிஞ்சப்பட்டு, முளையத்தின் பகுதியான வித்திலைப் பகுதி, உணவினால் நிரப்பப்பட்டிருக்கும். இவ்வகையான வித்துக்களில் முதிர்ந்த நிலையில் வித்தகவிழையம் இருப்பதில்லை. பதிலாக வித்திலைகளே வித்தின் பெரும்பகுதியை நிரப்பியிருக்கும். அவரையின விதைகள், சூரியகாந்தி விதைகள் இவ் வகையைச் சேர்ந்தவையாகும்.[1]

  • வித்துறை (Seed coat)

விதையின் பாதுகாப்பிற்காக, அதனைச் சுற்றியிருக்கும் ஒரு உறையே வித்துறை எனப்படும். வித்து உலர்ந்து போகாமல் தடுக்கவும், வேறு காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த உறை உதவும். இந்த உறையானது சில தாவர விதைகளில் மிகவும் மெல்லிய தோல் போன்று காணப்படும். எடுத்துக்காட்டாக நிலக்கடலை விதையை மூடிக் காணப்படும் சிவப்பு நிறமான மெல்லிய அமைப்பே அதனது வித்துறையாகும். வேறு சில தாவர விதைகள் தடித்த வித்துறையைக் கொண்டிருக்கும். உள்ளோட்டுச் சதைக்கனி (Drupe) வகையான பழத்தைக் கொண்ட தேங்காயின் விதையானது மிகவும் கடினமானதும், தடித்ததுமான வித்துறையைக் கொண்டிருக்கும். வித்துறையே சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி என அழைக்கப்படுகின்றது.

வித்து ஒன்றில் மேற்கூறப்பட்ட முக்கியமான மூன்று அமைப்புக்கள் தவிர்ந்த முடிகள் போன்ற வேறு வெளி வளர்ச்சிகள், சூலகச் சுவருடன் சூல்காம்பினால் இணைக்கப்பட்ட வித்துத் தழும்பு போன்றனவும் காணப்படலாம். பல இனங்களில் உலர் பழங்கள், "விதைகள்" என அழைக்கப்படுகின்றது. சூரியகாந்தி விதைகள், அவை முற்றாகப் பழத்தின் கடினமான சுவரால் மூடப்பட்ட நிலையிலேயே விற்பனைக்கு வரும். அதன் உண்மையான விதையைப் பெற வேண்டுமாயின், அதன் கடினமான வெளிக் கவசம் நீக்கப்பட வேண்டும். Peach போன்ற வேறு சில இனங்களில் பழத்திலுள்ள கடினப்படுத்தப்பட்ட உட்கனியம் எனப்படும் பகுதியானது விதையைச் சுற்றி அதனுடன் ஒன்றாக இணைந்து காணப்படும்.

வித்து உற்பத்தி

பூக்கும் தாவரம், மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களிலேயே வித்துக்கள் உற்பத்தியாகின்றன. பூக்கும் தாவரங்களில் வித்துக்கள் மெல்லிய அல்லது தடிப்பான, கடினமான அல்லது சதைப்பிடிப்பான பகுதியால் மூடப்பட்டு இருக்கும். சில பூக்கும் தாவரங்களின் வித்துக்கள் கடினமான, சதைப்பிடிப்பான இரண்டு வகைகளையும் கொண்ட மேலுறையைக் கொண்டிருக்கும். வித்து மூடியிலிகளில் வித்துக்களை மூடி வேறு எந்த அமைப்புக்களும் உருவாகாமையால் வித்துக்கள் திறந்த நிலையில் இருக்கும்.

இயற்கையான நிலையில் தாவரங்களில் வித்து உற்பத்தியானது ஒவ்வொரு ஆண்டும் வேறுபட்டிருக்கும். காலநிலை, பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள், தாவரத்தின் உள்ளான சுழற்சி முறைகள் போன்ற காரணிகளால் வித்து உற்பத்தியானது வேறுபடுகின்றது.

பூக்கும் தாவரங்களில் சிக்கலான முறையிலான ஒரு கருக்கட்டல் நிகழ்வினால் வித்துக்கள் உற்பத்தியாகின்றன. பெண் பாலணுவான முட்டைக் கருவுடன், மகரந்தமணியில் உள்ள ஒரு ஆண் பாலணுக் கரு இணைந்து இருமடிய கருவணு உருவாகின்றது. அதேவேளை இரு பெண் முனைவுக் கருக்களுடன், இரண்டாவது ஆண் பாலணுக்கரு இணைந்து மும்மடியக் கருவொன்று உருவாகின்றது. இது இரட்டைக் கருக்கட்டல் என அழைக்கப்படும். இருமடியக் கருவணுவானது முளையமாக இருக்க, மும்மடியக் கருவானது விரைவாகக் கலப்பிரிவுக்கு உட்பட்டு உணவைச் சேமிக்கும் வித்தகவிழையமாக விருத்தியடையும்.

வித்துமூடியிலிகளில், இரட்டைக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. மகரந்தத்திலிருந்து பெறப்படும் இரு ஆண் பாலணுக்களில் ஒன்று மட்டுமே பெண் பாலணுவுடன் இணையும். இரண்டாவது பயன்படுவதில்லை[2]. சிலசமயம் இரண்டு ஆண் பாலணுக்களும் இணைந்து இரு கருவணுக்கள் உருவாகினாலும், ஒன்று அழிந்துவிடும்[3].

வித்தின் தொழில்கள்

முளையத்திற்கான ஊட்டச்சத்து

முளையத்திற்கான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதன் மூலம் தாவரங்கள் அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

வித்துப் பரவல்

Thumb
Dandelion seeds are contained within achenes, which can be carried long distances by the wind.
Thumb
The seed pod of milkweed (Asclepias syriaca)

விலங்குகளில் போலன்றி, தாவரங்களில் தமது வளர்ச்சிக்கும், வாழ்க்கை வட்டத்தை நிவர்த்தி செய்வதற்கும் தகுந்த சூழலைத் தேடிப் போவது இயலாத காரியமாக இருப்பதனால், அவை தமது சந்ததியைப் பெருக்கிக் கொள்வதற்காக வித்துக்களை பரப்புவதற்கு பல வழிகளைக் கையாளுகின்றன. ஒரு தாவரத்தின் பழங்கள் தனது விதையை வெளியேற்றத் திறந்து கொள்ளுமாயின் அவை வெடிகனிகள் (Dehiscent fruits) எனவும் (எ.கா. அவரை), திறக்காதவையாயின் வெடியாக்கனிகள் (Indehiscent fruits) எனவும் (எ.கா. தேங்காய்) அழைக்கப்படும். சிலவற்றில் பழங்கள் வெடித்து வித்துக்கள் மட்டுமே பரம்பலுக்குள்ளாகும். வேறு சிலவற்றில் பழங்கள் பரவுதலுக்குள்ளாகி, பின்னரே திறந்து வித்தை வெளியேற்றும்.

  • காற்றினால் பரவல்

காற்றினால் இலகுவாக எடுத்துச் செல்லப்படக் கூடியதான அமைப்புக்களைக் கொண்டிருக்கும் வித்துக்கள் அல்லது பழங்கள் இவ்வகை பரவலுக்குள்ளாகும். இவை பொதுவாக மிகச் சிறிய, எடை மிகக் குறைவானவையாக இருக்கும். இவற்றில் சிறகு போன்ற அமைப்புக்களோ அல்லது முடிகள் போன்ற அமைப்புக்களோ இருப்பதனால், இலகுவாகக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும்.

  • நீரினால் பரவல்

சில வித்துக்கள் நிறை குறைவானவையாகவும், மிதக்கும் தன்மையுடையனவாகவும் இருப்பதனால், ஆறுகள் போன்றவற்றினூடாகவோ, அல்லது ஓடும் மழை நிரிலோ மிதந்து வேறு இடங்களுக்குச் செல்லும்.

  • விலங்குகளினால் பரவல்

கொழுவிகள் போன்ற அமைப்புக்களைக் கொண்டிருப்பதனாலோ, அல்லது ஒட்டும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டிருப்பதனாலோ, சில விதைகள் விலங்குகளின் உடலில், அவற்றின் மென்மயிர்களில் அல்லது சிறகுகளில், அல்லது கால்களில் ஒட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். வேறு சில தாவரத்தின் பழங்கள் விலங்குகளால் உணவாக உள்ளெடுக்கப்பட்டு, பின்னர் விதைகள் கழிவாக வேறு இடத்தில் எச்சமிடப்படும். வேறு சில விதைகள் உணவுக்காக விலங்குகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படும். அவ்விடத்தில் உணவாக உட்கொள்ளப்படாதவிடத்து மீண்டும் அவை முளத்தல் மூலம் புதிய தாவரத்தை உருவாக்கும் சாத்தியத்தைப் பெறும்.

வித்தின் உறங்குநிலை

வித்து உறங்குநிலை (Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம். சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையிலிருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம். முளைத்தலுக்கான அத்தியாவசியமான தேவைகள் கிடைக்காதவிடத்தோ, மிகவும் கடுமையான குளிர் அல்லது கடுமையான சூடு போன்ற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளிலோ வித்துக்கள் முளைக்காமல் இருத்தல் Seed hibernation எனப்படும்.

வித்து முளைத்தல்

Thumb
முளைத்த சூரியகாந்தி நாற்று

வித்துக்களில் உள்ள முளையமானது முளைத்தல் செயல்முறைமூலம் இளம் தாவரமான நாற்றாக விருத்தியடையும். இதற்கு வித்தானது நிலைத்து வாழும் தகுதியுடையதான நிலையில் இருப்பதும் (அதாவது உயிருள்ள முளையத்தைக் கொண்டிருப்பதும்), உறங்கு நிலையில் இருந்திருப்பின் அதிலிருந்து மீண்டிருப்பதும், முளைத்தலுக்கான பொருத்தமான சூழல் காரணிகள் கிடைப்பதும் அவசியமாகும்.

சிலசமயம் விதைகள் முளையமற்று வெறுமையாக இருப்பதுண்டு. மகரந்தச்சேர்க்கை சரியாக நிகழாமல் போனதால் முளையை உருவாகாமல் இருந்திருக்கலாம். விதைகள் பழத்தினுள் இருக்கையிலேயே அல்லது பரவலின் பின்னர் கொன்றுண்ணிகளாலோ, நோய்க்காரணிகளாலோ தாக்கப்பட்டு விதை அழிந்திருக்கலாம். பாதகமான சூழல் காரணிகளும் கூட விதையின் உயிர்ப்புத் தன்மையைத் தாக்கி அழித்திருக்கலாம். சில விதைகள் நீண்ட காலம் உயிருடன் இருக்கும் அதேவேளை, வேறு சிலவற்றில் விரைவில் உயிரணுக்கள் இறப்பதனால், விதைகள் உயிர்ப்பற்ற நிலைக்குச் செல்லலாம். இவ்வாறு உயிர்ப்பற்ற நிலையிலிருக்கும் விதைகள் மலட்டு விதைகள் (Sterile seeds) எனப்படும்.

வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாகப் போக்கி முளைத்தலைத் தூண்ட முடியும்[4].

வித்துக்களின் பொருளாதார முக்கியத்துவம்

உணவு

தானிய விதைகள், அவரை இன விதைகள், கொட்டை வகை விதைகள் மனிதரின் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. நாம் உணவில் பயன்படுத்தும் பல எண்ணெய்களும் விதைகளிலிருந்தே பெறப்படுகின்றன. தவிர பல பானங்கள், மசாலாப் பொருள்கள் போன்றனவும் விதைகளிலிருந்து பெறப்படும்.

மனிதருக்கான உணவாக மட்டுமன்றி கால்நடைகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. சில விதைகள் பறவைகளின் உணவாகவும் இருக்கின்றது. கால்நடை வளர்ப்பு செய்பவர்கள், மற்றும் பறவைகள் வளர்ப்பவர்கள் விதைகளை வாங்கி தாம் வளர்க்கும் கால்நடைகளின் அல்லது பறவைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வர்.

வேளாண்மை

தாவரங்களில் விதைமூலம் இனப்பெருக்கம் ஒரு முக்கியமான முறையாதலால், பல பயிர்கள் விதை மூலமே பயிர்ச்செய்கை யில் பயிரிடப்படுகின்றன. தானியங்கள், பல மரக்கறி வகைகள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் புல் போன்ற பல விவசாய உற்பத்திப் பொருட்களில் விதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

நச்சுப் பதார்த்தங்கள்

சில விதைகள் மனிதருக்கும், ஏனைய விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல நச்சுத்தன்மை கொண்டவையாக, அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன[5]. அழகான வண்ணங்கள் கொண்ட பூக்கள், பழங்களால் கவரப்படுவதால், பொதுவாக வளர்ந்தவர்களை விடவும் குழந்தைகளே விதை நச்சுப்பொருட்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்[6]. தாவரங்கள் தம்மை ஏனைய உயிரினங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கையாளும் பொறிமுறைகளில் ஒன்றாக விதைகளில் சில வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. அவை சில சமயம் வெறும் உருசியற்றதாகவோ, அல்லது கசப்பானதாகவோ இருக்கலாம். சில சமயம் அவை நச்சுத் தன்மை உடையதாக, அல்லது சமிபாட்டுத் தொகுதியினுள் செல்கையில் நச்சுத் தன்மையுடைய வேதிப்பொருளாக மாற்றமடைவதாக இருக்கும்.

ஆமணக்கம் விதையானது ரிசின் எனப்படும் நச்சுத்தன்மை உடைய ஒரு வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றது. 2 – 8 உட்கொள்கையில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு எனக் குறிப்புகள் இருப்பினும்[7][8], இதனால் ஏற்பட்ட விலங்கு இறப்புக்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது[9].

குண்டுமணிகள் நிவப்பு நிறத்தில் கறுப்பு புள்ளி கொண்ட அழகான விதையாக இருப்பதனால் அணிகலன்கள் செய்யவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுவதுடன், நிறையாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இவை மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும். இந்த விதைகளில் உள்ள அபிரின் எனப்படும் நச்சுப்பொருள் உள்ளது. ஒரு விதை உடைந்து நச்சுப்பொருள் கண்ணில் பட்டால், கண்ணைக் குருடாக்கக் கூடியதாகவும், உட்கொள்ளப்பட்டால் இறப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த விதைகள் மிகவும் கடினமான வித்துறையைக் கொண்டிருப்பதனால் மிக இலகுவில் உடையாதவையாக இருக்கின்றன. அதேவேளை இவை சமைக்கப்பட்டால், நச்சுத்தன்மையை இழந்துவிடுகின்றன என்றும் கூறப்படுகின்றது.[10]

சில விதையின் உள்ளீடுகள் சமிபாட்டுப் பிரச்சனைகளையும், வயிறு, குடல் தொடர்பான அசௌகரியங்களையும் தர வல்லன. சில விதைகள் சமைக்காமல் உட்கொள்ளும்போது மட்டுமே பாதிப்பைக் கொடுக்கும்.

வேறு பயன்கள்

  • பஞ்சு விதையுடன் இணைந்திருக்கும் பஞ்சு நார், பஞ்சுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது[11].
  • உணவுப் பயன்பாட்டுக்கல்லாமல் வேறு பயன் தரும் எண்ணெய் வகைகள். எ.கா. Linseed oil போன்ற சாயங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்[12].
  • சில மருந்து வகைகள். எ.கா. ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பூஞ்சை தொற்றுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்[13][14].
  • சில விதைகள் மணிகளாகக் கோர்த்தெடுக்கப்பட்டு, மாலை, கைச்சங்கிலி போன்ற அலங்கார அணிகலன்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. குண்டுமணி[10][15].
  • சில விதைகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கவோ, அல்லது நேரடியாகவே விளையாட்டிலோ (புளியங்கொட்டை போன்றன) பயன்படுத்தப்படுகின்றன.
  • சிலசமயம் விதைகள் பயிர்ச்செய்கையில் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றது எ.கா. பஞ்சு விதைகள்[16].
  • பண்டைய காலத்தில் விதைகள் நிறையை அளவிடவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எ.கா. குண்டுமணிகள் தங்கத்தின் நிறையை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. 10 குண்டுமணிகள் சேர்ந்தால் 1 கிராம் அளவு வருவதாகக் கூறப்படுகின்றது. குண்டுமணிகள் மிக உலர்ந்த விதைகளாகவும், நீண்ட காலத்திற்கு நிறையில் அதிக மாற்றமின்றியும் இருக்கும் இயல்புள்ளவையாதலால் இவற்றை நிறைய அளவிடப் பொருத்தமானதாகக் கருதினர்[10][17]

வித்து பிரித்தெடுப்பு முறைகள்

நடுகைக்காக வித்துக்களை பிரித்தெடுக்கும் முறை தாவரத்துக்குத் தாவரம் வேறுபடுகின்றது.

தக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு பழுத்த தக்காளிப் பழத்திலிருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்க விடப்படும். வித்துக்களைச் சுற்றியுள்ள சளிப்படை நீங்கும் வகையில் நன்கு வித்துக்கள் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

கத்தரி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

கறிமிளகாய் வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு பழுத்த கறிமிளகாய் தெரிந்தெடுக்கப்படும். பழம் வெட்டப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும்.கம்பிவலையில் உராய்வதன் மூலம் விதையுடன் தொடர்புபட்ட பாகத்திலிருந்து வேறாக்கப்படும். பின் வெயிலான இடத்தில் உலர்த்துதல் வேண்டும். வித்துக்களை வேறாக்கிய பின் கழுவுவதைத் தவிர்க்கவும். பின் குளிர்ச்சியான சூழலில் சேமித்து பாதுகாக்கவும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.