சூரியகாந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரியகாந்தி (Helianthus annuus ) என்ற தாவரத்தின் தாயகம், அமெரிக்க நாடுகள் என கருதப்படுகிறது. இவை ஆண்டுத் தாவரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை மிகப்பெரிய மஞ்சரியை (பூங்கொத்து) உடையன ஆகும். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களில் இதுவும் ஒன்றாகும். இதன் எண்ணெய் சமையல் எண்ணெயாகவும், பிற தாவரப்பகுதிகள் விலங்கு உணவாகவும், பறவையினங்களுக்கும் பயனாகின்றன.




Remove ads
வரலாறு
இதன் தாயகம், மத்திய அமெரிக்க நாடுகள் என்பர். கி.மு 2600 ஆண்டுகள் அளவில், முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.[3] மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம். முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக அறியப்பட்ட சூரியகாந்தி எடுத்துக்காட்டுகள் டென்னசியில் கி.மு 2300 அளவில் காணப்பட்டுள்ளன. பல உள்ளூர் அமெரிக்க மக்கள் சூரியகாந்தியை மெக்சிகோவின் ஆஸ்டெக்குகள் மற்றும் ஆட்டொமி மற்றும் தென்னமெரிக்காவில் இன்காகள் உள்ளடங்கலாக தமது சூரிய தெய்வத்தின் அடையாளமாகப் பயன்படுத்தினர். பிரான்சிஸ்கோ பிஸார்ரோ என்பவரே தஹுவண்டின்சுயோ, பெருவில் சூரியகாந்தியைச் சந்திக்கவேண்டியிருந்த முதலாவது ஐரோப்பியராவார். பூவின் தங்க படங்கள், அதோடு விதைகள் ஆகியன, 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்குத் திருப்பிக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது. சூரியகாந்தியானது, சூரிய சமயம், போர்முறை ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாக இருப்பதால், இதைப் பயிரிடுவதை ஸ்பெயின் நாட்டவர்கள் தடுக்க முயற்சிப்பதாக சில ஆய்வாளர்கள் விவாதிக்கிறார்கள்.[4]
18 ஆம் நூற்றாண்டின்போது, ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களால், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தவக்காலத்தின்போது, தடைசெய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது.
Remove ads
தோற்றம்
இதன் பூ என்பது, தனிப்பூ அல்ல. சிறுபூக்களால் ஆன பூங்கொத்தாக உள்ளது. எனவே, தாவர அமைப்பியல் படி, இதனைக் கூட்டுப்பூ என்பர். வெளிப்புற சிறுபூக்கள் மலட்டுத்தன்மையான கீற்றுச் சிறுபூக்கள் ஆகும். அவை மஞ்சள், அரக்கு வண்ணம், செம்மஞ்சள், பிற வண்ணங்களில் இருக்கலாம். வட்டவடிவான கொத்துக்கு உள்ளாகவுள்ள சிறுபூக்கள், தட்டு சிறுபூக்கள் எனப்படுகின்றன. இத்தட்டுப் பூக்களே முதிர்வடைந்து விதைகளாகும். இச்சிறு பூக்கள் வட்ட வடிவிலும், பூவமைப்பு சுருளி போன்றும் அமைந்துள்ளன. பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் 137.5° கோண அமைவில், அடுத்த சிறுபூவை நோக்கி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதனாலேயே, ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் சுருளிகள் வடிவமைப்பை உண்டாக்கும். இங்கு இடது சுருள்களின் எண்ணிக்கையும், வலது சுருள்களின் எண்ணிக்கையும், அடுத்தடுத்த ஃபிபனாச்சி எண்களாகும். பொதுவாக, ஒரு திசையில் 34 சுருள்களும் அடுத்த திசையில் 55 உம் உள்ளன; மிகப்பெரிய சூரியகாந்தியில் ஒரு திசையில் 89உம் அடுத்ததில் 144உம் இருக்கலாம்.[5][6][7] இந்த வடிவமைப்பானது பூங்கொத்துக்குள் மிகவும் திறனான முறையில் நிரப்பப்படும் விதைகளை உண்டாக்கும்.[8][9]
Remove ads
ஒளிதூண்டுத் திருப்பம்
மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்தி பூங்கொத்துகள், ஒளியால் தூண்டப் பட்டு , சூரியத்திசைக்கொப்ப திருப்பிக் கொள்ளும் இயல்பினைக் கொண்டிருக்கின்றன.[10] சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்பியிருக்கும். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின்தொடருகின்ற பூங்கொத்துகள், இரவு வேளையில் மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. இந்த நகர்வானது, மொட்டிற்குச் சிறிது கீழாக உள்ள தண்டின் வளையத்தக்க பகுதியான, இலையடிமுண்டிலுள்ள இயக்க கலங்களினால் ஏற்படுத்தப்படுகிறது. மொட்டு நிலை முடியும்போது, தண்டானது விறைப்படைந்து, பூக்கும் நிலையை அடையும் போது, இத்திரும்பும் இயல்பு நின்றுவிடுகிறது. இம்முதிர் பருவத்தில் தண்டும், இலைகளும் தமது பச்சை வண்ணத்தை இழக்கும். காட்டுச் சூரியகாந்தி குறிப்பாகச் சூரியனை நோக்கித் திரும்பாது; முதிர்வடையும்போது இதன் பூக்கும் கொத்தானது பல திசைகளை நோக்கியிருக்கக்கூடும். இருந்தபோதிலும், இலைகள் சில ஒழிதூண்டுதிருப்பத்தைக் குறிப்பாக வெளிப்படுத்தும்.
பண்பாட்டு அடையாளம்
- சூரியகாந்தியானது அமெரிக்க மாநிலமான கன்சாஸின் மாநிலப் பூ ஆகும்.[11] மேலும் கிட்டாக்யுஷு, ஜப்பானின் நகரப் பூக்களில் ஒன்றாகும்.
- சிவப்பு ரோஜாவானது சமதர்ம, சமூக ஜனநாயகத்தின் அடையாளமாக இருப்பதுபோலவே, சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படுகிறது. சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது, கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது.
- வான் கோவின் மிகப் பிரபலமான ஓவியத்தின் பொருள் சூரியகாந்திகளாகும்.
- உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தியாகும்.[12]
Remove ads
பயிரிடலும், பயன்களும்
சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு, முழுமையான சூரியன் தேவை. அவை வளம்மிக்க, ஈரமான, நன்கு வடிகட்டுமானமுள்ள மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வணிக அடிப்படையில் பயிர்ச்செய்கையில், விதைகள் 45 செ.மீ இடைவெளியிலும், 2.5 செ.மீ ஆழத்திலும் விதைக்கப்படுகின்றன. சூரியகாந்தி விதைகள்,உப்புச் சேர்க்கப்பட்டோ, சேர்க்கப்படாமல் அடுப்புகளில் வைத்து வறுத்த பின்னர் சிற்றுண்டியாக விற்கப்படும். சூரியகாந்தி எண்ணெய், கடலையெண்ணெய், வெண்ணெய் போன்றவற்றிக்கு மாற்றாக பதப்படுத்தலாம். ஜெர்மனியில், இதை ரை மாவுடன் சேர்த்து சோனன்ப்ளுமென்கர்ன்ப்ரட் (Sonnenblumenkernbrot[13])செய்கிறார்கள். சூரியகாந்தி முழுமையான விதை வெதுப்பி), இது ஜெர்மன் மொழி பேசுகின்ற ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இதை பறவைகளுக்கான உணவாகவும் விற்கிறார்கள், சமையலிலும், பச்சைக்காய்கறிக் கலவைகளிலும் இதை நேரடியாகப் பயன்படுத்துவர்.
விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய், எண்ணெயாக சமையலுக்குப் பயன்படுகிறது. இது ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால், வெண்ணெய் (மார்ஜரின்), பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படும். வேறுபடுகின்ற கொழுப்பமில சேர்வைகளுடன் பரந்துபட்ட சூரியகாந்தி வகைகள் உள்ளன; சில 'உயர் ஒலீக்' வகைகளின் எண்ணெயில், ஆலிவ் எண்ணெயை விடக்கூட, அதிகமான அளவில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
எண்ணெய் எடுப்பதற்காக விதைகளை பதப்படுத்திய பின்னர், எஞ்சுகின்ற கட்டியை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில இனங்கள் தொங்குகின்ற பூங்கொத்துகளை உடையன. பூக்களை அலங்காரத் தாவரமாக வளர்க்கப் படுவதுண்டு. இவை பறவைகளால் ஏற்படும் சேதம், சில தாவர நோய்களால் ஏற்படும் இழப்புக்களைக் குறைக்கின்றன. சூரியகாந்திகள் மரப்பாலையும் உற்பத்திசெய்யும் இயல்பு உடையவை ஆகும்.
பாரம்பரியமாக பல நேட்டிவ் அமெரிக்கன் குழுக்கள், நன்கறியப்பட்ட, பொருத்தமான சோளம், அவரை, பூசணி ஆகியவற்றுடன் "நான்காவது சகோதரியாக", அவர்களின் தோட்டங்களின் வடக்கு வரம்புகளில், சூரியகாந்திகளைப் பயிரிட்டனர்.[14]
இருந்தபோதிலும், சரக்குப் பயிர்களை வளர்க்கின்ற வணிக விவசாயிகளுக்கு, சூரியகாந்தியானது பிற விரும்பத்தகாத தாவரமாகவே உள்ளது. அடிக்கடி களையாகக் கருதப்படும். குறிப்பாக மத்தியமேற்கு அமெரிக்காவில், காட்டு (பல்லாண்டு வாழ்கின்ற) இனக்கள் சோளம் மற்றும் சோயாஅவரைத் தோட்டங்களில் காணப்படுகின்றன. இவை விளைச்சலில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கக்கூடியன.
ஈயம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் போன்ற நச்சுப் பதார்த்தங்களை மண்ணிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்தலாமென பரிந்துரைக்கப் படுகிறது. இவை செர்னோபில் அணுஉலை விபத்துக்குப் பின்னர் மண்ணிலிருந்து யுரேனியம், செசியம்-137 மற்றும் துரந்தியம்-90 ஆகியவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
Remove ads
சிறுபூ ஒழுங்கமைப்பின் கணித அமைவு

சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் முன்வைத்தார்.[15] இது முனைவு ஆயங்களில் தெரிவிக்கப்படுகிறது
இங்கே θ என்பது கோணம், r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்தான தூரம், n என்பது சிறுபூவின் சுட்டி எண் மற்றும் c என்பது ஒரு மாறிலியான அளவீட்டுக் காரணியாகும். இது ஃபெர்மட்டின் சுருளி வடிவமாகும். கோணம் 137.5° என்பது (தங்க) விகிதத்துடன் தொடர்பானது. இது சிறுபூக்களின் நெருக்கமான அமைவு, அடுக்கைக் கொடுக்கிறது. இம் மாதிரியானது சூரியகாந்திகளின் கணினி வரைகலைச் சித்தரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[16]
Remove ads
அளவு
சூரியகாந்திகள் மிகப் பொதுவாக 1.5 தொடக்கம் 3.5 மீ (8–12 அடி) வரையான உயரத்துக்கு வளர்கின்றன. 12-மீ (40 அடி), பாரம்பரிய, தனித்த, பூங்கொத்து ஆகும். இதே விதைகள், வேறு சமயங்களில் வேறு இடங்களில் கிட்டத்தட்ட எட்டு மீட்டர் (26 அடி) உயரத்துக்கு வளர்ந்தன (எ.கா. மாட்ரிட்). எட்டு மீட்டருக்கும் அதிகமாக வளர்கின்றன. சூரியகாந்தி தாவரமானது படுவாவில் வளர்க்கப்பட்டதாக, 1567 ஆம் ஆண்டிலிருந்தான அறிவியல் அடிப்படையிலான இலக்கியங்கள் கூறுகின்றன. மிக அண்மைக்கால ஆய்வுகள், நெதர்லாந்து, ஒண்டாரியோ, கனடா ஆகிய நாடுகளிலும் நடந்துள்ளன.
Remove ads
பிற இனங்கள்
- வட அமெரிக்காவில் தோன்றிய 38 பல்லாண்டு வாழ்கின்ற சூரியகாந்தி இனங்களில், மாக்சிமில்லியன் சூரியகாந்தி (Helianthus maximillianii ) ஒன்றாகும். இவற்றை பல்லாண்டுவாழ் விதைப் பயிராக வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறை லேண்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் பிற இனப்பெருக்க திட்டங்கள் ஆராய்ந்தன.[17] (ஜெருசலேம் (Jerusalem) கூனைப்பூ அல்லது கெலியந்தஸ் டுபரோசஸ் (Helianthus tuberosus)) என்பது சூரியகாந்திக்குத் தொடர்பானது, இது பல்லாண்டுவாழ் சூரியகாந்திக்குரிய மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
- மெக்சிகன் சூரியகாந்தி என்பது டைதோனியா ரோடந்திபோலியா (Tithonia rotundifolia) ஆகும். இது வட அமெரிக்க சூரியகாந்திகளுடன், நெடுந்தொலைவுத் தொடர்பைப் பெற்றுள்ளது.
- பொய்யான சூரியகாந்தி என்பது ஹெலியோப்சிஸ் (Heliopsis) இனத்துத் தாவரங்களைக் குறிக்கின்றன.
Remove ads
காட்சியகம்
- பம்பிள் தேனி தேன் எடுக்கிறது
- முளைத்து மூன்று நாட்களின் பின்னர் சூரியகாந்தி நாற்றுக்கள்.
- பழங்களைத் தரக்கூடிய கொத்து
- சீனாவின் சிற்றுண்டிகளாக விற்கப்படும் கொத்துகள்
- நியூசிலாந்திலுள்ள சூரியகாந்தி
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads