காகுரிப்பான் இராச்சியம்
1019 - 1045-ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவில் அமைந்திருந்த ஓர் இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காகுரிப்பான் இராச்சியம் (ஆங்கிலம்: Kahuripan Kingdom; இந்தோனேசியம்: Kerajaan Kahuripan; ஜாவானியம்: Karajan Kahuripan) என்பது 1019 - 1045-ஆம் ஆண்டுகளில், இன்றைய இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவில் அமைந்திருந்த ஓர் இராச்சியம் ஆகும். இந்த இராச்சியத்தின் தலைநகரம் பிரந்தாஸ் ஆற்றின் (Brantas River) முகத்துவாரத்தில் அமைந்து இருந்தது. இந்தக் காகுரிப்பான் இராச்சியம் ஒரு குறுகிய கால அளவில், ஏறக்குறைய 26 ஆண்டுகள் மட்டுமே ஆளுமையில் இருந்தது.


1016-ஆம் ஆண்டு மாதரம் இராச்சியத்தின் மீது சிறீவிஜயப் பேரரசு படையெடுப்பு நடத்தியது. அதில் மாதரம் இராச்சியம் சிதைந்து போனது. ஒரு பொறுப்பான அரசர் இல்லாததால், உள்ளூர்ப் பூர்வீகத் தலைவர்கள் காகுரிப்பான் இராச்சியத்தை தனித்தனியாகப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக ஆட்சி செய்தனர்.
இருப்பினும், 1019-ஆம் ஆண்டில், சிதைந்து போன பழைய மாதரம் இராச்சியத்தின் இடிபாடுகளில் இருந்து, மீண்டும் ஓர் இராச்சியம் ஏர்லங்கா என்பவரால் உருவாக்கப்பட்டது. அந்த இராச்சியம் தான் காகுரிப்பான் இராச்சியம் எனும் புதிய இராச்சியம் ஆகும். காகுரிப்பான் இராச்சியத்தின் ஒரே மன்னர் ஏர்லங்கா ஆவார்.
Remove ads
பொது
1045-ஆம் ஆண்டில் ஏர்லங்கா தம்முடைய இரண்டு மகன்களுக்கு ஆதரவாக, காகுரிப்பான் இராச்சிய மன்னர் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து தம்முடைய காகுரிப்பான் இராச்சியத்தை ஜங்காலா இராச்சியம் (Janggala) என்றும்; பஞ்சாலு இராச்சியம் (Kediri kingdom) என்றும்; இரண்டு இராச்சியப் பிரிவுகளாகப் பிரித்தார்.
அவற்றுள் கேடிரி அரசு என்பதுதான் பஞ்சாலு இராச்சியம் ஆகும்.[1]:144–147 காகுரிப்பான் இராச்சியத்தின் பெயர் பழைய ஜாவானிய சொல்லான ஊரிப் (Hurip) என்பதில் இருந்து பெறப்பட்டது. வாழ்க்கை அல்லது வாழ்வாதாரம் என்று பொருள்படும்.
பின்னர் 14 - 15-ஆம் நூற்றாண்டுகளில், காகுரிப்பான் இராச்சியம், மயாபாகித்து பேரரசின் 12 மாநிலங்களில் ஒன்றாக ஈர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் காகுரிப்பான் காலத்தில் கட்டப்பட்ட பல கோயிகள் சீரமைப்புகள் செய்யப்பட்டன.
Remove ads
வரலாறு
காகுரிப்பான் இராச்சியத்தைத் தோற்றுவித்த ஏர்லங்கா (Airlangga) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழி; பாலினிய அரசர் உதயனா வருமதேவன்; மற்றும் பாலினிய அரசி குணப்பிரியா தருமபத்தினி ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
குணப்பிரியா தருமபத்தினி 961-இல் ஜாவா தீவில் பிறந்தார்; கிழக்கு ஜாவாவின் வட்டுகலு அரண்மனையில் (Watugaluh Palace) வளர்ந்தார். கிழக்கு ஜாவானிய ஈசான வம்சத்தின் இளவரசியான குணப்பிரியா தருமபத்தினியின் தந்தை பெயர் மகுடவங்சன் (Makutawangsa). அவர் மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர்.[2][3][4]
குணப்பிரியா தருமபத்தினி, மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன் என்பவரின் (Dharmawangsa) சகோதரியும் ஆவார். பின்னர் அவர் பாலினிய உதயனா வருமதேவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவரின் மனைவியாக பாலி தீவுக்குச் சென்றார். அங்கு மகேந்திரதத்தா என்ற பெயரைப் பெற்றார்.[5]
Remove ads
மாதரம் இராச்சியத்தின் ஆதிக்கம்
அந்தக் கட்டத்தில், மாதரம் இராச்சியம் ஒரு சக்திவாய்ந்த இராச்சியமாக இருந்தது. அத்துடன் பாலி இராச்சியத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டது. மேலும், மேற்கு கலிமந்தானில் ஒரு குடியேற்றத்தையும் நிறுவியது.
சிறீவிஜய பேரரசின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில் மாதர இராச்சியத்தை ஒரு பிராந்தியச் சக்தியாக மாற்றி அமைக்க தருமவங்சன் விரும்பினார். 990-இல் அவர் சிறீவிஜயத்திற்கு எதிராக ஒரு கடற்படை படையெடுப்பைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பலெம்பாங் சிறீவிஜய ஆட்சியைக் கைப்பற்றவும் முயற்சி செய்தார். இருப்பினும் மாதர இராச்சிய படையெடுப்பாளர்களை சிறீவிஜயம் எதிர்த்து நின்று வெற்றி கொண்டது.
மாதரம் வீழ்ச்சி

11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிழக்கு ஜாவானிய மாதரம் இராச்சியத்தின் ஈசான அரச மரபிற்கு ஏற்பட்ட ஒரு பயங்கரமான பேரழிவைப் பற்றி கி.பி 1041-ஆம் ஆண்டு கொல்கத்தா கல்வெட்டு விவரிக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் சைலேந்திரா அரச மரபினரின் மாதரம் இராச்சியத்தின் அடிமை அரசாக உராவாரி (Wurawari) இருந்தது.
சுமாத்திராவில் இருந்த சிறீவிஜய பேரரசு இந்த உராவாரி அரசைக் கிளர்ச்சி செய்யத் தூண்டி விட்டது. அப்போது மாதரம் இராச்சியத்தின் தலைநகரம் கிழக்கு ஜாவா, வத்துகாலு (Watugaluh) எனும் இடத்தில் இருந்தது. வத்துகாலு அரண்மனையில் ஏர்லாங்காவின் திருமண விழாவின் போது கிளர்ச்சி நடந்தது. அந்தக் கிளர்ச்சியில் வத்துகாலு தலைநகரம் நாசமாக்கப்பட்டது.
அத்துடன் அந்தத் தாக்குதலில், மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன்; அவரின் முழு குடும்பத்தினர்; பாலி அரசர் உதயனா வருமதேவன்; மற்றும் குடிமக்களில் பலரும் கொல்லப்பட்டனர். ஏர்லங்கா, அவரின் மெய்க்காப்பாளர் நரோத்தமன் (Narottama) ஆகிய இருவரும், துறவிகள் போல மாற்று உடை அணிந்து காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.[6] அப்போது ஏர்லங்காவிற்கு வயது 16.[7]
உலுவார இராச்சியத்தின் மன்னர் உராவாரி

மாதரம் இராச்சியத்தின் மீதான கிளர்ச்சிக்கு, சிறீவிஜயத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 990-ஆம் ஆண்டு பலெம்பாங்கிற்கு எதிரான தர்மவாங்சாவின் கடற்படைப் படையெடுப்பு நடந்தது. தோல்வியில் முடிந்த அந்த படையெடுப்பிற்குப் பிறகு, மாதரம் இராச்சியத்திடம் இருந்து தங்களுக்கு ஆபத்து அச்சுறுத்தல்கள் வரலாம் என்று சிறீவிஜய அரசர் செரி சூலாமணி வர்மதேவன் (Sri Culamanivarmadeva) எதிர்பார்த்தார்.
எனவே, ஒரு கிளர்ச்சியைத் தூண்டி மாதரம் இராச்சியத்தை அழிக்க சூலாமணி வர்மதேவன் திட்டமிட்டார். இந்தத் திட்டத்திற்காக உலுவார இராச்சியத்தின் மன்னர் உராவாரி (King Wurawari of Lwaram) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாவா சிறீவிஜயத்தின் தோழராக மன்னர் உராவாரி இருந்தார். கிளர்ச்சி நடப்பதற்கு முன்னர் உலுவார இராச்சியம், மாதரம் இராச்சியத்தின் அடிமை மாநிலமாக இருந்தது.
Remove ads
காகுரிப்பான் இராச்சியம் உருவாக்கம்

வானகிரி மலையில் இருந்த துறவி மடத்தில் (Mount Vanagiri Hermitage), 13 ஆண்டுகள் துறவி போல ஏர்லங்கா வாழ்க்கை நடத்தினார். அதன் பிறகு 1019-ஆம் ஆண்டில், முன்னாள் ஈசான வம்சத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டினார்.
மாதரம் இராச்சியத்தினால் முன்பு ஆளப்பட்ட பகுதிகளை ஏர்லங்கா ஒன்றிணைக்கத் தொடங்கினார். தருமவங்சாவின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பகுதிகள் சிதைந்து போய் இருந்தன. ஏர்லங்கா தன் அதிகாரத்தை ஒருங்கிணைத்து ஒரு புதிய இராச்சியத்தை நிறுவினார். சிறீவிஜயாவுடன் சமாதானம் செய்து கொண்டார். ஏர்லங்கா உருவாக்கிய புதிய இராச்சியம், காகுரிப்பான் இராச்சியம் என்று அழைக்கப்பட்டது.
Remove ads
சோழர் படையெடுப்பு
1025-ஆம் ஆண்டில், சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பிற்குப் பின்னர் சிறீவிஜயப் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் விளைவாக, ஏர்லாங்கா காகுரிப்பான் இராச்சியத்தின் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தார். சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பில், காகுரிப்பான் இராச்சியம் பாதிக்கப்படவில்லை.
ஏர்லாங்கா தன் மத சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றவர்; மற்றும் இந்து-பௌத்த மதங்களின் புரவலராகவும் இருந்தார். 1035-ஆம் ஆண்டில் சிறீவிஜயா ஆசிரமம் (Srivijayasrama) என்ற பௌத்த மடத்தைக் கட்டினார். இது அவரின் மனைவியும் அரசியுமான தருமபிரசாத துங்கதேவிக்கு (Dharmaprasadottungadewi) அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மடாலயம் சிறீவிஜய பேரரசின் பெயரைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
கெலஜென் கல்வெட்டு

1037-ஆம் ஆண்டில் காகுரிப்பான் இராச்சியத்தின் தலைநகரம் வாத்தான் மாஸ் (Watan Mas) எனும் இடத்தில் இருந்து காகுரிப்பான் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. ஏர்லங்கா தன்னுடைய மிக விசுவாசமான மக்களுக்கும் நண்பர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
தம்முடைய மெய்க்காப்பாளர் நரோத்தமா என்பவருக்கு, பிரதமர் பதவியை வழங்கினார். மற்றொரு நண்பர் நித்தி என்பவருக்குத் துணை பிரதமராகப் பதவி உயர்வு வழங்கினார். இது கி.பி 1037 தேதியிட்ட கெலஜென் கல்வெட்டில் (Kelagen inscription) பதிவாகி உள்ளது. ஏர்லாங்காவும் வேளாண் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.[8]
இன்றைய ஜோம்பாங் குறுமாநிலத்தில் (Jombang Regency) அமைந்துள்ள ரிங்கின் சப்தா அணையைக் (Wringin Sapta Dam) கட்டினார். அதன் மூலம் ஒரு பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தையும் தொடங்கினார். பிரந்தாஸ் ஆற்றில் (Brantas River) ஓர் அணையைக் கட்டியதன் மூலம், சுற்றியுள்ள நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கினார்; மற்றும் அப்பகுதியில் ஒரு நீரியல் அமைப்பையும் பராமரித்தார்.[8]
Remove ads
வாழ்க்கையின் முடிவு

தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில், ஏர்லங்கா வாரிசு உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டார். அவரின் நேரடி வாரிசான பட்டத்து இளவரசி சங்கராம விஜயா (Sangramawijaya), ஏர்லங்காவுக்குப் பிறகு அரசியாக ஆட்சி செய்வதற்குப் பதிலாக பிக்குணி பௌத்த துறவியாக மாற முடிவு செய்தார்.
பட்டத்து இளவரசி சங்க்ராமவிஜயா, ராணி தர்மபிரசாதோத்துங்கதேவியின் மகள். பட்டத்து இளவரசி சங்கராம விஜயா அரியணையைத் துறந்ததால், அவளுடைய இரண்டு இளைய சகோதரர்கள் அடுத்தடுத்து வாரிசு வரிசையில் இருந்தனர். இருவரும் சமமான வாரிசு உரிமையுள்ளவர்கள்; மற்றும் இருவரும் அரியணையில் அமர்வதற்குப் போட்டியிட்டனர்.
ஏர்லங்காவின் துறவி வாழ்க்கை
1045-ஆம் ஆண்டில், ஏர்லங்கா காகுரிப்பான் இராச்சியத்தை இரண்டு இராச்சியங்களாகப் பிரித்தார். ஏர்லாங்காவின் இரண்டு மகன்களான ஜங்கலா (Janggala) மற்றும் கெடிரி (Kediri) ஆகியோருக்கு அந்த இரண்டு இராச்சியங்களும் வழங்கப்பட்டன. ஏர்லங்காவின் இரண்டு மகன்களும் அரியணைக்குச் சமமான உரிமையுள்ளவர்கள் என்பதால் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காக இராச்சியப் பிரிவினை நடைபெற்றது.
ஏர்லாங்கா 1045-இல் அரியணையைத் துறந்து துறவி வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார். அவரின் புதிய பெயர் ரிசி அஜி பதுக்கா முப்புங்கு சாங் பினாக்கா கத்ரானிங் புவானா (Resi Aji Paduka Mpungku Sang Pinaka Catraning Bhuwana). ஏர்லங்கா 1049-ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். அவரின் அஸ்தி, பெனாங்கோங்கான் மலையின் (Mount Penanggungan) கிழக்குச் சரிவுகளில் உள்ள பெலாகான் தீர்த்தக் கோயிலில் (Belahan Tirtha) கரைக்கப்பட்டது.[9]:146
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads