ஒன்றாரியோ

கனடிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

ஒன்றாரியோ
Remove ads

ஒண்டாரியோ அல்லது ஒன்ராறியோ (Ontario) கிழக்கு-மத்திய கனடாவில் அமைந்துள்ள பத்து மாகாணங்களில் ஒன்றாகும். கனடாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் இதுவாகும்.[3][4] மற்ற மாகாணங்களை விட மக்கள்தொகை வேறுபாட்டில், கிட்டத்தட்ட 40 சதவீதம்[5] அதிக அளவு கனடிய மக்கள் தொகையை இம்மாகாணம் கனடாவிற்குப் பங்களிக்கிறது. பரப்பளவில் இரண்டாவது பெரிய மாகாணமாக விளங்கும் ஒண்டாரியோ வடமேற்கு நிலப்பகுதிகள் மற்றும் நூனவுட்[6] ஆட்சிப்பகுதிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டால் மொத்த பரப்பளவின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. நாட்டின் தலைநகரமான ஒட்டாவா மற்றும் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொரண்டோ ஆகியன ஒண்டாரியோ மாகாணத்திலேயே உள்ளன.[7]

விரைவான உண்மைகள் ஒண்டாரியோ, Confederation ...

ஒண்டாரியோவின் எல்லைகளாக மேற்கில் மானிட்டோபா மாகாணமும், வடக்கில் அட்சன் விரிகுடா மற்றும் யேம்சு விரிகுடாவும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் கியூபெக் மாகாணமும், வடக்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான மினசோட்டா, மிச்சிகன், ஒகையோ, பென்சில்வேனியா மற்றும் நியூ யோர்க் மாநிலம் முதலியனவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவுடனான ஒண்டாரியோவின் 2,700 கி.மீ. (1,678 மை) தொலைவுள்ள எல்லை பெரும்பாலும் உள்நில நீர்நிலைகளாலானது: மேற்கில் காடுகளின் ஏரி எனப்படும் லேக் ஆப் உட்சும், கிழக்கில் முதன்மையான ஆறுகளும் அமெரிக்கப் பேரேரிகள்/செயின்ட் லாரன்சு ஆற்று வடிநீர் அமைப்பும் அமைந்துள்ளன. இந்த முதன்மை ஆறுகள் இரைய்னி ஆறு, பிஜியன் ஆறு, சுப்பீரியர் ஏரி, செயின்ட் மேரீசு ஆறு, ஊரான் ஏரி, செயின்ட் கிளையர் ஆறு, செயின்ட் கிளையர் ஏரி, டெட்ரோயிட் ஆறு, ஈரீ ஏரி, நயாகரா ஆறு, ஒண்டாரியோ ஏரி ஆகியனவாகும்; ஒண்டாரியோவின் கிங்சுட்டன் முதல் கார்ன்வாலுக்கு சிறிதே கிழக்கில் கியூபெக் எல்லை வரை செயின் லாரன்சு ஆற்றோடு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையின் நிலப்பகுதி 1 km (0.6 mi) மட்டுமே ஆகும்; இவை மின்னசோட்டா எல்லையில் உள்ள ஐய்ட்டு ஆப் போர்ட்டேச் உள்ளிட்ட நாவாய் செல் நிலப்பகுதிகளை அடக்கியவை.[8]

ஒண்டாரியோ சிலநேரங்களில் கருத்துருக்களின்படி வடக்கு ஒண்டாரியோ எனவும் தெற்கு ஒண்டாரியோ எனவும் இரு வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மக்கள்தொகையும் விளைவிற்குரிய நிலமும் தெற்கில் உள்ளது. மாறாக, வடக்கு ஒண்டாரியோவில் மக்களடர்த்தி குறைவாக உள்ளது; அடர்ந காடுகளையும் கடுமையான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது.

Remove ads

சொற்பிறப்பியல்

இந்த மாகாணத்திற்கு ஒண்டாரியோ ஏரியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க/கனடிய தொல்மொழியான வயான்டோட் மொழியில் ஒண்டாரியோ என்பது பெரும் ஏரி என்று பொருள்படும்.[9] மற்றுமொரு உள்ளக மொழியில் "அழகிய நீர்நிலை" எனப் பொருள்படும் இசுக்காண்டரியோவிலிருந்தும் வந்திருக்கலாம்.[10] ஒண்டாரியோ மாகாணத்தில் ஏறத்தாழ 250,000 நன்னீர் ஏரிகள் உள்ளன.[11]

புவியியல்

Thumb
அல்கோங்குயின் மாகாணப் பூங்கா, கேச் ஏரி - 2006 இலையுதிர்காலம்.
Thumb
நயாகரா அருவி

ஒண்டாரியோ மாகாணத்தை மூன்று முதன்மையான புவியியல் வட்டாரங்களாகப் பிரிக்கலாம்:

  • மக்களடர்த்திக் குறைந்த, வடமேற்கு, மத்தியப் பகுதிகளிலுள்ள தீப்பாறைகளாலான கனடியக் கேடயம் ஒண்டாரியோவின் பாதி நிலப்பகுதியை அடக்கியுள்ளது. இப்பகுதி வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாதிருப்பினும் ஏராளமான கனிமங்களைக் கொண்டுள்ளது. இங்கு மத்திய, நடுமேற்கு கேடயக் காடுகள் அடர்ந்துள்ளன. பல ஏரிகளும் ஆறுகளும் அமைந்துள்ளன. வடக்கு ஒண்டாரியோ இரு உள்வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன: வடமேற்கு ஒண்டாரியோ, வடகிழக்கு ஒண்டாரியோ.
  • வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள பெரிதும் மக்கள் வாழாத அட்சன் விரிகுடா தாழ்நிலங்கள்; இப்பகுதி சதுப்பு நிலமாகவும் காடுகள் குறைவாகவும் காணப்படுகின்றது.
  • தெற்கு ஒண்டாரியோ மேலும் நான்கு உள்வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றது: நடுவண் ஒண்டாரியோ (இது மாகாணத்தின் புவியியல் நடுமையாக இல்லாத போதும்), கிழக்கு ஒண்டாரியோ, தங்கக் குதிரைலாடம் மற்றும் தென்மேற்கு ஒண்டாரியோ.

மலைப்பாங்கான நிலப்பகுதிகள் இல்லாதபோதும் மேட்டுநிலங்கள் பெரும் பரப்பில் உள்ளன; குறிப்பாக வடமேற்கிலிருந்து தென்கிழக்காகச் செல்லும் கேனடியக் கேடயப் பகுதியில் காணலாம். மிகவும் உயரமான இடமாக இழ்சுபட்டினா முகடு உள்ளது; வடக்கு ஒண்டாரியோவிலுள்ள இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து 693 மீட்டர்கள் (2,274 அடி) ஆகும். தெற்கில் டன்டால்க் மேட்டுநிலத்தில் நீலமலைகளில் 500 m (1,640.42 அடி) உயரம் தாண்டப்படுகின்றது.

மாகாணத்தின் பெரும்பாலான தென்மேற்கு பகுதியில் கரோலினியக் காடுகள் மண்டலம் அமைந்துள்ளது. பேரேரி-செயின்ட் லாரன்சு பள்ளத்தாக்கில் கிழக்கு பேரேரி தாழ்நிலக் காடுகள் இருந்தன; இவை அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாகவும் தொழிலகங்கள், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஒண்டாரியோவின் சிறப்புமிகு புவியியல் அடையாளமாக நயாகரா அருவி உள்ளது. அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து வடமேற்கிலுள்ள தண்டர் விரிகுடா வரை நீர்ப்போக்குவரத்துச் செல்ல செயின்ட் லாரன்சு கடல்வழி உதவுகின்றது. வடக்கு ஒண்டாரியோ மாகாணத்தின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 87 விழுக்காடு நிலப்பகுதியை அடக்கியுள்ளது; மாறாக தெற்கு ஒண்டாரியோவில 94 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.

Remove ads

மக்கள் தொகையியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

கனடாவின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 908,607.67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்றாரியோவின் மக்கள் தொகை 12,851,821 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி 14.1/km2 (36.6/sq mi) ஆகவுள்ளது.

ஒன்றாரியோ மக்கள் தொகையில் ஆங்கிலேய கனடியர்கள் பெரும்பான்மையினராகவும், ஐரோப்பியக் கனடியர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்கள் 5% உள்ளனர். ஒன்றாரியோ மக்களில் கரிபியன் தீவினர், லத்தீன் அமெரிக்கர்கள், ஆசிய மக்கள் மற்றும் ஆப்பிரிக்க மக்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் குடியேறியுள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் 25.9% மக்கள் சிறுபான்னமையினராகவும், மண்னின் மைந்தர்களான பழங்குடி மக்கள் 2.4% அளவில் உள்ளனர். பிற மக்களை விட பழங்குடி மக்களின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருகிறது.[12]

சமயங்கள்

கத்தோலிக்க திருச்சபையினர் 31.4% ஆகவும்; கனடா ஒன்றிய திருச்சபையினர் 7.5% ஆகவும்; ஆங்கிலிக்கன் திருச்சபையினர் 6.1% ஆகவும்; எச்சமயத்தையும் சாராதவர்கள் 23.1% ஆக உள்ளனர்.[13]

பெரும்பான்மையினர் பின்பற்றும் சமயங்கள், ஆண்டு 2011:

மேலதிகத் தகவல்கள் சமயம், மக்கள் ...

மொழிகள்

ஒன்றாரியோவின் முதன்மை மொழி ஆங்கிலம் ஆகும். இதுவே ஒன்றாரியோ மாகாணத்தின் அலுவல் மொழியாகும்.[14] ஆங்கில மொழி 70% மக்களால் பேசப்படுகிறது. ஒன்றாரியோவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் மற்றும் தெற்குப் பகுதியில் அடர்த்தியாக வாழும் மக்கள் பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். ஒன்றாரியோவின் மொத்த மக்கள் தொகையில் 4% விழுக்காட்டினர் பிரஞ்சு மொழியை தாய் மொழியாகவும்,[15] மற்றும் 11% விழுக்காட்டினர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி என இரு மொழிகள் பேசுகின்றனர்.[15] மேலும் ஒன்றாரியோவில் குடியேறியவர்களால் அரபு, ஜெர்மானியம், ஒல்லாந்தியம், இத்தாலியம், எசுபானியம், போத்துகீயம், சீனம் இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது.[16]

Remove ads

போக்குவரத்து வசதிகள்

சாலைப் போக்குவரத்து

400 எண் வரிசைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், ஒன்றாரியோ ‎மாகாணத்தின் தென் பகுதியின் பிரபலமான சாலைகள் ஆகும். இவைகள் அருகில் உள்ள கனடாவின் மாகாணங்களையும், ஐக்கிய அமெரிக்காவின் பல எல்லைப்புற நகரங்களை இணைக்கிறது.[17][18] ஒன்றாரியோவின் பிற மாகாண நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் ஒன்றாரியோ மாகாணப் பகுதிகளை இணைக்கிறது.

நீர் வழிப் போக்குவரத்து

மாகாணத்தின் தென் பகுதியையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் செயிண்ட் லாரன்சு கடல் நீர் போக்குவரத்து சரக்குக் கப்பல்கள், குறிப்பாக இரும்புக் கனிமங்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.

தொடருந்துகள்

பயணிகளைச் ஏற்றிச் செல்லும் தொடருந்துகள், தெற்கு ஒன்றாரியோவிலிருந்து, மேற்கின் பசிபிக் கடற்கரையில் உள்ள வான்கூவர் நகரம் வரை இணைக்கிறது. மேலும் கியூபெக், ஆமில்டன், ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியால் போன்ற நகரங்களை தொடருந்துகள் இணைக்கின்றன.

Thumb
Ontario Northland freight train crossing the Missinaibi River at Mattice-Val Côté in Northern Ontario

வானூர்தி போக்குவரத்து

ஒன்றாரியோ மாகாணத் தலைநகரான ரொறன்ரோவில் உள்ள ரொறன்ரோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை[19] 2015ஆம் ஆண்டில் 41 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர்.[20]

ஒன்றாரியோ மாகாணத்தின் உள்ளூர் பயணத்திற்கு சிறு விமானச் சேவைகள் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads