கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்map
Remove ads

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், (ஆங்கிலம்: Kuala Lumpur International Airport (KLIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur); சீனம்: 吉隆坡国际机场) என்பது மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கே.எல்.ஐ.ஏ. (KLIA) விமான நிலையம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் வானூர்தி நிலையம்Kuala Lumpur International Airport, சுருக்கமான விபரம் ...

20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் புகழப்படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.

Remove ads

பொது

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து; கேஎல்ஐஏ போக்குவரத்து வழித்தடங்களின் சேவையின் வழி, இந்த வானூர்தி நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 1994-ஆம் ஆண்டில் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் உருவகம் பெற்றன. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான வடிவமைப்பாளர் டாக்டர் கிசோ குரோகாவா (Kisho Kurokawa) என்பவர் விமான நிலைய வடிவமைப்பைச் செய்தார்.[2]

Remove ads

வரலாறு

பின்புலம்

Thumb
வானூர்தி நிலையத்தின் தலை முனையம்

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.[3]

உலகிலேயே, அதிகமான பயணிகள் வந்து போகும் விமான நிலையங்களில், கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையம் 14-ஆவது இடத்தையும், ஆசியாவில் 5-ஆவது இடத்தையும் வகிக்கின்றது. 2010ஆம் ஆண்டில், அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுவதில், உலகில் 29-ஆவது இடத்தையும் பெறுகின்றது.[4]

பராமரிப்பு

Thumb
சோதனைச் சாவடிகள்

மலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports MAHB) நிறுவனம் இந்த வானூர்தி நிலையத்தைப் பராமரித்து வருகிறது. மலேசியா எயர்லைன்சு, மாஸ் கார்கோ, ஏர்ஏசியா, எயர் ஏசியா எக்சு, மலின்டோ ஏர் போன்ற விமானச் சேவைகளின் தலைத் தளமாகவும் விளங்குகிறது.

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா 1993 ஜூன் முதல் தேதி நடைபெற்றது. அதற்கு முன், அப்போது புழக்கத்தில் இருந்த சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் எனும் சுபாங் வானூர்தி நிலையம், எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பது என அரசாங்கம் முடிவு செய்தது.

Remove ads

பொது

பல்லூடகப் பெருவழி

தற்சமயம் சுபாங் வானூர்தி நிலையம், சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவின் நான்காவது பிரதமராக இருந்த மகாதீர் பின் முகமது, புதிய விமான நிலையத்திற்கு உருவகம் கொடுத்தார்.

மலேசியாவின் Multimedia Super Corridor [5] எனும் மலேசிய பல்லூடகப் பெருவழித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தக் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய நிர்மாணிப்பு ஆகும்.

100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் ஆற்றல்

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பரப்பளவு 100 சதுர கி.மீ. உலகிலேயே ஆகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட வானூர்தி நிலையம் எனும் சிறப்பைப் பெறுகின்றது. இந்த நிலையத்தில் ஐந்து ஓடு பாதைகள்; வானூர்திகள் நிற்பதற்கு இரு முனையங்கள் உள்ளன.

முதல் கட்டமாக, ஆண்டு ஒன்றுக்கு 25 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் கொள் ஆற்றல் கொண்டதாகவும், ஒரே சமயத்தில் 80 வானூர்திகளை நிறுத்தி வைக்கும் இட வசதியும் உள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டது.[6]

இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு 2012 ஆம் ஆண்டில் தொடங்கி 2013இல் முடிவடையும்.[7] மூன்றாம் கட்டத்தில் ஓர் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் திறன் கொண்டதாக, இந்த வானூர்தி நிலையத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.[8]

பிரும்மாண்டமான திறப்பு விழா

Thumb
வான் துணைக்கோள் கட்டடம்
Thumb
வான் தொடர் வண்டி நிலையம்

மலேசியாவின் 10-ஆவது பேரரசர் மாட்சிமை தங்கிய துங்கு ஜாபார் துங்கு அப்துல் ரகுமான் அவர்கள், கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தை 1998 ஜூன் 27-ஆம் தேதி இரவு 8.30க்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

உலக நாடுகளிலிருந்து 1500 பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். திறப்பு விழா நேரத்தில் அது ஒரு தேவதைகளின் கூடாரமாகக் காட்சி அளித்தது. 15 கி.மீ. தொலைவில் இருந்தும் அந்த வண்ண ஒளி வேலைபாடுகள் தெரிந்தன.

இந்த வானூர்தி நிலையத்தைக் கட்டுவதற்கு 25,000 வேலையாட்கள் 24 மணி நேரமும் ஏழு ஆண்டுகளுக்கு அல்லும் பகலுமாக வேலைகள் செய்தனர். ஆங்காங் அனைத்துலக வானூர்தி நிலையம் திறக்கப் படுவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த கோலாலம்பூர் வானூர்தி நிலையம் திறக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு 1998 சூன் 30-ஆம் தேதி 1998 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகளும் கோலாலம்பூரில் தொடங்கின.

முதல் வானூர்தியாக குவாந்தானில் இருந்து, மலேசியா எயர்லைன்சு MH1263 விமானம் 7.10க்கு தரை இறங்கியது. அனைத்துலக வானூர்திச் சேவையில் மலேசிய ஏர்லைன்ஸ் MH188 வானூர்தி 7.30க்கு மாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இருந்து வந்தது. இரவு 9.00 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் MH84 வானூர்தி பெய்ஜிங் அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது..

Remove ads

வானூர்தி நிலையப் பிரச்னைகள்

வானூர்தி நிலையம் திறக்கப்பட்டதும், எதிர்பாராமல் சில செயலாக்கப் பிரச்னைகள் ஏற்பட்டன. வான்பாலம், நுழைவழி ஒதுக்கீட்டுத் திட்டம் போன்ற சில அடிப்படையான முறைமைகள் செயலிழந்து போயின. பயணப்பைகளைக் கையாளும் முறையும் தாமதமாகியது. அதனால், பயணிகள் நீண்ட நேரம் வரிசைப் பிடித்து நின்றனர்.[9] பயணிகள் சிலரின் பைகளும் காணாமல் போயின. சிலர் ஐந்து மணி நேரம் வரை காத்து நின்றனர்[10]

பல பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட்டன. ஆனால், பயணப்பைகளைக் கையாளும் முறை மட்டும் பல ஆண்டுகளுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது. இறுதியில் 2007ஆம் ஆண்டு அந்த முறை, முற்றாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர், அந்தப் பிரச்னையும் ஒரு தீர்வு பெற்றது.

தென் ஆசியாவில் நிதி நெருக்கடி

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையம் திறக்கப்பட்ட காலகட்டத்தில், தென் ஆசியாவில் நிதி நெருக்கடிகள் தலைதூக்கி நின்றன. அத்துடன் ‘சார்ஸ்’ நோய், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய், உலகம் முழுமையும் பரவி வந்த பன்றிக்காய்ச்சல் நோய் போன்றவை வானூர்தி நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவிற்கு குறைத்தன.[11] அதனால் பொருளியல் இடர்பாடுகள் ஏற்பட்டன.

அனைத்துலக வானூர்தி நிறுவனங்களான ஆல் நிப்போன் ஏர்வேய்ஸ், பிரித்தானிய ஏர்வேய்ஸ், லுப்த்ஹான்சா, நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போன்றவை தங்களின் பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிக்க, கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு பயணிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.[12]

Remove ads

பயணிகள் பதிவுச் சாவடிகள்

Thumb
வான் தொடர்வண்டி

உலகின் மிகப் பெரிய வானூர்திகளான போயிங் 747, போயிங் 747 LCF, 640 டன்கள் எடை கொண்ட Antonov An-225 Mriya, ஏர்பஸ் A380 போன்றவை தரை இறங்குவதற்கான வசதிகள் இந்த வானூர்தி நிலையத்தில் உள்ளன. இதைத்தவிர, வானூர்தி நிலையத்தின் உள்ளே 216 பயணிகள் பதிவுச் சாவடிகள் 24 மணி நேரச் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த வானூர்தி நிலையத்தின் வருமானத்தில் 65 விழுக்காட்டை, மலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports MAHB, Sepang Sdn Bhd) நிறுவனம் பெற்றுக் கொள்கிறது.

வானூர்தி நிலையத்தில் ஒரு காடு

அனைத்துலகப் பயணங்களுக்காக 143,404 சதுர மீட்டர்கள் (1,543,590 சதுர அடிகள்) பரப்பளவில் ஒரு துணைக் கோள் கட்டடமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக் கோள் கட்டடத்திற்கு, பயணிகள் வான்தொடர்வண்டி மூலமாக வர வேண்டும். இங்கு பல்வகையான தீர்வையில்லாக் கடைகள் உள்ளன. பயணிகளின் வசதிகளுக்காக, குழந்தைகள் விளையாடுவதற்கான அரங்குகள், திரைப்பட அரங்குகள், உடல்பயிற்சி நிலையங்கள் போன்றவையும் உள்ளன. இலவசமாக இணையச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

வானூர்தி நிலையத்தின் மையத்தில் ஓர் இயற்கையான மழைக்காடு அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பூக்கும் தாவரங்கள், பச்சைத் தாவரங்கள், மெலிதான மரங்கள் இந்த மழைக்காட்டில் வளர்க்கப்படுகின்றன. அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இந்தக் காட்டில் பலவகையான வண்ணத்துப்பூச்சிகள், தட்டான் பூச்சிகள், பறவைகள், சிறிய வகையான ஊர்வனங்களையும் பார்க்கலாம்.

2012ஆம் ஆண்டில், ஓர் அற்புதமான வன மேடைப் பாதையும் காட்டின் நடுவில் அமைக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும், இந்த மாதிரியான வன மேடைப் பாதை அமைக்கப்படவில்லை. விமான நிலையத்தில் ஒரு காடு என்று இந்த இடம் புகழாரம் செய்யப்படுகின்றது.

பொது

இந்த வானூர்தி நிலையத்தில், ஒரே சமயத்தில் மூன்று வானூர்திகளைத் தரை இறக்கச் செய்யும் மிக நவீனமான கட்டமைப்புகள் இருந்தாலும், அந்த அளவிற்கு பயணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயர்ந்து நிலைக்குமா அல்லது அதன் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே ஒரு சிலரின் கேள்விகளாக அமைகின்றன.

உலகில் வேறு எந்த வானூர்தி நிலையத்திலும் அவ்வாறான வசதிகள் இல்லை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். அதிகமான பயணிகளின் வருகையால் தத்தளித்து நிற்கும் லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், சாங்கி வானூர்தி நிலையங்களில் கூட அவ்வாறான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இருப்பினும், கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் மிக நவீனமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் ஒரு வெள்ளை யானையாக முடங்கிப் போகக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்தாகும்.[13]

Remove ads

மலிவு விலை வானூர்திச் சேவை

Thumb
வான்துணைக்கோள் பாலம்

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில், மலிவு விலை வானூர்திச் சேவைக்காக Low cost carrier terminal (LCCT) எனும் ஒரு முனையம் 2006இல் திறக்கப்பட்டது. மலிவு விலை வானூர்தித் தளம் உருவாவதற்கு முன்னர், அந்த இடம் சரக்குகளைப் பட்டுவாடா செய்யும் தளமாக இருந்தது.[14] 35,290 சதுர மீட்டர் பரப்பளவில் அந்தத் தளம் உருவாக்கப்பட்டது.

வழக்கமான வானூர்திச் சேவைகளில் வழங்கப்படும் சில சிறப்புச் சலுகைகள் மலிவு விலை வானூர்திச் சேவையில் வழங்கப்படுவது இல்லை. மலிவு விலை வானூர்திச் சேவைக்காக ஒரு புதிய துணை நிலையமே கட்டப்பட்டு 2013 சூன் மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்டது.[15]

இப்போது எல்லோரும் பறக்கலாம்

மலிவு விலை வானூர்திச் சேவையை மலேசியாவில் அறிமுகம் செய்தவர் டோனி பெர்னாண்டஸ் எனும் மலேசிய இந்தியர். இவர் ஏர் ஏசியா எனும் மலிவு விலை வானூர்திச் சேவையையும் உருவாக்கியவர் ஆகும். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் மகுட வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.[16]

ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை வானூர்திச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றார். இப்போது 92 ஏர்பஸ் வானூர்திகளுக்குச் சொந்தக்காரர்.[17] மலேசியாவில் ஏறக்குறைய 9200 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.[18] டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

Remove ads

A380 திறம் உயர்த்தல்

ஏர்பஸ் A380 ரக விமானங்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக 135 மில்லியன் ரிங்கிட் (39 மில்லியன் டாலர்கள்) செலவு செய்யப்பட்டு திறம் உயர்த்தப்பட்டது. அதாவது விமான நிலையத்தின் தரத்தில் ஏற்றம் தருதல் என்பதாகும். 2006 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. 2007 மே மாதம் 28ஆம் தேதி வேலைகள் முடிவடைந்தன.

இரு ஓடுபாதைகளின் தோள்பட்டைகள் 15 மீட்டர்களுக்கு கூடுதலாக அகலப்படுத்தப்பட்டன. கூடுதலாக வான்பாலங்களும் கட்டப்பட்டன. 2012 ஜனவரி முதல் தேதி ஏர் எமிரேட்ஸ் A380 ரக விமானம் முதன்முறையாகத் தரை இறங்கியது. 2012 ஜூலை மாதத்தில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் A380 ரக விமானங்களும் அந்த ஓடு பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

Remove ads

விபத்துகளும் வேதனைகளும்

Thumb
பயணப்பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம்
  • 2001 – சவூதி அரேபியா நாட்டின் சவூடியா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம், பறப்பதற்கு முன்னால் விமான நிலையத்தின் மழைநீர்க் கால்வாயில் வழுக்கிப் போய் விழுந்தது. அதில் இருந்த ஆறு ஊழியர்களுக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
  • 14 ஜுலை 2007 – ஒரு வான்பாலம் திடீரென்று கீழ்ப்பாகமாகச் சரிந்தது. பெய்ஜிங் நகருக்கு புறப்படவிருந்த A330 ரக மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு சேதம் அடைந்தது. அந்த வான்பாலத்தை அப்போது யாரும் பயன்படுத்தவில்லை. உடல் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.[19]
  • 15 அக்டோபர் 2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையைச் சேர்ந்த SQ119 விமானத்தின் முன்பக்கச் சக்கரப் பகுதியில் ஒரு பாலஸ்தீனக் குடிமகன் மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் மூக்குச் சக்கரப் பகுதியின் 2.4 மீட்டர் உயரத்தில் இருந்து அந்தப் பாலஸ்தீனக் குடிமகன் கீழே விழுந்தான். பல ஆயிரம் அடிகள் உயரத்தில் விமானம் பறக்கும் போது நிலவும் கடும் குளிர், குறைவான காற்று போன்றவற்றை எல்லாம் எதிர்கொண்டு, அந்தப் பாலஸ்தீனர் தப்பிப் பிழைத்து ஓர் அதிசயம். பின்னர், சிங்கப்பூர் அதிகாரிகள் அவனைக் கைது செய்தனர். பாதுகாப்பு அத்துமீறலைப் பற்றி, இதுவரையிலும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அதிகாரிகளினால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. சிங்கப்பூர் அரசாங்கம் அவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுதலை செய்தது. அதே போல மலேசிய அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்தது.[20][21]
  • 9 ஏப்ரல் 2008 – ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், மூன்று நிமிட நேரத்தில் 3.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இரவு 7.30க்கு 8வது வெளி வாயிற்கதவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பணமாற்றத் தொழில் செய்யும் இருவர், இரு பாதுகாவலர்களுடன் வெளி வாயிற்கதவின் அருகே வந்த போது அந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள். உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.[22]
  • 9 ஜனவரி 2009 – மலிவுவிலை விமானச் சேவைத் தளத்தில் தீப்பிடித்துக் கொண்டது. அதனால் இரண்டு மணி நேரம் அந்தத் தளம் மூடப்பட்டது. 20 விமான பயனங்கள் தாமதமாகின. கட்டுமானப் பகுதியில் இரும்பு பற்றுவைப்பு செய்யும் போது அந்தச் சம்பவம் நடைபெற்றது.The fire was caused by a welding spark in the construction area of the terminal.[23]
  • 3 மார்ச் 2011 – KLIA2 கட்டுமானப் பகுதியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் 56 விமானப் பயணங்கள் தாமதமாகின.[24]
Remove ads

தொடர் காட்சி

Thumb
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்

புள்ளியியல்

பன்னாட்டுச் சேவைகள்

மேலதிகத் தகவல்கள் நிலை, இடம் ...

உள்நாட்டு வானூர்திச் சேவைகள்

|

மேலதிகத் தகவல்கள் நிலை, இடம் ...

வானூர்தி நிலைய புள்ளி விவரங்கள்

|

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பயணிகள் ...

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads