தமிழ் எழுத்து முறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் அரிச்சுவடி (Tamil script) என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்தவையல்ல.
Remove ads
எழுத்துகள்
தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12 x 18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52-உம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
மனித உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாகும் இதயம் இடப்புறம் இருப்பதனால் தமிழ்மொழியின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஒலி வடிவங்களைக் குறிக்கும் வரிவடிவத் தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன.
Remove ads
தமிழ் எழுத்துகளின் வரலாறு

தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது.[1] தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல கூறுகளில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்க காலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.
2-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர்த் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கி.பி. 5-ஆம் 6-ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன.
தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8-ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11-ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது.
Remove ads
தமிழ் எழுத்துகள்






இடது : ' தம்பிரான் வணக்கம்' (Doctrina Christum), தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். ( 20 அக்டோபர் 1578) . வலது : தமிழில் பெயர்க்கப்பட்டு, 1715 இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியம். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (1968) விழா மலரில் உள்ளது.
உயிரெழுத்துகள் (12)
உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் "நெடில்கள்" என்றும் குறிக்கப்படுகின்றன. ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புகளைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடண்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப்பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் (இடப்புறச் சாய்வுக் கீற்று) சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மெய்யெழுத்துகள் (18)
பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது.
உயிர்மெய்யெழுத்துகள் (216)
உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17-ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன:
- மேல் விலங்கு பெறுதல்
- கீழ் விலங்கு பெறுதல்
- கோடு பெறுதல்
- புள்ளி பெறுதல்
- கோடும் புள்ளியும் பெறுதல்
தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன.
- மெய்கள் இகரத்துடனும், ஈகாரத்துடனும் சேரும்போது மேல் விலங்கு பெறுகின்றன. இதைத் தற்காலத்து "விசிறி"யை ஒத்தது. எடுத்துக்காட்டாக, கி (மேல் விலங்கு), கீ (மேல் விலங்குச் சுழி) என்பன இவ்வாறு விசிறி பெற்ற எழுத்துகள்.
- உகரத்துடனும், ஊகாரத்துடனும் சேரும்போது மெய்கள் கீழ் விலங்கு பெறுகின்றன. கு (கீழ் விலங்கு), கூ (பின் வளை கீற்று) போன்றவை கீழ் விலங்கு பெற்ற மெய்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
- "கோடு" என்பது தற்காலத்து ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றை ஒத்தது. எகர, ஏகார உயிர்மெய்கள் இவ்வாறானவை. கெ, கே என்னும் மெய்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
- ஆகாரத்தோடு சேர்ந்த மெய்கள் புள்ளி பெற்றுத் திரிபடைவதற்கு எடுத்துக்காட்டுகள். தற்காலத்தில் இது கா, சா போன்றவற்றை ஒத்தது.
- ஒகர, ஓகார மெய்கள் கோடும், புள்ளியும் பெறுவன. தற்கால எழுத்துகளில் கொ, கோ போன்றவற்றை இவற்றுடன் ஒப்பிடலாம்.
தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம்.
மேலும் உயிர்மெய் எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்த பிற்கால இலக்கண அறிஞர்கள்,
- துணைக்கால் (கா, சா, தா),
- கொம்புக்கால் இணை (ஊ, கெள, செள),
- மடக்கு ஏறுகீற்றுக் கால் (ணூ,தூ,நூ),
- ஒற்றைக்கொம்பு (கெ, நெ, செ),
- இரட்டைக்கொம்பு (கே, நே, சே),
- இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு (கை, சை, நை),
- இறங்கு கீற்று (பு, சு, வு)
- மடக்கு ஏறு கீற்று (ணு, து, நு),
- பின்வளைகீற்று (கூ),
- மேல்விலங்கு (கி, தி, பி),
- கீழ்விலங்கு (மு, ரு, கு)
- இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி (சூ, பூ),
- மேல்விலங்குச் சுழி (கீ, தீ, ரீ),
- கீழ்விலங்குச் சுழி (மூ, ரூ),
என எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களுக்குரிய காரணப் பெயரை விளக்கமாகக் குறிப்பிட்டனர்.
கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.
ஆய்த எழுத்து (1)
அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து.
தமிழில் கிரந்த எழுத்துகள்
கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமசுகிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஓர் இலிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.
தமிழில் சமசுகிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
Remove ads
தமிழ் எழுதும் முறைமை
தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலே பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.
தமிழ் எண்கள்
தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, உருவா, இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
தமிழ் எழுத்துகளும் கணினியும்
தமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது.
தமிழ்[1] Unicode.org chart (PDF) | ||||||||||||||||
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | A | B | C | D | E | F | |
U+0B8x | ஂ | ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ||||||
U+0B9x | ஐ | ஒ | ஓ | ஔ | க | ங | ச | ஜ | ஞ | ட | ||||||
U+0BAx | ண | த | ந | ன | ப | ம | ய | |||||||||
U+0BBx | ர | ற | ல | ள | ழ | வ | ஶ | ஷ | ஸ | ஹ | ா | ி | ||||
U+0BCx | ீ | ு | ூ | ெ | ே | ை | ொ | ோ | ௌ | ் | ||||||
U+0BDx | ௐ | ௗ | ||||||||||||||
U+0BEx | ௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ||||||
U+0BFx | ௰ | ௱ | ௲ | ௳ | ௴ | ௵ | ௶ | ௷ | ௸ | ௹ | ௺ | |||||
Notes
|
Remove ads
மேலும் காண்க
- தமிழ் தட்டச்சு
- பண்டைத் தமிழர் அளவை முறைகள்
- கிரந்த எழுத்துமுறை
- பாரதி புடையெழுத்து
- தமிழ் எழுத்துகள் (தமிழ் விக்கி நூல்)
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads