தென் அமெரிக்கா

கண்டம் From Wikipedia, the free encyclopedia

தென் அமெரிக்கா
Remove ads

தென் அமெரிக்கா ஒரு மேற்கு அரைக்கோளத்தில் பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள கண்டம். இக்கண்டத்தின் சிறுபகுதி வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களின் துணைக்கண்டம் என்றும் கருதப்படுகிறது.[2] மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இவ்வாறு தெற்கு அரைக்கோளத்தில் அமைந்த பிற பெரு நிலப்பகுதிகள் ஆகும்.

விரைவான உண்மைகள் பரப்பளவு, மக்கள்தொகை ...
Thumb
தென் அமெரிக்காவின் அமைவிடம்
Thumb
தென் அமெரிக்கா நில அமைப்பு

தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது.

இந்தக் கண்டத்தில் இறைமையுள்ள 12 நாடுகளும் – அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பரகுவை, பெரு, சுரிநாம், உருகுவை, மற்றும் வெனிசுவேலா – இரண்டு இறைமையற்ற பகுதிகளும் – பிரெஞ்சு கயானா, பிரான்சின் கடல்கடந்த ஆள்புலம், போக்லாந்து தீவுகள், பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம் – உள்ளன. இவற்றைத் தவிர, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நெதர்லாந்தின் ஏபிசி தீவுகளும் தென் அமெரிக்காவின் அங்கமாகக் கருதப்படுகின்றன.

இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.

பெரும்பாலான மக்கள் மேற்கு அல்லது கிழக்கு கடற்கரையோரங்களில் வசிக்கின்றனர்; உட்பகுதிகளிலும் தென்கோடியிலும் மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியிலும் அந்தீசு மலைத்தொடர் அமைந்துள்ளது; இதற்கு எதிராக, கிழக்குப் பகுதி மேட்டுப்பகுதிகளுடன் பரந்த ஆற்றுப் படுகைகளையும் கொண்டுள்ளது. இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக அமேசான், பரனா மற்றும் ஓரினோகோ உள்ளன. கண்டத்தின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது.

இந்தக் கண்டத்தில் பலதரப்பட்ட பண்பாட்டு, இனக் குழு மக்கள் வாழ்கின்றனர்; தென்னமெரிக்காவின் முதற்குடிகளைத் தவிர ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்ற அரசுகளின் தாக்கத்தால் பெரும்பாலான தென் அமெரிக்கர்கள் இலத்தீன் மொழிவழி தோன்றிய போர்த்துகேயம் அல்லது எசுப்பானியம் பேசுகின்றனர். இதனால், தென் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்க சமூகங்களும் நாடுகளும் மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை பின்பற்றுகின்றனர்.

N0-30, W60-90 N0-30, W30-60
S0-30, W60-90 S0-30, W30-60
S30-60, W60-90 S30-60, W30-60
30 degrees, 1800x1800
Remove ads

வரலாறு

Thumb
அர்கெந்தீனாவில் காணப்படும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குவா தெ லாசு மனோசு அல்லது கரங்களின் குகை

ஒருநிலக் கொள்கை காலத்தில் தென் அமெரிக்கா ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்து பின்னர் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனவே தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒரேபோன்ற தொல்லுயிர் புதைப்படிவுகளையும் பாறை அடுக்குகளையும் காணலாம்.

தென் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய உருசியாவிலிருந்து பெரிங் பனிப்பாலம் (தற்போது பெரிங் நீரிணை) மூலமாகவோ அமைதிப் பெருங்கடலின் தென்பகுதி மூலமாகவோ நாடோடிகள் குடியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்கள் வட அமெரிக்கா வழியாக இங்கு வந்தடைந்திருக்கலாம். சில தொல்லியல் ஆதாரங்கள் இந்த கொள்கையுடன் மாறுபடுகின்றன.

மனித வாழ்விற்கான முதல் ஆதாரங்கள் ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுடையனவாக கிடைத்துள்ளன; அமேசான் படுகையில் உணவுக்காக பரங்கிக்காய்கள், பச்சை மிளகாய்கள், பீன் அவரைகள் பயரிடப்பட்டன. மேலும் மண்குட சான்றுகள் கிமு 2000இல் மரவள்ளி பயிரிடப்பட்டதையும் அறிவிக்கின்றன.[3] இந்தக் காலகட்டத்தில் அந்தீசு மலைத்தொடர் முழுமையும் வேளாண் மக்கள் குடியேறியிருந்தனர். கடலோரத்தில் மீன் பிடித்தல் முதன்மைத் தொழிலாகவும் உணவாகவும் இருந்தது. இக்காலத்தில் பாசன அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.[3]

தென் அமெரிக்க பண்பாட்டில் கி.மு 3500இல் இருந்தே இலாமாக்கள், விக்குன்யாக்கள், குவானக்கோக்கள், அற்பாக்காக்கள் வீட்டுப்பணிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் இரைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் மட்டுமன்றி பொருள் போக்குவரத்திற்கும் அவை பயன்பட்டன.[3]

கொலம்பசுக்கு முந்தைய நாகரிகங்கள்

Thumb
மாச்சு பிச்சு வில் இன்கா நாகரிகத்தின் இடிபாடுகள்

பெருவின் கடலோரப்பகுதியின் மையத்தில் அமைந்திருந்த நார்டெ சிக்கோ நாகரிகமே மிகத் தொன்மையாக அறியப்படும் தென்னமெரிக்க நாகரிகமாகும். இதன் கட்டிடங்கள் பண்டைய எகிப்தின் பிரமிடுகளின் காலத்தை ஒத்தனவாக உள்ளன. இதனை அடுத்து கி.மு 900களில் சவின் நாகரிகம் துவங்கியது. தற்கால பெருவில் 3,177 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சவின் டெ யுவண்டர் என்ற இடத்தில் இந்த நாகரிகத்தின் எச்சங்களை காண முடிகிறது. சவின் நாகரிகம் கி.மு 900இலிருந்து கி.மு 300 வரை தழைத்திருந்தது.

கி.பி முதலாம் ஆயிரமாண்டு துவக்கத்தில், மொச்சே (கி.மு 100 – கி.பி 700, பெருவின் வட கடலோரத்தில்), பரகாசு, நாசுகா (கி.மு 400 – கி.பி 800, பெரு) பண்பாடுகள் தழைத்தோங்கின; மையப்படுத்திய அரசுகள், நிரந்தர இராணுவம், நீர்ப்பாசனத்தால் மேம்படுத்தப்பட்ட வேளாண்மை, அழகிய மண் வேலைப்பாடுகள் இக்காலத்திற்குரியன.

7வது நூற்றாண்டு வாக்கில் டியாயுயானாக்கோ அரசும் வாரி அரசும் அந்தீசு மண்டலம் முழுமையும் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தின வாரிகள் நகரமயமாக்கலையும் டியாயுயனாக்கோவினர் சமய உருவ வழிபடலையும் நிறுவினர்.

தற்கால கொலம்பியாவில் மியூசுகா என்ற பழங்குடி நாகரிகம் வளர்ந்தது. பல இனக்குழுக்களாக இருந்த இவர்கள் தங்களுக்குள் வணிக அமைப்பைக் கொண்டிருந்தனர். தங்கக் கொல்லர்களும் விவசாயிகளும் பெரும்பான்மையினராக இருந்தனர்.

தென்மத்திய ஈக்குவேடரில் கனாரிகளும் பெருவின் வடக்கில் இருந்த சிமு பேரரசும் பொலிவியாவில் சாச்சபோயாக்களும் தென் பெருவில் ஐமறன் பேரரசும் குறிப்பிடத்தக்க பிற பண்பாடுகளாகும்.

குசுக்கோவைத் தலைநகரமாகக் கொண்டியங்கிய இன்கா நாகரிகம் 1438 முதல் 1533 வரை ஆந்தீசு மலைப்பகுதியில் ஆதிக்கம் செய்தது. கெச்வா மொழியில் டவாண்டின் சுயு என்றழைக்கப்பட்ட ("நான்கு மண்டலங்களின் பரப்பு") என்று அறியப்பட்ட இப்பகுதியில் இன்கா நாகரிகம் வளர்தோங்கியது. நூற்றுக்கணக்கான மொழி மற்றும் இனக்குழுக்களை ஆண்ட இதன் ஆட்சியில் 9 -14 மில்லியன் மக்கள் வாழந்திருந்தனர். 25000 கி.மீ. தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மத்திய சிலியின் மபூச்சே அரசு ஐரோப்பிய, சிலி குடியேற்றங்களை எதிர்த்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அராவுகோ போர் புரிந்தனர்.

ஐரோப்பிய குடிமைப்படுத்தல்

போர்த்துக்கல்லும் எசுப்பானியாவும் திருத்தந்தையின் ஒப்புதலுடன் 1494இல் ஓர் உடன்பாடு, டோர்டிசில்லாசு உடன்படிக்கை, கண்டனர்; இதன்படி ஐரோப்பாவிற்கு வெளியே புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியும் போது தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டியில்லாத இரட்டையர் முற்றுரிமை பெற முயன்றனர். கேப் வர்டிக்கு மேற்கில் 370 பாகையில் (கிட்டத்தட்ட 46° 37' W) வடக்கு-தெற்காக இடப்பட்ட ஓர் கற்பனைக் கோட்டின் மேற்கிலுள்ள பகுதிகள் எசுப்பானியாவிற்கும் கிழக்கிலுள்ள நிலப்பகுதிகள் போர்த்துக்கல்லிற்குமாக பிரித்துக்கொள்ளப் பட்டன. அக்காலத்தில் நிலநிரைக்கோடு அளவீடுகள் துல்லியமாக இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாது போர்த்துக்கல் பிரேசிலை இக்கோட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்த முடிந்தது. 1530களில் இந்த இரு நாடுகளிலிருந்தும் வந்த பல தொழில் முனைவோர் தென்னமெரிக்க இயற்கை வளங்களை சுரண்ட குடியேறினர்; இவர்கள் நிலங்களையும் வளங்களையும் கையகப்படுத்தி குடிமைப்பட்ட பகுதிகளை நிறுவினர்.

எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த தென்னமெரிக்கக் குடிகள் ஐரோப்பிய தொற்றுநோய்களான பெரியம்மை, இன்ஃபுளுவென்சா, தட்டம்மை, டைஃபஸ் போன்றவற்றிற்கு எதிர்ப்பாற்றல் இல்லாமையால் மடிந்தனர்; மேலும் சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகளும் அடிமைத்தனமும் அவர்களை அழியச்செய்தன. இவர்களுக்கு மாற்றாக இந்த நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் பெற்றிருந்த ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டனர்.

எசுப்பானியர்கள் கிறித்தவ சமயத்திற்கு முதற்குடிகளை மாற்ற முயல்கையில் உண்ணாட்டு பண்பாடுகளை சிதைத்தனர். பல கலைப்பொருட்கள் கடவுளரின் உருவம் எனக் கருதி அழித்தனர். பல தங்க, வெள்ளி சிலைகள் உருக்கப்பட்டு எசுப்பானியாவிற்கும் போர்த்துக்கல்லிற்கும் கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் உண்ணாட்டு மக்கள் கிறித்தவத்துடன் உருவ வழிபாடும் பல கடவுட் கொள்கையும் உடைய தங்கள் பண்பாட்டையும் இணைத்து வழிபட்டனர். இதேபோல எசுப்பானியத்தை மட்டுமே வளர்த்து உள்ளூர் மொழிகளை சிதைக்க முயன்றதும் கத்தோலிக்க திருச்சபையின் நற்செய்திகள் கெச்வா, ஐமர, குவாரனி மொழிகளில் பரப்பப்பட்டதால் இந்த மொழிகள் இன்றும், வாய்வழியாக மட்டும், பிழைத்துள்ளன. மெதுவாக முதற்குடி மக்களும் எசுப்பானியர்களும் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளத் துவங்கினர்; இவர்களுக்குப் பிறந்தவர்கள் மெஸ்டிசோ எனப்பட்டனர்.

எசுப்பானியரும் போர்த்துக்கேயரும் மேற்கு ஐரோப்பிய கட்டிடக் கலையை கொண்டு வந்தனர். பாலங்கள், சாலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற கட்டமைப்புக்களை உருவாக்கினர். வணிக மற்றும் பொருளாதார இணைப்புக்களை ஏற்படுத்தினர். பொதுவான மொழியாக போர்த்துக்கேயமும் எசுப்பானியமும் ஆனதால் பிளவுபட்டிருந்த பல்வேறு பண்பாடுகள் ஒருங்கிணைந்து இலத்தீன் அமெரிக்கா என்ற பொது அடையாளத்தைப் பெற்றன.

கயானா போர்த்திகேய குடிமைப்பகுதியாகவும் பின்னர் டச்சுப் பகுதியாகவும் இறுதியில் பிரித்தானிய குடிமைப்பகுதியாகவும் மாறியது. பிரித்தானியா இப்பகுதிகளை முழுமையாக கையகப்படுத்தும் வரை இது ஒரு நேரத்தில் மூன்று பிரிவுகளாக, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் ஆதிக்கத்தில், இருந்தது.

Thumb
எக்குவடோரின் குயிட்டோவில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோ பிளாசா; இந்த மையம் அமெரிக்காக்களில் பெரிய, குறைந்தளவே மாற்றப்பட்டுள்ள, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களில் ஒன்றாகும்.[4]

போர்த்துக்கல்/எசுப்பானியாவிலிருந்து விடுதலை

Thumb
ஜோஸ் டெ சான் மார்ட்டினுக்கும் சிமோன் பொலிவாருக்கும் இடையேயான குவாயாக்கில் மாநாடு.

1807–1814 காலகட்டத்தில் நெப்போலியப் போர்கள், எசுப்பானிய, போர்த்துக்கேய குடிமைப்பகுதிகளில் பெரும் அரசியல் மாற்றத்தை உண்டாக்கின. நெப்போலியனின் போர்த்துக்கல் படையெடுப்பின்போது போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் பிரேசிலுக்கு தப்பி ஓடினர். எசுப்பானிய அரசர் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெப்போலியன் தனது இளவலை எசுப்பானிய அரசராக அறிவித்தார். ஆனால் அரசருக்கு விசுவாசமான எசுப்பானிய குறுமன்னர்கள் இதனை ஏற்காது தாங்களே தங்கள் பகுதியில் அரசாட்சி செய்யத் துவங்கினர்.

எசுப்பானிய குடிமைப்பகுதிகளிலும் இதேபோல அங்குள்ள தலைவர்கள் தாங்களே ஆட்சி புரியத் தொடங்கினர். இதனால் அரச விசுவாசிகளுக்கும் விடுதலை விரும்பிய நாட்டுப் பற்றாளர்களுக்கும் இடையே போர்கள் மூண்டன. ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பெர்டினாண்டு இழந்த சிம்மாசனத்தைப் பிடித்தார். அவரது தலைமையின் கீழ் விசுவாசப் படைகள் வலுப்பெறத் தொடங்கின.

தென்னமெரிக்காவின் விடுதலையில் சிமோன் பொலிவார் (வெனிசுவேலா), ஜோஸ் டெ சான் மார்ட்டின் (அர்கெந்தீனா), ஆகிய இருவரும் முக்கியப் பங்காற்றினர். பொலிவார் வடக்கில் பெரும் கிளர்ச்சியே முன்னின்று நடத்தினார். பின்னர் தனது படைகளை தெற்கிலுள்ள பெருவின் தலைநகர் லிமா நோக்கி வழிநடத்தினார். சான் மார்ட்டின் ஆந்தீசு மலைத்தொடர் வழியாக சிலியைக் கைப்பற்றினார். மார்ட்டின் கடல் வழியாக பெருவை அடைய கப்பல்படையைத் தயார் செய்தார். பெருவின் அரசப் பிரதிநிதிக்கு எதிராக இராணுவ உதவியை பல்வேறு எதிரிகளிடமிருந்து சேகரித்தார். இவர்கள் இருவரது படைகளும் எக்குவடோர் நாட்டில் குவாயாக்கில் என்ற இடத்தில் சந்தித்தன; இரு படைகளும் ஒன்றிணைந்து அரசப் படைகளை தோற்கடித்து சரணடைய வைத்தனர்.

பிரேசிலுக்குத் தப்பியோடிய போர்த்துக்கல் அரசர், பிரேசிலை தனி இராச்சியமாக 1822இல் அறிவித்தார். பிரேசில் படைகளின் அரச விசுவாச மிக்கவர்களாக இருந்தபோதும் போர்த்துக்கல் மன்னர் பிரேசிலுக்கு பெரும் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு தன்னாட்சி வழங்கினார்.

புதியதாக உருவான தன்னாட்சி பெற்ற நாடுகள் பல உள்நாட்டுமற்றும் பன்னாட்டுப் போர்களை எதிர்கொண்டனர். பராகுவே, உருகுவே போன்று பிரிந்த பெரிய மாநிலங்கள் தனிநாடாக உருப்பெற்று இன்று வரை தனிநாடாக விளங்குகின்றன; மற்றவை மீண்டும் கையகப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு தங்கள் முந்தைய நாடுகளின் அங்கங்களாக இணைந்தன.

Remove ads

நாடுகள்

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள்:

Thumb
மேலதிகத் தகவல்கள் நாடு அல்லது ஆள்புலம் கொடியுடன், பரப்பளவு (கி.மீ.²) (ஒரு சதுர மைலுக்கு) ...
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads