நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)

From Wikipedia, the free encyclopedia

நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)
Remove ads

இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவு (Diabetes mellitus type 2), இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும், ஒரு வளர்சிதைமாற்ற நோயாகும்[2]. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் (90%), மற்ற பத்து சதவிகிதத்தினர் (10%) முதன்மையாக முதலாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1), கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில், உடற் பருமன் ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் நீரிழிவு நோய் (இரண்டாவது வகை), வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின், இன்சுலின் போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்ஙனம், இன்சுலினை உபயோகிப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30 மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285 மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், கூழ்மப்பிரிப்புத் தேவைப்படும் சிறுநீரகச் செயலிழப்பு, விரல்களில் குருதியோட்டம் குறைவதால் உறுப்பு நீக்கம் செய்தல், நீரிழிவுசார் விழித்திரை நோய் (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு முதலாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது[3] என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம்.

Remove ads

இரண்டாம் வகை நீரிழிவின் அறிகுறிகளும் உணர்குறிகளும்

Thumb
நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை

அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அதிகமாகப் பசியெடுத்தல் (polyphagia), எடை குறைதல் ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும்[4].

சிக்கல்கள்

இரண்டாம் வகை நீரிழிவு நாம் வாழும் காலத்தை பத்தாண்டு குறைக்கவல்ல ஒரு நாள்பட்ட நோயாகும்[5]. இது பகுதியாகக் கீழ்காணும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதால் விளைவதாகும்: இதயக்குழலிய நோய், பக்கவாதம் ஆகியவை நிகழ இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகமான இடரினைக் கொண்டிருப்பது, கீழ்விரலை நீக்குவது இருபது மடங்கு அதிகரிப்பது, அதிக அளவு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் கூறலாம்[5]. வளர்ந்த நாடுகளிலும், மிகுதியாகப் பிற இடங்களிலும் நீரழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரழிவு இரண்டாம் வகை உள்ளவர்களில் இந்நோய் காயமில்லாத குருட்டுத் தன்மை, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு நிகழப் பெருங்காரணியாக விளங்குகிறது[6]. நீரழிவு இரண்டாம் வகையானது மூளையசதி நோய் (Alzheimer's disease), இரத்தநாளம் சார்ந்த அறிவாற்றல் இழப்பு (vascular dementia) முதலிய நோய்களின் செயல்முறைகள் மூலம் உணரறிவிய செயல் பிறழ்ச்சி (cognitive dysfunction), உளக்கேடு (dementia) ஆகிய இடர்கள் அதிகம் நிகழ்வதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது[7]. அடிக்கடி கிருமிகளால் தாக்கப்படுதல், பால்வினை செயல் பிறழ்ச்சி முதலியன பிற சிக்கல்களாகும்[4].

Remove ads

காரணங்கள்

வாழும் முறை, மரபியல் காரணிகள் ஆகியவைகளின் இணைவினால் இரண்டாம் வகை நீரிழிவு உருவாகிறது[6][8]. இவற்றில் உணவு முறை, உடல் பருமன் போன்றவைத் தனிப்பட்டவரின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும் வயது, பாலினம், மரபியல் ஆகியவை ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவையாகும்.[5]. தூக்கக் குறைவு[9], கரு வளரும்போது உள்ள ஊட்டச்சத்து நிலைமை[10] ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

வாழும் முறை

பல்வேறு வாழும் முறைக் காரணிகள் இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன: உதாரணமாக, உடல் பருமன், தேவையான உடல் உழைப்பு இல்லாதது, உணவுக் குறைபாடுகள், மன இறுக்கம், நகரமயமாதல் ஆகியவற்றைக் கூறலாம்[5]. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு 64% ஆண், 77% பெண் நோயாளிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது[11]. பல உணவுகள், உதாரணமாக இனிப்பூட்டப்பட்ட பானங்களை அளவுக்கு அதிகமாக பருகுதல்[12][13], உணவில் உள்ள கொழுப்பு வகைகள் ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் பங்காற்றுவதாகத் தெரிகிறது[8].

மரபியல்

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளில் பல மரபணுக்கள் தொடர்புடைவையாக உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் சிறிய அளவு பங்களித்து இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கின்றன[5]. 2011-ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி முப்பத்தியாறுக்கும் அதிகமான மரபணுக்கள் இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான சூழ் இடருக்கு பங்களிக்கின்றன[14]. என்றாலும், இந்நோயின் மொத்த மரபுப் பொதிவுகளைக் கணக்கில் கொள்ளும்போது, இதுவரைக் கண்டறியப்பட்ட அனைத்து மரபணுக்களின் பங்கு பத்து சதவிகிதமேயாகும்[14].

அரிதாக, ஒரேயொரு மரபணு முறைபிறழ்வினால் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றது (ஒற்றைப்பரம்பரையலகு நீரிழிவு வடிவம்)[5]. உதாரணங்கள்: இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரிழிவு [maturity onset diabetes of the young (MODY)], டோனஃகு கூட்டறிகுறி, ராப்சன்-மென்டென்ஹால் கூட்டறிகுறி[5]. இளைய நீரிழிவு நோயாளிகளில் ஒன்றிலிருந்து-ஐந்து சதவிகிதத்தினர் இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரிழிவினைக் கொண்டவர்களாக உள்ளனர்[15].

மருத்துவக் காரணங்கள்

பல மருந்துகளும் உடல்நலக் குறைபாடுகளும் நீரிழிவு நோய் உண்டாவதற்கான முன்னிணக்கத்தைத் தூண்ட முடியும்[16]. உதாரணமாக கீழ்வரும் மருந்துகளைக் கூறலாம்: சிறுநீரகமுனைச்சுரப்பு இயக்க நீர்ப்பொருள்கள் (குளுக்கோக்கார்டிகாய்டுகள்), தையசைடுகள், பீட்டா-அண்ணீரக இயக்கிகள், ஆல்ஃபா-நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பிகள் (இன்ட்டர்ஃபெரான்கள்)[16]. முன்பு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்குட்பட்டவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளாக உருவாவதற்கான சாத்தியங்கள் அதிக அளவு உள்ளன[4]. இந்நோயுடன் தொடர்புடைய பிற உடல் நலக்கேடுகள்: அங்கப்பாரிப்பு (acromegaly), குஷிங் கூட்டறிகுறி (Cushing's syndrome), மிகை தைராய்டு சுரப்பிச் செயலாக்கம் (hyperthyroidism), பியோகுரோமோசைடோமா மற்றும் குளுக்ககோனோமா போன்ற சில புற்று நோய்கள்[16]. விரையில் உற்பத்தியாகும் இயக்கு நீர் (டெஸ்டோஸ்டிரோன்) குறைபாட்டுடனும் இரண்டாம் நிலை நீரிழிவு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது[17][18].

Remove ads

நோய்க்கூற்று உடலியக்கவியல்

இரண்டாம் நிலை நீரிழிவானது முதன்மையாக தசைகளிலும், கொழுப்புத் திசுக்களிலும் உள்ள இன்சுலின் எதிர்ப்புத் தன்மையினால் விளைவதாகும். இதுவே, தீவிரமடைந்து வரும் நோயாளிகளில் ஈடுசெய்ய போதுமான இன்சுலின் உற்பத்தியினை பீட்டா செல்கள் செய்ய முடியாத நிலை விளைகிறது[19]. இத்துடன் சேர்த்து, இரத்த இன்சுலின் அளவுகளால் கட்டுப்படுத்தப்படும், கல்லீரலிருந்து வெளிப்படும் முறையற்ற குளுக்கோசு ஆகியவற்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் உயர்ந்து காணப்படுகின்றது[5]. மற்ற சாத்தியமான முக்கிய செயல்படுமுறைகளாக கொழுப்பு திசுக்களில் கொழுமியங்கள் அதிகமாக சிதைவடைவது, இன்கிரடின் (இரையக குடலிய இயக்குநீர்) குறைபாடு மற்றும் எதிர்ப்புத்தன்மை, இரத்தத்தில் அதிக குளூக்கொகான் அளவுகள், சிறுநீரகங்களில் அதிக அளவு நீர்மங்கள் உறிஞ்சப்படுதல், மைய நரம்பு மண்டலம் வளர்சிதைமாற்றத்தை சரியாக நெறிப்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றைக் கூறலாம்[5].

நோயறிதல்

மேலதிகத் தகவல்கள் நிலைமை, இரண்டு மணிநேர குளுக்கோசு ...

நோய் அறிகுறிகளுடன், ஒரேயொரு அதிக அளவிலான இரத்த நீர்ம குளுக்கோசு அளவுகளைக் கொண்டிருப்பவரை நீரிழிவு கொண்டவர் என வரையறுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அப்படியில்லையென்றால், இரத்த நீர்ம குளுக்கோசு அளவுகள் ஒன்று அல்லது இரண்டு முறை உயர்ந்திருப்பதை வைத்தும் கணக்கிட முடியும்[22]:

அல்லது
  • குளுக்கோசு சகிப்புச்சோதனையில் வாய்வழியாகக் கொடுத்தப்பின் இரண்டு மணிநேரம் கழித்து இரத்த நீர்ம குளுக்கோசு ≥ 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லிகிராம்/டெசி லிட்டர்) மற்றும் கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமோகுளோபின் அளவுகள் 6.5 சதவிகிதத்திற்கும் (6.5%) மேலாக இருப்பது நீரிழிவைக் கண்டறியும் இன்னொரு முறையாகும்[5]. குறிப்பிடத்தக்க நோய் அறிகுறிகளுடன் அங்கொன்று இங்கொன்றுமாய் எடுக்கப்பட்ட இரத்த சர்க்கரை 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லிகிராம்/டெசி லிட்டர்) அளவுகளைவிட அதிகமாக இருப்பதும் நீரிழிவு நோயினைக் குறிக்கும்[4]. இரத்த நீர்ம குளுக்கோசு அளவுகள் இந்த அளவுகளுக்கு மேல் இருக்கும்போது விழித்திரைப் பிரச்சனைகள் ஆரம்பமாவதால், இந்த பகுப்பளவுகள் (cut-off values) நிர்ணயிக்கப்பட்டன[5]. உண்ணாநிலை அல்லது சீரற்ற இரத்த சர்க்கரை அளவுகள் குளுக்கோசு சகிப்புச்சோதனைகளைக் காட்டிலும் மக்களுக்கு சுலபமாக இருப்பதால் நீரிழிவு நோய் கண்டறிதலுக்கு மிகுதியாக விரும்பப்படுகின்றன[5]. ஐக்கிய அமெரிக்காவில் இருபது சதவிகித மக்கள் தாங்கள் நீரிழிவு நோய்க்குட்பட்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.[5].
Remove ads

பிரித்தறிதல்

நீரிழிவு நோயாளிகளை உலகளாவிய பிரித்தறியும் சோதனைகளைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்பது நோய்க்கண்டறிதலை மேம்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் எந்தவொரு பெருங்குழுமமும் இவற்றைப் பரிந்துரை செய்யவில்லை[23]. பெரியவர்களில் நோய் அறிகுறிகளில்லாத ஆனால் இரத்த அழுத்தம் 135/80 மில்லிமீட்டர் பாதரசம் (mmHg) அளவுகளுக்கு மேல் இருப்பவர்களுக்குப் பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கத் தடுப்பு சிறப்புப் பணிப்பிரிவு பரிந்துரைக்கின்றது[24]. இந்த அளவுகளுக்கு கீழ் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்று பரிந்துரைக்க போதிய ஆதாரங்கள் இல்லை[24]. அதிக அளவு நீரிழிவிற்கான இடரினைக் கொண்டவர்களில் மட்டும் இச்சோதனைகளைச் செய்யலாமென உலக சுகாதார அமைப்பு பரிந்துரைச் செய்கின்றது[23]. ஐக்கிய அமெரிக்காவில் நீரிழிவிற்கான அதிக இடரினைக் கொண்ட குழுக்கள்: நாற்பத்தியைந்து வயதிற்கும் மேற்பட்டவர்கள், நீரிழிவு சொந்தங்களைக் கொண்டவர்கள், சில இனக் குழுக்கள் (இஸ்பானிக்குகள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், அமெரிக்கப் பழங்குடியினர்), கர்ப்பகால நீரிழிவு வரலாற்றினைக் கொண்டவர்கள், பலவுறை அண்ட நோய்கூட்டறிகுறி (polycystic ovary syndrome) கொண்டவர்கள், அதீத எடை உள்ளவர்கள், வளர்சிதைமாற்ற நோய்கூட்டறிகுறி உள்ளவர்கள்[4].

Remove ads

தடுப்பு முறைகள்

சரியான சத்துணவு, சீரான உடற்பயிற்சிகள் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிப்பதைத் தடுக்கவோ அல்லது காலதாமதம் செய்யவோ முடியும்[25][26]. தீவிர வாழும் முறை மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் இந்நோய் வருவதற்கான இடரினைப் பாதிக்கும் மேல் குறைக்க முடியலாம்[6]. ஒருவரின் முதலில் உள்ள எடை அல்லது பின்வரும் எடைக் குறைவைக் கணக்கிடாமலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும்[27]. உணவு பழக்க முறை மாற்றங்களினால் மட்டும் விளையும் நோய்க்குறைப்பு ஆதாயங்களுக்கான ஆதாரங்கள் குறைவே;[28] பச்சைக் காய்கறிகள் அதிக அளவு உள்ள உணவிற்கும்[29], இனிப்பூட்டப்பட்ட பானங்களை பருகுவதைக் குறைப்பதனால் விளையும் நன்மைகளுக்கும்[12] சில ஆதாரங்கள் உள்ளன. குறையுடைய குளுக்கோசு சகிப்புத்தன்மை உள்ளவர்களில், உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சி, மெட்ஃபார்மின்/அகார்போசு ஆகியன நீரிழிவு உருவாவதிற்கான இடரினைக் குறைக்கலாம்[6][30]. ஆனால், வாழும் முறை மாற்றங்கள் மெட்ஃபார்மினைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளதாகும்[6].

Remove ads

நோய் மேலாண்மை

வாழும் முறைகளில் குறுக்கிட்டு செய்யும் மாற்றங்கள், இதயக்குழலிய நோய் இடர் காரணிகளைக் குறைத்தல், இரத்த குளுக்கோசு அளவுகளை சாதாரண அளவில் வைத்திருத்தல் போன்றவை இரண்டாம் நிலை நீரிழிவைச் சமாளிப்பதற்கான வழி முறைகளின் ஒருமுகப்படுத்திய நோக்கமாகும்[6]. புதிதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வகை நோயாளிகள் தங்களின் இரத்த குளுக்கோசு அளவுகளைச் சுயப்பரிசோதனைச் செய்து கொள்வதை 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய தேசிய நலச் சேவை மையம் பரிந்துரைச் செய்திருந்தது[31], என்றாலும் இன்சுலின் பன்முகச் சிகிச்சைக்கு உட்படாதவர்கள் சுயப் பரிசோதனை செய்து கொள்வதன் பயன் கேள்விக்குரியதே[6]. பிற இதயக் குழலிய நோய் இடர் காரணிகளை உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொலஸ்டிரால், சிறுநீரில் நுண்ணியவெண்புரத (ஆல்புமின்) அளவுகள்] சமாளிப்பது ஒருவரின் வாழ்நாளைக் கூட்டுகிறது எனலாம்[6]. செந்தர இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன் ஒப்பீடு செய்யும்போது, தீவிரமாக இரத்த சர்க்கரையைக் குறைப்பது மரணத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை[32]. சிகிச்சையின் இலக்கானது குறிப்பாக கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமோகுளோபின் (HbA1C) அளவுகளை ஏழு சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைப்பது அல்லது உண்ணாநிலை குளுக்கோசு [6.7 மில்லிமோல்/லிட்டர் (120 மில்லிகிராம்/டெசிலிட்டர்)] அளவுகளுக்குக் கீழாகக் குறைப்பதென்றாலும் இத்தகு இலக்குகள் தாழ்நிலை இரத்தச் சர்க்கரை அளவினால் ஏற்படும் குறிப்பிட்ட இடர்கள், வாழும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்றப்படலாம்[4].

வாழ்வு முறை

சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவையே நீரிழிவினை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான அடிப்படைகளாகும்[4]. அதிக அளவு உடற்பயிற்சி செய்தல் நல்ல, சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும்[33]. நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலிய இதயம், நுரையீரல் முதலியவற்றுக்கு நன்மை பயக்கும் காற்றுப்பயிற்சி உடற்பயிற்சிகளைச் செய்வது கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமொக்லோபின் அளவுகளைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனைக் கூட்டுகிறது[33]. உடல்வலு ஏற்றும் உடற்பயிற்சிகளும் உபயோகமானதே என்றாலும் இந்த இருவித உடற்பயிற்சிகளையுமே செய்வது மேலும் சிறப்பானதாக இருக்கலாம்[33] நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு எடைக் குறைப்பதை அதிகப்படுத்துவதாக இருப்பது மிக அவசியம்[34]. எனினும், இவ்வித சிறந்த உணவு எது என்று தீர்மானிப்பது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டது[34]. குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவு இரத்தச் சர்க்கரை அளவுகளைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது[35]. பண்பாட்டிற்கு உகந்தக் கல்வியினைக் கொடுப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைந்தப்பட்சம் ஆறுமாதக் காலத்திற்காவது ஒரு கட்டுபாட்டில் வைத்திருக்க உதவக்கூடும்[36]. மிதமான அளவு இரத்தச் சர்க்கரை அளவு உயர்ந்தவர்களில் இத்தகு வாழ்க்கை முறை மாற்றங்களினால் எந்தவொரு மேம்பாடும் ஆறு வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், இந்நோயாளிகள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்[4].

மருந்துகள்

Thumb
மெட்ஃபார்மின் 500 மில்லிகிராம் வில்லைகள்

நீரிழிவிற்கு எதிரான பல்வேறு வகை மருந்துகள் உள்ளன. மெட்ஃபார்மின் மரணவீதத்தைக் குறைப்பதற்கான நல்ல ஆதாரங்கள் இருப்பதால், பொதுவாக முதலில் பரிந்துரைக்கப்படுகிறது[6]. வாய்வழி மருந்துகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன[6]. இரண்டாம் வகை நீரிழிவை குணப்படுத்த உபயோகிக்கப்படும் பிற மருந்து வகைகள் பின்வருமாறு: சல்போனைல்யூரியாக்கள், சல்போனைல்யூரியா இல்லாத சுரப்புத் தூண்டிகள், கிளைக்கோசைல் நீராற்பகுப்பித் தடுப்பிகள் (கிளைக்கோசைடு நீராற்பகுப்பித் தடுப்பிகள்), தியசோலிடின்டையோன்கள்[6]. இருந்தபோதிலும், சிறுநீரக, கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மெட்ஃபார்மினை உபயோகிக்கக் கூடாது[4].

வாய்வழி மருந்துகளைத் தொடரும்போதும், இன்சுலினை உபயோகிக்க நேர்ந்தால் இரவில் நெடுநேரம் செயல்புரியும் தயாரிப்பைச் சேர்க்கிறார்கள்[4][6] மருந்து அளவுகள் அதற்கேற்றார்போல் அதிகப்படுத்தப்படுகிறது[6]. இரவில் கொடுக்கும் இன்சுலின் போதுமான விளைவை ஏற்படுத்தாதபோது, ஒரு நாளைக்கு இருமுறை இன்சுலினைப் பயன்படுத்துவது மேம்பட்ட நோய் கட்டுபாட்டினைக் கொண்டுவரலாம்[4]. நெடுநேரம் செயல்புரியும் இன்சுலின்கள் (கிளார்ஜின், டெடமிர் போன்றவை), என்.பி.எச் (NPH) இன்சுலினைக் காட்டிலும் மேம்பட்டவை இல்லையென்றாலும், இவற்றைத் தயாரிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளதால் திறம்பட்ட விலை இவைகளுக்கு 2010-ஆம் ஆண்டு வரை இல்லை[37]. கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் சிகிச்சையே பொதுவாகச் சிறந்ததாகும்[4]. அழற்சிக்கெதிரான மருத்துகள் இவ்வகை நீரிழிவைத் தடுப்பதில் பயன் தரக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது[38].

அறுவைச் சிகிச்சை

பருமனாக இருப்பவர்களில் நீரிழிவைக் கட்டுபடுத்த/சிகிச்சையளிக்க இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது பயனுள்ள நடவடிக்கையாகத் தெரிகிறது[39]. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் பலரும் சாதாரணமான இரத்த சர்க்கரை அளவுகளை மருந்துகளின் துணைக் கொண்டோ அல்லது துணை இல்லாமலோ பேண முடிகிறது[40]. இதனால், நீண்ட நாள் மரணவீதம் குறைந்துள்ளது[41] என்றாலும், அறுவைச் சிகிச்சைக்குப்பின் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான சில குறைந்த-நாள் மரண இடர் உள்ளதெனலாம் [42]. அறுவைச் சிகிச்சை செய்ய சரியான உடல் பருமயெண் பகுப்பளவுகள் எவை என்பதுக் குறித்த விவரங்கள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை[41].

Remove ads

நீரிழிவு நோய்ப்பரவு இயல்

Thumb
ஒரு இலட்சம் மக்களில் உலகளவில் 2004-ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பாதிப்பின் பரிமாணம்.
  தரவுகள் இல்லை
  < 100
  100-200
  200–300
  300–400
  400–500
  500–600
  600–700
  700–800
  800–900
  900–1000
  1000–1500
  > 1500

உலக அளவில் 2010- ஆம் ஆண்டில் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க் கொண்டவர்கள் 285 மில்லியன் என மதிப்பீடுச் செய்யப்பட்டது. இது மொத்த நீரிழிவு நோயாளிகளில் தொண்ணூறு சதவிகிதமாகும் (90%)[5]. இது உலகத்தில் உள்ள மொத்த பெரியவர்கள் தொகையில் ஆறு சதவிகிதத்திற்கு (6%) சமமானதாகும்[43]. நீரிழிவானது வளர்ந்த, வளரும் நாடுகளில் காணப்படும் ஒரு பொதுவான நோயாகும்[5]. சில இனக் குழுக்களைப் (பசுபிக் தீவினர், எசுப்பானியர்கள், அமெரிக்கப் பழங்குடியினர்)[4] போலவே பெண்களும் நீரிழிவிற்கான அதிகமான இடரினைக் கொண்டுள்ளார்கள்[5]. இது மேற்கத்திய வாழும் முறைகளுக்குச் சில இனக் குழுக்கள் கொண்டிருக்கும் உணர்வுகள் காரணமாக இருக்கலாம்[44]. சம்பிரதாயமாகப் பெரியவர்களுக்குத்தான் இரண்டாம் வகை நீரிழிவு வரும் என்று கருதப்பட்டாலும், தற்போதைய குழந்தைகளின் பருமன் கூடுவதற்கு இணையாக இந்நோய் அவர்களில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது[5].

நீரிழிவு நோய் விகிதம் 1985-ல் 30 மில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டது 1995-ல் 135 மில்லியனாக உயர்ந்து பின் 2005-ல் 217 மில்லியனாக அதிகரித்துள்ளது[45]. இந்த அளவு அதிகரித்திருப்பதற்கான முதன்மைக் காரணங்களாக உலகளாவிய மக்கள்தொகை முதுமையடைவது, உடற்பயிற்சி செய்வதுக் (உடல் உழைப்பு) குறைந்துபோனது, பருமனாவது அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம்[45]. 2010-ஆம் ஆண்டு கணக்கின்படி, நீரிழிவு நோயாளிகள் பெருமளவு உள்ள ஐந்து நாடுகள்: இந்தியா (31.7 மில்லியன்), சீனா (20.8 மில்லியன்), ஐக்கிய அமெரிக்கா (17.7 மில்லியன்), இந்தோனேசியா (8.4 மில்லியன்), ஜப்பான் (6.8 மில்லியன்)[46]. உலக சுகாதார நிறுவனம் நீரிழிவை உலக அளவில் கொள்ளை நோயாக அங்கீகரித்துள்ளது.[47].

Remove ads

நீரிழிவு நோய் வரலாறு

நீரிழிவு நோய் முதலில் விவரிக்கப்பட்ட நோய்களுள் ஒன்றாகும்[48]. எகிப்திய பழங்காலத்துச் (தோராயமாக கி.மு. 1500-ல்) சுவடிகளில் பெருமளவு சிறுநீர் போவதுக் குறித்துக் குறிப்பிட்டுள்ளது[49]. இங்ஙனம் முதன்முதலில் குறிப்பிடப்பட்டவை முதலாம் வகை நீரிழிவாகக் கருதப்படுகிறது[49]. சமகாலத்தில், இந்திய மருத்துவர்களும் இந்நோயினைக் கண்டறிந்து, சிறுநீரில் எறும்புகள் மொய்ப்பதை வைத்து, மதுமேகம் அல்லது சிறுநீரில் தேன் எனப் பாகுபாடு செய்தார்கள்[49]. "நீரிழிவு" அல்லது "போதல்" என்னும் சொற்றொடர் முதலில் கி.மு. 230-ல் அபோல்லோனியசு என்னும் கிரேக்க மருத்துவரால் உபயோகப்படுத்தப்பட்டது[49]. காலென் என்னும் மருத்துவர் தன் பணிநாளில் இரண்டே இரண்டு நோயாளிகளைப் பார்த்ததாகக் கூறியதிலிருந்து ரோமப் பேரரசின்போது இந்நோய் மிக அரிதாக இருந்ததாகத் தெரிகிறது[49]. முதலாம் வகை, இரண்டாம் வகை நீரிழிவுகள் தனித்தனியான நோய்களாக முதன் முதலில் இந்திய மருத்துவர்களான சுஷ்ருதா, சாரகா ஆகியோரால் கி.பி. 400-500 -ல் முதலாம் வகை நீரிழிவு இளையவர்களுடனும், இரண்டாம் வகை அதிக உடற்பருமன் உடையவர்களுடன் தொடர்புள்ளதாகப் பாகுபாடுச் செய்யப்பட்டன[49]. "மதுமேகம்" அல்லது "தேனிலிருந்து" என்னும் சொற்றொடர் பிரித்தானியர் ஜான் ரோலே என்பவரால் அடிக்கடிச் சிறுநீர் போவதுடன் தொடர்புடைய வெற்று நீரிழிவு (Diabetes insipidus) நோயிலிருந்து வேறுபடுத்த 1700-ஆம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்டது[49]. பிரெடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய கனேடிய மருத்துவ அறிவியலாளர்களால் 1921-1922-ல் இன்சுலின் உருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரைத் திறம்பட்டச் சிகிச்சை முறைகள் இந்நோய்க்கு உருவாக்கப்படவில்லை[49]. இதன் பிறகு, 1940-ஆம் ஆண்டில் நீள்வினை இன்சுலின் (long acting insulin) என்.பி.எச். உருவாக்கப்பட்டது[49].

இவற்றையும் காண்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads