சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019

சம்மு காசுமீர் மறுசீரமைப்பு - 2019 From Wikipedia, the free encyclopedia

Remove ads


ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 (Jammu and Kashmir Reorganisation Bill, 2019), இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகத்து, 2019 (திங்கட்கிழமை) அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.[1][2]

விரைவான உண்மைகள் சான்று, இயற்றியது ...

சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-எ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.[3]

Remove ads

குடியரசுத் தலைவரின் ஆணை

இச்சட்ட முன்வடிவம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்னர், இந்தியக் குடியரசுத் தலைவர், அரசியல் அமைப்புச் சட்டம் 370 (3)-இன் கீழ்[4], 5 ஆகத்து 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி ஆணையிட்டுள்ளார்.[5][6]

மாநிலங்களவையின் தீர்மானித்திற்கு விடப்பட்ட சட்ட முன்வடிவங்கள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தரும் சிறப்புத் தகுதிகளை நீக்குவதற்கான கீழ்கண்ட நான்கு சட்ட முன்வடிவங்களையும் மாநிலங்களவையின் தீர்மானத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சமர்ப்பித்துள்ளார். அவைகள்:

  1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 நீக்கும் சட்ட மசோதா.
  2. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ யை நீக்குவதற்கான மசோதா.
  3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.
  4. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் மறுசீரமைப்பதற்கான மசோதா.[7]
Remove ads

மாநிலங்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்

இச்சட்ட முன்வடிவத்திற்கும், குடியரசுத் தலைவரின் ஆணைக்கும் ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி, அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், சிவ சேனா, அதிமுக, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்து மாநிலங்களவையில் பேசினர். ஆனால் இந்திய தேசிய காங்கிரசு, தேசியவாத காங்கிரசு கட்சி, திமுக, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் இச்சட்ட முன்வடிவத்தை கடுமையாக எதிர்த்துப் பேசினர்.[8] இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசின் வரைவுச்சட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பெற்று அரசின் தீர்மானம் நிறைவேறியது.[9] சட்டவரைவுக்கான வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டு, அவையை விட்டு வெளியேறினார்கள்.[10]

மக்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவ தீர்மானத்தை மக்களவையில் 5 ஆகத்து 2019 அன்று உள்துறை அமைச்சர் அமித் சா அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இத்தீர்மானத்தை மாலை 7 மணி அளவில் இந்திய மக்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 367 வாக்குகளும், எதிராக 67 வாக்குகளும் பெற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.[11][12] [13]

மாநிலங்களவை மற்றும் மக்களவையில், 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதால், இதனை இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு முழுமையான சட்ட வடிவம் பெறும்.

Remove ads

சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும், அரசிதழில் வெளியீடும்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதிகளை நீக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 7 ஆகத்து 2019 அன்று ஒப்புதல் வழங்கியதால் சட்டமாக உருப்பெற்றது. 9 ஆகத்து 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019, 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய அரசின் அரசிதழில் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை வெளியிடப்பட்டது.[14][15][16]

ஜம்மு காஷ்மீர் & லடாக் ஒன்றியப் பகுதிகளின் துவக்கம்

Thumb
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பின்னர் 31 அக்டோபர் 2019 முதல் துவக்கப்பட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளின் வரைபடம்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவைகள் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக செயல்படும் என இந்திய அரசு அறிவித்தது.[17][18]

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதி நீக்கம் குறித்த இந்தியக் குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து 10 ஆகத்து 2019-இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.[19] [20]

370வது சட்டப்பிரிவை நீக்குவதற்கு எதிராக இருக்கும் மனுதாரர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் இதுபோன்ற முக்கிய முடிவை இந்திய அரசு எடுக்க முடியாது என்று வாதாடினர். மேலும் இது ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசியல் செயல் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் (ஒன்றியப் பகுதி)என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இவ்வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 11 டிசம்பர் 2023 அன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:[21][22][23][24]:

  1. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்கிய அரசியல் சாசன உத்தரவு செல்லுபடியாகும்.
  2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை நீக்கியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
  3. இந்தியக் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் சார்பாக இந்திய அரசின் முடிவை கேள்வி கேட்க முடியாது.
  4. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அதற்கு தனி இறையாண்மை இல்லை.
  5. ஜம்மு காஷ்மீரில் 30 செப்டம்பர் 2024ம் ஆண்டுக்குள் சட்டப் பேரவை தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையததிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  6. ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)க்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
  7. ஜம்மு காஷ்மீரில் போர்ச் போன்ற சூழல் நிலவுவதால் சட்டப்பிரிவு 370 தற்காலிக ஏற்பாடு என்றும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது அரசியலமைப்பின் 1 மற்றும் 370வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது.
  8. அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் லடாக்கை தனி ஒன்றியப் பகுதியாக மாற்றும் முடிவு செல்லுபடியாகும்.
  9. மேலும், 370(3) பிரிவின் கீழ், 370வது பிரிவை செயலிழக்கச் செய்ய குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.
  10. ஜம்மு காஷ்மீரில் இதுவரை நடந்த வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க நீதிமன்றம் பரிந்துரைத்தது.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads