எஸ். ஜானகி
புகழ்பெற்ற இந்திய பன்மொழி திரைப்படப் பெண் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். ஜானகி (S. Janaki, பிறப்பு: 23 ஏப்ரல் 1938) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர் "ஜானகியம்மா" என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார், மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த, பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, பெங்காலி, உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி என 50,000 பாடல்களை பதிவு செய்துள்ளார். மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்தி, ஆங்கிலம், ஜப்பானிய, அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். இருப்பினும் இவரது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னடத்தில் இடம்பெற்றிருந்தன. 1957-ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்துடன் துவங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளை கண்டுள்ளது.
தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகத்திடமிருந்து, முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக ராஜயுத்சவா விருதும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துவிட்டார். மிகவும் தாமதமாக வந்ததென்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பல்துறை பாடகர்களில் ஒருவரான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்படுகிறது. 1960, 1970, 1980களில் பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார். இவர் கிட்டத்தட்ட அனைத்து வகை பாடல்களிலும் பாடியுள்ளார். அக்டோபர் 2016-இல் திரைப்படங்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க இவர் 2018 ஆம் ஆண்டில் பண்ணாடி என்ற தமிழ் படத்திற்காக மீண்டும் பாட வந்தார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.[1]
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.[2][3]
Remove ads
குடும்பம்
இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[4][5] ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை மணந்தார். அவர் தனது இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். மேலும் இவரது பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றார். இதய நிறுத்தம் காரணமாக 1997 இல் அவர் இறந்தார் . இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.
Remove ads
விருதுகள்
- 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
- 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
- நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
- 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
- பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
- ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
- பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.[6][7]
இந்திய தேசிய விருதுகள்
எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads