ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர், அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஓர் இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11-ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998-ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.
2002 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதான எதிர்க் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளின் ஆதரவுடன், இலட்சுமி சாகலை தோற்கடித்து, இவர் இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் சனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்குத் திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆகப் பணியாற்றினார்.
இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். இவர் 2011-ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
Remove ads
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
கலாம் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆசியம்மா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.[1][2][3][4] இவரின் தந்தை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மக்களைப் படகில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.[5][6] இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர்.[7][8][9] இவரது மூதாதையர்கள் வணிகர்கள் மற்றும் நில உரிமையாளர்களாக இருந்தனர்.1914-இல் பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பிறகு, இவர்களது படகோட்டும் தொழில் பாதிப்படைந்தது. கலாம் பிறந்த நேரத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் சிறுவனாக இருந்தபோது இவர் குடும்பத்தின் துயரைப் போக்க செய்தித்தாள்களை விற்க வேண்டியிருந்தது.[10][11]
தனது பள்ளிப் பருவத்தில், கலாம் சராசரி மாணவராக இருந்தார். ஆனால் கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பமுள்ள ஒரு கடின உழைப்பாளியாக விவரிக்கப்பட்டார். இவர் தனது படிப்பில், குறிப்பாகக் கணிதம் கற்பதில் நேரத்தைச் செலவிட்டார்.[12] இராமநாதபுரம் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்த கலாம், 1954 -ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார்.[13] கலாம் 1955 இல் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிக்கச் சென்றார்.[4] இவர் ஒரு மூத்த வகுப்பு திட்டத்தில் பணிபுரிந்தபோது, இவரது பங்களிப்பில் அதிருப்தி அடைந்த கல்லூரியின் தலைவர், அடுத்த மூன்று நாட்களுக்குள் திட்டத்தை முடிக்காவிட்டால் இவரது உதவித்தொகையை இரத்து செய்வதாக அச்சுறுத்தினார். இந்தக் காலக்கெடுவிற்குள் இதனை முடித்த கலாம், கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். அங்கு அவர் முதுகலை பட்டம் பெற்றார்.[14] இவர் இந்திய வான்படையில் விமானி ஆவதற்கான தகுதிச் சுற்றில் நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டதனால், போர் விமானி ஆக வேண்டும் என்ற இவரது கனவு நிறைவேறாமல் போனது.[15]
Remove ads
அறிவியல் பணித்துறை
சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் 1960-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த கலாம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) வானூர்தி அபிவிருத்திப் பிரிவில் அறிவியலாளராகச் சேர்ந்தார். இவர் ஒரு சிறிய காற்றுமெத்தை உந்தை வடிவமைப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இவரின் பனி மீது தொடர்ந்து நம்பிக்கையில்லாமல் இருந்தார்.[16] இதன் காரணமாக, இவர் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவில் (INCOSPAR) சேர்ந்தார். அங்குப் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார்.[4] இவர் பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தும்பா ஏவுதளத்தின் முதல் இயக்குநரான மூர்த்தியால் பணியமர்த்தப்பட்டார்.[17] 1969-ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவூர்தி (எஸ். எல். வி-III) திட்ட இயக்குநராக இருந்தார். இந்த ஏவூர்தி வெற்றிகரமாக ரோகினி என்ற செயற்கைக்கோளை சூலை 1980 -இல் பூமிக்கு அருகில் இருந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. 1965-ஆம் ஆண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் ஒரு புதிய ஏவூர்தி வடிமைக்கும் திட்டத்தைக் கலாம் தொடங்கினார்.[18] 1969-ஆம் ஆண்டில், திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றார்.[19]
1963–64 இல், இவர் நாசாவின் வர்ஜீனியாவில் லாங்க்லி ஆராய்ச்சி மையம், மேரிலாந்து கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம் மற்றும் வாலோபசு வானூர்தி மையம் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார்.[2][20] 1970-இலிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன. கலாம் அணு ஆயுத வடிவமைப்பில் பங்கேற்காத போதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான சிரிக்கும் புத்தர் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் அழைக்கப்பட்டார். 1970-களில், கலாம் வெற்றிகரமான ஏவூர்தி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து ஏவுகணை உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார்.[21] மத்திய அமைச்சரவை ஆதரிக்காதா போதிலும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது சிறப்பு நிதியின் கீழ் கலாமின் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினார்.[21]

இவரது ஆராய்ச்சி மற்றும் தலைமையால் இவருக்குக் கிடைத்த வெற்றியால், 1980 களில், இந்திய அரசாங்கம் இவரின் இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்கியது.[21] அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமனின் ஆலோசனையின் பேரில், திட்டமிட்ட ஏவுகணைகளை ஒன்றன் பின் ஒன்றாக வடிவமைப்பதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை உருவாகும் பணியில் ஈடுபட்டார்.[22] இந்தத் திட்டத்திற்காக இந்திய அரசு 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதன் தலைவராகக் கலாம் நியமிக்கப்பட்டார்.[22] அக்னி மற்றும் பிரித்வி உட்பட பல ஏவுகணைகளை இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்குவதில் கலாம் முக்கிய பங்கு வகித்தார். இவரின் நிர்வாகம் அத்துமீறிய செலவு மற்றும் கால அவகாசத்தை மீறுதல் ஆகியவற்றிற்காக விமர்சிக்கப்பட்டது.[22][23]
சூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இவர் இந்தச் சமயத்தில் நடந்த பொக்ரான் அணு ஆயுத சோதனையில் அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், இரா. சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.[2][24] ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.[25] தள சோதனை இயக்குநர் கே. சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார்.[26] எனினும் இந்த கூற்றைக் கலாமும், சிதம்பரமும் மறுத்தனர்.[27]
1998 இல் இதய மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் இணைந்து ஒரு குறைந்த செலவிலான உறைகுழாயை உருவாக்கினார். இது "கலாம்-ராஜூ உறைகுழாய்" எனப் பெயரிடப்பட்டது.[28][29] 2012 இல் இவர்கள் வடிவமைத்த கைக் கணினி, "கலாம்-ராஜூ கைக் கணினி" என்று பெயரிடப்பட்டது.[30]
Remove ads
குடியரசுத் தலைவர் பதவி

10 சூன் 2002 அன்று, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி, கலாமை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைப்போம் என்று அறிவித்தது.[31][32] இவர் 2002இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 9,22,884 வாக்குகள் பெற்று 1,07,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் 25 சூலை 2002 முதல் 25 சூலை 2007 வரை பணியாற்றினார்.[33][34] கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார்.[35] இவர் சூலை 25 அன்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.[36]
கலாம் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார்.[37][38][39] இவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.[40][41] இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல் ஆகியவற்றை செயல்படுத்த சனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது பதவிக் காலத்தில், தன்னிடம் வந்த 21 கருணை மனுக்களில் ஒன்றை மட்டுமே நிராகரித்தார், மற்ற மனுக்களின் மீது முடிவெடுக்காமல் இருந்தார்.[42] செப்டம்பர் 2003 இல், நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் தேவை என்று கலாம் தெரிவித்தார்.[43][44][45][46]

20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.[47] எனினும், இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்.[48] இவருக்கு ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரிகளின் ஆதரவு இல்லாததால், இந்த முடிவை எடுக்க நேர்ந்தது.[49]
சூலை 2012 இல், 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக் காலம் முடிவுறும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின.[50][51][52] திரிணாமூல் காங்கிரசு மற்றும் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் இதை ஏற்பதாகக் கூறியது.[53][54] தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் தனது ஆதரவில் பின்வாங்கினார் மற்றும் ஆம் கட்சியான காங்கிரசு கலாமின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தது.[55] இதையடுத்து, 18 சூன் 2012 அன்று, கலாம் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்தார்.[56]
Remove ads
பிற்கால வாழ்க்கை

குடியரசு தலைவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, கலாம் இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய மேலாண்மை கழகம் சில்லாங், இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் மற்றும் இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.[57] இவர் திருவனந்தபுரம் இந்திய விண்வெளி தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பேராசிரியராகவும், பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சிறப்பு பேராசிரியாராகவும் பணியாற்றினார்.[58]
2011 இல், கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு ஆதரவளித்தார். இவரை அணுசக்திக்கு ஆதரவான விஞ்ஞானியாகக் கண்டதாலும், ஆலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இவர் அளித்த உறுதிமொழிகளால் ஈர்க்கப்படாததாலும் இவரது எதிர்ப்பாளர்கள் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.[59][60] மே 2012 இல், ஊழலை தோற்கடிப்பதை மையக் கருப்பொருளாகக் கொண்டு, "நான் என்ன கொடுக்க முடியும் இயக்கம்" என்ற திட்டத்தை கலாம் இந்திய இளைஞர்களுக்காக தொடங்கினார்.[61][62]
Remove ads
இறப்பு
2015 சூலை 27 அன்று, கலாம் சில்லாங்கில் "வாழக்கூடிய புவியை உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை வழங்குவதற்காகச் சென்றார். அங்கு படிக்கட்டுகளில் ஏறும் போது தடுமாறிய அவர், சிறிது ஓய்வுக்குப் பிறகு விரிவுரையைத் தொடங்கினார்.[63] சுமார் 6:35 மணியளவில், உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, மயங்கி விழுந்தார்.[64] ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், ஏறத்தாழ 7:45 மணி அளவில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.[65][66][67]
இவரது மரணத்தைத் தொடர்ந்து, கலாமின் உடல் இந்திய வான்படையின் உலங்கு வானூர்தியில் சில்லாங்கில் இருந்து குவகாத்திக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சூலை 28 அன்று காலை வான்படை சி-130 வானூர்தி மூலம் புது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.[68] அங்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முப்படை தளபதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இவரது உடல் இந்திய தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, ஒரு துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு, இராசாசி சாலையில் இருந்த இவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.[69]
சூலை 29 அன்று காலை, கலாமின் உடல், பாலம் விமானத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மதுரை வானூர்தி நிலையம் வந்தடைந்தது. கலாமின் உடல் உலங்குவானூர்தி மூலம் மண்டபம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து இந்திய தரைப்படை ஊர்தியில் இவரது சொந்த ஊரான ராமேசுவரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இவரது உடல் உள்ளூர் பேருந்து நிலையத்தின் முன்புறம் திறந்த வெளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இரவு 8 மணி வரை வைக்கப்பட்டது.[70][71] சூலை 30 அன்று, இவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியப் பிரதமர், தமிழக ஆளுநர் மற்றும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநில முதல்வர்கள் உட்பட பல இலட்சம் பேர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.[72][73]
கலாமின் மரணத்திற்கு நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.[74] இந்திய அரசு ஏழு நாள் துக்க காலத்தை அறிவித்தது.[75] உலகின் பல தலைவர்கள், தலாய் லாமா மற்றும் ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கி மூன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.[76][77][78]
தமிழ்நாட்டின் ராமேசுவரம் நகரத்தில் கலாமின் நினைவாக ஒரு நினைவகம் கட்டப்பட்டது. இது சூலை 2017 இல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.[79][80][81] கலாம் பணியாற்றிய ஏவூர்திகள் மற்றும் ஏவுகணைகளின் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் நூற்றுக்கணக்கான உருவப்படங்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலில் கலாம் வீணை வாசிப்பதைக் காட்டும் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.[82]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள்
ஐந்து உடன்பிறப்புகளில் இளையவரான கலாமிற்கு, ஒரு மூத்த சகோதரி மற்றும் மூன்று மூத்த சகோதரர்கள் இருந்தனர்.[83][84][85] இவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது மூத்த உடன்பிறப்புகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பில் இருந்தார். இவரது பழைய உறவுகளுக்கு சிறிய தொகை அனுப்பி வந்தார்.[85] இவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.[86]

கலாம் தனது நேர்மை மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்படுகிறார்.[86][87] இவர் ஒருபோதும் தொலைக்காட்சி வைத்திருக்கவில்லை, காலை 6:30 அல்லது 7 மணிக்கு எழும் பழக்கம் கொண்டிருந்தார்.[88] இவருடைய தனிப்பட்ட உடைமைகளில் புத்தகங்கள், ஒரு வீணை, சில ஆடைப் பொருட்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை மட்டுமே அடங்கும்.[89][90]
கலாமின் வாழ்க்கையில் சமயமும் ஆன்மீகமும் முக்கியமானதாக இருந்தது.[91] ஒரு இசுலாமியராக தினசரி தொழுகை மற்றும் ரமலான் நோன்பு ஆகியவற்றை பின்பற்றினார்.[92][93] இவரது தந்தை, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பள்ளி வாசலில் தலைவராக இருந்தார், இசுலாமிய பழக்கவழக்கங்களை தனது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.[1] இவரது தந்தை கலாமிற்கு மற்ற சமயங்களின் மீது மரியாதை செலுத்தவும் கற்றுக்கொடுத்தார். இவரது தந்தை தினமும் மாலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் தலைமை பூசாரியாக இலட்சுமண சாசுதிரியுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.[94][95] இத்தகைய ஆரம்பகால வெளிப்பாடு இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கான பதில்கள் நாட்டின் மத, சமூக மற்றும் அரசியல் தலைவர்களிடையே "உரையாடல் மற்றும் ஒத்துழைப்பில்" உள்ளது என்பதை கலாமை நம்ப வைத்தது..[92] பிற மதங்களுக்கு மரியாதை என்பது இசுலாமியத்தின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாகும் என்று கலாம் நம்பியதால், இவர் இவ்வாறு கூறினார்: "பெரிய மனிதர்களுக்கு, மதம் என்பது நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும்; சிறியவர்கள் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திச் சண்டையிடுகிறார்கள்."[96]
இந்தியாவில் உள்ள பல்வேறு குழுக்களிடையே கலாமின் பரவலான பிரபலத்தின் காரணம், இவரது பாரம்பரியத்தின் மீதான அன்பு, இந்தியாவின் பல ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுகளின் கூறுகளைப் பாராட்டுவதில் இவர் உருவகப்படுத்திய ஒத்திசைவு ஆகியனவாகும்.[97][98] குர்ஆன் மற்றும் இசுலாமிய நடைமுறைகள் மீதான நம்பிக்கையுடன், கலாம் இந்து மரபுகளை நன்கு அறிந்திருந்தார்.[99][100] சமசுகிருதம் அறிந்திருந்த இவர் பகவத் கீதை படுத்திருந்தார்.[101][102] இவர் சைவ உணவு உண்டார்.[103] கலாம் ஒவ்வொரு நாளும் தமிழ் கவிதைகள் எழுதுவதிலும், வீணை வாசிப்பதிலும், கருநாடக பக்தி இசை கேட்பதிலும் மகிழ்ந்தார்.[93][104]
வளமான, ஆன்மீகம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவை உருவாக்க உதவும் ஆன்மீகத் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். சுவாமிநாராயண் சம்பிரதாய குருவான பிரமுக் சுவாமியை இவர் தனது ஆன்மீக ஆசிரியராகவும் குருவாகவும் ஏற்றுக்கொண்டார்.[92][94][105]
Remove ads
எழுத்து

கலாம் தனது இந்தியா 2020 புத்தகத்தில், 2020க்குள் இந்தியாவை "அறிவு வல்லரசாகவும்" வளர்ந்த தேசமாகவும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை வலுவாக ஆதரித்தார். எதிர்கால வல்லரசாக இந்தியாவின் இடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு திட்டமாக அணு ஆய்த ஆராய்ச்சியைப் பற்றி கூறினார்.[106] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிகளில் கலாம் தீவிர ஆர்வம் காட்டினார்.[107] 1999 ஆம் ஆண்டு அறிவியல் ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பிறகு இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் மாணவர்களுடன் உரையாடுவதை கலாம் இலக்காகக் கொண்டார்.[12] இளைஞர்களுடன், குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். மேலும் அவர்களின் கற்பனையைத் தூண்டிவிடவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக வேலை செய்ய அவர்களைத் தயார்படுத்தவும் விரும்புவதாகக் கூறினார். ஒவ்வொரு மாணவரும் தங்கள் இதயத்தில் மறைந்திருக்கும் நெருப்பைப் பயன்படுத்தி வெற்றியின் மூலம் வானத்தை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.[12]

இவர் தனது சொந்த ஆன்மீகப் பயணத்தை தனது இறுதிப் புத்தகமான ஆழ்நிலை:பிரமுக் சுவாமிஜியுடன் எனது ஆன்மீக அனுபவங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டார்.[108] இவர் எழுதிய புத்தகங்களின் மொழிபெயர்ப்பு பதிப்புகளுக்கு தென் கொரியாவில் கணிசமான வரவேற்பு இருந்தது.[109]
கலாம் எழுதிய புத்தகங்கள்
- திரவ இயக்கவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் (1988)[110]
- அக்னிச் சிறகுகள் (1999)
- இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை (1998)[111]
- பற்றவைக்கப்பட்ட மனங்கள்: இந்தியாவிற்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துதல் (2002)[112]
- வெளிச்சத் தீப்பொறிகள் (2004)[113]
- திட்டம் இந்தியா (2005)[114]
- எனது வானின் ஞானச் சுடர்கள் (2006)
- ஊக்கப்படுத்தும் யோசனைகள் (2007)[115]
- திருப்பு முனைகள்: சவால்களை கடந்து ஒரு பயணம் (2012)[116]
- ஆழ்நிலை:பிரமுக் சுவாமிஜியுடன் எனது ஆன்மீக அனுபவங்கள்
Remove ads
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
கலாம் ஏறத்தாழ 40 பல்கலைக்கழகங்களிடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.[117][118] இவருக்கு இந்திய அரசாங்கம் 1981 இல் பத்ம பூஷன் மற்றும் 1990 இல் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.[119] 1997 ஆம் ஆண்டில், இந்தியாவில் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.[120] 2008 இல் இவருக்கு ஊவர் பதக்கம் வழங்கப்பட்டது.[121]
தமிழ்நாடு அரசு இவரது பிறந்த நாளான அக்டோபர் 15, "இளைஞர் மறுமலர்ச்சி நாளாக" மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது மற்றும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை" நிறுவியது. 2015 ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாதனை படைத்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று அறிவித்தது.[135] ஐக்கிய நாடுகள் அவையில் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) வடிகட்டிகளில் இருந்து கண்டுபிடித்த ஒரு புதிய பாக்டீரியாவுக்கு கலாமின் பெயரிட்டுள்ளனர்.[136]

பல கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்கள் மற்றும் பிற இடங்கள் கலாமின் மறைவுக்குப் பிறகு இவரது நினைவாக பெயர் மாற்றப்பட்டன அல்லது பெயரிடப்பட்டன.
- கேரள தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இவரது மறைவுக்குப் பிறகு அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.[137]
- இந்தியாவின் முதல் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் கலாம் பெயரில் விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.[138]
- அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராட்டிர அரசு அறிவித்தது.
- உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்தார்.[139]
- புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு, புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
- கொல்லம் நகரில் தொண்டகப்பட்ட அப்துல் கலாம் நினைவு செரிமான நோய்கள் ஆராய்ச்சி நிறுவனம்.[140]
- கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி வளாகம்.[141]
- கலாம் அறிவியல் நகரம் பிப்ரவரி 2019 இல் பாட்னாவில் தொடங்கப்பட்டது.[142]
- புதுச்சேரி மற்றும் ஒடிசாவில் உள்ள அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம்.[143]
- நேதாஜி சுபாசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள அப்துல் கலாம் விரிவுரை அரங்க வளாகம்.[144]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads